"காற்றாலைகளை, சூரிய ஆற்றல் பண்ணைகளும் எங்களின் ஒரான்களை அழித்துக் கொண்டிருக்கின்றன," என்கிறார் சன்வதா கிராமத்தில் வசிக்கும் சுமேரியா சிங் பாட்டி. விவசாயியும் மேய்ப்பருமான அவரது வீடு ஜெய்சால்மர் மாவட்டத்தின் தெக்ராய் புனிதத் தோப்புக்கு அருகே இருக்கிறது.

புனிதத் தோப்புகள் ஒரான்கள் என அழைக்கப்படுகின்றன. எல்லா மக்களும் பயன்படுத்தக் கூடிய பொதுச்சொத்து அது. ஒவ்வொரு ஓரானிலும் அருகே உள்ள கிராமவாசிகள் வழிபடும் ஒரு தெய்வம் இருக்கும். சுற்றி இருக்கும் நிலம், வசிப்பவர்களால் பாதிக்கப்படாமல் வைத்திருக்கப்படும். மரங்கள் வெட்டப்படக் கூடாது. தானாக உதிர்ந்த சுள்ளிகளைத்தான் விறகுகளாக பயன்படுத்த எடுத்துக் கொள்ள வேண்டும். எந்த கட்டுமானமும் வரக் கூடாது. நீர்நிலைகள் யாவும் புனிதமானவை.

ஆனால் சுமேர் சிங் சொல்கையில், "அவர்கள் (புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நிறுவனங்கள்) நூற்றாண்டு கால மரங்களை வெட்டி விடடார்கள். புதர்களையும் புற்களையும் பிடுங்கி விட்டார்கள். யாராலும் அவர்களை தடுக்க முடியவில்லை," என்கிறார்.

சுமேர் சிங்கின் கோபம் ஜெய்சால்மரின் நூற்றுக்கணக்கான கிராமங்களில் வசிப்பவர்களிடமும் வெளிப்படுகிறது. அவர்களின் ஒரான்களையும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (RE) நிறுவனங்கள் எடுத்துக் கொண்டன. கடந்த 15 வருடங்களில், இம்மாவட்டத்தத்தின் ஆயிரக்கணக்கான நிலம், மாவட்டத்திலிருந்து மின்சாரத்தை வெளியே கொண்டு செல்லும் உயர் மின்சார தடங்களைக் கொண்ட காற்றாலைகளுக்கும் வேலி அடைக்கப்பட்ட சூரியப் பண்ணைகளுக்கும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இவை எல்லாமும் இயற்கை சூழலை பாதித்திருக்கிறது. காட்டை சார்ந்து வாழ்வோரின் வாழ்க்கைகளை அழித்துக் கொண்டிருக்கிறது.

"மேய்ச்சலுக்கு இடமே இல்லை. புல் ஏற்கனவே (மார்ச்சில்) போய்விட்டது. எங்கள் விலங்குகளுக்கு இப்போது வன்னி மற்றும் கடம்பு மர இலைகளைத்தான் சாப்பிட வேண்டி இருக்கிறது. போதுமான உணவு அவற்றுக்கு கிடைப்பதில்லை. எனவே அவை பாலும் குறைவாகத்தான் கொடுக்கின்றன. 5 லிட்டரிலிருந்து 2 லிட்டராக ஒரு நாளுக்கு குறைந்துவிட்டது," என்கிறார் மேய்ப்பரான ஜோரா ராம்.

பாதி வறண்ட புல்வெளி ஒரான்கள் சமூகத்தின் நலனுக்கு பயன்படுபவை. அவை தீவனம் கொடுக்கும். மேய்சசலுக்கு பயன்படும். நீர், உணவு, விறகுகள் போன்றவற்றை சுற்றி வாழும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு அவை தரும்.

Left-Camels grazing in the Degray oran in Jaisalmer district.
PHOTO • Urja
Right: Jora Ram (red turban) and his brother Masingha Ram bring their camels here to graze. Accompanying them are Dina Ram (white shirt) and Jagdish Ram, young boys also from the Raika community
PHOTO • Urja

இடது: ஜெய்சால்மர் மாவட்டத்தின் தெக்ராய் ஒரானில் ஒட்டகங்கள் மேய்கின்றன. வலது: ஜோரா ராம் (சிவப்பு தலைப்பாகை) மற்றும் அவரின் சகோதரர் மசிங்கா ராம் ஆகியோர் அவர்களின் ஒட்டகங்கள் மேய இங்கு அழைத்து வருகின்றனர். அவர்களுடன் ரைக்கா சமூகத்தை சேர்ந்த தினா ராம் (வெள்ளை சடடை) மற்றும் ஜக்திஷ் ராம் ஆகிய சிறுவர்களும் இருக்கின்றனர்

Left: Sumer Singh Bhati near the Degray oran where he cultivates different dryland crops.
PHOTO • Urja
Right: A pillar at the the Dungar Pir ji oran in Mokla panchayat is said to date back around 800 years, and is a marker of cultural and religious beliefs
PHOTO • Urja

இடது: சுமேர் சிங் பாட்டி பல வகை பயிர்களை நடவு செய்யும் தெக்ராய் ஒரான் அருகே. வலது: மொக்லா பஞ்சாயத்தில் இருக்கும் துங்கர் பிர் ஜி ஒரானிலுள்ள தூண் 800 வருடங்கள் பழமையானது என சொல்லப்படுகிறது. பண்பாடு மற்றும் மத நம்பிக்கைகளுக்கான அடையாளமாக அது விளங்குகிறது

தனது ஒட்டகங்கள் சில மெலிந்து பலவீனமாக தோற்றம் அளிப்பதாக ஜோரா ராம் சொல்கிறார். "எங்களின் ஒட்டகங்கள் ஒரு நாளில் 50 வகை புற்களையும் இலைகளையும் சாப்பிடும்," என்கிறார் அவர். உயர் மின்சாரத் தடங்கள் 30 மீட்டர் உயரத்தில் இருந்தாலும், கீழே உள்ள செடிகள் 750 மெகாவாட் மின்சாரம் ஓடும் அதிர்வில் மின்சார அதிர்ச்சி கொடுக்கின்றன. "ஓர் இளம் ஒட்டகம் அந்த செடியில் வாய் வைப்பதை யோசித்து பாருங்கள்," எனச் சுட்டிக்காட்டி தலையை குலுக்குகிறார் ஜோரா ராம்.

