வெப்பத்தில் தகிக்கும், வியர்வை கசகசக்கும் ஒரு மே மாதப் பகல் பொழுது. ஆனால், மொஹாவில் உள்ள ஹஸ்ரத் சையது ஆல்வி (ரெஹ்மதுல்லா அலைஹ்) தர்கா கூட்டம் நெரிகிறது. ஒஸ்மானாபாத் மாவட்ட கலம்ப் வட்டாரத்தில் உள்ள, 200 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தர்கா அது. ஆண்டுதோறும் நடக்கும் கந்தூரி வழிபாடும் விருந்தும் தடபுடலாக நடந்துகொண்டிருக்கிறது. அதில் பங்கேற்கும் நாற்பது குடும்பங்களில் பெரும்பாலானவை இந்து குடும்பங்கள்தான். தோபலே குடும்பம் அதில் ஒன்று. நானும் எனது குடும்பமும் இங்கே விருந்தினர்கள்.

விவசாயக் குடும்பங்களுக்கு கொஞ்சம் ஓய்வு கிடைக்கும் கோடை காலத்தில், மரத்வாடா பகுதியின் ஒஸ்மனாபாத், லத்தூர், பீட், ஜல்னா, ஔரங்காபாத், பர்பனி, நான்டெட், ஹிங்கோலி ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள,  பீர்கள் என அழைக்கப்படும் புனிதர்களின் தர்காக்களில் திருவிழா பரபரப்பு தொற்றிக்கொள்ளும். அங்கு வருகிறவர்கள், ஆட்டுக் கிடாய் பலியிட்டு, சமைத்த இறைச்சியை படையல் வைத்து, திருவருள் வேண்டி, ஒன்றாக உணவு பறிமாறி, ஒன்றாக சாப்பிட்டு மகிழ்வார்கள்.

“பல தலைமுறைகளாக கந்தூரி செய்கிறோம்,” என்கிறார் 60 வயது  பகீரதி கடம் என்கிற எங்கள் உறவினர். இவர், ஒஸ்மனாபாத் மாவட்டத்தில் உள்ள யேத்ஷி என்ற பகுதியைச் சேர்ந்தவர். மரத்வாடா பகுதி 600 ஆண்டுகாலம் இஸ்லாமிய ஆட்சியின் கீழ் இருந்தது. 224 ஆண்டுகால ஹைதராபாத் நிஜாம் ஆட்சியும் இதில் அடக்கம். இது போன்ற இஸ்லாமிய ஆலயங்கள் மீதான நம்பிக்கையும், இங்கே நடக்கும் வழிபாடும் மக்களின் மனங்களிலும், சடங்குகளிலும் ஒன்று கலந்து ஒத்திசைவு வாழ்வாக பரிணமிக்கிறது.

“கட் தேவதாரியில் நாங்கள் வழிபடுகிறோம். தவராஜ் கேடாவைச் சேர்ந்தவர்கள் இங்கே மொஹாவுக்கு வருகிறார்கள். லத்தூர் மாவட்டம் போர்காவன் பி.கே. என்ற உங்கள் ஊரைச் சேர்ந்தவர்கள் ஷெரா செல்வார்கள்,” என்று பல நூற்றாண்டுகளாக எந்த ஊர் எந்த தர்காவில் வழிபடுகிறது என்ற மரபை விவரிக்கிறார் நாங்கள் அன்போடு பாகா மவ்ஷி என்று கூப்பிடும் பகீரதி.

இங்கே மொஹாவில் உள்ள ரெஹமதுல்லா தர்காவில் உள்ள ஒவ்வொரு மரத்தடியிலும், ஒவ்வொரு தகரம் அல்லது தார்ப்பாய் கொட்டகையிலும் மக்கள் அடுப்பு கூட்டி உணவு சமைத்து, தர்காவில் படைக்கிறார்கள். ஆண்களும், பெண்களும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். சிறுவர்கள் விளையாடித் தீர்க்கிறார்கள். காற்று வெக்கையாக வீசுகிறது. புளியமரக் கிளைகள் அளிக்கும் நிழலைப் போலவே, மேற்கு வானில் திரண்ட மேகங்களும் கொஞ்சம் நிழலைத் தருகின்றன. தர்காவில் உள்ள 90 அடி ஆழமுள்ள, கல் பாவிய பழைய கிணறு காய்ந்து கிடக்கிறது. மழைக் காலத்தில் இதில் நீர் நிரம்பிவிடும் என்கிறார் ஓர் உறவினர்.

