“பழங்குடியினர் மும்பையிலும் வசிக்கின்றனர்,” என்கிறார் லட்கியா தாவ்டி. குறைந்த எண்ணிக்கையில் அல்ல, பழங்குடியின படாஸ்களில் (குக்கிராமங்கள்) இருந்து சுமார் 3000 பேர் மும்பை துணை நகரில் நடைபெற்ற உலக பூர்வகுடிகள் தினத்தில் பங்கேற்க வந்தனர்.
அந்த இதமான காலையில், காற்றெங்கும் கொண்டாட்டமும், நம்பிக்கையும் நிறைந்திருந்தது. ஆரே வனம், சஞ்சய் காந்தி தேசியப் பூங்கா, முலுந்த், பந்துப், காண்டிவாலி, கோரை, மத் தீவு ஆகியவற்றிலிருந்து வந்த பழங்குடியினர் மும்பையின் ஆரே வனத்தின் நுழைவாயிலான கோரேகான் செக் நாகா அருகே திரண்டனர். ஆரே வனத்தில் 27 கிராமங்கள் உள்ளன. இதில் சுமார் 10,000 பழங்குடியின சமூகங்கள் வசிக்கின்றனர்.
“இன்று எங்கள் திருவிழா,” என்கிறார் வடக்கு மும்பையின் மத்திய நகராட்சி வார்டின் கொராயில் உள்ள போர்கிபடாவைச் சேர்ந்த லட்கியா. பெண்கள் பல வண்ணங்களில் புடவைகளை அணிந்திருந்தனர். சில ஆண்கள் மட்டும் இலை, தழைகளை ஆடையாகவும், பாக்கு கொட்டையில் மாலையும் அணிந்திருந்தனர்.
சர்வதேச திருவிழாவை தங்களுக்கான தினமாக கருதி பழங்குடியினர் ஒன்றுக் கூடி மும்பையில் தங்கள் உரிமைகளை கோரினர். “நாங்கள் குன்றுகளையும், வனங்களையும் பாதுகாத்து வருகிறோம். இப்போது அரசிடம் நிலமில்லை, எனவே கிராமங்களைவிட்டு எங்களை வெளியேற்ற நினைக்கின்றனர்,” என்கிறார் வார்லி பழங்குடியின சமூசத்தைச் சேர்ந்த லட்கியா. உரிமைகளை நிரூபிக்க அவர்களிடம் நில ஆவணங்கள் ஏதுமில்லை என்பதால், முன்னோர்களின் நிலங்கள், வீடுகள், வாடிகள், வயல்களில் இருந்து வெளியேற்றப்படும் ஆபத்து உள்ளது. படிக்கவும்: ஆரே பழங்குடிகள்: ‘பிறகு எங்கள் நிலத்தை இழந்தோம்‘
















