வேலைக்காகச் சென்ற ஒவ்வொரு கிராமத்தையும் மங்களா ஹரிஜன் நினைவில் வைத்திருக்கிறார். “குஞ்சூர், குராகுண்ட், க்யாதனகேரி… ஒரு வருடத்தில் ரட்டிஹல்லிக்கு கூட நான் சென்றிருக்கிறேன்,” என ஹவேரி மாவட்டத்தின் ஹிரெகெரூர் தாலுகாவின் கிராமப் பெயர்களை பட்டியலிடுகிறார். தினக்கூலி வேலை பார்க்க தினமும் 17-20 கிலோமீட்டர்கள் பயணித்து விவசாய நிலங்களுக்குச் செல்கிறார் விவசாயக் கூலியான மங்களா.
”இரண்டு வயதிலிருந்து கொனானடலிக்கு சென்று கொண்டிருக்கிறேன்,” என்கிறார் அவர். கொனானடலியும் மங்களாவின் கிராமமான மெனாஷினகாலும் ஹவேரியின் ரானிபென்னூர் தாலுகாவில் இருக்கின்றன. ஹிரெகெரூர் தாலுகா அங்கிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. அவரும் அவர் வசிக்கும் மெனாஷினகலின் மடிகா கெரிப் பகுதியின் - தலித் சமூகமான மடிகாக்கள் வசிக்கும் காலனி - பிற பெண்களும் 8லிருந்து 10 பேர் கொண்ட குழுக்களாக வேலை பார்க்க ஹவேரி முழுக்க பயணிக்கின்றனர்.
அவர்கள் ஒவ்வொருவரும் 150 ரூபாய் ஒரு நாளுக்கு சம்பாதிக்கின்றனர். ஆனால் வருடத்தில் சில மாதங்களில் கையால் மகரந்தம் சேர்க்கும் வேலைக்கு அவர்கள் 90 ரூபாய் கூடுதலாக பெறுகின்றனர். இந்த வேலைக்காக மாவட்டத்தில் வெகுதூரம் அவர்கள் பயணிக்கின்றனர். அவர்கள் வேலை பார்க்கும் நிலங்களின் உரிமையாளர்களாக இருக்கும் விவசாயிகள் ஆட்டோக்கள் அமர்த்தி அவர்களை அழைத்து வருகின்றனர். வேலை முடிந்ததும் வீட்டுக்குக் கொண்டு போய் சேர்க்கின்றனர். “ஆட்டோ ஓட்டுநர்கள் ஒரு நாளுக்கு 800லிருந்து 900 ரூபாய் வரை கட்டணம் வாங்குகின்றனர். எனவே அவர்கள் (விவசாயிகள்) எங்களின் ஊதியத்திலிருந்து 10 ரூபாய் பிடித்துக் கொள்கின்றனர்,” என்கிறார் மங்களா. “இதற்கு முன்பு ஆட்டோவெல்லாம் கிடையாது. நடந்தே செல்வோம்.”
சற்று எடை குறைவாக இருக்கும் 30 வயது மங்களா, கூரை வேயப்பட்ட ஓரறை குடிசையில் அவரின் கணவருடனும் - அவரும் தினக்கூலி தொழிலாளர்தான் - நான்கு குழந்தைகளுடனும் வசிக்கிறார். ஒரு விளக்கு அவர்களின் குடிசையில் ஒளிர்கிறது. ஒரு மூலை சமையலுக்கும் இன்னொரு மூலை துணிகள் குவித்து வைக்கவும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. மறுபக்கத்தில் உடைந்த ஒரு ஸ்டீல் பீரோ. நடுவே மிச்சமிருக்கும் வெளி உணவருந்தவும் படுத்து உறங்கவும் பயன்படுத்தப்படுகிறது. வெளியே ஒரு உயர்த்தப்பட்ட கல்லில்தான் துணிகளை துவைப்பார். பாத்திரங்கள் கழுவுவார்.