அவருக்கும் அவரது சகோதரர் மசிங்கா ராமுக்கும் சொந்தமாக 70 ஒட்டகங்கள் இருக்கின்றன. மசிங்கா ராம் ரஸ்லா பஞ்சாயத்தை சேர்ந்தவர். மேய்ச்சல் நிலம் தேடி, மந்தை ஒரு நாளில் 20 கிலோமீட்டர் வரை ஜெய்சால்மர் மாவட்டத்தில் பயணிக்கும்.

மசிங்கா ராம் சொல்கையில், "சுவர்கள் வந்துவிட்டன. (உயர் மின்சார) தடங்களும் தூண்களும் (காற்றாலை) எங்களின் மேய்ச்சல் நிலங்களில் அமைக்கப்பட்டு அந்த நிலங்களுக்கு எங்களின் ஒட்டகங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. அவை (கம்பங்களுக்கு தோண்டப்பட்ட) குழிகளில் விழுந்து சிராய்ப்புகளை பெற்று விடுகின்றன. காயங்களால் தொற்று ஆபத்தும் இருக்கிறது. இந்த சூரியத் தகடுகளால் எங்களுக்கு எந்த பயனுமில்லை," என்கிறார் அவர்.

ரைக்கா மேய்சசல் சமூகத்தை சேர்ந்த சகோதரர்களான அவர்கள் இருவரும் பல காலமாக ஒட்டகம் மேய்த்து வருகிறார்கள். ஆனால் இப்போது, "வாழ்க்கை ஓட்ட கூலி வேலை செய்யும் கட்டாயத்தில் இருக்கிறோம்," என்கின்றனர் விற்பனைக்கு போதுமான பால் இல்லாததால். பிற வேலைகளும் கிடைப்பது சுலபம் இல்லை. "அதிகபட்சம் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை கிடைக்கும்," என்கிறார் அவர். மற்றவர்கள் மேய்ச்சல் வேலைதான் செய்ய வேண்டும்.

ஒட்டகம் மட்டுமல்ல, எல்லா விலங்கு மேய்ப்பவர்களுக்கும் இதே பிரச்சினைதான்.

Shepherd Najammudin brings his goats and sheep to graze in the Ganga Ram ki Dhani oran , among the last few places he says where open grazing is possible
PHOTO • Urja
Shepherd Najammudin brings his goats and sheep to graze in the Ganga Ram ki Dhani oran , among the last few places he says where open grazing is possible
PHOTO • Urja

திறந்தவெளி மேய்ச்சல் அனுமதிக்கப்பட்டிருக்கும் கடைசி இடங்களில் ஒன்றான கங்கா ராம் தானி ஒரானுக்கு ஆடுகளையும் செம்மறிகளையும் கொண்டு வருகிறார் மேய்ப்பர் நஜாமுதீன்

Left: High tension wires act as a wind barrier for birds. The ground beneath them is also pulsing with current.
PHOTO • Urja
Right: Solar panels are rasing the ambient temperatures in the area
PHOTO • Radheshyam Bishnoi

இடது: உயர் மின்சாரத் தடங்கள் பறவைகளுக்கு தடுப்புகளாக இருக்கின்றன. அவற்றுக்கு கீழிருக்கும் தரையும் கூட மின்சாரத்தால் தடதடக்கிறது. வலது: சூரியத் தகடுகள் அப்பகுதியின் வெப்பநிலையை கூட்டுகிறது

50 கிலோமீட்டர் தூரத்தில், காலை 10 மணி அளவில், மேய்ப்பர் நஜாமுதீன் கங்கா ஜெய்சால்மர் மாவட்டத்திலிருக்கும் ராம் தானி ஒரானுக்குள் நுழைகிறார். அவரின் 200 செம்மறிகளும் ஆடுகளும் குதித்து புற்களை தேடி ஓடுகின்றன.

நாட்டி கிராமத்தை சேர்ந்த 55 வயது மேய்ப்பர் சுற்றி பார்த்து, “இதுதான் இங்கு மிச்சமிருக்கும் ஒரே ஒரான் பகுதி ஆகும். திறந்தவெளி மேய்ச்சல் அவ்வளவு எளிதாக இப்போது இருப்பதில்லை,” என்கிறார். வருடத்துக்கு கிட்டத்தட்ட 2 லட்சம் ரூபாய்க்கு தீவனம் வாங்குவதாக அவர் கணக்கு சொல்கிறார்.

2019ம் ஆண்டு கணக்கின்படி ராஜஸ்தானில் 1 கோடியே 40 லட்சம் கால்நடைகள் இருக்கின்றன. அதிகபட்சமாக ஆடுகளின் எண்ணிக்கை (2 கோடியே 8 லட்சம்) இருக்கிறது. 70 லட்சம் செம்மறிகளும் 20 லட்சம் ஒட்டகங்களும் இருக்கின்றன. பொது வளம் மூடப்படுவதால் அவை மோசமாக பாதிப்படைகின்றன.

