ஒரு நாகப்பாம்பு, உறுதியான சக்வான் (தேக்கு) மரத்தை சுற்றிக் கிடக்கிறது. ராட்டி தோலா கிராமவாசிகள் கடுமையாக முயன்றும், அதை விரட்ட முடியவில்லை.
ஐந்து மணி நேரங்கள் கழித்து, கிராமவாசிகள் ஒருவழியாக முந்த்ரிகா யாதவை அழைக்கிறார்கள். பக்கத்து வால்மீகி புலிகள் சரணாலயத்தில் காவலாளியாக இருந்தவர் அவர். புலிகள், சிறுத்தைகள், காண்டாமிருகங்கள், பாம்புகள் என 200-க்கும் மேற்பட்ட விலங்குகளை காப்பாற்றியவர் அவர்.
முந்த்ரிகா வந்ததும், நாகப்பாம்பு இறங்க வைக்க முயற்சித்தார். அதுவும் இறங்கியது. “ஒரு மூங்கில் குச்சியை அதன் வாயில் வைத்து, கயிறை இறுக்கினேன். பிறகு அதை சாக்கில் போட்டு, காட்டுக்குள் சென்று அதை விட்டார்,” என்கிறார் 42 வயது நிரம்பிய அவர். “20-25 நிமிடங்கள்தான் ஆனது.”
பிகாரின் மேற்கு சம்பரான் மாவட்டத்திலுள்ள புலிகள் சரணாலயம் , கிட்டத்தட்ட 900 சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கு பரந்திருக்கிறது. 54 புலிகளும் பிற விலங்குகளும் அங்கு வசிக்கிறது. “சூழலுக்கேற்ப நான் உத்திகளை மேம்படுத்திக் கொள்வேன்,” என்கிறார் முந்த்ரிகா விலங்குகளை காக்கும் தன்னுடைய பாணி குறித்து.
யாதவ் சமூகத்தை (பிற்படுத்தப்பட்ட சாதி) சேர்ந்த முந்த்ரிகா, வனத்தின் அருகேயும் விலங்குகளுடனும் வளர்ந்தவர்.”எருமை மாடுகளை காட்டுக்குள் மேய்க்க கொண்டு செல்லும்போது நான் பாம்புகள் பிடிப்பேன். அந்த சமயத்திலிருந்து வன உயிர்கள் மீது நேசம் கொண்டேன். எனவே 2012ம் ஆண்டு வனக் காவலருக்கான உடல் பரிசோதனை நடத்தப்பட்டபோது, வேலைக்கு நான் விண்ணப்பித்தேன்,” என்கிறார் விஜய்பூர் கிராமத்தில் வசிக்கும் அவர். அங்கு அவர் மனைவி மற்றும் மகளுடன் வாழ்கிறார்.
“மொத்தக் காட்டின் வரைபடமும் எங்களுக்கு தெரியும். கண்ணைக் கட்டி, காட்டுக்குள் எங்களை விட்டுவிட்டு, நீங்கள் காரில் சென்றால் கூட, உங்களுக்கு முன்பாக நாங்கள் காட்டிலிருந்து வெளியே வந்து விடுவோம்,” என்கிறார் அந்த முன்னாள் வனக் காவலாளி.
அடுத்த எட்டு வருடங்களுக்கு, மாத சம்பளம் ஒரு வருடம் தாமதமாக வந்தபோதும், முந்த்ரிகா வன காவலாளியாக வேலை பார்த்தார். ”காடுகளையும் விலங்குகளையும் பாதுகாப்பது எனது பெரு விருப்பம்,” என்கிறார் அவர்.
2020ம் ஆண்டில் பிகார் அரசாங்கம், புதிய வனக்காவலர்களை தேர்வு செய்து நியமித்தது. யாதவ் போன்ற தொடக்ககால காவலர்களுக்கு வேறு வேலைகள் கொபட்டுவிட்டோம் தற்போது அவர் வாகன ஓட்டியாக இருக்கிறார். புதுவேலையில் அதிருப்தியுடன், “நாங்கள் ஓரங்கட்டுப் பட்டுவிட்டோம்,” என்கிறார் அவர். வயது மற்றும் கல்வித் தகுதி காரணமாக முந்த்ரிகாவால் தேர்வு எழுத முடியாது. மெட்ரிகுலேஷன் தேர்ச்சி பெற்று இருக்கிறார். ஆனால் அது போதுமானது கிடையாது.
சூழல் சிக்கலானால் புதிய வனக் காவலர்கள் முந்த்ரிகாவை அணுகுகின்றனர். “தேர்வின் மூலம் பணிக்கமர்த்தப்பட்ட வனக் காவலர்கள் பட்டப்படிப்பு படித்திருக்கலாம். ஆனால் யதார்த்தத்தை கையாளத் தெரிவதில்லை,” என்கிறார் அவர். “காட்டில் பிறந்தவர்கள் நாங்கள். விலங்குகளுடன் வாழ்ந்ததில் அவற்றை காக்கக் கற்றுக் கொண்டோம்.”
தமிழில்: ராஜசங்கீதன்