நீங்கள் எங்களை வேரோடு பிடுங்கி தண்ணீரில் மூழ்கடிக்கலாம் என்று எங்கோ எழுதியிருக்கிறேன். ஆனால் விரைவில் உங்களுக்கு தண்ணீர் இருக்காது. எங்கள் நிலத்தையும், தண்ணீரையும் நீங்கள் திருடலாம். ஆனால் உங்கள் வருங்கால சந்ததியினருக்காக நாங்கள் இன்னும் போராடி மடிவோம். நீர், காடு மற்றும் நிலத்துக்கான எங்களின் போராட்டங்கள் எங்களுடையது மட்டுமல்ல. நாம் யாரும் இயற்கையிலிருந்து பிரிந்தவர்களும் அல்ல. பழங்குடி வாழ்க்கைகள் இயற்கையோடு இயைந்தவை. இயற்கையிலிருந்து எங்களைப் பிரித்து பார்ப்பதில்லை. தெஹ்வாலி பிலியில் நான் எழுதும் பல கவிதைகளில் , எங்கள் மக்களின் விழுமியங்களைப் பாதுகாக்க முயற்சித்திருக்கிறேன்.

பழங்குடிச் சமூகங்களாகிய எங்களின் உலகக் கண்ணோட்டம், வரும் தலைமுறைகளுக்கு அடித்தளமாக இருக்கும். கூட்டுத் தற்கொலைக்கு நீங்கள் தயாராக இல்லாவிட்டால், அந்த வாழ்க்கைக்கு, அந்த உலகப் பார்வைக்குத் திரும்புவதைத் தவிர உங்களுக்கு வேறு வழியில்லை.

தெஹ்வாலி பிலியில் ஜிதேந்திர வாசவா தனது கவிதையை வாசிப்பதைக் கேளுங்கள்

பிரதிஷ்தா பாண்டியா ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிதையை வாசிப்பதைக் கேளுங்கள்

எம் கால்கள் ஓய்வெடுக்கும் நிலம்

கல்லை அரைப்பது என்றால் என்ன என்றும்
மண்ணை எரிப்பதென்றால் என்னவென்றும்
ஓ தம்பி,
நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நான் நினைக்கவில்லை
உங்கள் வீடு நன்கு வெளிச்சமாக இருக்கிறது
இந்த பிரபஞ்சத்தின் ஆற்றலை கட்டுப்படுத்த முடிகிறது
நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள்
ஒரு துளியின் மரணம் என்றால் என்னவென்பதை
நீங்கள் புரிந்து கொள்ள மாட்டீர்கள்.
எல்லாவற்றிற்கும் மேலாக, நீங்கள் இந்த பூமியின் சிறந்த படைப்பு -
உங்கள் மகத்துவத்துக்கு
இந்த 'ஆய்வுக்கூடம்' மிகப்பெரிய சான்று.

உங்களுக்கும் இந்தப் பூச்சிகளுக்கும் என்ன சம்பந்தம்?
இந்த மரங்கள் மற்றும் தாவரங்களுடன் உனக்கென்ன தொடர்பு?
நீங்கள் வானத்தில் ஒரு வீட்டைக் கட்ட வேண்டும் என்று கனவு காண்கிறீர்கள்.
நீங்கள் இனி பூமி அன்னையின் அன்பான மகன் அல்ல.
நான் உங்களை ‘நிலவு மனிதன்’ என்று அழைத்தால்
நீங்கள் புண்பட மாட்டீர்களென நம்புகிறேன், சகோதரரே,
இல்லை, நீங்கள் பறவை இல்லை
ஆனால் உயரமாக பறக்க கனவு காண்கிறீர்கள்.
ஆனால் இத்தகைய கல்வியுடன் ஏன் அது நடக்கவில்லை!

நீங்கள் யாரையும் கேட்க மாட்டீர்கள்
ஆனால், தம்பி, இந்த ஒன்றை மட்டும் செய்
உங்களால் முடிந்தால் படிப்பறிவில்லாத எங்களுக்கு
கொஞ்சம் நிலத்தை தயவுசெய்து விட்டு விடுங்கள்
எங்கள் கால்கள் ஓய்வெடுக்க வேண்டும்

கல்லை அரைப்பது என்றால் என்ன என்றும்
மண்ணை எரிப்பதென்றால் என்னவென்றும்
ஓ தம்பி,
நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நான் நினைக்கவில்லை
உங்கள் வீடு நன்கு வெளிச்சமாக இருக்கிறது
இந்த பிரபஞ்சத்தின் ஆற்றலை கட்டுப்படுத்த முடிகிறது
நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள்
ஒரு துளியின் மரணம் என்றால் என்னவென்பதை
நீங்கள் புரிந்து கொள்ள மாட்டீர்கள்.
எல்லாவற்றிற்கும் மேலாக, நீங்கள் இந்த பூமியின் சிறந்த படைப்பு வேறு.

தமிழில் : ராஜசங்கீதன்

Poem and Text : Jitendra Vasava

குஜராத்தின் நர்மதா மாவட்டத்தில் உள்ள மஹுபாதாவைச் சேர்ந்த ஜிதேந்திர வாசவா, தெஹ்வாலி பிலி மொழியில் எழுதும் கவிஞர். ஆதிவாசி சாகித்ய அகாடமியின் (2014) நிறுவனத் தலைவரும், பழங்குடியினரின் குரல்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட கவிதை இதழான லகராவின் ஆசிரியருமான இவர், ஆதிவாசி வாய்மொழி இலக்கியம் குறித்த நான்கு புத்தகங்களை வெளியிட்டுள்ளார். அவரது முனைவர் பட்ட ஆய்வு நர்மதா மாவட்டத்தைச் சேர்ந்த பில்களின் வாய்வழி நாட்டுப்புறக் கதைகளின் கலாச்சார மற்றும் புராண அம்சங்களில் கவனம் செலுத்துகிறது. PARI-ல் வெளியிடப்பட்ட கவிதைகள் அவரது வரவிருக்கும் முதல் கவிதைத் தொகுப்பின் ஒரு பகுதியாகும்.

Other stories by Jitendra Vasava
Illustration : Labani Jangi

லபானி ஜங்கி 2020ம் ஆண்டில் PARI மானியப் பணியில் இணைந்தவர். மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டத்தைச் சேர்ந்தவர். சுயாதீன ஓவியர். தொழிலாளர் இடப்பெயர்வுகள் பற்றிய ஆய்வுப்படிப்பை கொல்கத்தாவின் சமூக அறிவியல்களுக்கான கல்வி மையத்தில் படித்துக் கொண்டிருப்பவர்.

Other stories by Labani Jangi
Translator : Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.

Other stories by Rajasangeethan