இது இன்னும் அதிகமாக மோசமடையும்.

மாநிலத்துக்குள்ளான பசுமை ஆற்றல் கடத்தும் திட்டத்தின் இரண்டாம் பகுதிக்கான தடங்கள் 10,750 சர்க்யூட் கிலோமீட்டர்கள் பதிக்கப்பட திட்டமிடப்பட்டிருக்கிறது. ஜனவரி 6, 2022 அன்று பொருளாதார விவகாரத்துறை அமைச்சகத்தால் (CCEA)  ஏற்கப்பட்ட இத்திட்டம் ராஜஸ்தான் உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் அமல்படுத்தப்படும் என புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கான (MNRE) ஒன்றிய அமைச்சகத்தின் 2021-2022 வருடாந்திர அறிக்கை தெரிவிக்கிறது.

மேய்ச்சல் நில இழப்பு மட்டுமே அங்கு பிரச்சினை இல்லை. “புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நிறுவனங்கள் வரும்போது முதலில் அவர்கள் மரங்களைதான் வெட்டுவார்கள். பூச்சி, பறவை மற்றும் பட்டாம்பூச்சி ஆகியவற்றின் பல்லினங்கள் அழியும். சூழல் பாதிப்புக்குள்ளாகும். பறவைகள் மற்றும் பூச்சிகள் ஆகியவற்றுக்கான இனப்பெருக்க பகுதிகள் அழிக்கப்படும்,” என்கிறார் உள்ளுர் சூழலியலாளரான பார்த் ஜகனி.

மேலும் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்களுக்கு ஓடும் மின்சாரத் தடங்கள் ஆயிரக்கணக்கில் பறவைகளை கொல்கின்றன. அவற்றில் ராஜஸ்தானின் மாநிலப் பறவையும் ஒன்று. வாசிக்க: மின்சாரத்துக்காக பலி கொடுக்கப்பட்ட கானமயில் பறவை

சூரியத் தகடுகளின் வருகை வெப்பநிலையை உயர்த்தியிருக்கிறது. இந்தியாவில் ஏற்கனவே கடுமையான வெப்ப அலைகள் நேர்ந்து கொண்டிருக்கிறது. ராஜஸ்தானின் பாலைவனக் காலநிலையில் வெப்பம் வருடந்தோறும் 50 டிகிரி வரை செல்கிறது. புவிவெப்பம் குறித்த நியூயார்க் டைம்ஸின் இணையதளத் தரவு ஒன்று, ‘மிகச் சூடான நாட்களை கொண்ட’ இன்னொரு மாதம் ஜெய்சால்மருக்கு வாய்க்கும் எனக் குறிப்பிடுகிறது. வெப்பநாட்கள் 253லிருந்து 283 ஆக உயரும்.

சூரியத் தகடுகளின் வெப்பம், புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்காக வெட்டப்படும் மரங்களால் பன்மடங்காகிறது என்கிறார் டாக்டர் சுமித் தூகியா. வன உயிர் பாதுகாப்பு உயிரியலாளரான அவர், ஒரான்களில் நேரும் மாற்றங்களை பல பத்தாண்டுகளாக ஆய்வு செய்து வருகிறார். “உள்ளுர் சூழலியல் வெப்பம், கண்ணாடி தகடுகளின் பிரதிபலிப்பால் அதிகமாக்கப்படுகின்றன.” அடுத்த 50 வருடங்களில் 1-2 டிகிரி உயர்வு காலநிலையில் ஏற்படவிருப்பதை குறிப்பிடும் அவர், “தற்போது அது வேகப்படுத்தப்பட்டிருக்கிறது. குறிப்பாக மகரந்த சேர்க்கைக்கு உதவும் பூச்சியினங்கள் வெப்ப உயர்வால் இப்பகுதியை விட்டு செல்லும் கட்டாயத்தை அடையும்,” என்கிறார்.

Left: Windmills and solar farms stretch for miles here in Jaisalmer district.
PHOTO • Urja
Right: Conservation biologist, Dr. Sumit Dookia says the heat from solar panels is compounded by the loss of trees chopped to make way for renewable energy
PHOTO • Urja

இடது: காற்றாலைகளும் சூரியப் பண்ணைகளும் இங்கு ஜெய்சால்மர் மாவட்டத்தில் பல மைல்கள் நீண்டிருக்கின்றன. வலது: சூரியத் தகடுகளின் வெப்பம், மரங்கள் வெட்டப்படுவதால் பன்மடங்காகிறது என்கிறார் உயிரியலாளரான டாக்டர் சுமித் தூக்கியா

A water body in the Badariya oran supports animals and birds
PHOTO • Urja

விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் ஆதாரமாக இருக்கும் பதாரியா ஓரானின் நீர்நிலை

2021 டிசம்பரில் இன்னும் ஓர் ஆறு சூரிய பூங்காக்களுக்கான அனுமதி ராஜஸ்தானில் வழங்கப்பட்டது. தொற்றுக்காலத்தில் அதிகபட்ச புத்தாக்க ஆற்றல் கொள்ளளவை ராஜஸ்தான் பெற்றது. 2021ம் ஆண்டின் 9 மாதங்களில் (மார்ச் தொடங்கி டிசம்பர் வரை) அந்த அளவு சேர்க்கப்பட்டதாக குறிப்பிடுகிறது MNRE அறிக்கை.

உள்ளூர்வாசிகள் இதை ரகசிய நடவடிக்கை என சொல்கின்றனர். “ஊரடங்கால் மொத்த உலகமும் முடங்கியிருந்தபோது, வேலை தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது,” என்கிறார் உள்ளூர் செயற்பாட்டாளரான பார்த். தொடுவானம் வரை பரவியிருக்கும் காற்றாலைகளை சுட்டிக்காட்டி, “தேவிக்கோட் முதல் தெக்ராய் கோவில் வரையிலான இந்த 15 கிமீ சாலையிலும் ஊரடங்குக்கு முன் எந்த கட்டுமானமும் இருக்கவில்லை,” என்கிறார்.