Left: Men offer nivad and perform the rituals at the mazar at Hazrat Sayyed Alwi (Rehmatullah Alaih) dargah (shrine) at Moha.
PHOTO • Medha Kale
Right: Women sit outside the mazar, near the steps  to watch and seek blessings; their heads covered with the end of their sarees as they would in any temple
PHOTO • Medha Kale

இடது: மொஹாவில் உள்ள ஹஸ்ரத் சையது ஆல்வி (ரெஹ்மதுல்லா அலைஹ்) தர்காவின் மசாரில் படையலிட்டு, சடங்குகள் செய்யும் ஆண்கள். வலது: மசாருக்கு வெளியே படிக்கட்டில் அமர்ந்தபடியே இதைப் பார்த்து திருவருள் வேண்டுகிறார்கள் பெண்கள். எந்தக் கோயிலுக்குச் சென்றாலும் செய்வதைப் போல இப்போதும் அவர்கள் தங்களதுசேலைத் தலைப்பை தங்கள் தலையைச் சுற்றிப் போட்டிருக்கிறார்கள்

Left: People sit and catch up with each other while the food is cooking.
PHOTO • Medha Kale
Right: People eating at a kanduri feast organised at the dargah in Moha, Osmanabad district
PHOTO • Medha Kale

இடது: சமையல் நடந்துகொண்டிருக்கும்போது, வெளியே அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் மக்கள். வலது: ஒஸ்மனாபாத் மாவட்டம் மொஹாவில், தர்காவில் ஏற்பாடு செய்யப்பட்ட கந்தூரி திருவிழா விருந்தில் சாப்பிடும் மக்கள்

60 வயது தாண்டிய ஆண் ஒருவர் தமது வயதான தாயை தனது முதுகில் சுமந்தபடியே தர்காவில் நுழைகிறார். 80 வயது கடந்த அந்த பெண்மணி, சாயம் போன 9 கஜ இர்கல் சேலை அணிந்திருக்கிறார். இந்தப் பகுதியில் முஸ்லிம் பெண்களும், இந்துப் பெண்களும் இந்த சேலையை அணிவார்கள். மசாரின் (புனிதரின் சமாதி) ஐந்து படிக்கட்டுகளில் தனது மகன் ஏறும்போது அந்த தாயின் கண்களில் நீர் துளிர்க்கிறது. கைகளைக் கூப்பி பணிந்து வணங்குகிறார்.

மற்ற பக்தர்கள் தொடர்ந்து வருகிறார்கள். உடல் நலம் குன்றி, பொலிவிழந்து தோன்றும் 40 வயதைத் தாண்டிய பெண் ஒருவர் தமது தாயோடு நுழைகிறார். நுழைவாயிலில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள மசாரை நோக்கி இருவரும் மெதுவாக நடந்து வருகிறார்கள். தேங்காயும், பூக்களும் காணிக்கையாக அளிக்கும் அவர்கள் மசாரில் ஊதுபத்தி ஏற்றி வணங்குகிறார்கள்.

உடைத்த தேங்காயை திருப்பித் தந்த முஜாவர் (கவனித்துக் கொள்கிறவர்), கூடவே உடல் நலம் குன்றிய பெண்  கைகளில் கட்டிக் கொள்வதற்கான ஒரு கயிறும் தருகிறார். ஊதுபத்தியில் இருந்து உதிர்ந்த சாம்பலை விரல்களில் எடுத்து தனது மகளின் நெற்றியில் இடுகிறார் தாய். இருவரும் சிறிது நேரம் ஒரு புளியமரத்தின் அடியில் அமர்ந்துவிட்டு பிறகு அங்கிருந்து செல்கிறார்கள்.

மசாருக்குப் பின்புறம் உள்ள இரும்புக் கிராதிக்கு அப்பால் நிறைய கண்ணாடி வளையல்கள் தொங்குகின்றன. எல்லா மதங்களையும் சேர்ந்த பெண்களும், தங்கள் மகள்களுக்கு பொருத்தமான துணைவன் அமைய வேண்டும் என்ற வேண்டுதலோடு இந்த வளையல்களை இங்கே கட்டி வைக்கிறார்கள். ஒரு பக்க மூலையில், ஒரு மரக் குதிரையும், மண் குதிரைகளும் நிற்கின்றன. “தாங்கள் வாழ்ந்தபோது குதிரைகளில் சென்ற முஸ்லிம் ஞானியரின் நினைவாக இந்தக் காணிக்கைகள் வழங்கப்படுகின்றன” என விவரம் சொன்னார் பாகா மவ்ஷி.

