யானைகளின் காலடித் தடங்களைத் தேடி, குன்றுகளையும் வயல்களையும் சுற்றி நடந்து கொண்டிருக்கிறோம்.
மென்மையான மண்ணில் ஆழமாகப் பதிந்த யானைகளின் பெரும் காலடித் தடங்கள் எங்கும் தென்படுகின்றன. பழைய காலடித்தடங்களின் சுவடுகள் மெல்ல உதிர்ந்து கொண்டிருக்கின்றன. சாவகாசமாக நடந்து, வயிறு நிறைய உணவை உண்டுவிட்டு, லத்திகளைப் போட்டு விட்டுச் சென்ற யானைகளின் புதிய தடங்களும் தென்படுகின்றன. இந்தப் பயணத்தின் மிச்சமாக யானைகள் உடைத்துத் தூக்கி வீசிய கல் தூண்கள், மின் வேலிகள், மரங்கள், பண்ணை வாயில்கள் எனச் சிதைவுகள் எங்கும் தென்படுகின்றன.
யானைகள் தொடர்பான எல்லாவற்றையும் படம் பிடிக்கிறோம். யானைகளின் கால் தடப் புகைப்படமொன்றை என் ஆசிரியருக்கு அனுப்புகிறேன். `அருகில் யானை இருந்ததா?`, என நம்பிக்கையோடு விசாரித்து மறுமொழி அனுப்புகிறார். அவரது நம்பிக்கை நாசமாகப் போகட்டும் எனப் பிரார்த்திக் கொள்கிறேன்.
ஏனெனில், நாங்கள் தேடிப் போன யானைகள், உங்கள் தலையைத் தொட்டு ஆசீர்வதித்து வாழைப்பழம் பெற்றுக் கொள்ளும் கோவில் யானைகளல்ல. பசி வெறியுடன் திரிந்து கொண்டிருக்கும் காட்டு யானைகள். சிக்கினால் சிதைந்து விடுவீர்கள் எனக் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் கங்கனஹள்ளி கிராம மக்கள் எச்சரித்து இருந்தார்கள்
2021 ஆம் ஆண்டு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ராகி உற்பத்தியாளர்களைச் சந்திக்க நான் மேற்கொண்ட பயணம், எதிர்பாராத விதமாக, என்னைக் காட்டு யானைகளின் வழியில் கொண்டு போய் நிறுத்தியது. ராகி உற்பத்தியின் பொருளாதாரத்தைப் பற்றிய உரையாடல்கள் இருக்கும் என எண்ணியே அங்கு சென்றேன்.. கொஞ்சம் இருந்தது. ஆனால் அதைத் தாண்டி, அனைத்து ராகி உற்பத்தியாளர்களும், பெரும்பாலும் யானைகளின் தொந்தரவைப் பற்றியே பேசினார்கள். அடிப்படை உணவுத் தேவையைத் தாண்டி ராகியை உற்பத்தி செய்யாமல் இருப்பதற்கு யானைகளே காரணம் எனச் சொன்னார்கள். சூழல் மாற்றம், பருவம் தவறிப் பெய்த மழை, குறைந்த சந்தை விலை என – சந்திக்கக் கூடாத எல்லா பிரச்சினைகளையும் சந்தித்த சோகத்தில் அவர்கள் இருந்தார்கள். அனைத்துக்கும் மேலான பெரும் பிரச்சினையாக அவர்கள் பயிர்களைச் சூறையாடும் காட்டு யானைகள் அவர்களின் நம்பிக்கையைச் சிதைத்து விட்டிருப்பதை உணர முடிந்தது.
