காலையில் தனது கணவர் வேலைக்காக வெளியே கிளம்புவதற்கு முன், 24 வயதாகும் நேகா தோமர் (அவரது உண்மையான பெயர் கிடையாது) அவரது காலில் விழுந்து வணங்குகிறார். இது தினசரி நடக்கும் நிகழ்வல்ல. ஆனால், ஏதாவது முக்கியமான விஷயத்திற்காக வீட்டை விட்டு வெளியே செல்லும் போது இதுபோல் செய்கிறார். “என் பெற்றோர்கள் வீட்டுக்கு செல்வதைப் போல” என்கிறார் பெகுதா சமூக சுகாதார மையத்தில் அமர்ந்திருக்கும் நேகா.

அமேதி தாலுகாவில் உள்ள இந்த சமூக சுகாதார மையத்திற்கு தனது அத்தையோடு வந்துள்ளார் நேகா. இன்னும் பெயர் வைக்கப்படாத நேகாவின் நான்காவது குழந்தை அவரது அத்தையின் கையில் தவழ்ந்து கொண்டிருக்கிறது. இனி நமக்கு வேறு குழந்தை வேண்டாம் என நேகாவும் விவசாய தொழிலாளரான அவரது கணவர் ஆகாஷும் முடிவு செய்துள்ளனர். “இது எங்களுடைய விருப்பம்” என கூறும் நேகா, அடுத்தடுத்து நான்கு குழந்தைகளை பெற்றெடுத்த நாங்கள் இதற்கு தகுதியானவர்களே எனவும் வலியுறுத்துகிறார். இந்த கைக்குழந்தையை தவிர்த்து நான்கு மற்றும் ஐந்து வயதில் இரண்டு பெண் குழந்தைகளும், ஒன்றரை வயதில் ஒரு பையனும் நேகாவிற்கு உள்ளனர்.

The camp approach to sterilisation gave way to 'fixed-day services' at CHCs
PHOTO • Anubha Bhonsle

கருத்தடை முகாமின் மோசமான அணுகுமுறையே, சமூக சுகாதார மையத்தில் ‘குறிப்பிட்ட நாள் சேவைகளுக்கு’ வழி வகுத்தது

அவருக்கு திருமணம் ஆன இந்த ஆறு ஆண்டுகளில் கருத்தடை குறித்தோ அல்லது குழந்தை பிறந்த பிறகு இடைவெளி விடுவது குறித்தோ யாரும் பேசவில்லை “எனக்கு திருமணம் ஆன போது, யாரும் எதைப்பற்றியும் என்னிடம் கூறியதில்லை. எனது கணவரும் குடும்பமும் கூறுவதை மட்டும் நான் கேட்டுக்கொண்டேன்” என்கிறார் நேகா. கருமுட்டை வெளிப்படும் காலத்தில் உடலுறவை தவிர்த்தால், கர்ப்பமாகும் வாய்ப்பை குறைக்கலாம் என முதல் இரண்டு கர்ப்பத்திற்குப் பிறகே அவர் தெரிந்து கொண்டார். “அந்த சமயத்தில் வயிற்று வலி என பொய் சொல்வேன் அல்லது இரவு நேரத்தில் வேலையை முடிக்க நீண்ட நேரம் எடுத்துக் கொள்வேன். ஆனால் விரைவிலேயே இதை என் அத்தை கண்டுபிடித்துவிட்டதாக” நேகா கூறுகிறார்.

விந்தணுவை உள்ளே செலுத்தாமல் இருப்பது, தவிர்ப்பு காலம், நேகா செய்வது போன்ற பாதுகாப்பான காலத்தை பின்தொடர்வது போன்ற பாரம்பரிய கருத்தடை முறைகள் இந்தியாவின் மற்ற பகுதிகளை விட உத்தரபிரதேசத்தில் அதிகளவு நடைமுறையில் உள்ளது. மாநிலத்தின் மொத்த கருத்தடையில் 22 சதவிகிதம் இந்த முறைகளே கடைபிடிக்கப்படுகிறது. இதை ஒப்பிடும்போது தேசிய சராசரி வெறும் 9 சதவிகிதமே என தேசிய குடும்பநல கணக்கெடுப்பின் (2015-2016) தரவுகளை கொண்டு ரீப்ரொடக்டிவ் ஹெல்த் இதழில் வெளியான 2019-ம் ஆண்டு அறிக்கை கூறுகிறது. உத்தரபிரதேசத்தில் தற்போது திருமணமான பெண்களில் 50 சதவிகிதத்தினர் மட்டுமே மாத்திரைகள், காண்டம் போன்ற நவீன கருத்தடை முறைகளை பயன்படுத்துகின்றனர். இதில் தேசிய சராசரி 72 சதவிகிதமாக உள்ளதாகவும் இந்த அறிக்கை கூறுகிறது.

