தன்னுடைய சாதாரணமான ஸ்மார்ட்ஃபோனில் ரோஷன் சதாஷிவ் குலே முகநூல் கணக்கை திறந்து, தன் வாழ்க்கையை மாற்றிய பழைய நோட்டிஃபிகேஷன் ஒன்றை எடுக்கிறார். அவர் சந்தித்த இரண்டாம் பிரச்சினையை பாரியுடன் பகிர்கிறார்.
மிந்தூர் கிராமத்திலுள்ள அவரது வீட்டில் அவரை சுற்றி களைப்புடன் அமர்ந்திருக்கும் குடும்ப உறுப்பினர்கள் அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் அமைதியாக அமர்ந்திருக்கின்றனர்.
அக்டோபர் 2023-ல் ஒருநாள், மூன்று கடன்காரர்கள் அதிகாலை 5 மணிக்கு வந்தனர் என தொடருகிறார் ரோஷன். கையில் தடிகளுடன் அவர்கள் கதவை தட்டியபோது குடும்பம் தூக்கத்தில் இருந்தது. கடுமையான வார்த்தைகளை சொல்லி கொடுக்க வேண்டிய கடன் தொகையை கொடுக்கும்படி ரோஷனை அவர்கள் கேட்டிருக்கின்றனர்.
மீண்டும் மீண்டும் அவர்கள் வந்தனர். இன்னும் 16 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்றார்கள்.
எல்லா இடங்களிலும் ரோஷன் கடன் வாங்கி விட்டார். அடமானம் வைக்கவும் வீட்டில் ஏதும் இல்லை. வேலை தேடிய அவரின் முயற்சிகளும் பலன் அளிக்கவில்லை.
“கடனை அடைக்க சிறுநீரகத்தை விற்றுவிடு,” என ஆறு கடன்காரர்களில் ஒருவர் சொன்னதாக ரோஷன் நினைவுகூருகிறார். “இல்லையெனில் உன் குடும்பத்தை சும்மா விட மாட்டேன்.”
சிறுநீரகம் விற்பவர்களுக்கென இருக்கும் முகநூல் குழுவை கடன்காரர் சொல்லி, அதில் அவரை சேரும்படி கூறியிருக்கிறார்.
“முதலில் (சிறுநீரகம் விற்க) நான் தயங்கினேன்,” என்கிறார் அவர். “ஆனால் அவர்கள் வசூலுக்காக தொடர்ந்து ஆயுதங்கள் மற்றும் தடிகளுடன் வரத் தொடங்கியதால் நாங்கள் பயந்தோம். அந்த சாத்தியத்தை பற்றி நான் யோசிக்கத் தொடங்கினேன்.”
நவம்பர் 2023-ல் ஒருநாள் அக்குழுவில் (சிறுநீரகம் கொடுப்பவர்களுக்கான முகநூல் குழு) அவர் இணைந்தார். ஒரே நாளில், ஒரு வாட்சப் குழுவில் இணையும்படி அவருக்கு குறுந்தகவல் வந்தது. “எனக்கு சற்று சந்தேகமும் பயமும் இருந்தது. ஆனாலும் இணைந்துவிட்டேன்,” என்கிறார் அவர்.
பிறகு அந்த முகநூல் குழு முடக்கப்பட்டது.