என் மாமியார் வீட்டில் தினமும் இரண்டு குதிரைகளை வணங்கும் வழக்கம் நினைவுக்கு வந்தது. அவை திடீரென வேறு பொருள் தந்தன. ஒன்று இந்துக் கடவுள் பைரவாவுக்கும், மற்றொன்று முஸ்லிம் பக்கிரியான பீர் ஒருவருக்கும் உரியது.

Left: Women who are seeking a match for their daughters tie bunches of light green or neon bangles to a metal fence behind the mazar.
PHOTO • Medha Kale
Right: A large wooden horse with a few clay horse figurines are offered by people in memory of revered saints who rode faithful horses
PHOTO • Medha Kale

இடது: தங்கள் மகள்களுக்கு துணை தேடும் பெண்கள் இளம் பச்சை நிற வளையல்களை மசாருக்குப் பின்னால் உள்ள உலோக கிராதியில் கட்டுகிறார்கள். வலது: பெரிய மரக் குதிரையும், சில மண் குதிரைகளும் குதிரைகளில் பயணித்த ஞானியரின் நினைவாக காணிக்கையாகத் தரப்பட்டுள்ளன

*****

பல பெண்கள் நள்ளிரவிலேயே எழுந்து கந்தூரி விருந்துக்கு இறைச்சியும் பக்ரி ரொட்டியும் தயார் செய்கிறார்கள். அவர்களில் சிலர் ஆட்டுக்கறி சாப்பிடமாட்டார்கள். வியாழக்கிழமை அவர்கள் இறைச்சி சாப்பிடமாட்டார்கள் என்பதுதான் காரணம். “சாப்பிடுவது முக்கியமில்லை,” என்கிறார் ஒரு பெண். “சாமிக்கு இதைச் செய்கிறோம், அம்மாடி” என்கிறார் அவர்.

இது போன்ற விருந்துகளுக்கு அடிப்படையாக இருப்பது பெண்களின் உழைப்புதான். ஆனால், இந்த உணவை சாப்பிடாத பலரும், விரதம் இருப்பவர்களுக்கும், மரக்கறி உணவுப் பழக்கம் உள்ளவர்களுக்காகவும் சமைக்கப்படும் விரத சாப்பாடு சாப்பிடுவதே தங்களுக்கு மகிழ்ச்சிதான் என்று கூறுகிறார்கள். ஆனால், இறைச்சியும், இந்த மரக்கறி உணவும், ஒரே அடுப்பிலேயே சமைக்கப்பட்டு, ஒரே தட்டிலேயே பறிமாறப்படுவது அவர்களுக்கு சிக்கலில்லை. இதனால், அவர்கள் மனம் புண்படுவதில்லை. தங்கள் உணர்வுக்கு பங்கம் ஏற்பட்டதாக அவர்கள் கருதுவதில்லை.

புனேவில் இருந்து இங்கே வந்திருக்கும் லக்ஷ்மி கடம் நூற்றுக்கணக்கான பக்ரி ரொட்டிகள் செய்து, கறி மசாலா அரைத்து, கழுவி, சுத்தம் செய்து சோர்வாகிவிட்டார். “முஸ்லிம் பெண்களைப் பார்த்தால் எனக்குப் பொறாமையாக இருக்கிறது. ஒரு பெரிய பானை பிரியாணி செய்துவிட்டால் போதும். இவ்வளவு வேலைகளை அவர்கள் செய்யவேண்டியதில்லை,” என்று சோர்வாக கூறுகிறார்.

“அவர்கள் கன்னங்களைப் பாருங்கள், அழகாக, இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கிறது,” என்று நீளும் லக்ஷ்மியின் பொறாமை, கருத்துகளுக்கும், கற்பனைகளுக்கும் விரிகிறது. வசதியான,  ஆதிக்கசாதிப் பெண்கள் சிலரைத் தவிர, எங்களைச் சுற்றியிருக்கிற பெண்கள் எல்லாம் நிறைய உழைத்து, ஒல்லியாக இருக்கிறார்கள். லக்ஷ்மி நினைப்பதைப் போல யாருக்கும் இளஞ்சிவப்பு கன்னங்கள் இல்லை.

