லாவோஸில் கணிணி இயக்கும் வேலைக்கு வர முடியுமா என பிப்ரவரி 2025-ல் ஒருநாள் ஒரு நண்பரிடமிருந்து ரோஷன் சதாஷிவ் குலேவுக்கு அழைப்பு வந்தது. நல்ல சம்பளம். 90,000 முதல் 1 லட்சம் மாத வருமானம். பயணம் மற்றும் வாழ்விட செலவுகளை நிறுவனமே ஏற்கும்.
ரோஷனை போலவே முந்தைய வருடம் கம்போடியாவில் தன்னுடைய சிறுநீரகத்தை விற்றவர்தான் அந்த நண்பர். ஜம்மு காஷ்மீரை சேர்ந்தவர். அங்கு பணியில் சேர்ந்திருந்தார்.
பட்டப்படிப்புக்கு பிறகு கணிணி கோடிங்கில் ரோஷன் படிப்பு முடித்திருந்தார். அந்த அழைப்பு அவருக்கு ஆவலை கொடுப்பதாக இருந்தது. “உடல்ரீதியாக உழைக்க வேண்டியிருக்காது என நண்பர் சொன்னதால், நான் அது குறித்து யோசிக்கத் தொடங்கினேன்,” என்கிறார் அவர்.
கடன்களை அடைக்க சிறுநீரகத்தை விற்றபின்பும், பிரம்மபுரியை சேர்ந்த ஆறு கடன்காரர்கள் அவருக்கு தொல்லை கொடுத்தனர்.
குடும்பத்துக்கு சொந்தமான வீடு, நான்கு நிதி நிறுவனங்களில் அடமானம் வைக்கப்பட்டிருந்தது. தந்தையின் வாழ்நாள் சேமிப்பில் வாங்கப்பட்டிருந்த நிலத்தையும் ஆறு பேரில் ஒருவர் எடுத்துக் கொண்டார். மற்ற சொத்துகளும் விற்கப்பட்டுவிட்டன. ஆனாலும் 10 லட்சம் ரூபாய் கடன் மிஞ்சியிருந்தது.
தந்தையின் ஓய்வூதியம் மனைவியின் அங்கன்வாடி ஊதியம் சகோதரரின் அன்றாடக் கூலி, தினசரி விவசாயக் கூலி பணம் என எல்லாமும் சேர்ந்தும் கடனை அடைக்க முடியவில்லை. வங்கியில் கோவிட் தொற்றுக்காலம் வரை வேலை பார்த்திருந்த ரோஷன், அந்த வேலை போனதிலிருந்து வேறு வேலை கிடைக்காமல் திண்டாடிக் கொண்டிருந்தார்.
எனவே புதிய வேலையில் அவர் சேர்ந்தார்.














