தமிழகத்தில் உள்ள இந்த சிறிய நகரம் நாட்டில் உள்ள மற்ற எந்த நகரங்களை விடவும் ஆழமான உறவு கொண்டுள்ளது. இந்தப்பகுதிச் சார்ந்த இயந்திரங்கள் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் (மற்றும் பல ஆப்பிரிக்க நாடுகளிலும் கூட) மிக ஆழமான தொலைவு வரை ஆழ்துளையிடக்கூடியதாக உள்ளது. திருச்செங்கோடு தேசத்தின் போர்வெல் ஆழ்துளைக் குழி தோண்டும் இயந்திரத்தின் தலைநகராகும். இந்தப் பகுதியைச் சார்ந்த ஆயிரக்கணக்கான இயந்திரங்களும், இயந்திரத்தை இயக்குபவர்களும் வருடத்தின் பெரும்பாலான மாதங்களில் எந்த நாளும் 1,400 அடிக்கும் அதிகாகவே ஆழ்துளைக் குழி தோண்டுபவர்களாக உள்ளனர். சமீபத்திய ஆண்டுகளில் அவர்களுக்கு அதிகளவிலான பொருளாதார வாய்ப்புகளை வழங்கக்கூடிய உள்ள மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் பருவமழையின் காரணமாக இவர்களது வேலைகளானது தடைபட்டுள்ளது. ஆனாலும், நாட்டின் பிற பகுதிகளில் அவர்களது பணி தொடர்ந்து தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் நீர் நெருக்கடி என்பது கோடைக்காலங்களில் தான் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டின்[2013] முதல் மூன்று மாதங்களில் மட்டும் மரத்வாடா பகுதியில் ஆயிரக்கணக்கான போர்வெல்கள் தோண்டப்பட்டுள்ளன. இந்தப் பகுதியில் உள்ள வயல்களில் ஆழ்துளைக் கிணறுகள் துளையிடும் இயந்திரங்கள் இணைக்கப்பட்ட வண்டிகள் எங்கும் நிறைந்துள்ளது. மேலும், ஊரகப் பகுதிகளில் தண்ணீர் கிடைக்கவில்லை என்றால் கடன் பெறுவதற்கு போர்வெல் என்பது மிகமுக்கியமான ஆதாரமாகும். அந்தப் பகுதியில் உள்ள சாலைகளில் நாங்கள் பார்த்த பெரும்பான்மையான போர்வெல் வாகனங்கள் தமிழகத்தைச் சேர்ந்ததாகவே இருந்தது.(சில ஆந்திர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவையாக இருந்தது). இதுகுறித்து தி இந்து பத்திரிகைக்கு பேட்டியளித்த மகாராஷ்டிரா மாநில அரசின் மூத்த புவியலாளர், “பெரும்பாலும் அவர்கள் ஒரே நகரத்தைச் சேர்ந்தவர்களாக தெரிகிறது” என்று கூறியுள்ளார்.அந்த நகரம், தமிழ்நாட்டிலுள்ள நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த திருச்செங்கோடு பகுதியாகும்.
“நான் மகாராஷ்டிர மாநிலத்தின் நன்டெட் பகுதிக்கு மிகஅருகாமையில் உள்ள கிராமத்தில் இந்த வருடத்தில் நான்கு மாதங்கள் தங்கியிருந்தேன்” என்று திருச்செங்கோட்டு பகுதியைச் சார்ந்த ஸ்ரீ பாலமுருகன் போர்வெல்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த சி. வையாபுரி கூறினார். அவர் திறன் வாய்ந்த, கடினமாக உழைக்கக்கூடிய ஆழ்துளையிடும் இயந்திரம் இயக்குபவர். இந்த நான்கு மாதங்களில், இந்த ஒரே ஒரு இயந்திரம் இயக்குபவர் மகாராஷ்டிரா பகுதியில் சுமார் 500 ஆழ்துளைக் கிணறுகளைத் தோண்டியுள்ளார். பெரும்பாலானவை மரத்வாடா பகுதியின் நீர் பிரச்சனை உள்ள பகுதிகளில் தோண்டப்பட்டுள்ளது. “ஒரு நாளைக்கு 1,300 அடி வரை தோண்ட முடியும். ஒருவேளை மண் இறுக்கமாக இல்லை என்றால், எளிதாக தோண்டி விட முடியும். அதாவது 300 அடிக்கு உள்ளாகவே நிலத்தடி நீர் கிடைத்து விட்டால் ஒரு நாளைக்கு நான்கு கிணறுகள் கூட தோண்டி விட முடியும். ஒருவேளை தரைப்பகுதி கடினமாக இருந்தால் ஒருநாளைக்கு 1000 அடிகளைத் தாண்டி உங்களால் செல்ல முடியாது” என்று கூறினார்.