எப்படி விஷயங்கள் நடக்கும் என்பதை விளக்கி நாராயண் ராம், “போலீஸ் லத்திகளுடன் அவர்கள் வருவார்கள். எங்களை விரட்டுவார்கள். பிறகு அவர்கள் கட்டாயமாக நுழைந்து மரத்தை வெட்டுவார்கள். நிலத்தை சமப்படுத்துவார்கள்,” என்கிறார். ரஸ்லா பஞ்சாயத்தை சேர்ந்த அவர், பிற மூத்தவர்களுடன் தெக்ராய் மாதா கோவிலுக்கு எதிரே அமர்ந்திருக்கிறார். ஒரானை பார்த்துக் கொள்ளும் தெய்வம் அது.

”நாங்கள் ஒரானை கோவில் போல பார்க்கிறோம். எங்களின் நம்பிக்கை அது. விலங்குகளை மேய்க்கவும் வனவிலங்குகளும் பறவைகளும் வசிப்பதற்குமான இடம் அது. நீர்நிலைகளும் உண்டு. எங்களுக்கு கடவுளை போன்றது. ஆடுகள், செம்மறிகள் எல்லாமும் அதை பயன்படுத்தும்,” என்கிறார் அவர்.

ஜெய்சால்மர் மாவட்ட ஆட்சியரின் கருத்தை தெரிந்து கொள்ள இச்செய்தியாளர் பலமுறை முயன்றும் சந்திப்பதற்கான வாய்ப்பு வழங்கப்படவில்லை. MNRE-க்கு கீழ் வரும் சூரிய ஆற்றலுக்கான தேசிய நிறுவனத்தில் தொடர்பு எண் இல்லை. MNRE-க்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல்களுக்கும் இக்கட்டுரை பிரசுரிக்கப்படும் வரை பதில்கள் கிடைக்கவில்லை.

அதிகாரப்பூர்வமாக அல்லாமல் பேசிய மாநில மின்சார வாரிய அலுவலர் ஒருவர், தரைக்கு கீழே செல்லும் மின்சாரக் கட்டமைப்பு பற்றியோ திட்டங்களை மெதுவாக்குவதற்காக உத்தரவுகளோ வரவில்லை என்கிறார்.

*****

காணொளி: ஒரான்களை காக்க ஒரு போராட்டம்

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நிறுவனங்கள் ராஜஸ்தானுக்குள் நுழைந்து எளிதாக நிலத்தை கையகப்படுத்திய விதத்துக்கான மூலம் வருவாயற்ற நிலங்களை ‘புறம்போக்கு’ என வரையறுத்த காலனியாதிக்க நடைமுறையில் ஒளிந்திருக்கிறது. பாதி வறண்ட புல்வெளிகளும் அதில் அடக்கம்

இத்தகைய தவறான வகைப்படுத்ததலை பல சுற்றுச்சூழல் பாதுகாவலர்களும் மூத்த அறிவியலாளர்களும் எதிர்த்தாலும் இந்திய அரசாங்கம் 2005ம் ஆண்டிலிருந்து புறம்போக்கு நிலங்களை அறிவிக்கும் வேஸ்ட்லேண்ட் அட்லஸ் ஆவணத்தை வெளியிட்டு வருகிறது. அதன் ஐந்தாவது பிரசுரம் 2019ம் ஆண்டில் வெளியிடப்பட்டது. ஆனால் பதிவிறக்க முடியவில்லை.

இந்தியாவின் 17 சதவிகித நிலத்தை புல்வெளியென வரையறுக்கிறது Wasteland Atlas of 2015-16 பிரசுரம். புல்வெளிகள், புதர் மற்றும் முட்காடுகள் ஆகியவற்றை ‘புறம்போக்கு’ அல்லது ‘பயனற்ற நிலம்’ என அரசாங்க கொள்கை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறது.

“வறண்ட நிலச்சூழலை பாதுகாக்கவோ வசிப்பிடமாக்கவோ இந்தியா முயற்சிப்பதில்லை. சூழல் பன்மைய அவசியம் கொண்டதாகவும் அது அங்கீகரிப்பதில்லை. எனவே இவை சுலபமாக இலக்காக்கப்படுகின்றன. சூழலில் சரி செய்ய முடியாத பாதிப்பை ஏற்படுத்துகிறது,” என்கிறார் சுற்றுச்சூழல் பாதுகாவலரான டாக்டர் அபி டி. வனக். புல்வெளிகளை தவறாக வகைப்படுத்தியதை எதிர்த்து இருபது ஆண்டுகளாக போராடி வருகிறார்.

“சூரியப் பண்ணை என்பது முன்பு எவரும் வசித்திராத ஒரு புறம்போக்கு நிலத்தை உருவாக்குகிறது. நீங்கள் சூரியப் பண்ணையை உருவாக்க நன்றாக இயங்கிக் கொண்டிருந்த ஒரு சூழலியலை எடுத்துக் கொள்கிறீர்கள். அது ஆற்றலை தருகிறது. ஆனால் அது பசுமை ஆற்றலா?” எனக் கேட்கிறார் அவர். ராஜஸ்தானின் 33 சதவிகிதம் புறம்போக்கு நிலமல்ல, திறந்தவெளி இயற்கை சூழல் அமைப்புகள் (ONE) என சொல்கிறார் அவர்.

இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளையின் சூழலியலாளரான எம்.டி.மதுசூதனுடன் இணைந்து அவர் எழுதிய ஆய்வறிக்கையில், “இந்தியாவின் 10 சதவிகித நிலம் திறந்தவெளி இயற்கை சூழல் அமைப்புகளாக இருந்தும் வெறும் 5 சதவிகிதம்தான் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் (PA) இருக்கிறது,” என்கிறார். ஆய்வறிக்கையின் பெயர் Mapping the extent and distribution of Indian’s semi-arid open natural ecosystems .

A map (left) showing the overlap of open natural ecosystems (ONEs) and ‘wasteland’; much of Rajasthan is ONE
A map (left) showing the overlap of open natural ecosystems (ONEs) and ‘wasteland’; much of Rajasthan is ONE
PHOTO • Urja

ராஜஸ்தானின் புறம்போக்கு நிலத்தையும் திறந்தவெளி இயற்கை சூழல் அமைப்புகளையும் காட்டும் வரைபடம் (இடது)

இந்த முக்கியமான மேய்ச்சல் நிலங்களை குறிப்பிட்டுதான் ஜோரா ராம் சொல்கிறார், “அரசாங்கம் எங்களின் எதிர்காலத்தை அழிக்கிறது. எங்களின் சமூகத்தை காக்க, நாங்கள் ஒட்டகத்தை காக்க வேண்டும்,” என.

நிலையை இன்னும் மோசமாக்கும் விதமாக 1999ம் ஆண்டில் புறம்போக்கு நில மேம்பாட்டுத்துறையின் பெயர் நிலவளத்துறை (DoLR) என மாற்றம் செய்யப்பட்டது.

“அரசாங்கம், நிலத்தை தொழில்நுட்ப ரீதியாக புரிந்து கொண்டு, சூழலமைப்புகளை மாற்றி எல்லாவற்றையும் ஒற்றைத்தன்மைக்குள் கொண்டு வர முயற்சிப்பதாக” வனக் சொல்கிறார். சுற்றுச்சூழல் ஆய்வுக்கான அசோகா அறக்கட்டளை பேராசிரியரான அவர், “இயற்கையான சூழலமைப்புகள் மதிக்கப்படுவதில்லை. மக்களின் வாழ்வனுபவங்களை நாம் புறக்கணிக்கிறோம்,” என்கிறார்.

சன்வதா கிராமத்தின் கமால் குன்வர் சொல்கையில், “வன்னி மர சுள்ளியை ஒரானிலிருந்து கொண்டு வருவது கூட முடியாத விஷயமாகி விட்டது,” என்கிறார். 30 வயதாகும் அவர், வன்னி மரப்பழங்களை இழந்ததில் கடும் அதிருப்தியில் இருக்கிறார். உள்ளூரில் அது அதிகமாக சமையலில் பயன்படும். அதை சமைப்பதில் அவர் திறன் வாய்ந்தவர்.

DoLR குறிப்பிட்டிருக்கும் இலக்கில், ‘கிராமப்புற பகுதிகளின் வாழ்வாதார வாய்ப்புகளை அதிகரிப்பது’ எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் அதிக நிலத்தை புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நிறுவனங்களுக்கு கொடுப்பதால் பெருமளவுக்கான மேய்ச்சல் நிலங்கள் அடைக்கப்படுகின்றன. காடல்லாத சுள்ளி உற்பத்திக்கு வாய்ப்பில்லாமல் போகிறது. அதற்கு எதிரானதுதான் நடந்தது.

ஜெய்சால்மர் மாவட்டத்தின் மொக்லா கிராமத்தை சேர்ந்த மேய்ப்பர், குந்தன் சிங். 25 வயதாகும் அவர், தன் கிராமத்தில் மேய்ச்சல் விவசாயிகளின் 30 குடும்பங்கள் வசிப்பதாக சொல்கிறார். மேய்ச்சல் சவாலாகி விட்டதாகவும் சொல்கிறார். “அவர்கள் (புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நிறுவனங்கள்) ஒரு எல்லைச்சுவர் கட்டுகின்றனர். மேய்ச்சலுக்கு நாங்கள் நுழைய முடியாமலாகிறது.”

Left- Young Raika boys Jagdish Ram (left) and Dina Ram who come to help with grazing
PHOTO • Urja
Right: Jora Ram with his camels in Degray oran
PHOTO • Urja

இடது: இளம் ரைக்கா சிறுவர்களான ஜக்திஷ் ராம் (இடது) மற்றும் தினா ராம் ஆகியோர் மேய்ச்சலுக்கு உதவ வந்திருக்கின்றனர். வலது: ஜோரா ராம் தன்னுடைய ஒட்டகங்களுடன் தெக்ராய் ஒரானில்

Kamal Kunwar (left) and Sumer Singh Bhati (right) who live in Sanwata village rue the loss of access to trees and more
PHOTO • Priti David
Kamal Kunwar (left) and Sumer Singh Bhati (right) who live in Sanwata village rue the loss of access to trees and more
PHOTO • Urja

கமால் குன்வர் (இடது) மற்றும் சுமேர் சிங் பாட்டி (வலது) ஆகியோர் மரங்கள் இல்லை என வருத்தப்படுகின்றனர்

ஜெய்சால்மர் மாவட்டம் 87 சதவிகிதம் கிராமங்களை கொண்டது. 60 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட மக்கள் இங்கு விவசாயம் செய்கின்றனர். கால்நடைகளையும் கொண்டிருக்கின்றனர். “இப்பகுதியின் ஒவ்வொரு வீட்டிலும் கால்நடைகள் இருக்கின்றன,” என்கிறார் சுமேர் சிங். “விலங்குகளுக்கு போதுமான அளவு உணவளிக்க முடியவில்லை.”