Left: Men are in charge of both cooking and serving the meat.
PHOTO • Medha Kale
Right: Men serve the mutton dish; women eat after making hundreds of bhakri
PHOTO • Medha Kale

இடது: இறைச்சி சமைப்பது, பறிமாறுவது ஆகிய வேலைகளில் ஆண்களே ஈடுபட்டிருக்கிறார்கள். வலது: ஆண்கள் ஆட்டுக்கறி பறிமாறுகிறார்கள்; நூற்றுக்கணக்கான பக்ரி ரொட்டிகள் செய்த பிறகு பெண்கள் சாப்பிடுகிறார்கள்

Left: Men sitting and chatting after the feast, sharing a paan and some laughs.
PHOTO • Medha Kale
Right:  The region of Marathwada was under Islamic rule for more than 600 years. Belief and worship at these Islamic shrines are ingrained in people’s faith and rituals – representing a syncretic way of life
PHOTO • Medha Kale

இடது: விருந்து முடிந்தவுடன் அமர்ந்து வெற்றிலை போட்டுக் கொண்டு, பேசிக்கொண்டிருக்கும் ஆண்கள். சிலர் சிரிக்கிறார்கள். வலது: மரத்வாடா பகுதி 600 ஆண்டு காலம் இஸ்லாமிய ஆட்சியின் கீழ் இருந்தது.  இது போன்ற இஸ்லாமிய ஆலயங்கள் மீதான நம்பிக்கையும், இங்கே நடக்கும் வழிபாடும் மக்களின் மனங்களிலும், சடங்குகளிலும் ஒன்று கலந்த ஒத்திசைவு வாழ்க்கையாக பரிணமிக்கிறது

இந்த விருந்துகளில் இறைச்சி சமைப்பது ஆண்கள் மட்டுமே மேற்கொள்ளும் வேலையாக இருக்கிறது. முஸ்லிம் பக்தர்கள் வாயில் எச்சில் ஊற வைக்கும் பிரியாணி சமைத்துப் பரிமாறுகிறார்கள்.

ஐந்து பக்ரி ரொட்டிகள், ஒரு சட்டியில் கிரேவி, சில குறிப்பிட்ட இறைச்சி பாகங்கள், சப்பாத்தியை நசுக்கி செய்த மலிடா இனிப்பு, நெய், சர்க்கரை அல்லது வெல்லம் ஆகியவை தர்காவின் முஜாவரிடம் படையலாக வழங்கப்படுகின்றன. மசாருக்கு அருகே செல்லும் ஆண்கள் படையலை அளிக்கிறார்கள். படிக்கட்டுக்கு வெளியே அமரும் பெண்கள் அதைப் பார்த்து திருவருள் வேண்டுகிறார்கள். கோயிலில் இருப்பதைப் போலவே அவர்களது சேலைத் தலைப்பு அவர்கள் தலைகளைச் சுற்றி இருக்கிறது.

வழிபாடு முடிந்து வரிசைப் பொருட்களை பரிமாறிக் கொண்ட பிறகு விருந்து தொடங்குகிறது. ஆண்களும் பெண்களும் தனித்தனி வரிசைகளில் சாப்பிடுகிறார்கள். விரதம் இருப்பவர்கள் விரதச் சாப்பாடு சாப்பிடுகிறார்கள். ஐந்து இஸ்லாமிய துறவிகளுக்கும், தர்காவில் வேலை செய்யும் ஐந்து பெண்களுக்கும் பறிமாறிய பிறகே விருந்து நிறைவடைந்ததாகப் பொருள்.

*****

சில வாரங்கள் கழித்து, வீட்டுக்கு அருகே உள்ள தர்காவில் ஒரு விருந்து ஏற்பாடு செய்தார் என் 75 வயது மாமியார் காயாபாய் காலே. சிறிது காலமாகவே இப்படி ஒரு விருந்து ஏற்பாடு செய்யவேண்டும் என்று திட்டமிட்டு வந்தார் அவர். இந்த ஆண்டு (2023) லத்தூர் மாவட்டம், ரேணாபூர் வட்டாரம், ஷேரா கிராமத்தில் இருக்கும் அவரது இளையமகள் ஜும்பார் இந்த விருந்துக்கு வந்திருந்தார்.

