"பந்தர் கி ஃபெரி லாவோ, பந்தர் கி ஃபெரி லாவோ... [குரங்குகளுக்கு உணவு கொடுங்கள்...]"
ராஜஸ்தானின் சிரோஹி மாவட்டத்தில் உள்ள ஷியோகஞ்ச் நகரின் சந்துகளில் சைக்கிளில் செல்லும் ஜுஜாராம் தர்மிஜி சந்த் சொல்கிறார், "மக்கள் ரொட்டி போன்ற எஞ்சிய உணவுகளையும், சமைத்த மற்றும் சமைக்காத காய்கறிகளையும் எப்போதும் வழங்குகிறார்கள்," என்று அவர் குறிப்பிடுகிறார். "ஆறு முதல் ஏழு சந்துகளில் இருந்து நான் உணவை சேகரிப்பதற்குள் ஒரு சாக்கை நிரப்பி விடுவேன்," என்று அவர் கூறுகிறார். 15 முதல் 20 கிலோ கொள்ளளவு கொண்ட ஒரு பிளாஸ்டிக் பையை பயன்படுத்துகிறார் அவர்.
ஒவ்வொரு ஆண்டும் எட்டு மாதங்களுக்கு தினமும் காலை 8.30 மணி முதல் குரங்குகளுக்கு உணவு சேகரிப்பதில் ஜுஜாராம் பரபரப்பாக இருக்கிறார். மூட்டை நிரம்பியவுடன், அவர் சைக்கிளில் இருந்து தனது மொபட்டிற்கு மாற்றி எட்டு கிலோமீட்டர் பயணத்தில் தேசிய நெடுஞ்சாலை 62-ல் இருந்து சிரோஹி தாலுகாவில் பல்ரி கிராமத்தின் தென்கிழக்கில் மலைகளால் சூழப்பட்ட ஒரு சிறிய கோயிலான கங்கேஷ்வர் மஹாதேவ் மந்திருக்கு செல்கிறார்.
காலை 11 மணியளவில் கோயிலை அடைந்து "ஆவோ, ஆவோ" ("வா, வா") என்று குரங்குகளை அழைக்கிறார். மந்திரம் போல, 200 முதல் 300 லங்கூர்கள் (செம்னோபிதெகஸ் ப்ரியம்) உடனடியாக வருகின்றன. அவை அவரை முறைத்துப் பார்த்தபடி, நல்ல பிள்ளைகளைப் போல விருந்துக்காக காத்திருக்கின்றன. ஆனால் அவர் ரொட்டிகளை காற்றில் வீசும்போது நல்ல பழக்கவழக்கங்கள் மறைந்துவிடும். விலங்குகள் விரைவாக சென்று கையில் பிடிபட்ட அனைத்து உணவுகளையும் விழுங்குகின்றன. ஒரே நேரத்தில் ஏராளமான லங்கூர்கள் விரைவாக கூடுகின்றன. இந்தக் காட்டில் இருக்கும் 700 குரங்குகளுக்கும் அரை மணி நேரத்தில் உணவளிப்பதாக ஜுஜாராம் சொல்கிறார். "அவை கோடையில் உருளைக்கிழங்கு, பிஸ்கட், சுரைக்காய், கேரட், ரொட்டி மற்றும் சுண்டல் போன்றவற்றை விரும்புகின்றன," என்று அவர் கூறுகிறார்.
அவற்றுக்கு மற்றவர்கள் உணவளிக்க முயன்றால் ஆக்ரோஷமான முகச்சுளிப்பை எதிர்கொள்கிறார்கள் என்று அவர் கூறுகிறார். "அவை வெளியாட்களைக் கண்டு அஞ்சுகின்றன – அவற்றின் மீது மக்கள் பெரும்பாலும் கற்களை எறிந்து காயப்படுத்துகின்றனர். மக்கள் அவற்றை காயப்படுத்துவது வருத்தமாக இருக்கிறது. அவர்கள் ஏன் அப்படி செய்கிறார்கள்?" என்று அவர் கேட்கிறார்.