ஆழ்துளையிடும் இயந்திரங்கள் இணைக்கப்பட்ட வாகனத்திற்கு துணையாக கருவிகள் மற்றும் ஆட்களைக் கொண்ட மற்றொரு வாகனமும் உள்ளது. மேலும், இந்தப் பணிகளைச் செய்யும் குழுவானது ஒரு மேலாளர், இரண்டு டிரில்லர்கள், இரண்டு உதவியாளர்கள், இரண்டு ஓட்டுனர்கள், ஒரு சமையல்காரர் மற்றும் 12 பிற பணியாளர்கள் என மொத்தமாக மொத்தமாக 20 பேர் வரை கொண்டிருக்கலாம். இந்தத் தொழிலாளர்கள் திருச்செங்கோட்டிற்கு பரந்துபட்ட இந்திய அளவிலான புதிய பரிணாமத்தைக் கொண்டு வருகிறார்கள். தமிழகத்தைச் சேர்ந்த ஆழ்துளையிடும் இயந்திரங்கள் இயக்குபவர்களுக்கு ஒவ்வொரு மாநிலத்திலும் தரகர்கள் உள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த சில பணியாளர்களைத் தவிர்த்து பெரும்பாலும் பீகார், ஜார்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் பகுதியைச் சேர்ந்தவர்களே இதில் பணிபுரிகின்றனர். மேலும், இந்தப் பணியின் வழியாக வருடத்தின் பல மாதங்களுக்கு நாளொன்றுக்கு 200 ரூபாய் சம்பளமும், மூன்று வேளை உணவும் நிலையாக கிடைக்கின்றது.
மேலும், இது கடினமான பணி என்பதால்,பணி எவ்வளவு கடினமானது என்பதைப் பொறுத்து சம்பளம் வேறுபடுகிறது. ஆந்திராவின் சில கடினமான தரைபரப்புக் கொண்ட பகுதிகளில், மணிக்கு 80 அடியைத் தாண்டி ஆழ்துளையிட முடியாது. அங்கு அடிக்கு 75 ரூபாய் பெறப்படுகிறது. எனவே, ஒரு நாளைக்கு 1000 அடி ஆழ்துளையிட்டால் அதன் வழியாக 75,000 ருபாய் கிடைத்து வருகிறது. இதுவே வையாபுரி கூறியதைப் போன்று “இறுகிய மண்ணாக” இல்லாது இருந்தால் எளிதாக, மணிக்கு 120 அடிவரை துளையிட முடியும். எனவே, இதற்கான விலை அடிக்கு 56 ரூபாயாக சரிவை சந்தித்துள்ளது. எனினும்,இந்தப்பகுதியிலும் ஒருநாளைக்கு 1,300 அடி ஆழத்திற்கு ஆழ்துளைக் கிணறு தோண்டினால் ஏறத்தாழ 73,000 ரூபாய் வரை கிடைத்து விடுகிறது. ஏன் குறைந்தபட்சம் வருடத்தின் 200 நாட்களுக்கு (இது பெரும்பாலும் அதிகம்)வேலை கிடைத்தாலும், மொத்தமாக சுமார் 1.5 கோடி வரை கிடைகின்றது.
திருச்செங்கோடு நகரிலும்,தாலுக்காவிலும் எத்தனை ஆழ்துளைக் கிணறு தோண்டும் இயந்திரங்கள் உள்ளன? 5,000க்கும் குறைவாகவே இருக்கும், என ஆழ்துளைக் கிணறு தோண்டும் நிறுவனங்களில் முன்னணி நிறுவனமான பி.ஆர்.டியின் நிர்வாக இயக்குநர் டி.டி.பரந்தாமன் தெரிவித்தார். ஏறத்தாழ 7,000 இருக்குமென்று, திருச்செங்கோடு லாரி உரிமையாளர் சங்கத்தின் தலைவரும்,ஆழ்துளைக் கிணறு தோண்டும் இயந்திரத்தின் உரிமையாளருமான என்.பி.வேலு குறிப்பிட்டார். 20,000 வரை இருக்கக்கூடுமென்று பிற ஆழ்துளைக் கிணறு தோண்டும் இயந்திரத்தின் உரிமையாளர்கள் கூறினர். இது மூன்று வெவ்வேறு அளவுகளில் சரியே. இதுகுறித்து இத்துறையில் மிகுந்த அனுபவமிக்க ஒருவர் கூறுகையில்: “இந்தப் பகுதியில் எண்ணற்ற உரிமையாளர்களும், ஆழ்துளைக் கிணறு தோண்டும் இயந்திரங்களும் உள்ளன. ஆனால், வரிவிதிப்பின் காரணமாக பல ஆழ்துளைக் கிணறு தோண்டும் இயந்திரங்கள் வெளி மாநிலங்களில் பதியப்பட்டுள்ளது”.என்று குறிப்பிட்டார்.