Left: A woman devotee at Dawal Malik dargah in Shera coming out after offering her prayers at the mazar .
PHOTO • Medha Kale
Right: Shriram Kamble (sitting on the floor) and his friend who did not want to share his name enjoying their time out
PHOTO • Medha Kale

இடது: ஷேராவில் உள்ள தவால் மாலிக் தர்காவின் மசாரில் வழிபாடு செய்துவிட்டு வெளியே வரும் பெண் பக்தர். வலது: ஸ்ரீராம் காம்ப்லேவும் (தரையில் அமர்ந்திருப்பவர்) தன் பெயரை வெளியிட விரும்பாத அவரது நண்பரும் மகிழ்ச்சியாக நேரத்தை கழிக்கிறார்கள்

Left: Gayabai Kale is joined by her daughter Zumbar in the annual kanduri at Dawal Malik in Latur district.
PHOTO • Medha Kale
Right: A banyan tree provides some shade and respite to the families who are cooking the meat, as well as families waiting to offer nivad and prayers at the dargah
PHOTO • Medha Kale

இடது: லத்தூர் மாவட்டம் தவால் மாலிக்கில் நடக்கும் வருடாந்திர கந்தூரியில் காயாபாய் காலேவும் அவரது மகள் ஜும்பாரும் கலந்துகொள்கிறார்கள். வலது: இறைச்சி சமைக்கும் குடும்பத்துக்கும், தர்காவில் படையல் அளிக்க காத்திருக்கும் குடும்பத்துக்கும் நிழலும் கொஞ்சம் ஆசுவாசமும் அளிக்கும் ஆலமரம்

மொஹாவில் உள்ள தர்காவைவிட இந்த தவால் மாலிக் தர்கா சிறியது. வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்த 15 இந்து குடும்பங்களை நாங்கள் சந்தித்தோம். ஒரு பெண்கள் குழு மசாருக்கு எதிரே அமர்ந்து இந்துக் கடவுள்களைப் போற்றி சில பஜனைகள் பாடுகிறது. சிலர் ஒரு வயதான இஸ்லாமியத் துறவியிடம் குடும்ப விவகாரங்களில் ஆலோசனை கேட்டு பேசிக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் பல கோயில்களில் ஏற்கப்படாதவர்களான தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒரு சிறுவர்கள் குழு படையல் அளிக்கப்படும்போது ஹல்கி (பறை) இசைக்கிறது.

காயாபாயின் மூத்த மகன் பாலாசாஹிப் காலே சமையல் வேலையை பார்த்துக்கொள்கிறார். லத்தூர் மாவட்டம் போர்காவ்ன் பி.கே.வை சேர்ந்த சிறிய விவசாயியான அவர் ஆடு பலியிடுவதில் உதவி செய்கிறார். காரமும் சுவையும் நிறைந்த கறி சமைக்கிறார் அவர். தாயும் மகளும் படையல் அளிக்கிறார்கள். தர்காவில் உள்ள மற்றவர்களோடு உணவைப் பகிர்ந்து கொண்டு சாப்பிடுகிறது குடும்பம்.

இரண்டு தர்காவிலும் நான் சந்தித்த பெண்களுக்கு இந்த வழிபாட்டுச் சடங்கும், விருந்தும் நிறைவேற்ற வேண்டிய நேர்த்திக் கடன் போல. “இதை செய்வது தேர்வு எல்லாம் இல்லை. இது ஒரு கடன். இது ஒரு சுமை. இதை  இறக்கி வைக்கவேண்டும்”. இந்த நேர்த்திக் கடனை நிறைவேற்றாமல் போனால், ஏதோ கெட்டது நடக்கும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்.

இந்த வருகை, சமையல், விருந்து, பகிர்ந்து கொள்ளுதல் ஆகியவற்றின் மூலம் அவர்கள் தங்கள் இந்து அடையாளத்தை தக்க வைத்துக் கொள்கிறார்கள். இந்த ஆலயத்தை அவர்கள் தங்கள் சொந்த வழிபாட்டு இடம் போலவே பார்க்கிறார்கள்.

“இந்த பீர் எனது தெய்வம் இவரை நான் வணங்கிக் கொண்டே இருப்பேன். என் தாத்தா இதைச் செய்தார். என் தந்தையும் செய்தார். நானும் தொடர்ந்து செய்வேன்,” என்று உறுதியோடும், மாறாத நம்பிக்கையோடும் சொன்னார் காயாபாய்.