ஜுஜாராம் குரங்குகளை இந்துக் கடவுளான ஹனுமானின் ஒரு வடிவமாகப் பார்க்கிறார். மேலும் அவர் தனது வேலையை சேவையாக (கடமை) பார்க்கிறார். "குரங்குகள் எப்போதும் வருகின்றன. ஏனென்றால் இந்த சேவை பல ஆண்டுகளாக நடக்கிறது. அவை அதற்கு பழக்கப்பட்டவை. சில சமயம் என்னால் ஓரிரு நாட்களுக்கு வர முடியாவிட்டால், அவை வெளியே வரத் தயங்கும்," என்று அவர் கூறுகிறார்.
சிரோஹி மாவட்டம் பாலடி ஊராட்சி அருகே உள்ள அந்தோர் கிராமத்தில் பிறந்து இப்போது வயது 40களின் முற்பகுதியில் உள்ள ஜுஜாராம், ஐந்து ஆண்டுகளாக இந்த வேலையை செய்து வருகிறார். உள்ளூர் ஷியோகஞ்ச் குழுவான ஹனுமான் சேவா சங்கம் அவருக்கு இதற்காக மாதத்திற்கு ரூ.4000 சம்பளம் வழங்குகிறது. "நான் பணம் பெறுகிறேன். ஆனால் நான் இதை அன்புடன் செய்கிறேன், ஒரு தொழிலாளியாக அல்ல. இதற்கான பணம் எனது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை. ஆனால் மேலே அமர்ந்திருக்கும் மாலிக் (கடவுள்) கணக்கில் வைக்கப்படும். இந்த வேலையே புண்ணியம் [புண்ணியச் செயல்கள்] சார்ந்தது. அவற்றின் [குரங்குகளின்] ஆசீர்வாதம் மகத்தானது. அவற்றை கவனித்துக் கொள்வதன் மூலம், இறைவன் கூட என்னை ஆசீர்வதிப்பார்.
ஜுஜாராம், ரெபாரி பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் (ராஜஸ்தானில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது). அவர் ஒரு பாடகரும் கூட. விழாக்களில் அவரது குடும்பத்தினர் பஜனைப் பாடல்களைப் பாடுகிறார்கள். இவருக்கு இரண்டு மகன்கள். ஒருவர் உள்ளூர் துணிக்கடையில் பணிபுரிகிறார், மற்றொருவர் ஐந்தாம் வகுப்பு படிக்கிறார். அவரது மனைவி அவ்வப்போது தொழிலாளியாக வேலை செய்கிறார், வீட்டையும், அவர்களுடன் வசிக்கும் ஜுஜாராமின் தாயையும் கவனித்துக் கொள்கிறார்.
குரங்குகளுக்கு ஜுஜாராம் உணவளிக்காத நான்கு மாதங்களில் சில நேரங்களில் அவர் கட்டுமானத் தொழிலாளியாக வேலை செய்கிறார் அல்லது ஷியோகஞ்ச் தெருக்களில் ஐஸ்கிரீம் விற்கிறார். "இதன் மூலம் நான் மாதத்திற்கு ரூ.1,000 முதல் ரூ.2,000 வரை சம்பாதிக்கிறேன். சில நேரங்களில் எதுவும் செய்வதில்லை. மேலும் எனது மகன் (துணிக்கடையில் வேலை செய்கிறான்) சுமார் ரூ.4000 சம்பாதிக்கிறான். ஏதேனும் பற்றாக்குறை ஏற்பட்டால், போலேநாத் (இந்து கடவுள், சிவன்) அதை கவனித்துக் கொள்வார்," என்று அவர் மேலும் கூறுகிறார்.
