உன் மீனின் விலை என்ன சொல், ஓ பெண்ணே - இப்பாடல் வழக்கமாக திருமண விழாக்களில் பாடப்படும். இந்த வகைமை தொடர்ந்து வருவதற்கான உதாரணம் இது. முந்த்ரா தாலுகாவை சேர்ந்த மீனவரான ஜுமா வாகேரால் பாடப்பட்ட இப்பாடல், பாரம்பரியமாக சந்தோஷ தருணங்களில் பாடப்படுவது. ஆனால் தற்காலத்தில் இப்பகுதியிலுள்ள மக்களுக்கு, இப்பாடல் பல சமூகரீதியிலான, அரசியல் ரீதியிலான அர்த்தங்களை கொடுக்கிறது.
இப்பகுதியில் மீன்பிடி தொழில் செய்யும் இஸ்லாமிய சிறுபான்மை சமூகமான வாகேர்களுக்கு பல நூறு ஆண்டு தொடர்பு கச்ச் வளைகுடாவுடன் இருக்கிறது. மீன்பிடி சமூகத்தை சேர்ந்த ஆண்களும், பெண்களும் குழந்தைகளும், தங்களின் கிராமத்திலிருந்து முந்த்ரா டவுனிலுள்ள மீன்பிடி பகுதிகளுக்கு புலம்பெயர்ந்து, கிட்டத்தட்ட 8 அல்லது 9 மாதங்களுக்கு தற்காலிக வசிப்பிடங்களில் வாழ்வார்கள். ஆண்கள் மீன் பிடித்து கொண்டு வருவார்கள். பெண்கள் மீன்களை காய வைத்து விற்பார்கள்.
இந்த சூழல், 2000மாம் வருடத்தில் மாநில அரசு, கடலோரத்தில் தொழில்மயமாக்கத்தையும் தனியார்மயத்தையும் ஊக்குவிக்கத் தொடங்கியதும் மாறத் தொடங்கியது. எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், சிமெண்ட் மற்றும் உர ஆலைகள், உப்பளங்கள், பாக்ஸைட் மற்றும் சுண்ணாம்புக்கல் சுரங்கப்பணி மற்றும் கப்பல் தொடர்பான நடவடிக்கைகள் யாவும், இம்மக்களின் வாழ்க்கைச்சூழலை கடுமையாக பாதித்தது.
கட்டுமானங்கள் மற்றும் மாசுபாடு ஆகியவற்றால் அவர்கள் தங்களின் மீன்பிடி பகுதிகளை இழக்கின்றனர். கடலோர வாழ்சூழலும் இயற்கையான அலைகளின் போக்கும் பாதிப்படைந்தது. மீன்பிடி அளவு குறைந்ததால் வாகேர்களின் வருமானத்தில் கணிசமான அளவு குறைந்தது. விளைவாக ஆழ்கடலுக்கு போக நேர்ந்தது. அங்கும் பாரம்பரிய மீன்பிடி முறைகள் பயன்பட முடியாத சூழல்.
பத்தாண்டுகளுக்கு முன்பு, இப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் ஒரு படி மேலே சென்று, வாழ்வாதாரங்களை அழித்த பெரும் நிலக்கரி ஆலைக்கு நிதி அளித்த காரணத்தால் உலக வங்கியின் தனியார் முதலீட்டு அமைப்பான சர்வதேச நிதி மையத்தின் (IFC) மீது அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இப்பகுதியில் கொண்டு வரப்பட்ட வளர்ச்சி திட்டங்கள், ஏற்கனவே சமூகரீதியாகவும் கல்விரீதியாகவும் விளிம்புநிலையில் (SEBC) வாழ்ந்து வந்த இச்சமூக மக்களின் பாதிப்பை தீவிரப்படுத்துவதாகதான் அமைந்தது.