இதேவேளையில், ஆழ்துளைக் கிணறு தோண்டும் இயந்திரத்தின் பணியானது பழுது பார்ப்பதற்காக வருடத்தில் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் ஓய்வு எடுத்துப்படுகிறது. அப்போது, ஆழ்துளைக் கிணறு தோண்டும் இயந்திரங்களை இயக்குபவர்கள் ராஜஸ்தானின் கிராமப்புற பகுதிகள் போன்று வெகுதொலைவிலிருந்து திரும்புகின்றனர். ஏன் ஒரு ஆழ்துளைக் கிணறு தோண்டும் இயந்திரம் ஜம்மு பகுதியில் கூட ஆழ்துளைக் கிணறு தோண்டியுள்ளது. ஓய்வு எடுத்துக்கொள்ளும் காலமென்பது பெரும்பாலும் மழைப் பொழியும் மாதங்களே ஆகும்.
சராசரி போர்வெல்லின் ஆழம் என்பது ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுபடக்கூடியது, என்றார் வேலு. மேற்கொண்டு, “கர்நாடக மாநிலத்தின் போர்வெல்லின் சராசரி ஏறத்தாழ 1,400 அடி. தமிழ்நாட்டில் இதை விடக் கொஞ்சம் குறைவு. இது 1970களில் ஏற்பட்ட வறட்சியிலிருந்து தொடங்கியது” எனக் கூறினார். இந்த போர்வெல் துறையில் வாய்ப்பினை உணர்ந்த விவசாயிகள் மற்றும் தூர்ந்துபோன கிணறுகளை தூர்வாரும் பணிபுரிந்த தொழிலாளர்களும், பணம் திரட்டி சில ஆழ்துளைக் கிணறுத் தோண்டும் இயந்திரங்களை வாங்கியுள்ளனர்.( தற்போதும் கூட, இங்குள்ள மூன்றில் ஒரு பங்கு இயந்திரங்கள் இதுபோன்ற குழுக்களுக்கு சொந்தமாகும்)
“அந்தக் காலகட்டத்தில், நிலத்தடி நீர்மட்டத்தின் ஆழம் என்பது 100-200 அடிக்கும் அதிகமாக இல்லை. அதிகபட்சமாக 300. ஆனால், கடந்த ஐந்தாண்டுகளில் நிலத்தடி நீர் மட்டம் கணிசமாகக் குறைந்து ஆழ்துளைக் கிணறின் ஆழம் அதிகரித்துள்ளது”. என்று வேலு குறிப்பிட்டார்.
திருச்செங்கோடு பகுதியிலுள்ள ஆழ்துளை கிணறு தோண்டும் இயந்திரங்களை இயக்குபவர்களின் இந்தக் கதை இக்கட்டான நிலையை வெளிப்படுத்துவதாக உள்ளது. இந்த வேலையின் வழியாக திருச்செங்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செழிப்பையும், வேலைவாய்ப்பையும் தந்துள்ளது. இதேபோன்று, 1970 ஆம் ஆண்டுகளில் ஒன்றிணைந்து ஆழ்துளை கிணறு தோண்டும் இயந்திரங்களை வாங்கிய பள்ளிப்படிப்பைப் பெறாத தொழிலாளர்களும் கூட, இதில் உழைத்து தங்கள் வறுமையில் இருந்து வெளிவந்துள்ளனர்.(கோயம்புத்தூர்,கரூர்,திருப்பூர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய தமிழகத்தின் இந்தப் பகுதி முழுமையும் அடிமட்டத்திலிருந்து தொழில்முனைவோர்களாக மாறிய ஆச்சரியப்படத்தக்க வரலாறாக மாறியுள்ளது). மேலும், இங்குள்ள ஆழ்துளை கிணறு தோண்டும் இயந்திரங்களை இயக்குபவர்கள் நாடுமுழுவதும் உள்ள விவசாயிகளின் மெய்யான கோரிக்கைகளுக்கு செவிமடுத்துள்ளனர். அவை விரக்தியால் எழுந்த கோரிக்கைகளாகும்.