சுமை அதிகமாக இருக்கும் உச்ச கோடை மாதங்களில் ஜுஜராமுக்கு உதவ, ஹனுமான் சேவா சங்கத்தால் நியமிக்கப்பட்ட மற்றொரு நபரும் குரங்குகளுக்கு உணவளிப்பதில் அவருடன் இணைகிறார். மழைக்காலத்திற்குப் பிறகு, அவர்கள் இருவரும் இந்த வேலையை சிறிது காலம் நிறுத்தி விடுகிறார்கள். "மழைக்குப் பிறகு காட்டில் [குரங்குகளுக்கு] ஏராளமான உணவு கிடைக்கிறது. கடந்த ஆண்டு பருவமழை மிகவும் நன்றாக இருந்தது. இந்த இடம் பசுமையாக இருந்தது," என்று அவர் நினைவு கூர்ந்தார்.
"ஆனால் கோடையில் தண்ணீர் இல்லாத போது அனைத்து துக்குடி களும் [குரங்குக் கூட்டம்] இங்கு வருகின்றன. அங்கே ஐந்து துக்குடி கள் இருக்கின்றன. குளிர் காலத்தில் மூன்று துக்குடி கள் இங்கு வந்து சாப்பிடுகின்றன. மீதமுள்ளவை அந்த மலைக்கு மேலே செல்கின்றன," என்று ஒரு மலைத்தொடரை அவர் காட்டுகிறார். "கோயிலுக்கு அப்பால் கிராமங்கள் இருப்பதால் அவை அங்கு செல்கின்றன. குளிர்காலத்தில், பல குரங்குகள் கிராமங்களுக்குள் புகுந்து விடுகின்றன. அங்கு அவை சாப்பிட நிறைய கிடைக்கும், சில நேரங்களில் செழித்து நிற்கும் பயிர் உட்பட.
"கோடை காலங்களில், அவர்கள் சாப்பிட அதிகம் இல்லாததால் நான் அதிக உணவைக் கொண்டு வர முயற்சிக்கிறேன். மேலும் கோடையில் நாட்கள் நீண்டதாக இருக்கும். காலை மிகவும் குளிராக இருக்காது. எனவே எனக்கு அதிக நேரம் இருப்பதால் அதிக உணவை சேகரிக்க முடிகிறது," என்று அவர் சுட்டிக்காட்டுகிறார். "அவர்கள் இந்த பபூலை [அகேசியா நிலோடிகா] சாப்பிட மாட்டார்கள். ஏனெனில் இது உண்ண முடியாதது. ஆனால் சில நேரங்களில் அவை பப்டியை (பாபூலின் பீன்ஸ் போன்ற காய்கள்) சாப்பிடுகிறார்கள். குளிர்காலத்தில் அதிகம் விளையும் இலந்தை (ஜுஜூப் பழம்) அதையும் அவை சாப்பிடுகின்றன", என்று கூறினார்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு குரங்குகளுக்கு உணவளிக்கத் தொடங்கியதாக ஜுஜாராம் கூறுகிறார். "அதற்கு முன்பு நான் ஒரு கடையில் வேலை செய்து கொண்டிருந்தேன். வேறொருவர் தினமும் அவற்றுக்கு உணவளித்துக் கொண்டிருந்தார். சுமார் 50 ஆண்டுகளாக குரங்குகளுக்கு இந்த சேவை வழங்கப்படுகிறது. மக்கள் மாறிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் இந்த வேலை ஒருபோதும் நிற்காது."
சில நாட்கள் அவர் வர முடியாதபோது அந்த வேலையை யார் செய்வார் என்று கேட்டால்,"யாருமில்லை! இந்த குரங்குகள் காயப்படுத்திவிடும் என்று மற்றவர்கள் இந்த வேலையை செய்ய விரும்பவில்லை. விலங்குகள் புதிய மனிதர்களை நம்பாது. பாருங்கள் - நீங்கள் அனைவரும் (பள்ளிக் குழந்தைகள்) வந்தீர்கள். அவை உடனடியாக ஓடிவிட்டன," என்று கூறுகிறார்.
