சூரியன் உதிக்கும் முன்பே காட்டுப்பள்ளி கடற்கரை உயிர் பெற்று விடுகிறது. இருளர் சமூக மக்கள் முழங்கால் அளவுக்கு அலைகளில் நின்று, வங்கக் கடலின் அலை உள்வாங்க காத்திருக்கின்றனர். பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட வலைகளை கொண்டு, உயர் அலைகளில் அடித்து வரப்படும் கிளிஞ்சல்களை வேகமாக சேகரிக்கின்றனர்.
”உயரமான அலைகள் வரும்போது நாங்கள் கிளிஞ்சல்கள் சேகரிக்க முடியாது. எனவே தாழ்வான அலைகள் வர காத்திருப்போம். இவற்றுக்கிடையே வீட்டுக்கு சென்று சாப்பிட்டு வருவோம் அல்லது இங்கேயே கடற்கரையில் இருப்போம்,” என்கிறார் ரமேஷ் (இந்த பெயரை மட்டும்தான் அவர் பயன்படுத்துகிறார்). அவரை போன்ற இருளர் சமூகத்தினருக்கு, கிளிஞ்சல் சேகரிப்பு வெறும் பிழைப்பு மட்டுமல்ல, திருவள்ளூர் மாவட்ட கடல் தன்மையுடன் பிணைந்த வாழ்க்கையும் ஆகும்.
சேகரிக்கப்பட்ட கிளிஞ்சல்கள் காய வைக்கப்பட்டு, மாட்டு வண்டிகளில் ஏற்றி, சுண்ணாம்பு கல்லாக அரைபட கொண்டு செல்லப்படும். ஒரு வண்டி லோடுக்கு 500 ரூபாய் கொடுக்கப்படுகிறது. சராசரியாக ஒருவர் வாரத்துக்கு ஏழு சவாரிகள் வரை வேலை பார்க்க முடியும். கிளிஞ்சல்கள் சுண்ணாம்புக்கல்லாகவும் சுண்ணாம்பாகவும் அரைக்கப்பட்டு கட்டுமானத்துக்கு பயன்படுத்தப்படுகிறது.
