விபத்தினால் ஆகாஷின் கால் முறிந்து வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்ட பிறகு, பல விஷயங்கள் கடினமாக மாறின. இந்த சமயத்தில் மனதில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு ‘அறுவை சிகிச்சை’ செய்வது குறித்து தனது கணவரிடம் பேசினார் நேகா. கர்ப்பமாவதை தடுக்க பெண்களின் கருமுட்டை குழாய்களை மூடும் பெண் கருத்தடை நடைமுறையைதான் அவர் இப்படி கூறுகிறார். இப்போது வரை ஒத்துக்கொள்ளாவிட்டாலும், நேகாவுடன் மருத்துவமனைக்கு வந்துள்ளார் அவரது அத்தை. ஆனால் அவர் நம்பிக்கையை கைவிடவில்லை. “கடவுளின் விருப்பத்திற்கும் எண்ணத்திற்கும் இடையே யாரும் வர முடியாது” என தனக்குள்ளே முணுமுணுத்து கொள்கிறார் அவரது அத்தை. அல்லது பண்டோயா, நவுகிர்வா, சனஹா மற்றும் டிர்கே போன்ற அருகிலுள்ள கிராமங்களில் இருந்து சமூக சுகாதார மையத்திற்கு வந்துள்ள நேகா உள்ளிட்ட 22 பெண்களிடம் அவர் இதை கூறுகிறாரா?

அன்று நவம்பர் மாதத்தின் சுறுசுறுப்பான காலை நேரம். அப்போது மணி பத்து இருக்கும். பெரும்பாலான பெண்கள் 9 மணிக்கே வந்திருந்தனர். நேரம் செல்ல செல்ல, இன்னும் பலர் வருவார்கள். “பெண்கள் கருத்தடை நாளன்று, முக்கியமாக அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரையிலான காலத்தில் சராசரியாக 30-40 பேர் வருவார்கள். இந்த மாதங்களில் அறுவை சிகிச்சை செய்யவே அவர்கள் விரும்புவார்கள். ஏனென்றால் இந்த மாதங்களில் குளிர் அதிகமாக இருக்கும், தொற்று ஏற்படும் வாய்ப்பு குறைவு மற்றும் காயமும் விரைவாக குணமாகும்” என்கிறார் பெதுவா சுகாதார மையத்தின் மருத்துவ அதிகாரி டாக்டர் அபிமன்யு வர்மா.

'About 30-40 come in on on mahila nasbandi day'
PHOTO • Anubha Bhonsle

‘பெண்கள் கருத்தடை நாளன்று 30 முதல் 40 பேர் வருவார்கள்’

நவம்பர் 08, 2014ல் சட்டிஸ்கரின் பிலாஸ்பூர் மாவட்டத்திலுள்ள தகத்பூரில் நிகழ்ந்த துயரத்திற்குப் பிறகு கருத்தடை முகாம்களின் அணுகுமுறையால் கொந்தளிப்பு நிலவியது.  முகாமில் 13 பெண்கள் இறந்தனர்

நவம்பர் 08, 2014 அன்று சட்டிஸ்கரின் பிலாஸ்பூர் மாவட்டத்திலுள்ள தகத்பூர் வட்டத்தில் நிகழ்ந்த துயரத்திற்குப் பிறகு கருத்தடை குறித்த முகாம்களின் அணுகுமுறையால் பரவலான கொந்தளிப்பு நிலவியது. கைவிடப்பட்ட, தூய்மையற்ற கட்டிடத்தில் நடைபெற்ற அந்த முகாமில், மாவட்ட மருத்துவமணையில் இருந்து வந்த மருத்துவர்கள் 90 நிமிடங்களில் வரிசையாக 83 குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை (ட்யூபெக்டோமி) செய்தனர். அறுவை சிகிச்சை நிபுணர்கள் ஒரே ஒரு லேபராஸ்கோப் மட்டுமே பயன்படுத்தியதோடு நோய்தொற்று ஏற்படாத வண்ணம் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதில் 13 பெண்கள் பலியானதோடு பலர் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர்.