விலங்குகள் புற்களை உண்ணும். ராஜஸ்தானின் 375 புல்வகைகள் இருப்பதாக ஜூன் 2014ம் ஆண்டில் பதிப்பிக்கப்பட்ட இந்த Pattern of Plant Species Diversity ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது. குறைவான மழைக்கு ஏற்ற புல்வகைகள் அவை.

ஆனால் RE நிறுவனங்களின் வசம் நிலம் சென்றுவிட்டால், “மண் பாதிக்கப்படும். இப்பகுதிசார் செடி ஒவ்வொன்றும் பல்லாண்டு காலம் பழமையானது. சூழலமைப்பு பல நூற்றாண்டு கால பழமையானது. அவற்றை நீங்கள் மாற்ற முடியாது! அவற்றை அகற்றுவதால் நிலம் பாலையாகும்,” எனச் சுட்டிக் காட்டுகிறார் வனக்.

ராஜஸ்தானில் 3 லட்சத்து 40 லட்ச ஹெக்டேர் நிலம் இருப்பதாக சொல்கிறது India State of Forest Report 2021 . ஆனால் 8 சதவிகிதம் மட்டும்தான் காடாக வரையறுக்கப்படுகிறது. ஏனெனில் காடறிய செயற்கைக்கோள் பயன்படுத்தப்படுகிறது. அவை மரங்களை மட்டும்தான் ‘காடு’ என வரையறுக்கும்.

ஆனால் இம்மாநிலத்தின் காடுகளில் பல வகை புற்களை கொண்ட வெளிகளை கொண்டது. வரகுக் கோழி, கானமயில், இந்திய ஓநாய், தங்க நிற நரி, இந்திய நரி, இந்திய மான், புல்வாய் மான், வரிக் கழுதைப் புலி, கறகால் பூனை, பாலைவனப்பூனை மற்றும் இந்திய முள்ளம்பன்றி போன்ற உயிரினங்கள் குறைந்தால் காடுகள் அருகும். பாலைவனப் பல்லி வகைகள் உடனடியாக பாதுகாக்கப்பட வேண்டிய தேவையில் இருக்கின்றன.

2021-2030 வருடங்களுக்கு UN Decade on Ecosystem Restoration எனப் பெயர் சூட்டியிருக்கிறது ஐநா. “சுற்றுச்சூழல் மீட்பு என்பது அழிக்கப்பட்ட அல்லது சீரழிக்கப்பட்ட சூழல் அமைப்புகளை மீட்டெடுப்பதும் நல்லபடியாக இருக்கும் சூழல் அமைப்புகளை பாதுகாப்பதும் ஆகும்.” மேலும் IUCN-ன் Nature 2023 திட்டம் ‘சூழலமைப்பு மீட்பு’ திட்டத்தை அதன் தலையாயப் பணியாக பட்டியலிட்டிருக்கிறது.

Jaisalmer lies in the critical Central Asian Flyway – the annual route taken by birds migrating from the Arctic to Indian Ocean, via central Europe and Asia
PHOTO • Radheshyam Bishnoi
Jaisalmer lies in the critical Central Asian Flyway – the annual route taken by birds migrating from the Arctic to Indian Ocean, via central Europe and Asia
PHOTO • Radheshyam Bishnoi

ஜெய்சால்மர் மத்திய ஆசிய பறத்தல் வெளியில் இருக்கிறது. ஆர்க்டிக் பகுதியிலிருந்து இந்தியப் பெருங்கடலுக்கு மத்திய ஐரோப்பா அல்லது ஆசியா வழியாக செல்லும் பறவைகளுக்கான வருடாந்திர பாதையாகும்

Orans are natural eco systems that support unique plant and animal species. Categorising them as ‘wasteland’ has opened them to takeovers by renewable energy companies
PHOTO • Radheshyam Bishnoi
Orans are natural eco systems that support unique plant and animal species. Categorising them as ‘wasteland’ has opened them to takeovers by renewable energy companies
PHOTO • Radheshyam Bishnoi

தனித்துவமான செடி மற்றும் விலங்கு வகைகளை கொண்ட சூழல் அமைப்புகள் ஒரான்கள் ஆகும். அவற்றை ‘புறம்போக்கு’ நிலம் என வகைப்படுத்துவதால், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நிறுவனங்கள் அவற்றை எளிதாக எடுத்துக் கொண்டிருக்கின்றன

‘புல்வெளிகளை காக்கவும்’ ‘காட்டு சூழலமைப்புகளை’ திறக்கவும் இந்திய அரசாங்கம் சிறுத்தைகளை இறக்குமதி செய்வதாக ஜனவரி 2022-ல் அறிவிக்கப்பட்ட ரூ.224 கோடி மதிப்பு வாய்ந்த சிறுத்தை இறக்குமதி திட்டம்

https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1788373

தெரிவிக்கிறது. ஆனால் சிறுத்தைகள் உயிர் பிழைக்க முடியவில்லை. இறக்குமதி செய்யப்பட்ட 20 சிறுத்தைகளில் ஐந்து இறந்து விட்டது. இங்கு பிறந்த ஐந்து குட்டிகளும் இறந்துவிட்டன.

*****

”...குறைவான புல்வெளி கொண்ட வறண்ட பகுதிகளும், புல்வெளிகளும் சூழல் அமைப்புகளும் காட்டு நிலமாக கருதப்பட வேண்டும்,” என 2018 ம் ஆண்டில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தபோது ஒரான்களில் உற்சாகம் படர்ந்தது.