ஆனால், இந்த நடைமுறையின் காரணமாக, நிலத்தடி நீர் மோசமான விளைவுகளைச் சந்தித்துள்ளது. ஆழ்துளைக் கிணறுகளின் காரணமாக பரவலான நிலத்தடி நீர் சுரண்டலால் நிலத்தடி நீர் மட்டம் நாடுமுழுதும் மிகப்பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. மரத்வாடா பகுதியில் இதுகுறித்து தெரிவித்த ஒஸ்மானாபாத் மாவட்ட ஆட்சியர், இம்மாவட்டத்தின் நிலத்தடி நீர் மட்டமானதுஇந்த வருடம் மார்ச் மாதம்[2013] அதன் ஐந்து வருட சராசரியை விட ஐந்து மீட்டர் குறைவாக உள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஒருவேளை தமிழகத்தின் ஒருபகுதியைச் சார்ந்த 10,000 ஆழ்துளை கிணறு தோண்டும் இயந்திரங்கள் இந்திய முழுதும் நாளொன்றுக்கு 1,000 அடி தோண்டினால், அது ஒட்டுமொத்தமாக 10 மில்லியன் அடியாகும். இதை குறைந்தபட்சம் வருடத்தில் 200 நாட்கள் செய்தாலும் கூட அது 2 பில்லியன் அடியாகும். தோல்வியடைந்த கிணறுகளின் விகிதம் அதிகளவில் இருப்பினும்,இதுபோன்று எண்ணற்ற ஆழ்துளைக் கிணறுகள் தோண்டப்படுவதால் அதிகளவிலான நிலத்தடி நீர் உறிஞ்சப்படுகிறது.
திருச்செங்கோட்டைச் சேர்ந்த ஆழ்துளைக் கிணறு தோண்டும் நிறுவனங்கள் இந்தப் பணியை நாட்டின் வளர்சிக்கான பாதையாக தேர்ந்தெடுக்கவில்லை, இதற்காக அவர்களை குறை சொல்லவும் முடியாது. தற்போது நிலவும் அதிகப்படியான நிலத்தடி நீர் சுரண்டலின் காலகட்டத்தை அவர்கள் திணிக்கவில்லை. இந்தியாவில் இதுபோன்ற பிற நிறுவனங்கள் இருப்பினும், அவர்கள் இதில் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். ஆழ்துளைக் கிணறு தோண்டும் கருவிகளுக்கு வேறு பயன்பாடுகள் இருப்பினும், போர்வெல்களுக்கு தான் அதிக தேவை இருக்கிறது. இந்த தேவையின் பெருக்கம் என்பது பேரிடரை உணர்த்தும் குறியீடாக உள்ளது.(இந்தியாவில் நிலத்தடி நீர் மூன்றில் இரண்டு பங்கு பாசன நீருக்கும், ஐந்தில் ஒரு நான்கு பங்கு குடிநீருக்கும் பயன்படுகிறது. இந்த நடைமுறையின் மீதான சமூக கட்டுப்பாடு என்பது
ஏன் உங்கள் சுற்றத்தில் சில குறைவான ஆழ்துளை இயந்திரங்கள் இயங்கிக்கொண்டு இருக்கின்றன என்று திருச்செங்கோட்டை சார்ந்த அனுபவமிக்க ஒருவரிடம் கேட்டபோது, “தற்போது இங்கு அளவிலான நீர் கிடைப்பது இல்லை, ஈரோடு பகுதியில் தற்போது 1,400 அடியை நெருங்கிக்கொண்டு இருக்கிறோம் என அவர் கூறினார்.
இக்கட்டுரை முதன்முறையாக ஜூலை, 28, 2013 அன்று தி இந்து நாளிதழில் வெளியாகியது.
வாசிக்க: மீதமுள்ள பாதியும் வறண்டது எப்படி
இந்தக் கட்டுரை ஒரு தொடரின் ஒரு பகுதியாகும். இந்தக் கட்டுரைக்காக கடந்த 2014 ஆம் ஆண்டு பி. சாய்நாத் உலக ஊடக உச்சி மாநாட்டில் உலகளாவிய சிறப்பு விருதினைப் பெற்றார்.
தமிழில்: பிரதீப் இளங்கோவன்