தமிழ்நாட்டின் கோத்தகிரி பஞ்சாயத்தைச் சேர்ந்த வெள்ளரிக்கோம்பை கிராமத்தில் பிரபலமான மனிதர் ஆர். கிருஷ்ணா. பாரம்பரியமான குறும்பர் வண்ணம்தீட்டும் முறைகளில் அவருக்கு இருக்கும் நிபுணத்துவம்தான் அவரை அங்கு பலருக்கும் தெரிந்த ஒருவராக மாற்றியது. சரியான அளவுகளில், சிறிய அளவுகளில் அறுவடைத் திருவிழாக்களை, மதச் சடங்குகளை, தேன் எடுக்கும் முறைகள் மற்றும் நீலகிரியின் பழங்குடியினரின் பிரத்யேகமான பழக்கங்கள் ஆகியவற்றை மையமாக வைத்து ஓவியங்கள் வரைந்து வண்ணம் தீட்டுகிறார்.
காட்டுக்குள் இவரைச் சந்தித்தோம். தேயிலைத் தோட்டங்கள் மற்றும் பலாத் தோட்டங்களுக்கு மேல் அமைந்திருக்கும் இடத்தில் இரண்டு மணி நேர மலையேற்றத்துக்குப் பிறகு அந்த சந்திப்பு நிகழ்ந்தது. மலைவழிப்பாதையில் ஹேர்பின் வளைவைச் சுற்றி, என்னோடு வந்த இருவரும், நானும் சூரிய ஒளி ஊடாக கிருஷ்ணாவின் வசிப்பிடத்தை அடைந்தோம்.
நான் தகவல் தெரிவிக்காமல் தீடிரென வந்ததைக் குறித்து எந்த முகச்சுளிப்பும் இல்லாமல், அவர் செய்யும் விஷயங்களைக் குறித்து விளக்கத் தொடங்கினார். ஆரஞ்சு நிறத்திலான ஒரு கோப்புறையில் இருந்து மஞ்சள் பையில் வைத்திருந்த பல செய்தித்தாள் பிரசுரங்களையும், புகைப்படங்களையும், அவரது கலைப் படைப்புகளில் சிலவற்றையும் எடுத்துக் காண்பித்தார். அவருடன் இந்த விஷயங்களை எப்போதும் எடுத்துச் செல்கிறார், அதை பற்றி யாரும் கேட்க கூடும் என்று எதிர்பார்ப்பு இருக்க கூடும்.
”ஒருமுறை, மாவட்ட ஆட்சியருக்கு இந்த ஓவியங்கள் பிடித்து அவர் என்னிடம் வாங்கிச் சென்றார்” என்கிறார் 41 வயதான கிருஷ்ணா, படகா மொழியில். அது அவருக்கு மிகவும் பெருமிதமான தருணம் என்று நினைவுகூர்கிறார்.
பழங்குடியின கலைஞர்களில் மிகக் குறைவாக இருக்கும் ஓவியர்களில் அவரும் ஒருவர். வெள்ளரிக்கோம்பையிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் எழுத்துப்பாறையில் இருக்கும் சிறந்த ஓவியம் தங்கள் மூதாதையர்களால் வரையப்பட்டது என்று பல குறும்பர்கள் நம்புகிறார்கள். அந்த தொன்மையான இடமும், ஓவியமும் 3000 வருடங்களுக்கு முந்தையாக கூறப்படுகிறது. ”இதற்கு முன்பாக, காட்டுக்குள் எழுத்துப்பாறையில் தான் நாங்கள் வசித்தோம். குறும்பர்களிடம் மட்டுமே இந்த வகை ஓவியங்களை நீங்கள் காணமுடியும்” என்றார் கிருஷ்ணா.
