"இந்த கைகள் இசைக்க மட்டுமே," என்று சம்பல்பூரில் பழங்குடியினர் மற்றும் இசைக்கருவிகள் பற்றிய உரையாடல்களுடன் அமைக்கப்பட்ட புகா என்ற திரைப்படத்தை பார்த்த நாளை நினைவுக் கூர்கிறார் கிருஷ்ண சந்திர பாக்.
பல தசாப்தங்களுக்குப் பிறகு, படத்திலிருந்து ஒரு வசனத்தை பிழையின்றி க்ருஷ்ணா கூறுகிறார்: "எங்களிடம் உள்ள இந்த பழமையான தொழிலை [துல்துலி] கைவிட முடியாது. என் தந்தையோ, அவரது தந்தையோ ஒருபோதும் கூலி வேலைக்கு சென்றதில்லை."
துல்துலி என்பது ஒரு சம்பல்புரி நாட்டுப்புற இசை பாரம்பரியமாகும். ஒரு நிகழ்ச்சியின் போது ஐந்து தாள வாத்தியங்கள் மற்றும் துளை கருவிகளை இணைக்கிறது. திறன்மிக்க இசைக்கலைஞர்கள் மட்டுமே இதில் பங்கேற்க முடியும்.
தன்னைப் போன்ற துல்துலி இசைக்கலைஞர்களைப் காண வைத்த திரைப்படங்களில் புகா முதலாவது என்று க்ருஷ்ணா கூறுகிறார். மேற்கு ஒடிசாவின் சம்பல்பூர் நகரில் வசிக்கும் இவர், தனது 50களில் மனைவி சுகந்தி பாக் மற்றும் அவர்களது மகன் க்ஷிதீஷ் பாக் ஆகியோருடன் வசித்து வருகிறார். இவர்கள் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
காசியா [காசி] சமூகம் இசைக்கருவிகளை உருவாக்குகிறது. காண்டா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அவற்றை வாசிக்கிறார்கள். இந்த இரண்டு சமூகத்தினரும் விலங்குகளின் தோல் கொண்டு வேலை செய்ததால், அவர்கள் புனிதமற்றவர்களாக கருதப்பட்டனர்," என்கிறார் க்ருஷ்ணா. "அவர்களுக்கு வேலை கிடைப்பது கடினமாக இருந்தது. எனவே அவர்கள் நடனம் மற்றும் இசைக்கருவிகளை வாசித்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டனர்." காசி மற்றும் காண்டா சமூகங்கள் ஒடிசாவில் பட்டியல் சாதியினராக (SC) பட்டியலிடப்பட்டுள்ளன (மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011).
பயன்படுத்தப்படும் ஐந்து கருவிகளில், இந்த சமூகங்கள் டோல் மற்றும் நிஷான் ஆகியவற்றை உருவாக்குகின்றன. அவை விலங்குகளின் தோலால் செய்யப்பட்ட டிரம்ஹெட்களைக் கொண்டுள்ளன. நிஷான் இரண்டு பக்கங்களிலும் மான் கொம்புகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த கருவிகளை உருவாக்குவதற்கு விலங்குகளின் தோல் மற்றும் கொம்புகளுடன் நுட்பமான வேலைப்பாடு தேவைப்படுகிறது. பாரம்பரியமாக தலித் சமூகங்களிடம் இந்த வேலைப்பாடு விடப்பட்டுள்ளது.
க்ருஷ்ணா தனது 50 களின் பிற்பகுதியில் இருக்கிறார். ரங்ஃபரூவா என்ற துல்துலி குழுவில் உள்ள வயதான கலைஞர்களில் ஒருவர். துல்துலி ஐந்து தாளம் மற்றும் துளை கருவிகளை ஒருங்கிணைக்கிறது. அவை கூட்டாக பஞ்ச பாத்யா (ஐந்து கருவிகள்) என்று அழைக்கப்படுகின்றன - டோல், நிஷான் மற்றும் தாஷா போன்ற தாள கருவிகள்; கூடவே முஹுரி, கர்தால் போன்ற துளை கருவிகளும் இருந்தன.
ஒன்றாக வாசிக்கும்போது, க்ருஷ்ணா கூறுகிறார், "பஜர் ஒலி ரே எட்கி ஒலி பஹர்சி ஜே ஹால் பித்ரே ப்ராக்டிஸ் ஹி கரி நை ஹுவே [கருவிகளால் உருவாக்கப்படும் ஒலி மிகவும் சத்தமாக இருப்பதால் எந்த மண்டபத்திலும் சரியான பயிற்சி அமர்வை நீங்கள் நடத்த முடியாது]."
