“நான் உண்மையில் ஓர் அதிர்ஷ்டசாலி,” என்று பாரியிடம் சொல்கிறார் ரோஷன் சதாஷிவ் குலே. அவர் உயிருடன் இருப்பதையே அதிர்ஷ்டமாக கருதுகிறார். அவர் வீட்டில் இருப்பதே அதிர்ஷ்டம் தான்.
இவையெல்லாம் ஐந்தாண்டுகளுக்கு முன் தொடங்கியது. மிந்தூர் கிராமத்தைச் சேர்ந்த இந்த 34 வயது சிறு விவசாயியின் 12 ஜெர்சி பசுக்களுக்கு தோலில் கட்டி நோய் கண்டறியப்பட்டது. 2021 மார்ச் மாதம் கோவிட்-19 இரண்டாவது அலை நாடெங்கும் வீசிக்கொண்டிருந்தபோது மகாராஷ்டிராவில் கால்நடைகள் பாதிக்கப்பட்டன.
“அவற்றின் சிகிச்சைக்கு நிறைய செலவு செய்துவிட்டேன்,” ரோஷன் நினைவுகூர்கிறார். “ஆனால் அவற்றின் உடல்நிலையில் முன்னேற்றமில்லை.”
ஆறு பசுக்கள் இறந்துவிட்டன. பால் உற்பத்தியும் சீர்குலைந்துவிட்டது. பால் மூலம் கிடைத்து வந்த வருமானமும் நின்றுவிட்டது. ஆனால் செலவு நிற்கவில்லை. எஞ்சியுள்ள ஆறு பசுக்களுக்கான மருந்துகள், தடுப்பூசிகள் வாங்குவதற்கு சந்திராபூரின் வனவளம் நிறைந்த நாக்பித் தாலுக்காவைச் சேர்ந்த அந்த சிறு விவசாயியிடம் செலவு செய்ய பணமில்லை.
பெருந்தொற்று காலத்தில் பண நெருக்கடியை சமாளிக்க வங்கிகளில் கடன் பெறுவதும் கடினமாக இருந்தது. வங்கி முகவராகப் பணியாற்றும் நண்பர் ஒருவரின் வற்புறுத்தலின் பேரில், ரோஷன் முறைசாரா கடன் ஒன்றைப் பெறுவதற்காக அருகிலுள்ள பிரம்மபுரி நகரில் கந்துவட்டிக்காரரை அணுகினார்.
தனது நெருக்கடி உடனடியாக தீர்ந்துவிட்டதாக அவர் கருதினார்.
“நெருக்கடி அப்போது தான் தொடங்கியது,” என அவர் நினைவுகூர்கிறார்.
2021 மார்ச்சில் தனது கால்நடைகளுக்கு உயிர் காக்கும் மருந்துகளை வாங்குவதற்காக ரோஷன் வாங்கிய ரூ.1 லட்சம் ரூபாய் கடன், அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்படாத கடன் என்பதால் வட்டியோடு சேர்த்து 50 லட்சம் ரூபாயாக பெருகியது. இது அந்தப் பால் பண்ணை விவசாயியை சட்டவிரோத உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மோசடி வலையில் சிக்க வைத்து, இறுதியில் அவரது சிறுநீரகத்தையே பறித்தது. லாவோஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு சர்வதேச இணையக் குற்றக் கும்பலின் வலையிலும் அவர் சிக்கிக் கொண்டார்.