இப்படி பெண்கள் உடல்நலத்தை கவனத்தில் கொள்ளாமல் கருத்தடை முகாம் நடப்பது ஒன்றும் முதல்முறை அல்ல. ஜனவரி 07, 2012 அன்று, பீகாரின் அராரியா மாவட்டத்தின் குருசகந்தா வட்டத்திலுள்ள கபர்ஃபோரா கிராமத்தில், இதேப்போன்ற சுகாதாரமற்ற சூழ்நிலையில், வெறும் டார்ச்லைட் வெளிச்சத்தில் பள்ளி கட்டிடத்தில் வைத்து 53 பெண்களுக்கு கருத்தடை செய்யப்பட்டது.

அராரியா சம்வத்தை தொடர்ந்து சுகாதார உரிமைகள் தொடர்பாக களப்பணியில் ஈடுபட்டு வரும் தேவிகா பிஸ்வாஸ் 2012-ம் ஆண்டு பொது நல வழக்கு தொடுத்தார். விசாரணையின் முடிவில், முகாம் அமைத்து பெரும் திரளாக கருத்தடை செய்வதை நிறுத்துமாறும் சுகாதார வசதிகளை பலப்படுத்துவதில் கவனம் செலுத்துமாறும் குடும்ப கட்டுப்பாடு திட்டத்தின் கீழ் சேவைகள் பெறுவதை மேம்படுத்துமாறும் செப்டம்பர் 14, 2016 அன்று மத்திய, மாநில அரசாங்கத்திற்கு உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். இந்த வழக்கு விசாரணையின் போது, உத்தேரபிரதேசம் உள்பட கேரளா, ராஜஸ்தான், மத்தியபிரதேசம் மற்றும் மகராஷ்ட்ரா மாநிலங்களிலும் கருத்தடை முகாம்களின் போது மோசமான மருத்துவ சேவை வழங்கப்படுவதாக தெரிய வந்தது.

அதன்பிறகு, கருத்தடை முகாமின் மோசமான அணுகுமுறை காரணமாக, ‘குறிப்பிட்ட நாட்களில் மட்டும் சேவைகள்’ வழங்குவதற்கு வழி பிறந்தது. இதன்படி கருத்தடை செய்ய விரும்பும் ஆண்கள் அல்லது பெண்கள் மாதத்தின் குறிப்பிட்ட நாளில் சுகாதார மையத்திற்கு வர வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட நாளை பொதுவாக கருத்தடை நாள் என்று கூறப்பட்டாலும், விதைநாள அறுவை சிகிச்சைக்கு அரிதாகவே ஆண்கள் வருகிறார்கள். இதனால் இந்த நாள் பெண்கள் கருத்தடை நாள் என்றே அழைக்கப்படுகிறது.

நீதிமன்றங்களின் உத்தரவிற்குப் பிறகும், தொடர்ந்து பெண்கள் கருத்தடை மீதுதான் கவனம் செலுத்தப்படுகிறது.

Medical supplies on a table in a CHC waiting room. The operating room had been prepared and was ready since earlier that morning
PHOTO • Anubha Bhonsle

சுகாதார மையத்தில் உள்ள காத்திருப்பு அறையின் மேஜையில் இருக்கும் மருத்துவ பொருட்கள். அறுவை சிகிச்சை அறை காலையிலிருந்து தயார் நிலையில் உள்ளது