இரட்டை பக்க பீப்பாய் வடிவ டிரம் என்ற டோல் வாசிப்பதில் அவர் நிபுணத்துவம் பெற்றவர். அவரது மகன், க்ஷிதீஷ் 28 வயதான சுயாதீன புகைப்படக் கலைஞர் மற்றும் டோல்-கலைஞர் ஆவார். அவர் தனது தந்தையுடன் நிகழ்ச்சிகளை நடத்துகிறார். "நாங்கள் முறையாக பயிற்சி பெறவில்லை. என் தந்தையிடமிருந்து கலை வடிவத்தை மட்டுமே கற்றுக்கொண்டோம். அவர் அதை தனது தந்தையிடமிருந்து பெற்றார்," என்று க்ருஷ்ணா கூறுகிறார். துல்துலி பாரம்பரியத்தை அவரது குடும்பத்தின் மூன்று தலைமுறைகளில் காணலாம்.
தனது வரவேற்பறையில் சான்றிதழ்களால் மூடப்பட்டிருந்த ஒரு சுவரைக் காட்டி, க்ருஷ்ணா சம்பல்புரியில் பேசுகையில், "இடா ஹி தா அமர் கமானி ஆயே பாகி துனியாதாரி தா சலிதிபா [இதுதான் நாங்கள் சம்பாதித்த மரியாதை]" என்று கூறுகிறார். நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக ஒரு கலைஞரான இவர், நாடு முழுவதும் வாசித்துள்ளார். ஒடிசாவில் உள்ளூர் மாவட்ட நிர்வாகங்களால் ஏற்பாடு செய்யப்படும் வருடாந்திர கொண்டாட்டமான லோக் மஹோத்சவ் போன்ற மதிப்புமிக்க நிகழ்வுகளில் அவர் வாசித்துள்ளார்.
நிகழ்வு எவ்வளவு நேரம் நீடிக்கும் என்பதை பொறுத்து க்ருஷ்ணா ஒவ்வொரு நிகழ்விற்கும் ரூ.1,000 முதல் ரூ.2,000 வரை வசூலிக்கிறார்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, க்ருஷ்ணா அருகிலுள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் இசை ஆசிரியராக பணியாற்றத் தொடங்கினார். தனது துல்துலி குழுவுடன் பயிற்சி மற்றும் நிகழ்ச்சிகளைத் தவிர, வார இறுதி நாட்களில் இளைஞர்களுக்கு தல்காய் நடனத்தையும் அவர் கற்பிக்கிறார்.
*****
துல்துலியும் தால்காயும் கைகோர்த்துச் செல்கின்றன என்று 40 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தக் கலையுடன் தொடர்புடைய, தல்காய் பயிற்சியாளர், நடன இயக்குனர், மற்றும் கலைஞருமான துர்கா பிரசாத் தாஷ் கூறுகிறார்.
55 வயதான அவர் தன்கவுடா வட்டத்தில் உள்ள மஜிபாலி கிராமத்தைச் சேர்ந்தவர். தாஷ் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர். இது வரலாற்று ரீதியாக தல்காய் கலையுடன் தொடர்புடையது அல்ல என்று அவர் கூறுகிறார், அதில் "துர்கா தேவியின் உடல் வெளிப்பாடான தல்காய் தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பாடலுக்கு ஒரு குழு நடனமாடுகிறது".
"முன்னதாக, கோல், காரியா, பிஞ்சால் மற்றும் ஓரான் சமூகங்களைச் சேர்ந்த பெண்கள் [ஒடிசாவில் பட்டியல் பழங்குடியினர்] தசரா பண்டிகையின் போது நோன்பை முடிக்க துல்துலியின் தாளத்திற்கு நடனமாடினர்," என்று தாஷ் கூறுகிறார்.
"நான் சிறுவனாக இருந்தபோது தல்காய் [நிகழ்ச்சிகள்] பார்க்க அனுமதிக்கப்படவில்லை," என்று அவர் கூறுகிறார். அந்த நேரத்தில் குழந்தைகள் பார்ப்பது ஆபாசமாக கருதப்பட்டது. "மோர் ஸ்கூல் டைன், முய் லுகி லுகி தல்காய் தேகிஜாதிலி [நான் என் பள்ளி நாட்களில் கூட்டத்தில் ஒளிந்து கொண்டு தல்காய் நிகழ்ச்சிகளைப் பார்ப்பேன்]".