தான் ஒரு கிரானா (மளிகைக்) கடையில் வேலை செய்து வந்ததாக ஜுஜாராம் விளக்குகிறார். கோடை காலத்தில் குரங்குகளுக்கு உணவளிக்க ஒருவர் தேவை. இல்லாவிடில் அவை பட்டினியால் இறந்துவிடும். அவற்றின் ஆன்மா பாதிக்கப்படும் என்று அவரது முதலாளி கூறியதாக சொல்கிறார். "நீங்கள் இங்கு வேலை செய்யலாம். ஆனால் முதலில் அந்த குரங்குகளுக்கு உணவளிக்கும் வேலையை செய்யுங்கள்," என்றார். எனவே அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு, ஜுஜாராம் அதைச் செய்தார். கடைக்கு வேறு ஒருவர் வேலைக்கு கிடைக்கும் வரை தொடர்ந்து வேலை செய்வார். வேறொருவர் கிடைத்தால் மட்டும்தான் குரங்களுக்கு உணவளிக்கும் வேலையை அவர் விடுவார்.
15 ஆண்டுகளாக கடையில் வேலை செய்த பிறகு, ஜுஜாராம் தனது முதலாளியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வேலையை விட்டு விலகினார். கோடைக்காலத்தில், குரங்குகளுக்கு உணவளிக்க இன்னொருவர் தேவைப்பட்டபோது, அவர் முன்வந்தார். அன்றிலிருந்து அதைச் செய்து வருகிறார்.
"நகரங்களில் மக்கள் மரங்களை வெட்டுகிறார்கள் என்றும் விலங்குகளைத் துன்புறுத்துகிறார்கள் என்றும் நான் கேள்விப்பட்டிருக்கிறேன். குரங்குகள் மீதும் மக்கள் கற்களை வீசுவதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். ஏன் இப்படி செய்கிறீர்கள்?" என்று அவர் எங்களிடம் கேட்கிறார். "குழந்தைகளோ, பெரியவர்களோ, ரொட்டிகளை [உணவு] கொடுங்கள். உங்களுக்கு விருப்பமில்லை என்றால் வேண்டாம் என்று நான் அவர்களிடம் கூறுவேன். தயவுசெய்து அவற்றை காயப்படுத்தவோ, எரிச்சலூட்டவோ வேண்டாம். உங்களைச் சுற்றியுள்ள விலங்குகளையும், பறவைகளையும் கவனித்துக் கொள்ளுங்கள்; மற்ற உயிரினங்களை துன்புறுத்த நமக்கு உரிமை இல்லை.”
ஒரு முறை ஷியோகஞ்சை விட்டு வெளியேற நினைத்ததாகவும், தனது குழந்தைகள் அந்த இடத்தைவிட்டு செல்ல வேண்டும் என்றும் ஜுஜாராம் கூறுகிறார். "போவதா, வேண்டாமா என்பதை அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். நான் நகரத்திற்கு செல்ல விரும்பவில்லை. என் வேலையையும் இந்த சேவையையும் கண்டுபிடித்துவிட்டேன்.”
ஜுஜாராமின் 19 வயது மகனான தினேஷ்குமாரிடம் (துணிக்கடையில் பணிபுரிகிறார்) தந்தையின் பொறுப்பை எப்போதாவது ஏற்றுக்கொள்வீர்களா என்று நாங்கள் கேட்டோம்: "இது புனிதமான பணி," என்று அவர் கூறுகிறார். "அது என் விதியில் இருந்தால், நானும் அதைச் செய்வேன்," என்கிறார்.
தனது கதையை நேரம் ஒதுக்கி, பொறுமையோடும் உற்சாகத்துடனும் விளக்கிய ஜுஜாராம் தர்மிஜி சந்த் அவர்களுக்கு இச்செய்தியாளர் நன்றி தெரிவிக்க விரும்புகிறார். வழிகாட்டிய எனது ஆசிரியர் கணேஷ் வெங்கட்ராமனுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மனிதன் மற்றும் சைக்கிள் ஓவியம்: பெங்களூரு ஷிபூமி பள்ளியில் 10-ஆம் வகுப்பு படிக்கும் சிருஷ்டி வைஷ்ணவி குமரன்.
புகைப்படங்கள்: சித் கவேதியா மற்றும் கணேஷ் வெங்கட்ராமன், ஷிபூமி பள்ளி, பெங்களூரு.
தமிழில்: சவிதா