Left: Women spend hours making hundreds of bhakris for the kanduri feast.
PHOTO • Medha Kale
Right: Men like Maruti Fere, Gayabai’s brother, preparing the mutton
PHOTO • Medha Kale

இடது: கந்தூரி விருந்துக்கு நூற்றுக்கணக்கான பக்ரி ரொட்டிகளை பல மணி நேரம் செலவிட்டு செய்கிறார்கள் பெண்கள். வலது: காயாபாயின் சகோதரர் மாருதி ஃபெரே போன்ற ஆண்கள் ஆட்டுக் கறி சமைக்கிறார்கள்

Left: Balasaheb Kale is in charge of cooking the meat at dargah Dawal Malik.
PHOTO • Medha Kale
Right: Prayers and nivad are offered at the mazar and Kale family eats the kanduri meal
PHOTO • Medha Kale

இடது: தவால் மாலிக் தர்காவில் இறைச்சி சமைப்பதற்குப் பொறுப்பேற்று செய்கிறார் பாலாசாஹிப் காலே. மசாரில் படையலும் வழிபாடும் செய்து கந்தூரி உணவை சாப்பிடுகிறது காலே குடும்பம்

*****

காயா பாயும், பாகா மவ்ஷியும் இவர்களைப் போன்ற பலரும் தர்காவுக்குச் சென்று தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் அதே மாதத்தில் (மே 2023), 500 கிலோமீட்டருக்கு அப்பால், டிரிம்பகேஸ்வரில் வசிக்கும் சலிம் சையத், நாசிக் மாவட்டத்தில் உள்ள திரியம்பகேஸ்வரர் கோயில் நுழைவாயிலுக்கு சந்தன தூபம் செய்ய செல்கிறார். 60 வயது தாண்டிய அவரோடு, வேறு சிலரும் 100 ஆண்டுகள் கடந்த இந்த ஐதீகத்தில் பங்கேற்கச் செல்கிறார்கள்.

தங்களது சொந்த திரியம்பக ராஜா மீது அவர்கள் மாறாத நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அதனால்தான் இந்த வருடாந்திர உருசுக்கு சதார் வழங்குகிறார்கள்.

ஆனால், சையதும் மற்றவர்களும் அத்துமீறி கோயிலுக்குள் நுழைய முயன்றதாக கூறி கோயில் வாசலில் முரட்டுத் தனமாக நிறுத்தப்படுகிறார்கள். அவர்கள் தங்கள் வழிபாட்டை தங்கள் ஆலயத்தில் வைத்துக் கொள்ளவேண்டும் என்று ஒரு இந்து மதவெறித் தலைவர் கூறுகிறார். இந்துக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தியதாகவும் அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த ‘பயங்கரவாதச் செயல்’ குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

அதிர்ச்சி அடைந்த சையது பொது மன்னிப்பு கேட்டார். நூற்றாண்டு கடந்த இந்த ஐதீகத்தை சமூக நல்லிணக்கத்தை பேணுவதற்காக நிறுத்திக் கொள்வதாக அவர் உறுதி அளித்துள்ளார். இதில் உள்ள நகைமுரணை யாரும் குறிப்பிட்டுக் காட்டவில்லை.

மொழிபெயர்ப்பாளர்: அ.தா.பாலசுப்ரமணியன்

Medha Kale

மேதா காலே, மும்பையில் வசிக்கிறார், பெண்கள் மற்றும் நல்வாழ்வு தொடர்பான விவகாரங்களில் எழுதுகிறார். PARIஇல் இவரும் ஒரு மொழிபெயர்ப்பாளர். தொடர்புக்கு [email protected]

Other stories by Medha Kale
Editor : Priti David

ப்ரிதி டேவிட் பாரியின் நிர்வாக ஆசிரியர் ஆவார். பத்திரிகையாளரும் ஆசிரியருமான அவர் பாரியின் கல்விப் பகுதிக்கும் தலைமை வகிக்கிறார். கிராமப்புற பிரச்சினைகளை வகுப்பறைக்குள்ளும் பாடத்திட்டத்துக்குள்ளும் கொண்டு வர பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுடன் இயங்குகிறார். நம் காலத்தைய பிரச்சினைகளை ஆவணப்படுத்த இளையோருடனும் இயங்குகிறார்.

Other stories by Priti David
Translator : A.D.Balasubramaniyan

அ.தா.பாலசுப்ரமணியன், முன்னணி தமிழ், ஆங்கில செய்தி ஊடகங்களில் இருபதாண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய இதழாளர். ஊரக, சமூக சிக்கல்கள் முதல் அரசியல், அறிவியல் வரை வெவ்வேறு பொருள்களில் தமிழ்நாடு மற்றும் தில்லியில் இருந்து செய்தியளித்தவர்.

Other stories by A.D.Balasubramaniyan