1980களின் பிற்பகுதியில் மாற்றங்கள் ஏற்பட்டன. தல்காய் ஒரு பொது நிகழ்ச்சியாக உருவானபோது, அதன் பார்வையாளர்கள் விரிவடைந்தனர். மேலும் பல புதிய நடனக் குழுக்கள் உருவாக்கப்பட்டன என்று அவர் கூறுகிறார். பல்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் சேர்ந்தனர். ஆரம்பத்தில் இருந்து தொழில்துறையில் இருந்தவர்கள் குருக்கள் அல்லது வழிகாட்டிகளாக மாறி தங்கள் நடனக் குழு மற்றும் பயிற்சி மையத்தை தொடங்கினர் என்று தாஷ் கூறுகிறார்.
"தல்காய் தா காலி நடனம் நுஹே இடா அமர் துனியா ஆயே [தல்காய் என்பது நடனம் மட்டுமல்ல, எங்கள் உலகம்]", என்று தாஷ் கூறுகிறார். தல்காய் உலகில் ஒரு குருவாக தனது அனுபவத்தை சுருக்கமாக அவர் பகிர்கிறார்.
*****
சம்பல்பூரின் ரைராகோல் வட்டத்தில் உள்ள ரைராகோல் கிராமத்தைச் சேர்ந்த 24 வயதான தால்காய் நடனக் கலைஞர் டிக்கி மெஹர். இவர் மெஹர் சமூகத்தைச் சேர்ந்தவர். 2014 ஆம் ஆண்டில் அவர் தனது தாய் மற்றும் இரண்டு இளைய சகோதரர்களுடன் அதே மாவட்டத்தில் உள்ள புர்லா நகரத்திற்கு குடிபெயர்ந்தார். அவர்கள் அதிக வரவேற்புள்ள தல்காய் வாய்ப்புகளைத் தேடிக்கொண்டிருந்தனர்.
இன்று இவர் கலாஜிபி என்ற பிரபலமான நடனக் குழுவில் உறுப்பினராக உள்ளார். நாடு முழுவதும் நிகழ்த்தும் எட்டு தல்காய் நிரந்தர நடனக் கலைஞர்களில் இவரும் ஒருவர். "முதலில் நான் ஒரு பின்னணி நடனக் கலைஞராகத் தொடங்கினேன். இப்போது நான் ஹாக்கி உலகக் கோப்பையில் நிகழ்ச்சி நடத்துகிறேன். அதுவே எனக்கு திருப்தி அளிக்கிறது," என்று டிக்கி பெருமையுடன் கூறுகிறார்.
டிக்கியின் 19ஆவது வயதில் அவரது தந்தை காலமானார். மூத்த வாரிசாக, தனது தாய் மற்றும் இரண்டு இளைய சகோதரர்களை ஆதரிக்க வேண்டிய திடீர் சூழலில் அவர் சிக்கிக் கொண்டார். "ஏதாவது வருமானம் வேண்டும் என்று நான் தல்காய் கற்கத் தொடங்கினேன்," என்று கூறுகிறார்
"சுவா பள்ளி தி உட்கி உட்கி நாச்லே தாலி மார்சுன் ஆவ் சேஹி சுவா பேட் ஹெய் கரி டான்சர் ஹேமி கஹேலே கலி தேசுன் [ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளின் நடனங்களை பள்ளி மேடை நிகழ்ச்சிகளில் ஏற்கின்றனர். ஆனால் அதே குழந்தை ஒரு தொழில்முறை நடனக் கலைஞராக மாற விரும்பினால் ஏற்பதில்லை]," என்று அவர் கூறுகிறார்.
ஆரம்ப நாட்களில் தனது முடிவுகளின் பின்னடைவை அவர் உணர்ந்தார். "நடனம் எனக்கு ஒரு உன்னதமான தொழில் அல்ல, யாரும் என்னை திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள் என்று அக்கம்பக்கத்தினர் எனது குடும்பத்தினரிடம் கூறினர்."
ஆனால், டிக்கியைப் பொறுத்தவரை, கடினமான காலங்களில் நம்பிக்கையுடன் இருக்க நடனம் உதவி உள்ளது. "எனது வாழ்வின் அனைத்து ஏற்ற இறக்கங்களிலும் நடனம் மட்டுமே உலகை எதிர்கொள்ள நம்பிக்கை அளித்து உயிர்ப்புடன் வைத்தது."
தமிழில்: சவிதா