2017 தேசிய சுகாதார கொள்கையின் 11-வது பொது மதிப்பாய்வு கொள்கை அறிக்கையின் படி, இந்தியாவில் செய்யப்படும் கருத்தடை நடைமுறைகளில் 93.1 சதவிகிதம் பெண்களுக்கே நிகழ்த்தப்படுகிறது. 2016-17 நிதி ஆண்டில், குடும்ப கட்டுப்பாடு நிதியில் 85 சதவிகிதத்தை கருத்தடைக்கு செலவழித்துள்ளது இந்திய அரசு. இந்த நடைமுறை உத்தரபிரதேசத்தில் குறைந்திருந்தாலும் (1998-99 காலகட்டத்தை ஒப்பிடும்போது), இன்றும் இதுவே முக்கியமான கருத்தடை முறையாக உள்ளது. மேலும், பெண்கள் கருத்தடை நாளுக்கு முன்னுரிமை கொடுப்பது அதிக கருவுறுதல் மாவட்டங்களில் 33 சதவிகிதமாகவும், குறைவான கருவுறுதல் மாவட்டங்களில் 41 சதவிகிதமாக உள்ளதாக 2019-ம் ஆண்டு ரீப்ரொடக்டிவ் ஹெல்த் இதழில் வெளியான ஆய்வு கூறுகிறது.

சுல்தான்பூர் மாவட்டத்தில், கருத்தடை நடைமுறைகளை செய்வதற்கு இரண்டு முதல் மூன்று மருத்துவர்களே உள்ளனர். இதனால் அவர்களுக்கு வேலை பளு அதிகமாக உள்ளது. தாலுகா அல்லது மாவட்ட அளவில் உள்ள குடும்ப கட்டுப்பாடு ஒருங்கிணைப்பாளர் கூறும் வரிசையின் பிராகாரம் பணியாற்றும் இவர்கள், 12 முதல் 15 பிளாக்குகளில் பரவியுள்ள மருத்துவமணைகளுக்கும் சுகாதார மையங்களுக்கும் பயணம் செய்கிறார்கள். ஒவ்வொரு சமூக சுகாதார மையத்தாலும் ஒரு மாதத்திற்கு ஒரு கருத்தடை நாளை மட்டுமே நடத்த முடிகிறது.

பெகுதா சமூக சுகாதார மையத்தில் இதேப்போன்ற ஒருநாளில், பெண்கள் கருத்தடைக்கு குறைவான நாளே ஒதுக்கப்படுவதால் சிகிச்சை பெற வருபவர்களுக்கு போதுமானதாக இல்லை என்பது தெளிவாக தெரிந்தது. அரசாங்கத்தின் ஸ்வஸ்தியா மேளா-வில் பங்கேற்றுவிட்டு மாலை நான்கு மணிக்கு அறுவை சிகிச்சை நிபுணர் வந்தபோது, சிகிச்சை பெறுவதற்காக 30-க்கும் மேற்பட்டோர் காத்திருந்தனர். ஆரம்பகட்ட பரிசோதனையின் போது இரு பெண்கள் கர்ப்பமாக இருப்பது தெரிந்ததும், அவர்கள் திருப்பி அனுப்பபட்டனர்.

அறுவை சிகிச்சை அறை போன்ற ஒன்று கட்டிடத்தின் கடைசியில் உள்ளது. எல்லா மதியவேளையிலும் அந்த அறை தயாராக இருக்கிறது. பெரிய ஜன்னலில் உள்ள திரை வழியாக சூரிய வெளிச்சம் உள்ளே பாய்கிறது. ஆனால் அறையினுள் குளிராகவே இருக்கிறது. அறையின் நடுவில் மூன்று ‘அறுவைசிகிச்சை மேஜைகள்’ வரிசையாக போடப்பட்டுள்ளன. அறுவைசிகிச்சையின் போது மருத்துவர்களுக்கு வசதியாக இருக்கும் பொருட்டு, செங்கலை தாங்கலாக கொடுத்து மேஜையின் ஒருபக்கம் மட்டும் சாய்வாக உயர்த்தப்பட்டுள்ளது.

