19ம் நூற்றாண்டில் ரயில்வே துறை இந்தியாவில் வந்தபோது, பலவகையான மண்டல ரயில்வே நெட்வொர்குகள் தோன்றின, சிந்தியாக்கள், பின்னர் குவாலியர் மாகாணம், குவாலியர் குறுகிய ரயில்வேயை உருவாக்கியது. அதன் பாதை 210 கிலோமீட்டரை அடக்கியது, அதுதான் உலகிலேயே உள்ள நீண்ட தூர குறுகிய ரயில்பாதை.
ஷீயோப்பூர் கலன் புறநகர் ரயில் நிலையத்தை குவாலியர் நகரத்துடன் இணைக்கும் ஒரே ரயில் எண் 52171. இது சராசரியாக மணிக்கு 18 கிலோமீட்டர் வேகத்தில் இயங்கும். இந்த பயணத்தை முடிக்க உங்களுக்கு பத்தரை மணி நேரமாகும்.
இப்போது இந்திய ரயில்வேயின் ஒரு பகுதியாக இருக்கும் ரயில், குவாலியரில் இருந்து காலை 6.25 மணிக்குப் புறப்படும். நான் அரை மணி நேரம் முன்னதாக ரயில் நிலையத்தை அடைந்து, ரூ. 29 கொடுத்து டிக்கெட் பெற்றுக்கொண்டு ரயிலில் ஏறினேன். ஏற்கனவே பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. ஷியோபூர் – குவாலியர் குறுகிய பாதை ரயிலில் 7 பெட்டிகள் மட்டுமே உள்ளது. 200 பேர் பயணிக்க முடியும். ஆனால், தினமும் இரண்டு மடங்கு அதிக பயணிகளை அது சுமந்து செல்கிறது. ரயில் பெட்டிகளில் மக்கள் நெருக்கியடித்து அமர்ந்திருக்கிறார்கள். சிலர் பக்கவாட்டில் தொங்கிக்கொண்டு வருகிறார்கள். மேற்கூரையில் சிலர் அமர்ந்துகொண்டும் வருகிறார்கள்.
இந்த கூட்ட நெரிசலிலும் என்னுடன் பயணித்தவர், ரயிலில் ஏறுவதற்கும், இடம் பிடிப்பதற்கும் உதவினார். கோஷிபுரா ரயில் நிலையத்தில், நான் இன்ஜின் ஓட்டுபவரின் இடத்திற்கு அருகில் சென்றேன். ஓட்டுனர் அன்வர்கான், அவருக்கு அருகில் அமர சிறிது இடம் கொடுத்தார். எனக்கு மேற்கூரையில் அமர்ந்து செல்வதற்கு ஆசையாகத்தான் இருந்தது. ஆனால், அதில் ஆபத்து உள்ளது. வழியில் உள்ள டிரஸ் பாலத்தில் தாழ்வாக இருக்கும், குறுக்கே செல்லும் கம்பிகள் உள்ளது. (டிரஸ் பாலங்கள் முக்கோண வடிவில் அமைக்கப்பட்டிருக்கும். இந்த பாலங்களில் குறைந்தளவு பயணங்களே அனுமதிக்கப்படும்) அந்த பாலத்தை கடக்கும்போது சில பயணிகள் பக்கவாட்டில் நின்றுகொள்வதும், குறுக்காக செல்லும் கம்பிகள் அடிபடாமல் இருக்க மேற்கூரையில் படுத்துக்கொள்வதும் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.
ரயில் அழகிய கடுகு வயல்கள், ஓடைகள், தரிசு நிலங்கள் வழியாக செல்கிறது. இந்த பயணத்தில் எனக்கு அதிகம் நினைவில் இருப்பது என்னை சக பயணிகள் நன்றாக நடத்தியதுதான்.
இந்த புகைப்பட கதை 2016ம் ஆண்டு பிப்ரவரியில் வந்த ரோட்ஸ் மற்றும் கிங்டம் இதழில் வெளியாகியுள்ளது.
தமிழில்: பிரியதர்சினி. R.