“இந்த வருடம்தான் எங்களுக்கு தினக்கூலியாக 240 ரூபாய் வழங்கப்படுகிறது. கடந்த வருடம் வரை 10 ரூபாய் குறைவாக கொடுக்கப்பட்டது,” என்கிறார் மங்களா. அவரைப் போல் கையால் மகரந்தம் சேர்க்கும் வேலை (பிறகு விதைகளுக்காக பயிர்கள் அறுவடை செய்யப்படும்) பார்க்கும் தொழிலாளர்கள் அம்முறையை இனச்சேர்க்கை எனக் குறிப்பிடுகின்றனர்.
கையால் மகரந்தம் சேர்க்கும் வேலை இருக்கும் குளிர் மற்றும் மழைக் காலங்களில், மாதத்துக்கு 15-20 நாட்களேனும் மங்களா சம்பாதித்து விடுவார். தனியார் விதை நிறுவனங்கள் விதை பெறுவதற்காக, விவசாயிகள் தயாரிக்கும் தக்காளி, வெண்டை மற்றும் பாகற்காய் முதலியவற்றின் கலப்பின வகைகள் இனப்பெருக்கம் அடைய அவர்கள் உதவுகின்றனர். செடிகளின் பூக்களுக்கு மகரந்தம் சேர்க்கும் ஆரம்பக் கட்ட வேலையை மங்களா செய்கிறார். தேசிய விதை சங்கத்தின்படி, இந்தியாவின் கலப்பின காய்கறி விதைத்துறையின் மதிப்பு ரூ.2,600 கோடி. நாட்டிலேயே அதிக காய்கறி விதைகளை மகாராஷ்டிராவும் கர்நாடகாவும்தான் தயாரிக்கிறது. கர்நாடகாவில் ஹவேரி மற்றும் கொப்பை மாவட்டங்கள்தான் காய்கறி விதைத் தயாரிப்பு மையங்கள்.
கிராம நிலங்களில் கிடைக்கும் கூலியைக் காட்டிலும் அதிகக் கூலி கிடைக்கும் பட்சத்தில் ஹவேரி கிராமங்களின் பெண்கள் எந்த தூரத்துக்கும் பயணிக்கத் தயாராக இருக்கின்றனர். நான்கு வருடங்களுக்கு முன் மோசமான திருமணத்திலிருந்து தப்பிச் சென்ற 28 வயது ரஜியா அலாதீன் ஷேக் சன்னடி, ஹிரெகெரூரின் குடப்பளி கிராமத்திலுள்ள பெற்றோரின் வீட்டுக்கு திரும்பிய போது, இரு மகள்களுக்கு சாப்பாடு போட அவர் வேலை தேடவிருந்தது.
அவரின் கிராமத்தில் விவசாயிகள் சோளம், பருத்தி, நிலக்கடலை மற்றும் பூண்டு ஆகியவற்றை பயிரிட்டனர். “ஒரு நாளுக்கு 150 ரூபாய் (விவசாயக் கூலி) கிடைக்கும். அதை வைத்துக் கொண்டு ஒரு லிட்டர் எண்ணெய் கூட வாங்க முடியாது. அதனால்தான் வேலைக்காக பிற இடங்களுக்கு நாங்கள் போக வேண்டியிருக்கிறது,” என்கிறார் ரஜியா. கையால் மகரந்தம் சேர்க்கும் குழுவில் இணைய பக்கத்து வீட்டார் கேட்டபோது அவர் யோசிக்கக் கூட இல்லை. “வீட்டிலிருந்து என்ன செய்யப் போகிறேன் எனக் கேட்டார். எனவே வேலைக்கு என்னையும் அழைத்துச் சென்றார். இந்த வேலைக்கு நாளொன்றுக்கு 240 ரூபாய் ஊதியம் கிடைக்கிறது.”