ஆனால் களத்தில் ஒன்றும் மாறவில்லை. ஆற்றல் நிறுவனங்களுடனான ஒப்பந்தங்கள் தொடர்ந்து போடப்பட்டன. இக்காடுகளை சட்டப்பூர்வமாக்க இயங்கிக் கொண்டிருக்கும் உள்ளுர் செயற்பாட்டாளரான அமன் சிங், உச்சநீதிமன்றம் தலையிடக் கோரி மனு தாக்கல் செய்தார். ராஜஸ்தான் அரசாங்கத்துக்கும் செயல்படும்படி பிப்ரவரி 13, 2023 அன்று உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

“ஒரான்களை பற்றிய போதுமான தரவுகள் அரசாங்கத்திடம் இல்லை. வருவாய் ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை. பல ஒரான்கள் பதிவு செய்யப்படவில்லை அல்லது ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றன,” என்கிறார் க்ரிஷி அவம் பரிஷ்திதிகி விகாஸ் சன்ஸ்தான் என்ற அமைப்பின் நிறுவனரான சிங். பொதுநிலங்களை, குறிப்பாக ஒரான்களை தழைக்க வைக்க இயங்கும் அமைப்பு அது.

‘காடுகள்’ என்கிற மதிப்பீடு, அகழ்வு, சூரிய மற்றும் காற்று ஆலைகள், நகரமயமாக்கல் மற்றும் பிற சவால்களிலிருந்து ஒரான்களுக்கு சட்டப்பூர்வ பாதுகாப்பை வழங்கும் என அவர் கூறுகிறார். “அவை புறம்போக்கு வருவாய் வகையில் தொடர்ந்தால், பிற விஷயங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்படும் ஆபத்து இருக்கிறது,” என்கிறார் அவர்.

ராஜஸ்தான் சூரிய ஆற்றல் கொள்கை, 2019 விவசாய நிலங்களை கையகப்படுத்த சூரிய ஆற்றல் நிறுவனங்களுக்கு அனுமதியளித்திருப்பது ஒரான்களை பாதுகாப்பதை இன்னும் கடினமாக்கி விட்டிருக்கிறது.

When pristine orans (right) are taken over for renewable energy, a large amount of non-biodegradable waste is generated, polluting the environment
PHOTO • Urja
When pristine orans (right) are taken over for renewable energy, a large amount of non-biodegradable waste is generated, polluting the environment
PHOTO • Urja

எவரும் பயன்படுத்தாத ஒரான்களும் (வலது) புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்காக எடுக்கப்பட்டிருக்கின்றன. இயற்கையாக அழியும் தன்மையற்ற கழிவுகள் பெருமளவில் மிஞ்சி சுற்றுச்சூழலை மாசுப்படுத்துகிறது

Parth Jagani (left) and Radheshyam Bishnoi are local environmental activists .
PHOTO • Urja
Right: Bishnoi near the remains of a GIB that died after colliding with powerlines
PHOTO • Urja

பார்த் ஜகனி (இடது) மற்றும் ராதேஷ்யம் பிஷ்னோய் ஆகியோர் உள்ளுர் சூழலியல் செயற்பாட்டாளர்கள். வலது: மின்சாரத் தடங்களில் மோதி இறந்த கானமயிலின் மிச்சத்தருகே பிஷ்னோய்

“இந்தியாவின் சுற்றுச்சூழல் சட்டங்கள் பசுமை ஆற்றலை ஆய்வு செய்வதில்லை,” என்கிறார் வன உயிரியலாளரான டாக்டர் சுமித் தூக்கியா. புது தில்லியின் குரு கோபிந்த் சிங் இந்திரபிரஸ்தா பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராக இருக்கிறார். “சட்டங்கள் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை ஆதரிப்பதால் அரசாங்கமும் ஒன்றும் செய்ய முடிவதில்லை.”

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைப்புகள் உற்பத்தி செய்யும் இயற்கையாய் அழிக்க முடியாத கழிவு ஏராளமாக உருவாவதை பற்றி தூகியாவும் பார்த்தாவும் கவலை கொள்கின்றனர். “புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கான ஒப்பந்தம் 30 வருடங்களுக்கு போடப்பட்டுள்ளது. ஆனால் காற்றாலைகளுக்கும் சூரியத் தகடுகளுக்கும் காலம் 25 வருடங்கள்தாம். யார் அவற்றை அப்புறப்படுத்துவார்? எங்கு கழித்துக் கட்டுவார்,” எனக் கேட்கிறார் தூகியா.

*****

“ஒரு மனிதத் தலைக்கு பதிலாக ஒரு மரம் பாதுகாக்கப்படுவதாக இருந்தாலும் அதுவும் பேரம்தான்.” மரங்களுடனான உறவை பற்றிய ஓர் உள்ளூர் பழமொழியை ராதேஷ்யாம் பிஷ்னோய் சொல்கிறார். தோலியாவில் வசிக்கும் அவர், பத்ரியா ஒரானுக்கருகே வசிக்கிறார். கானக்குயிலை காக்கும் பணியில் முன்னணி வகிப்பவர்.

”300 வருடங்களுக்கு முன், ஜோத்பூரின் அரசன் ஒரு கோட்டை கட்ட முடிவெடுத்தான். அருகே இருக்கும் கெதோலாய் கிராமத்திலிருந்து மரம் எடுத்து வர அமைச்சருக்கு உத்தரவிட்டான். அமைச்சர் ராணுவத்தை அனுப்பினான். அவர்கள் வந்தபோது பிஷ்னோய் மக்கள் மரத்தை வெட்ட அனுமதிக்கவில்லை. ‘மரங்களையும் அவற்றுடன் இணைந்திருக்கும் மக்களையும் வெட்டுங்கள் என அமைச்சர் உத்தரவிட்டான்.”

