“கஞ்சியை தவிர்த்து தினசரி நாங்கள் வேறு என்ன சாப்பிட முடியும்?” என்கிறார் பாதோ மல்லிக், அரசிக்கான மிளகாய்களையும் உப்பையும் அரைத்தபடி.
மாலை நேரம் ஆகிவிட்டது. பாதோவும் அவரது கணவரான யோகென மல்லிக் பக்கத்து காட்டிலிருந்து இப்போதுதான் திரும்பியிருக்கின்றனர். பழங்குடி கிராமத்தை சேர்ந்த பிற குடும்பங்களை போலவே அவர்களும், வாரச்சந்தையில் விற்பதற்காக நாள் முழுக்க காட்டிலிருந்து சால் இலைகளை சேகரிக்கின்றனர்.
மேற்கு வங்க ஜார்க்ராம் மாவட்ட பெனாஷுலி கிராமத்தில் அவர்களின் வீடு இருக்கிறது. சபார் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதி அது. நாட்டிலேயே வறிய நிலையில் இருக்கும் மக்களில் இந்த பழங்குடி சமூகத்தினரும் அடக்கம். பசி மற்றும் சத்து குறைபாடு விளிம்பில் வாழ்பவர்கள்.
சபார் மக்களின் வாழ்க்கைகளை ஆவணப்படுத்த இப்பகுதிக்கு பல வருடங்களாக நான் சென்று வருகிறேன். ‘குற்றப் பழங்குடியினர்’ என பிரிட்டிஷாரால் அடையாளப்படுத்தப்பட்ட அவர்கள், 1952ம் ஆண்டில் சீர் மரபினர் ஆக்கப்பட்டனர். மிகச் சிலருக்குதான் நிலம் இருக்கிறது. காடுகளை சார்ந்துதான் வாழ்கின்றனர். வாசிக்க: விலங்கின் வயிற்றிலுள்ள பசி
ஒவ்வொரு முறை திரும்பிச் செல்லும்போதும் அவர்களின் நிலை முன்னேறாமலே இருந்திருக்கிறது. பல ஆண்டுகள் ஆகியும் இதுவே அவர்களின் நிலை. பசியை தணிக்க அவர்கள் இலுப்பைப் பூவில் இருந்து நாட்டுச் சாராயம் தயாரிக்கின்றனர். வயிறு நிறைந்தது போன்ற ஓர் உணர்வை அது கொடுக்கிறது. மது அருந்துதல் பரவலாக எல்லா வீடுகளிலும் (நாட்டு சாராயம் எல்லா இடங்களிலும் செய்யப்படுகிறது) இருப்பதால், சத்துக்குறைபாடும் ரத்த சோகையும் இங்கு நிலைத்திருக்கிறது.























