உள்ளூர் தபால் நிலையத்தின் ஜன்னல்கள் லேசாக திறக்கிறது. எட்டிப் பார்க்கும் தபால்காரர் நாங்கள் வருவதை கவனிக்கிறார்.
புன்னகையுடன் தபால் நிலையத்துக்குள் நம்மை ரேணுகா வரவேற்கிறார். ஓர் அறைக்குள் தபால் நிலையம் இயங்குகிறது. அந்த அறையில் இருக்கும் கதவு வீட்டுக்கு செல்கிறது. காகிதம் மற்றும் மையின் மணம் அந்த சிறு இடத்துக்குள் நம்மை வரவேற்கிறது. அந்த நாளுக்கான கடைசி தபால்களை ஓரமாக அடுக்கி வைக்கும் அவர், புன்னகைத்து அமரும்படி சைகை காட்டுகிறார். “வாங்க. வாங்க… வசதியாக உட்காருங்கள்.”
வெளியில் இருக்கும் வெப்பநிலைக்கு முரணாக தபால் அலுவலகம் குளுமையாக இருக்கிறது. அறைக்குள் இருக்கும் ஜன்னல் தான் தென்றலை கொண்டு வருகிறது. வெள்ளை பூசப்பட்ட சுவர்களில் வரைபடங்களும் பட்டியல்களும் கையால் செய்யப்பட்ட போஸ்டர்களும் தொங்குகின்றன. சிறிய அறை சுத்தமாகவும் ஒழுங்காகவும் இருக்கிறது.ஒரு மேஜையும் சில அலமாரிகளும் அறையின் பெரும்பாலான பகுதியில் ஆக்கிரமித்திருந்தாலும் நெருக்கடியாக இருக்கவில்லை.
64 வயதாகும் ரேணுகாப்பாதான் தும்குர் மாவட்டத்தின் தேவராயப்பட்னத்தின் கிராமப்புற தபால் சேவகர். அவருக்குக் கீழ் ஆறு கிராமங்கள் வரும்.
அந்த தபால் நிலையத்தின் அதிகாரப்பூர்வ அலுவல் நேரம் காலை 8.30 மணிக்கு தொடங்கி, மதியம் 1 மணிக்கு முடிகிறது. ஆனால் அங்கு பணிபுரியும் ஒரே தபால்காரரான ரேணுகா பிரசாத் அதிகாலை 7 மணிக்கே பணி தொடங்கி விடுகிறார். மாலை 5 மணி வரை வேலை தொடரும். “என் வேலையை முடிக்க நான்கரை மணி நேரங்கள் போதாது,” என அவர் விளக்குகிறார்.
தும்குர் தாலுகாவின் பெலாகும்பா கிராமத்திக்கு வந்து சேரும் ஆவணங்கள், பத்திரிகைகள், கடிதங்கள் கொண்ட தபால் பையிலிருந்து தபால்காரரின் பணி தொடங்கும். எல்லா தபால்களையும் அவர் முதலில் பதிவு செய்ய வேண்டும். பிறகு அவற்றை உரியவர்களுக்கு கொடுக்க பிற்பகல் 2 மணிக்கு அன்றாடம் செல்வார். தேவராயப்பட்னா, மரனயாகபல்யா, பிரஷந்தனகரா, குண்டுரு, பண்டேபல்யா, ஸ்ரீநகரா ஆகியவைதான் அவரது அதிகாரத்தின் கீழ் வரும் ஆறு கிராமங்கள். ஆறு கிலோமீட்டர் சுற்றளவில் இருப்பவை. மனைவி ரேணுகாம்பாவுடன் அவர் வசிக்கிறார். மூன்று வளர்ந்த மகள்கள் வெளியேறிவிட்டார்கள்.
செல்ல வேண்டிய கிராமங்கள், அவற்றின் தூரம், இருக்கும் திசைகள் குறித்த கன்னடக் குறிப்புகளுடன் மேஜைக்கு மேல் மாட்டப்பட்டிருக்கும் கையால் வடிவமைத்த ஒரு சிறு வரைபடத்தை சுட்டிக் காட்டுகிறார். அருகாமையில் கிழக்கு பக்கமாக இரு கிலோமீட்டர் தூரத்தில் மரனயாகபல்யா கிராமம் இருக்கிறது. பிரஷந்தனகரா மேற்கே 2.5 கிலோமீட்டர் தூரத்திலும் குண்டுரு மற்றும் பண்டேபல்யா வடக்கேயும் தெற்கேயும் 3 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கின்றன. ஸ்ரீநகரா 5 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது.
சுட்டெரிக்கும் வெயிலிலும் கனமழையிலும் சரியாக தபாலை கொண்டு சேர்க்கும் ஒரே தபால்காரர் அங்கு ரேணுகாப்பாதான்.
கதைகளில் வருவதைப் போலவே, அந்த கிராமங்களுக்கு செல்லவென ஒரு பழைய சைக்கிளை அவர் வைத்திருக்கிறார். ஊருக்குள் அவர் நுழையும்போது உற்சாகத்துடன் ஓடி வந்து மக்கள் அவரை வரவேற்கிறார்கள்.