உயரமாகவும் ஒல்லியாகவும் ரஜியா பார்ப்பதற்கு நன்றாக இருப்பார். 20 வயதில் ஒரு குடிகாரருக்கு மணம் முடித்து கொடுக்கப்பட்டார். அவருடன் ஷிராஹட்டி தாலுகாவிற்கு சென்று வாழ்ந்தார். பெற்றோரால் கொடுக்க முடிந்ததை கொடுத்த பிறகும் வரதட்சணைக் கொடுமை அவருக்கு இருந்தது. “என் பெற்றோர் மூன்று சவரன் தங்கமும் (எட்டு கிராம் ஒரு சவரன்) ரூ.35,000 ரொக்கமும் கொடுத்தனர். எங்கள் சமூகத்தில் நாங்கள் நிறைய பாத்திரங்களையும் உடைகளையும் கொடுப்போம். வீட்டில் மிச்சம் எதுவுமில்லை. எல்லாவற்றையும் கொடுத்து விட்டார்கள்,” என்கிறார் ரஜியா. “திருமணத்துக்கு முன் ஒரு விபத்து வழக்கில் என் கணவர் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார். வழக்குச் செலவுகளுக்காக என் பெற்றோரிடம் சென்று 5000, 10000 என பணம் வாங்கச் சொல்லி நிர்பந்திப்பார்,” என்கிறார் அவர்.
மனைவியை இழந்தவராக சொல்லித்தான் ரஜியாவை அவரின் கணவர் மணம் முடித்தார். அவருக்கு எதிராக நான்கு மாதங்களுக்கு முன் குழந்தை பராமரிப்பு நிதி மற்றும் ஜீவனாம்சம் கேட்டு வழக்கு தொடுத்திருக்கிறார். “குழந்தைகளை அவர் ஒருமுறை கூட வந்து பார்க்கவில்லை,” என்கிறார் அவர். உதவிகள் கிடைக்கக்கூடிய பெண்கள் கமிஷன், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு முதலியவற்றை பற்றி அவர் அறிந்திருக்கவில்லை. விவசாயத் தொழிலாளர்களுக்குக் கிடைக்கக் கூடிய அரசு நலத் திட்டங்களைப் பெற அவருக்கு உதவுவோரும் கிராமத்தில் யாருமில்லை. விவசாயிகளுக்கான பலன்களையும் அவர் பெற முடியாது. ஏனெனில் அவர் விவசாயியாக கருதப்பட மாட்டார்.
“பள்ளியில் சமையல் வேலை கிடைத்தால், நிலையான வருமானம் கிடைக்கும்,” என்கிறார் ரஜியா. “தொடர்புகள் இருப்பவர்களுக்குதான் வேலைகள் கிடைக்கும். எனக்கு யாரையும் தெரியாது. எல்லாம் சரியாகி விடும் என்கின்றனர். ஆனால் நான் மட்டுமே எல்லா விஷயங்களையும் செய்ய வேண்டியிருக்கிறது. எனக்கு உதவவென யாருமில்லை.”
ரஜியா தற்போது வேலை பார்க்கும் விவசாயி, 200 கோடியிலிருந்து 500 கோடி ரூபாய் வரை வருட வருமானம் பார்க்கும் ஒரு பன்னாட்டு நிறுவனத்துக்கு விதைகளை விற்கிறார். அந்த வருமானத்தின் மிகக் குறைந்த அளவுதான் ரஜியாவுக்கு ஊதியம். “இங்கு (ஹவேரி மாவட்டம்) தயாரிக்கும் விதைகள் நைஜீரியா, தாய்லாந்து, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா முதலிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது,” என்கிறார் அந்த விதை நிறுவனத்தின் மேற்பார்வையாளர். ரானிபென்னூர் தாலுகாவின் 13 கிராமங்களில் விதைத் தயாரிப்பை அவர் கவனித்துக் கொள்கிறார்.
இந்தியாவின் விதைத் தயாரிப்பு தொழிலாளர் சக்தியில் மங்களா போன்ற உள்ளூர புலம்பெயரும் தொழிலாளர்கள் தவிர்க்க முடியாத பகுதி. NSAI-ன் கணக்குப்படி நாட்டின் விதைத் தொழில்துறை 22,500 கோடி ரூபாய் மதிப்பு கொண்டது. சர்வதேச அளவில் ஐந்தாவது இடம். சோளம், சிறு தானியம், பருத்தி, காய்கறி, கலப்பின அரிசி, எண்ணெய் விதைகள் உள்ளிட்ட கலப்பின விதைத் தொழிற்துறையின் மதிப்பு 10,000 கோடி ரூபாய்.