அம்ருதா தேவியின் தலைமையில் ஒவ்வொரு கிராமவாசியும் ஒரு மரத்தை தத்தெடுத்ததாக உள்ளுர் கதை சொல்கிறது. ஆனால் ராணுவம் அவர்களை எதிர்த்து 363 பேர் வரை கொன்று குவித்தது.

“சூழலியலுக்காக எங்களின் உயிரையும் கொடுத்த உணர்வு இன்னும் உயிருடன்தான் இருக்கிறது. உயிரோடு இருக்கிறது,” என்கிறார் அவர்.

Left: Inside the Dungar Pir ji temple in Mokla oran .
PHOTO • Urja
Right: The Great Indian Bustard’s population is dangerously low. It’s only home is in Jaisalmer district, and already three have died after colliding with wires here
PHOTO • Radheshyam Bishnoi

இடது: மொக்லா ஒரானில் இருக்கும் துங்கர் பிர் கோவிலுக்குள். வலது: கானமயிலின் எண்ணிக்கை ஆபத்தான அளவுக்கு குறைந்திருக்கிறது. அவற்றின் ஒரே இருப்பிடம் ஜெய்சால்மர் மாவட்டத்தில்தான் உண்டு. ஏற்கனவே மூன்று, மின் தடங்களில் மோதி உயிரிழந்துவிட்டன

தெக்ராயின் 60,000 பிகா ஒரானில் 24,000 பிகா கோவில் அறக்கட்டளைக்கு சொந்தமாக இருப்பதாக சுமேர் சிங் சொல்கிறார். மிச்ச 36,000 பிகாவும் ஒரானின் பகுதியாக உள்ளூரில் அறிவிக்கப்பட்டிருந்தாலும் அறக்கட்டளைக்கு மாற்றி அரசாங்கம் கொடுக்கவில்லை. “2004ம் ஆண்டில் அரசாங்கம் அவற்றை காற்றாலை நிறுவனங்களுக்குக் கொடுத்தது. நாங்கள் போராடி எதிர்த்தோம்,” என்கிறார் சுமேர் சிங்.

ஜெய்சால்மரின் பிற பகுதிகளில் இருக்கும் சிறு பரப்பிலான ஒரான்களால் தாக்குப்பிடிக்க முடிவதில்லை. அவை புறம்போக்கு நிலங்களாக வகைப்படுத்தப்பட்டிருப்பதால் நிறுவனங்களால் விழுங்கப்பட்டு விடுகின்றன.

“இந்த நிலம் பாறையாக இருக்கிறது,” என்கிறார் அவர் சன்வதாவிலுள்ள அவரது வயல்களை சுற்றிப் பார்த்துக் கொண்டே. “ஆனால் நாங்கள் சுவைமிகு கம்பு வகையை வளர்க்கிறோம்.” மொக்லா கிராமத்தருகே இருக்கும் தொங்கார் பிர்ஜி ஒரானில் உணவுக்கு தேவையான வன்னி, கொன்றை போன்ற மக்களும் விலங்குகளும் விரும்பும் மரங்கள் ஆங்காங்கே இருக்கின்றன.

“புறம்போக்கு நிலம்!” அப்படி வகைப்படுத்தப்பட்டிருப்பதை சுமேர் சிங்கால் நம்ப முடியவில்லை. “உள்ளூரில் நிலமற்ற மக்களுக்கும் வேறு வேலைக்கு வாய்ப்பற்றோருக்கும் இந்த நிலங்களை கொடுங்கள். அவர்கள் ராகி, கம்பு என விளைவித்து அனைவருக்கும் சோறு போடுவார்கள்.”

ஜெய்சால்மருக்கும் கெத்தோலய்க்கும் இடையே மங்கி லால் ஒரு சிறு கடையை நெடுஞ்சாலையில் நடத்துகிறார். “நாங்கள் ஏழைகள். எங்களின் நிலத்துக்கென பணத்தை கொடுத்தால், எப்படி நாங்கள் மறுக்க முடியும்?,” எனக் கேட்கிறார்.

செய்தியாளர் இக்கட்டுரைக்கு உதவிய பயோடைவர்சிட்டி கொலாபொரேட்டிவை சேர்ந்த டாக்டர் ரவி செல்லத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறார்.

தமிழில்: ராஜசங்கீதன்

Priti David

ப்ரிதி டேவிட் பாரியின் நிர்வாக ஆசிரியர் ஆவார். பத்திரிகையாளரும் ஆசிரியருமான அவர் பாரியின் கல்விப் பகுதிக்கும் தலைமை வகிக்கிறார். கிராமப்புற பிரச்சினைகளை வகுப்பறைக்குள்ளும் பாடத்திட்டத்துக்குள்ளும் கொண்டு வர பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுடன் இயங்குகிறார். நம் காலத்தைய பிரச்சினைகளை ஆவணப்படுத்த இளையோருடனும் இயங்குகிறார்.

Other stories by Priti David
Photos and Video : Urja

உர்ஜா, பாரியின் மூத்த உதவி காணொளி தொகுப்பாளர். ஆவணப்பட இயக்குநரான அவர் கைவினையையும் வாழ்க்கைகளையும் சூழலையும் ஆவணப்படுத்துவதில் ஆர்வம் கொண்டிருக்கிறார். பாரியின் சமூக ஊடகக் குழுவிலும் இயங்குகிறார்.

Other stories by Urja

பி. சாய்நாத், பாரியின் நிறுவனர் ஆவார். பல்லாண்டுகளாக கிராமப்புற செய்தியாளராக இருக்கும் அவர், ’Everybody Loves a Good Drought' மற்றும் 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom' ஆகிய புத்தகங்களை எழுதியிருக்கிறார்.

Other stories by P. Sainath
Translator : Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.

Other stories by Rajasangeethan