உள்ளூர் கோவில்களை அலங்கரிக்கும் வேலைகளை கிருஷ்ணாவின் தாத்தா செய்து வந்திருக்கிறார். கிருஷ்ணா அவருடைய ஐந்து வயதிலேயே ஓவியங்களை தன் தாத்தாவிடமிருந்து கற்றுக்கொள்ளத் தொடங்கியிருக்கிறார். இன்று, சில திருத்தங்களுடன் அவருடைய தாத்தாவின் பாரம்பரியத்தை அவரும் தொடர்கிறார். அவருடைய மூதாதையர்கள் குச்சிகள் மூலமாக பாறைகளில் வரைந்து வண்ணம் தீட்டியிருக்கிறார்கள். கிருஷ்ணா காகிதங்களிலும், கேன்வாஸிலும் தூரிகைகளைக் கொண்டு வரைகிறார். இயற்கையான வண்ணங்களையும், வீட்டில் தயாரிக்கப்பட்ட சாயங்களையும் கொண்டு வண்ணம் தீட்டுகிறார். இந்த வண்ணம் வெளியில் கிடைக்கும் கெமிக்கல் வண்ணச்சாயங்களை விடவும், மிகுந்த அழகான வண்ணத்தைக் கொடுக்கும் என நம்மிடம் தெரிவிக்கிறார் மொழிபெயர்த்துச் சொல்லும் நபர்.
தேன் மற்றும் உள்ளூர் கைவினைப் பொருட்கள் ஆகியவற்றை விற்பனை செய்யும் கோத்தகிரியைச் சேர்ந்த லாஸ்ட் ஃபாரஸ்ட் என்னும் பரிசுக் கடையில், கிருஷ்ணாவின் 8x10 அசலான ஓவியங்கள் 300 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு நாளைக்கு இரண்டு ஓவியங்களைத் தீட்டுவதாகச் சொல்லும் கிருஷ்ணா, ஒரு வாரத்துக்கு 5 – 10 ஓவியங்கள் வரை விற்பனை செய்கிறார். அழைப்பு அட்டைகள், புக்மார்க்குகள் ஆகியவற்றையும் செய்யும் கிருஷ்ணா, சில நேரங்களில் உள்ளூரில் சில வீடுகளுக்கும், வணிகப்பகுதிகளுக்கும் சென்று அலங்கரித்துக்கொடுக்கிறார். குறும்பர் இனக் குழந்தைகளுக்கு அவ்வப்போது கலை வகுப்புகளும் எடுக்கிறார். ஒரு மாதத்துக்கு 10000 – 15000 வரை இதன் மூலமாக சம்பாதிக்கிறார் கிருஷ்ணா.
குறிப்பிட்ட பருவநிலைக் காலத்தின்போது, தேன் எடுக்கச் செல்லும் நபர்களுடன் இணைந்தும் வேலைக்குச் செல்கிறார் அதில் அவருக்கு மாதம் 1500 முதல் 2000 ரூபாய் வரை கிடைக்கிரறது. நிலத்தில் இருந்து சில நூறு அடிகளுக்கும் மேலாக இருந்து, தேன்கூடுகளுக்கு புகைபோட்டு கொஞ்சம் கொஞ்சமாக தங்க நிறத் தேனைச் சேமிக்கும் பணியைச் செய்கிறார். இதுபோன்ற வேலைகளின்போது, விபத்தில் சிக்கி சிலர் அரிதாக இறந்துவிடுவதும் உண்டு. மிகவும் மோசமான ஒரு நினைவாக, தேனெடுக்க அமைக்கப்பட்ட முகாமிலிருந்து ஒருவர் தவறுதலாக விபத்தைச் சந்தித்து இறந்ததை நினைவு கூர்கிறார். அவர்களின் சக நண்பன் மறைந்ததன் நினைவாக, தேன் எடுக்கச் செல்லும் அந்தக் குழு இப்போது அந்த இடத்திற்குச் செல்வதில்லை. தேன் எடுக்கச்செல்லும்போது ஏற்பட்ட கெட்ட அனுபவமாக சொல்லும் கிருஷ்ணா , அவரது மூக்கில் தேனீக்கள் கொட்டியதையும், மோசமாகாமல் தப்பித்ததையும் சொல்கிறார்.
நாங்கள் புறப்படுவதற்கு முன்பாக, வெள்ளரிக்கோம்பையில் இருக்கும் அவரது வீட்டுக்குச் செல்லும் வழியைச் சொல்லியதுடன் எங்களை அவரின் வீட்டுக்கு வருகை தருமாறும் அழைப்பு விடுத்தார். சில மணிநேரங்களுக்குப் பிறகு அங்கு சென்றோம். அவரது மனைவி சுசீலா மிகுந்த அன்பாக வரவேற்றார். எங்களின் வருகையால் கிருஷ்ணாவின் இரண்டு வயது கீதா மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார்.