அரச கொள்கைகளின் உதவியால், கடந்த சில வருடங்களில் தனியார் துறை விதைத்தொழிலில் குறிப்படத்தகுந்த இடத்தைப் பிடித்திருக்கிறது. மக்களவையில் கடந்த மார்ச் மாதத்தில் இந்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் சமர்ப்பித்த அறிக்கையின்படி, 540 தனியார் விதை நிறுவனங்கள் நாட்டில் இருக்கின்றன. அவற்றில் 80 நிறுவனங்களிடம் ஆய்வு மற்றும் வளர்ச்சிக்கான வசதிகள் இருக்கின்றன. இந்தியாவின் விதைத் தொழிலில் தனியார் துறையின் பங்கு 2017-18ம் ஆண்டிலிருந்த 57.28 சதவிகிதத்திலிருந்து 64.46 சதவிகிதத்தை 2020-21-ல் அடைந்திருக்கிறது.
பல்லாயிரங்கோடி ரூபாய் மதிப்பு கொண்ட துறையின் வளர்ச்சி மங்களா மற்றும் அவர் போன்ற ஹவேரி பெண் விவசாயத் தொழிலாளர்களின் வாழ்க்கைகளை மேம்படுத்தவில்லை. மங்களாவின் அண்டைவீட்டுக்காரரான 28 வயது தீபா டோனப்பா புஜார் சொல்கையில், “ஒரு கிலோ காய்கறி விதைக்கு 10,000 ரூபாயிலிருந்து 20,000 ரூபாய் அவர்களுக்கு (விவசாயிகளுக்கு) கிடைக்கும். 2010ம் ஆண்டில் ஒரு கிலோவுக்கு 6000 ரூபாய் அவர்களுக்குக் கிடைத்தது. இப்போது எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் என எங்களிடம் அவர்கள் சொல்வது கிடையாது. அதே அளவுதான் கிடைப்பதாக சொல்வார்கள்,” என்கிறார். அவரைப் போன்ற தொழிலாளர்களுக்கு ஊதியம் உயர்த்தப்பட வேண்டும் என்கிறார். “எங்களின் தினக்கூலி அதிகரிக்கப்பட வேண்டும். கடுமையாக வேலை பார்க்கிறோம். ஆனால் சேமிக்க முடியவில்லை. கையில் காசு நிற்பதில்லை,” என்கிறார் அவர்.
கையால் மகரந்தம் சேர்க்கும் வேலையில் பிரச்சினைகள் இருக்கின்றன என சொல்கிறார் தீபா. “சுமையான வேலை. சமைக்க வேண்டும், கூட்ட வேண்டும், வீட்டை சுத்தப்படுத்த வேண்டும்… எல்லாவற்றையும் நாங்களே செய்ய வேண்டும்.”
“வேலைக்கு நாங்கள் செல்லும்போது, அவர்கள் (விவசாயிகள்) நேரத்தை மட்டும்தான் பார்க்கிறார்கள். கொஞ்சம் தாமதமாக சென்றாலும், 240 ரூபாய் தினக்கூலி எப்படி கொடுக்க முடியும் எனக் கேட்பார்கள். மாலை 5.30க்கு கிளம்புவோம். வீடு வர 7.30 ஆகிவிடும்,” என்கிறார் தீபா. “அதற்குப் பிறகு நாங்கள் வீட்டை சுத்தப்படுத்த வேண்டும். தேநீர் அருந்த வேண்டும். இரவுணவு தயார் செய்ய வேண்டும். தூங்க நடு இரவு ஆகி விடும். இங்கு வேலை இல்லாததால்தான் அங்கு நாங்கள் வேலைக்குச் செல்கிறோம்.” பூவின் மகரந்தத் தளத்தை பார்ப்பதால் கண்கள் வலிப்பதாக சொல்கிறார். “முடி இழை அளவுக்குதான் அது இருக்கும்.”