An 'operation theatre' at a CHC where the sterilisation procedures will take place, with 'operating tables' tilted at an angle with the support of bricks to help surgeons get easier access during surgery
PHOTO • Anubha Bhonsle

கருத்தடை நடைமுறைகள் செய்யப்படும் சுகாதார மையத்தில் உள்ள ‘அறுவைசிகிச்சை அறையில்’, அறுவைசிகிச்சையின் போது மருத்துவர்களுக்கு வசதியாக இருப்பதற்காக செங்கலை தாங்கலாக கொடுத்து மேஜையின் ஒருபக்கம் மட்டும் சாய்வாக உயர்த்தப்பட்டுள்ளது

“டிரெண்டெலின்பர்க் (*மருத்துவ பரிசோதனைக்காக கீழ், மேலாக சாய்க்கும் மேஜை) வசதி கொண்ட அறுவை சிகிச்சை மேஜைகள் பற்றி மருத்துவ கல்லூரியில் நாங்கள் படித்துள்ளோம். இதை கீழ், மேலாக சாய்த்துக் கொள்ளலாம். ஆனால், நான் இங்கு வந்து ஐந்து வருடமாகியும் அப்படி ஒன்றை இதுவரை பார்த்ததில்லை. அதனால்தான் இந்த ஏற்பாடு” என செங்கலை சுட்டிக்காட்டி கூறுகிறார் டாக்டர் ராகுல் கோஸ்வாமி. மேலும் அவர் கூறுகையில், “அறுவைசிகிச்சையின் போது தவறான நிலையில் படுத்தால் பின்னாளில் சிக்கல் வரக்கூடும்”.

அறுவைசிகிச்சை அறைக்கு அழைத்து வரப்பட்ட முதல் மூன்று பெண்களில் நேகாவும் ஒருவராக இருந்தார். அவரது அத்தையை வெளியே காத்திருக்குமாறு கூறினர். மூன்று பேர்களில் ஒருவர் கூட கருத்தடைக்கான நவீன முறைகளை ஒருபோதும் பயன்படுத்தியதில்லை. இந்த முறைகளை பயன்படுத்துவதற்கு பயம் இருந்தாலும், குறைந்தபட்சம் தெரிந்தாவது வைத்திருந்தார் நேகா. “எனக்கு இதெல்லாம் தெரியும். ஆனால், மாத்திரைகள் குமட்டலையும் காப்பர்-டியில் உள்ள நீளமான தடி பயத்தையும் ஏற்படுத்துகிறது” எங்கிறார் நேகா. கர்பப்பையில் பொருத்தும் சாதனத்தையே (ஐயுடி) அவர் இப்படி கூறுகிறார்.

மற்ற இரண்டு பெண்களோடு நிற்கும் அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதார செயற்பாட்டாளரான தீப்லதா யாதவ், இதைக்கேட்டு சிரிக்கிறார். யாதவ் கூறுகையில், “உள்ளேயிருக்கும் சாதனம் சிறியதாகவும் T வடிவத்தில் இருந்தாலும், அட்டைப்பெட்டி நீளமாக இருப்பதால் இவை முழுவதையும் உள்ளே புகுத்த வேண்டும் என நினைக்கின்றனர்”. பெண்களை மையத்திற்கு அழைத்து வருவதோடு யாதவின் அன்றைய நாள் வேலை முடிந்தது. ஆனால் அவர் உடனடியாக அங்கிருந்து கிளம்புவதில்லை. இரண்டு பெண்களையும் படுக்கையில் ஏற்றுவதற்கு உதவி செய்ததோடு அவர்களுக்கு கொடுக்கப்பட்ட மயக்க மருந்து வேலை செய்யும் வரை அங்கு காத்திருக்கிறார். கருத்தடை சிகிச்சைக்கு தான் அழைத்து வந்த ஒவ்வொரு பெண்மணிக்காகவும் ரூ.200 சன்மானம் பெறுகிறார்.

அறுவைசிகிச்சை மேஜைக்கு வந்த பிறகு, ஒவ்வொரு பெண்ணிடமும் தனித்தனியாக நீங்கள் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. ஒவ்வொரு மேஜையாக மருத்துவர் செல்ல செல்ல, அவர்களின் தலைகள் பயத்திலும் களைப்பிலும் சாய்கின்றன. சிகிச்சையின் காரணமாக வேறுவழியின்றி அனைவரும் மிகவும் நெருக்கமாக இருக்கின்றனர். ஆனால் இதைப்பற்றியெல்லாம் யோசிக்க அங்கு நேரமில்லை. சிகிச்சை நடந்து கொண்டிருக்கும் போதே, அறுவைசிக்கிச்சை அறையின் கதவுகள் பல தடவை திறக்கவும் மூடவும் செய்யப்படுகின்றன. இது பெண்களுக்கு குறைவான அந்தரங்கத்தையே வழங்குகிறது.

