வருடத்தில் பெரும்பாலும் உச்ச வெப்பம் சுட்டெரிக்கும் ரேன் பகுதியில் மழை பெய்வது ஒரு முக்கியமான நிகழ்வாக இருக்கலாம். வெயிலிலிருந்து தப்பிக்கும் ஆசுவாசமாக அதற்கு மக்கள் ஆர்வத்துடன் காத்திருப்பார்கள். பெண்ணின் அன்றாட வாழ்க்கையில் ஆசுவாசத்தை கொண்டு வரும் காதலுக்கு இந்த மழை உருவகமாவதில் ஆச்சரியம் இல்லை.
ஆனால் கட்ச்சி இசைக்கு காதலும் அற்புதமான பருவமழையும் புதிதில்லை. ஆடும் மயில், கார்மேகம், மழை, காதலனுக்காக ஏங்கும் இளம்பெண் போன்ற காட்சிகளை, பிரபலமான நாட்டுப்புற இசை பாரம்பரியங்கள் மட்டுமின்றி, இலக்கியம் மற்றும் ஓவியங்களிலும் இயல்பாக காண முடியும்.
ஆனால் அவை எல்லாவற்றையும் ஒன்றாக, அஞ்சாரின் கெல்ஜி பாயின் குரலில் குஜராத்தி மொழியில் பாடப்படும் இப்பாடலில் கேட்கும்போது, அதே காட்சிகள் அப்பருவத்தின் முதல் மழை தரும் அற்புதத்தை நமக்கு அளிக்கிறது.