இயற்கையான வண்ணங்களில் வரைந்த அவரது ஓவியங்களை மிகவும் உற்சாகத்துடன் எங்களிடம் காட்டினார் கிருஷ்ணா மனைவி சுசீலா. காட்டில் கிடைக்கும் பொருட்களில் இருந்து இந்த இயற்கை வண்ணங்கள் தயாரிக்கப்படுவதாகச் சொன்னார். கட்டேகடா இலைகளில் இருந்து பச்சை நிறமும், வேங்கை மரத்தில் இருந்து பல்வேறு விதமான பழுப்பு இயற்கைச் சாயமும், கரிமரத்தின் தண்டுப்பகுதியில் இருந்து கருப்பு நிறமும், களிமண்ணிலிருந்து மஞ்சள் நிறமும், புரிமண்ணிலிருந்து பளிச்சென்ற வெண்மை நிறமும் பெறுவதாகச் சொன்ன சுசீலா, இந்த கலைப் படைப்புகளுக்கு அது சேர்க்கும் பிரத்யேகமான மண்சார்ந்த பரிமாணத்தையும் விளக்கினார். குறும்பர் ஓவியங்களில் சிகப்பு நிறத்தையும், நீல நிறத்தையும் பார்ப்பது அரிது.
குறும்பர் கலையான இந்த ஓவியங்களும், வண்ணம் தீட்டுதலும் தலைமுறைகள் கடந்தும் தொடரவேண்டும் என விரும்புகிறார் கிருஷ்ணா. அவரைப் பொறுத்த வரையில், ஓவியம் தீட்டுவதென்பது ஒரு விருப்பம் மட்டுமல்ல. குறும்பர் பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் ஒரு விஷயமாக அதைக் கருதுகிறார். இந்தக் கலை அழிந்து போகாமல் இருப்பதற்கானதாக அதைப் பார்க்கிறார். இளம் ஓவியக் கலைஞர்களுக்கு என்ன அறிவுரை கூற விரும்புகிறீர்கள் எனக் கேட்டபோது, “பல்கலைக்கழகங்களுக்குச் செல்லுங்கள். ஆனால் பாரம்பரியத்தை மறந்துவிடாதீர்கள். துரித உணவுகள் உடலுக்கு நல்லதல்ல. மூதாதையர் சாப்பிட்ட உணவைச் சாப்பிடுங்கள். ஓவியங்கள் வரைந்து வண்ணம் தீட்டுவதையும், தேன் சேகரிப்பதையும் தொடருங்கள்… காட்டிலேயே எல்லா மருந்துகளும் கிடைக்கின்றன” என்றார்.
பழமைக்கும் புதுமைக்கும் இடைப்பட்ட ஒன்றில் கவனமாக இருக்கிறார் கிருஷ்ணா. நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே அவரது செல்ஃபோன் ஒலித்தது. மும்பை இரவுகிளப்புகளில் ஒலிக்கும் இசையைப் போன்ற ஒலியுடன் இருந்தது அந்த செல்ஃபோனின் இசை. நாங்கள் அனைவரும் ஒரு நிமிடம் சிரித்துவிட்டு நேர்காணலைத் தொடர்ந்தோம். ஆனால், ஒரு நிமிடம் அந்த மலைப்பகுதியின் அமைதி காணாமல் போனது.
லாஸ்ட் ஃபாரஸ்ட் விற்பனையகத்தைச் சேர்ந்த மார்க்கெட்டிங் பணியாளர் சரவணன் ராஜனுக்கும், நீலகிரியைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளருக்கும் நன்றி. கோத்தகிரியில் நான் தங்குவதற்கு, மக்களைச் சந்திப்பதற்கும் உதவியாக இருந்த லாஸ்ட் ஃபாரஸ்ட் விற்பனையகத்தைச் சேர்ந்த ஏ.ஐ.எஃப் க்ளிண்டன் பணியாளரான ஆட்ரா பாஸுக்கும் நன்றிகள் பல.
தமிழில்:: குணவதி