அவர்களின் மூச்சுக்காற்றும் கருவிகளின் சத்தமும் அறை முழுவதும் நிரம்பியுள்ளன. உதவியாளர் ஒருவர் அவ்வப்போது அவர்களின் படுக்கை நிலையை சோதிப்பதோடு அவர்களின் சேலைகளை சரி செய்கிறார். அப்போதுதான் மருத்துவர் தெளிவாக கீற முடியும்.

The women who have undergone the procedure rest here for 60 to 90 minutes before an ambulance drops them to their homes
PHOTO • Anubha Bhonsle

சிகிச்சை முடிந்தவுடன் 60 முதல் 90 நிமிடங்களுக்கு இங்கேயே பெண்கள் ஓய்வெடுக்கின்றனர். அதன்பிறகு ஆம்புலன்ஸ் மூலம் தங்களின் வீடுகளுக்கு செல்கின்றனர்

“கீறுவது, பின்பு அதை மூடுவது மற்றும் லேப்ராஸ்கோப்பி கருவி கொண்டு கருமுட்டை குழாய்களை அடைப்பது என கருத்தடை நடைமுறையின் மூன்று கட்டங்களிலும் முறையான வெளிச்சம் மிகவும் அவசியமானது” என்கிறார் கோஸ்வாமி. நண்பகலின் பளீர் வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து மாலை நேரத்து சூரியன் வெளிவருகிறது. அறையில் வெளிச்சம் போதுமானதாக இல்லை என தெரிந்தும் அங்கிருக்கின்ற அவசரகால விளக்குகளை யாரும் போடவில்லை.

ஐந்து நிமிடங்களுக்குள்ளாகவே ஒருவருக்கு கருத்தடை செய்துவிட்டு, அடுத்த மேஜைக்கு நகர்ந்தார் மருத்துவர். உதவியாளரும் ஆஷா பணியாளரும் மேஜையிலிருந்து பெண்களை கீழிறங்க உதவுவதற்கும் அடுத்த நபரை தயார்படுத்துவதற்காகவும் “முடிந்துவிட்டது” என சைகை செய்கிறார் மருத்துவர்.

இதற்கு அடுத்த அறையில், கீழே போர்வைகள் விரிக்கப்பட்டுள்ளன. அங்குள்ள மஞ்சள் நிற சுவரில் ஈரமும் பாசியும் படிந்திருக்கின்றன. அருகிலிருக்கும் கழிவறையிலிருந்து மோசமான நாற்றம் பரவுகிறது. சிகிச்சை முடிந்ததும், இந்த அறையில் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார் நேகா. பின்னர் அவரையும் மற்றவர்களையும் வீடுகளுக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வருகிறது. அரைமணி நேரம் கழித்து ஆம்புலன்ஸில் ஏறும்போது கூட நேகா தடுமாறுகிறார். ஒருவேளை விரைவாக சிகிச்சை முடிந்த காரணமாக இருக்கலாம் அல்லது அவருக்கு முழுதாக மயக்க மருந்து கொடுக்கப்படாமல் இருந்திருக்கலாம்.

தனது அத்தையின் பக்கவாட்டில் சாய்ந்தபடியே நேகா வீட்டை அடைந்ததும், அவர்களுக்காக காத்திருக்கிறார் ஆகாஷ். “தனது தாய், மனைவி, குழந்தை, நாய் என எல்லாரும் தன்னை எதிர்பார்த்து வீட்டில் காத்துக் கொண்டிருப்பார்கள் என ஒரு ஆண் எதிர்பார்ப்பான். ஆனால் இங்கு அப்படியே எதிராக உள்ளது” என குறிப்பிடுகிறார் நேகாவின் அத்தை. நேரே வீட்டினுள் உள்ள சிறிய சமயலைறைக்குள் செல்லும் அவர், நேகாவிற்காக தேநீர் தயார் செய்கிறார்.