“இன்று எங்களின் வீட்டில் ஒரு பூஜை இருக்கிறது. வீட்டுக்கு வாருங்கள் ரேணுகாப்பா!” என அவர் வீட்டுக்கு வெளியே நின்று ஒரு பெண் அழைக்கிறார். அவரை பார்த்து தலையாட்டுகிறார் இவர். அந்த வழியே செல்லும் இன்னொருவர் அவரை நோக்கி கையசைத்து வணக்கம் சொல்கிறார். பதிலுக்கு ரேணுகாப்பாவும் புன்னகைத்து, கையசைக்கிறார். கிராமவாசிகளுக்கும் தபால்காரருக்கும் இருக்கும் உறவு தெளிவாக புலப்படுகிறது.
ஒரு நாளில் சராசரியாக 10 கிலோமீட்டர் தூரத்துக்கு தபால் கொடுக்க அவர் பயணிக்கிறார். பணி முடிவதற்கு முன், அவர் கொடுத்த தபால்கள் எல்லாவற்றையும் பற்றி ஒரு தடிமனான நோட்டுப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட வேண்டும்.
இணையவழி தொடர்பு வளர்ச்சியால், கடிதங்களின் எண்ணிக்கை குறைந்து விட்டதென கூறுகிறார் ரேணுகாப்பா. “ஆனால் பத்திரிகைகளும் வங்கி ஆவணங்களும் கடந்த சில வருடங்களில் இரட்டிப்பாகி விட்டன. எனவே என் வேலை அதிகரிக்கதான் செய்திருக்கிறது.”
அவரைப் போன்ற தபால் ஊழியர்கள், ‘துறைக்கு வெளியே இயங்கும் ஊழியர்கள்’ என வரையறுக்கப்பட்டு எந்த ஆதாயமும் இல்லாமல் இருக்கின்றனர். ஓய்வூதியம் கூட கிடையாது. ஆனால் தபால் தலை விற்பனை, தபால் பொருட்கள் விற்பனை, தபால் போக்குவரத்து மற்றும் பிற தபால் பணிகள் எல்லாவற்றையும் அவர்கள் செய்கின்றனர். அவர்கள் வழக்கமான சிவில் சேவையில் இருப்பதால், மத்திய சிவில் சேவை (ஓய்வூதிய) விதிகள் அவர்களுக்கு பொருந்தாது. இப்போது அவர்களுக்கென ஓய்வூதியம் வழங்கும் எந்த திட்டத்தை அரசு கொண்டிருக்கவில்லை. பணி விலகல் ஆதாயத் திட்டம் மட்டும்தான் 01/04/2011-லிருந்து இருக்கிறது.
ரேணுகாப்பா ஓய்வு பெற்றால், அவரின் மாத ஊதியமான 20,000 ரூபாய் நின்று விடும். ஓய்வூதியமும் கிடையாது. “என்னைப் போன்ற தபால் ஊழியர்கள் ஏதேனும் மாற்றம் நேருமென பல வருடங்களாக காத்திருக்கிறோம். எங்களின் கடினமான வேலையை யாரேனும் அங்கீகரிக்க காத்திருக்கிறோம். பிற ஓய்வூதியதாரர்கள் பெறும் தொகையில் சிறிய அளவுக்கு, ஓர் ஆயிர ரூபாயோ இரண்டாயிரம் ரூபாயோ எங்களுக்கு வழங்கப்பட்டால் கூட எங்களுக்கு பெரிய உதவியாக இருக்கும்,” என்கிறார் அவர். “இது மாறும் காலத்தில் நான் ஓய்வு பெற்றிருப்பேன்,” என்கிறார் அவர் ஏக்கத்துடன்.
சிறு காகிதத் துண்டுகள் ஒட்டப்பட்டு, சுவரில் மாட்டப்பட்டிருக்கும் போஸ்டரை பற்றிக் கேட்டதும் அவர் உற்சாகம் கொள்கிறார். “அந்த போஸ்டர்தான் எனக்கு இருக்கும் சிறு சந்தோஷம். அதற்கு தபால் தலை போஸ்டர் என பெயர் வைத்திருக்கிறேன்,” என்கிறார் அவர்.
“இது எனது பொழுதுபோக்காகி விட்டது. சில வருடங்களுக்கு முன், பிரபல கவிஞர்களையும் சுதந்திரப் போராட்ட வீரர்களையும் முக்கியப் பிரமுகர்களையும் கவுரவிக்கவென செய்தித்தாள் இந்த தபால் தலைகளை வெளியிடத் தொடங்கியது.” அவை வெளியானதும் அவற்றை செய்தித்தாளிலிருந்து வெட்டி ரேணுகா சேகரிக்கத் தொடங்கியிருக்கிறார். “அடுத்தது வெளிவர காத்திருந்தது நன்றாக இருந்தது.”
இக்கட்டுரையை ஒருங்கிணைக்க உதவிய தும்குரின் டிவிஎஸ் அகாடெமி ஆசிரியரான ஷ்வேதா சத்யநாராயணனுக்கு நன்றிகள். பாரி கல்வி, இப்பணிக்கென பின்வரும் மாணவர்களுடன் இணைந்து இயங்கியது: ஆஸ்தா ஆர். ஷெட்டி, ட்ருதி யு., திவ்யஸ்ரீ எஸ்., குஷி எஸ். ஜெயின், நேஹா ஜே., பிரணித் எஸ். ஹுலுகடி, ஹனி மஞ்சுநாத், பிரணதி எஸ்., பிரண்ஞ்சலா பி.எல்., சம்ஹிதா இ.பி., பரிணிதா கல்மத், நிருதா எம்.சுஜால், குனோதம் பிரபு, ஆதித்யா ஆர். ஹரிட்ஸா, உத்சவ் கே.எஸ்.
தமிழில்: ராஜசங்கீதன்.