துளு நாட்டின் கர்னால் சாய்பேர் அல்லது பட்டாசுக் கைவினைஞர்கள், கடலோர கர்நாடகத்தின் பல பண்பாட்டு நிகழ்வுகளில் மிகவும் முக்கியப் பங்கு வகிப்பவர்கள். பூத கோலா, திருவிழாக்கள், திருமணங்கள், பிறந்தநாள் கொண்டாட்டங்கள், புதுமனை புகுவிழாக்கள், இறுதிச் சடங்குகள் ஆகியவற்றில் இவர்களது பங்கேற்பு மிகவும் எதிர்பார்க்கப்படும் நிகழ்வாகும்.

‘கர்னால்’ என்றால் பட்டாசு என்று பொருள். ‘சாய்பேர்’ என்பது முஸ்லிம் நபரை குறிக்கும் சொல்.

தனது தந்தை இந்தக் கலையை தமக்கு கற்றுத் தந்ததாகக் கூறுகிறார் முல்கி நகரைச் சேர்ந்த கர்னால் சாய்பேரான அமீர் உசேன். தமது பரம்பரையில் இந்த தொழிலை ஒவ்வொருவரும் அடுத்த தலைமுறைக்கு சொல்லிக் கொடுத்து இதுவரை கொண்டு வந்திருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.

“பட்டாசுகளை வீசுவதும், கையாளுவதும் - குறிப்பாக பெரிய பட்டாசுகள் - ஆபத்தான வேலை,” என்கிறார் நிதேஷ் அஞ்சான். இவர் கர்நாடகத்தில் உள்ள மணிபால் உயர்கல்விக் கழகத்தில் ஆய்வு உதவியாளராக இருக்கிறார்.

உடுப்பி மாவட்டம், ஆத்ராடி என்ற ஊரைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞரான முஷ்டாக் ஆத்ராடி பட்டாசுகள் செய்து பூதச் சடங்குகளில் வீசுகிறார். குறிப்பாக, இவர் கதோனி எனப்படும் சக்தி வாய்ந்த பட்டாசு செய்வதில் கெட்டிக்காரர். “கதோனி என்பது மாறுபட்ட வேதிப் பொருட்களைக் கொண்டு, உருவாக்கும் வெடிக்கும் பொடி,” என்கிறார் இவர். கதோனி வெடித்தால், நிலமே அதிரும் என்று சொல்லப்படுவது உண்டு.

காணொளி பாருங்கள்: துளுநாட்டின் கர்னால் சாய்பேர்கள்

பூத கோலா நிகழ்வுகளில் பட்டாசு வெடிப்பதைக் காணக் கண்கோடி வேண்டும். துளு நாட்டில் பூத வழிபாடு என்பது பல நூற்றாண்டுகளாக நடப்பது. கோலா (நிகழ்த்துதல்) என்பது பூத வழிபாட்டு மரபோடு தொடர்புடைய ஒரு சடங்கு. நாதஸ்வரம், தாசே போன்ற பாரம்பரியக் கருவிகளின் இசையும், கர்னால் (பட்டாசு) வெடிக்கும் சத்தமும் பூத கோலா நிகழ்வின் உள்ளுறையான அம்சங்கள். பார்க்க: துளு நாட்டின் ஒத்திசையும் பாரம்பரிய பூதாக்கள்

கோலா நிகழ்வின்போது, திரி கொளுத்தப்பட்ட பட்டாசுகளை வானத்தை நோக்கி வீசுகிறார்கள் கர்னால் சாய்பேர்கள். இந்த வாண வேடிக்கைகள் ஒரு மாயாஜாலத்தை நிகழ்த்துகின்றன.

பூத வழிபாடு பல சமூகத்தவர் ஒன்றிணைய வழி செய்கிறது என்கிறார் பேராசிரியர் பிரவீண் ஷெட்டி. “துளு நாட்டின் பூத வழிபாட்டு சம்பிரதாயங்களில் பொதுவாக இன்று இந்து சமூகங்களுக்குத் தரப்படும் விதிமுறைகளும், கடமைகளும்தான் இடம் பெறுகின்றன. ஆனால், கால ஓட்டத்தில், பூத வழிபாட்டில், முஸ்லிம் சமூகங்களும் இடம் பெறத்  தொடங்கின என்பது சுவாரசியம். அவர்கள் இந்த சடங்கில், ஒன்று பட்டாசுகள் வீசுகிறார்கள், அல்லது கோலா நிகழ்வுக்கு இசை வழங்குகிறார்கள்.”

“பட்டாசுகள் அறிமுகமான பிறகு, பூத கோலா சடங்குகள் பிரம்மாண்டமாக, கண் கவரக்கூடியதாக மாறின,” என்கிறார் பேராசிரியர் ஷெட்டி. உடுப்பியில் உள்ள மணிபால் உயர்கல்விக் கழகத்தில் துளு பண்பாட்டு வல்லுநராக உள்ளார் இவர்.

அமீரும், முஷ்டாக்கும் வர்ண ஜாலம் காட்டி இரவு வானத்தை ஜொலிக்க வைப்பதை காணொளியில் பாருங்கள். ஒத்திசைவும், பொது மரபும் கொண்ட, பல நூற்றாண்டுகள் பழமையான பாரம்பரியத்தை இவர்கள் முன்னெடுத்துச் செல்கிறார்கள்.

இந்த செய்தி, மிருணாளினி முகர்ஜி அறக்கட்டளை (MMF) ஆய்வுதவித் திட்டத்தின் ஆதரவோடு தயாரிக்கப்பட்டது.

முகப்பு படம்: சித்திதா சொனாவனே

மொழிபெயர்ப்பாளர்: அ.தா.பாலசுப்ரமணியன்

Faisal Ahmed

ஃபைசல் அகமது ஓர் ஆவணப்பட இயக்குநர். கடலோர கர்நாடகாவின் மல்பேவில் வசிப்பவர். முன்பு அவர் மணிபால் உயர்கல்வி நிறுவனத்தில் பணிபுரிந்தார். அங்கு துளுநாட்டில் நிலவும் பண்பாடுகள் பற்றிய ஆவணப்படங்களை இயக்கினார். MMF-PARI-ன் மானியப்பணியில் 2022-23-ல் இருந்தவர்.

Other stories by Faisal Ahmed
Text Editor : Siddhita Sonavane

சித்திதா சொனாவனே ஒரு பத்திரிகையாளரும் பாரியின் உள்ளடக்க ஆசிரியரும் ஆவார். மும்பையின் SNDT பெண்களின் பல்கலைக்கழகத்தில் 2022ம் ஆண்டு முதுகலைப் பட்டம் பெற்றவர். அங்கு ஆங்கிலத்துறையின் வருகை ஆசிரியராக பணியாற்றுகிறார்.

Other stories by Siddhita Sonavane
Translator : A.D.Balasubramaniyan

அ.தா.பாலசுப்ரமணியன், முன்னணி தமிழ், ஆங்கில செய்தி ஊடகங்களில் இருபதாண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய இதழாளர். ஊரக, சமூக சிக்கல்கள் முதல் அரசியல், அறிவியல் வரை வெவ்வேறு பொருள்களில் தமிழ்நாடு மற்றும் தில்லியில் இருந்து செய்தியளித்தவர்.

Other stories by A.D.Balasubramaniyan