கையால் மகரந்தம் சேர்க்கும் வேலைக்கு குறுகிய காலம் மட்டுமே தேவை இருப்பதால் வருடத்தின் பிற நாட்களில் குறைவான ஊதியத்துக்கு வேலை பார்க்கும் நிலைக்கு பெண்கள் தள்ளப்படுகின்றனர். “150 ரூபாய் தினக்கூலி வேலைக்கு நாங்கள் திரும்புவோம்,” என்கிறார் தீபா. “அதில் உங்களுக்கு என்ன கிடைக்கும்? ஒரு கிலோ பழத்தின் விலை 120 ரூபாய். காய்கறிகள், குழந்தைகளுக்கும் வீடு வரும் விருந்தாளிகளுக்கும் உண்பண்டங்கள் எல்லாவற்றையும் வாங்க வேண்டும். வாரச்சந்தைக்கு போகாவிட்டால், எதையும் நாங்கள் வாங்க முடியாது. எனவே புதன்கிழமைகளில் நாங்கள் வேலைக்கு போக மாட்டோம். வாரத்துக்கு தேவையான மளிகைப் பொருட்களை வாஙக தும்மினாகட்டி சந்தைக்கு (கிட்டத்தட்ட 2.5 கிலோமீட்டர்) நடந்து செல்வோம்.”
தொழிலாளர்களுக்கான வேலை நேரமும் முறையாக இருக்காது. ஒவ்வொரு பருவத்துக்கும் அறுவடை செய்யப்படும் பயிருக்கேற்ப மாறும். “சோள அறுவடைக்கும் அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து ஐந்து மணிக்கு நிலத்தை அடைவோம். சில நேரங்களில் கல் சாலையாக இருந்தால், ஆட்டோக்கள் வராது. நடக்க வேண்டியிருக்கும். எனவே வெளிச்சத்துக்கு செல்ஃபோனில் இருக்கும் டார்ச் லைட்டை பயன்படுத்துவோம். பிற்பகல் ஒரு மணிக்கு வீடு திரும்புவோம்.” நிலக்கடலை அறுவடைக்கு அதிகாலை 3 மணிக்கு கிளம்புவார்கள். பிற்பகலுக்கு முன் வீடு திரும்புவார்கள். ”நிலக்கடலை அறுவடைக்கு தினக்கூலி ரூ.200. ஆனால் ஒரு மாதத்துக்குதான் வேலை.” அவர்களை அழைத்து வர சில நேரங்களில் விவசாயிகள் வாகனங்கள் அனுப்புவார்கள். “மற்ற நேரங்களில் எங்களையே போக்குவரத்தையும் பார்த்துக் கொள்ளச் சொல்வார்கள்,” என்கிறார் தீபா.
இவை எல்லாவற்றையும் தாண்டி, வேலையிடங்களில் அடிப்படை வசதிகள் இருக்காது. “கழிவறைகள் கிடையாது. யாரும் பார்க்காத இடங்களை நாங்கள் கண்டுபிடிக்க வேண்டும்,” என்கிறார் தீபா. “வீட்டிலேயே எல்லாவற்றையும் முடித்துவிட்டு வரும்படி நிலவுரிமையாளர்கள் சொல்வார்கள். வேலை நேரம் வீணாவதாக நினைப்பார்கள்.” மாதவிடாய் காலத்தில் அவர்கள் கஷ்டத்தை அனுபவிக்கிறார்கள். “அடர்த்தியான துணி அல்லது நாப்கினை மாதவிடாய் காலத்தில் பயன்படுத்துவோம். வேலை முடிந்து வீடு திரும்பினால்தான் அதை மாற்ற முடியும். வேறு இடம் இருக்காது. நாள் முழுவதும் நிற்பதால் வலி எடுக்கும்.”
அவர்களின் சூழலில்தான் பிரச்சினை இருப்பதாக கருதுகிறார் தீபா. “எங்களின் கிராமம் மிகவும் பின்தங்கிய கிராமம். எந்த விஷயத்திலும் அது முன்னால் இல்லை,” என்கிறார் அவர். “இருந்திருந்தால் நாங்கள் ஏன் இப்படி வேலை பார்க்க வேண்டும்?”
தமிழில் : ராஜசங்கீதன்