தனது வயிற்றில் உள்ள கீறலை மறைக்க போடப்பட்ட பேண்டேஜை பிடித்துக் கொண்டே, “ஊசி போட்ட பிறகும் வலிக்கிறது” என்கிறார் நேகா.

இரண்டு நாள் கழித்து, மறுபடியும் சமயலறையின் கீழ் அமர்ந்து சமைத்துக் கொண்டிருக்கிறார் நேகா. இன்னும் அவரது வயிற்றில் பேண்டேஜ் இருந்தது. சிரமப்படுவது அவரது முகத்தில் தெளிவாக தெரிகிறது. காயம் இன்னும் முழுதாக குணமாகவில்லை. “இத்தோடு பிரச்சனை முடிந்தது” என்கிறார் நேகா.

முகப்பு ஓவியம்: ப்ரியங்கா போரர் , தொழில்நுட்பத்தில்  பல விதமான முயற்சிகள் செய்வதன் மூலம் புதிய அர்த்தங்களையும் வெளிப்பாடுகளையும் கண்டடையும் நவீன ஊடக கலைஞர். கற்றுக் கொள்ளும் நோக்கிலும் விளையாட்டாகவும் அவர் அனுபவங்களை வடிவங்களாக்குகிறார், அதே நேரம் பாரம்பரியமான தாள்களிலும் பேனாவிலும் அவரால் எளிதாக செயல்பட முடியும்.

பாப்புலேஷன் ஃபுண்டேஷன் ஆஃப் இந்தியாவின் ஆதரவுடன் பாரி மற்றும் கவுண்டர் மீடியா டிரஸ்ட்டின் இந்த தேசிய அளவிலான செய்தி சேகரிப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பதின் வயது மற்றும் இளம் பெண்களின் வாழ்வியலை அவர்களது குரல்கள் மற்றும் அனுபவங்களின் வாயிலாக பதிவு செய்வதே இதன் நோக்கம்.

இந்த கட்டுரையை மறுபதிப்பு செய்ய விரும்புகிறீர்களா? அப்படியென்றால் [email protected] , [email protected] என்ற  இணைய முகவரிகளில் தொடர்பு கொள்ளுங்கள்.

தமிழில்: வி. கோபி மாவடிராஜா

அனுபா போன்ஸ்லே, 2015 ல் பாரியின் நல்கையை பெற்றவர். சுதந்திர பத்திரிகையாளர் மற்றும் ICFJ Knight நல்கையை பெற்றவர். இவருடைய Mother, where's my country? என்கிற புத்தகம் மணிப்பூரின் சிக்கலான வரலாறு, ஆயுதப் படைகளின் சிறப்பு அதிகார சட்டம் , அதன் தாக்கம் போன்றவற்றை பேசும் புத்தகம்.

Other stories by Anubha Bhonsle
Illustration : Priyanka Borar

ப்ரியங்கா போரர், தொழில்நுட்பத்தில் பல விதமான முயற்சிகள் செய்வதன் மூலம் புதிய அர்த்தங்களையும் வெளிப்பாடுகளையும் கண்டடையும் நவீன ஊடக கலைஞர். கற்றுக் கொள்ளும் நோக்கிலும் விளையாட்டாகவும் அவர் அனுபவங்களை வடிவங்களாக்குகிறார், அதே நேரம் பாரம்பரியமான தாள்களிலும் பேனாவிலும் அவரால் எளிதாக செயல்பட முடியும்.

Other stories by Priyanka Borar
Editor : Hutokshi Doctor
Series Editor : Sharmila Joshi

ஷர்மிளா ஜோஷி, PARI-ன் முன்னாள் நிர்வாக ஆசிரியர் மற்றும் எழுத்தாளர். அவ்வப்போது கற்பிக்கும் பணியும் செய்கிறார்.

Other stories by Sharmila Joshi
Translator : V. Gopi Mavadiraja

வி. கோபி மாவடிராஜா, முழுநேர மொழிபெயர்ப்பாளர் மற்றும் சுதந்திர ஊடகவியலாளர். கதைகளிலும் விளையாட்டு இதழியலிலும் ஆர்வம் கொண்டவர்.

Other stories by V. Gopi Mavadiraja