`காட்டு யானைகள் புத்திசாலிகள். மின்வேலிகளை மின்சாரம் தாக்காமல் வளைத்துத் தாண்டிவிடும் யுத்தியைக் கற்றுக் கொண்டுவிட்டன. மரங்களை உபயோகித்து மின்வேலிகளை ஷார்ட் சர்க்யூட் செய்யும் தந்திரம் அறிந்தவை. அவை எப்போதுமே ஒரு கூட்டமாகத் தான் வரும்`, என்கிறார் ஆனந்தராமு ரெட்டி. ஆனந்தா என அழைக்கப்படும் அவர் தேன்கனிக்கோட்டை தாலூக்காவில் உள்ள வத்ரா பாளையம் கிராமத்தைச் சேர்ந்த உழவர் . அவர் எங்களை மேலகிரி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியின் எல்லை வரை அழைத்துச் சென்றார். மேலகிரி, காவிரி வடக்கு வனவிலங்குச் சரணாலயத்தின் ஒரு பகுதியாகும்.
யானைகள், காட்டை விட்டு வெளியே வந்து வயல்களைச் சூறையாடுதல் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. யானைகள் கூட்டமாக வயல்வெளிகளில் இறங்கி, ராகிப் பயிரை உண்டு, உண்டதை விடப் பலமடங்கை நாசமாக்கிவிட்டுச் செல்கின்றன. இதனால் உழவர்கள் தக்காளி, சாமந்தி, ரோஜா என மாற்றுப் பயிர்களுக்கு மாற வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகியிருக்கிறார்கள். யானைகள் சாப்பிடாத, சந்தை மதிப்புள்ள பயிர்களை மட்டுமே அவர்கள் இப்போது பயிர் செய்கிறார்கள். `2018-19 முதல் மின்சார வேலிகள் வந்து விட்டன. அதன் பின்னர், யானைக் கூட்டம் வருவது குறைந்து விட்டது. ஆனாலும், பசியோடு காட்டை விட்டு வெளியே வரும் மொட்ட வால், மக்கனா கிரி போன்ற ஆண் யானைகளை எவற்றாலும் தடுக்க முடிவதில்லை`, என்கிறார் ஆனந்தா.
`யானை-மனித மோதல்களுக்கு முக்கியக் காரணம், காடுகளின் தர வீழ்ச்சி`, என்கிறார் தர்மபுரி-கிருஷ்ணகிரி மாவட்ட வனவிலங்குக் காப்பகத்தின் கௌரவ வார்டனான எஸ்.ஆர்.சஞ்ஜீவ் குமார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் 330 கிராமங்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன என்பது அவரது கணிப்பு
சஞ்ஜீவ் குமார், கென்னத் ஆண்டர்சன் இயற்கைக் குழுமம் (Kenneth Anderson Nature Society – KANS) என்னும் தன்னார்வ நிறுவனத்தை உருவாக்கியவர்களுள் ஒருவர். அதன் தலைவராக இருந்தவர். யானை-மனித மோதலைப் பற்றிய ஒரு ப்ரசெண்டேஷனை, என்னுடன் ஒரு ஜூம் காணொளியில் பகிர்ந்து கொண்டார். அவர் பகிர்ந்த ஒரு ஸ்லைடில் இருந்த படத்தில், வனப்பகுதிகளில் பாதிக்க்கப்பட்ட கிராமங்கள் சிறு யானை வடிவக் கறுப்புப் புள்ளிகளால் குறிக்கப்பட்டிருந்தன. முதல் பார்வையில், நம்மைத் திகைக்க வைக்கிறது அந்தப் படம். `இந்தப் படம், யானைகளால் நாசம் செய்யப்பட்ட பயிருக்கு நஷ்ட ஈடு கேட்ட கிராமங்களின் புள்ளிவிவரங்களைக் கொண்டு உருவாக்கப் பட்டது`, என விளக்குகிறார்.
வடகிழக்குப் பருவமழை முடிந்து, ராகிப் பயிர் அறுவடைக்குத் தயாராகும் பொழுதில்தான் யானைகள் பெரும்பாலும் தாக்குகின்றன. டிசம்பர்- ஜனவரி மாதங்களில், இதனால், 12-13 பேர் சராசரியாக இறந்து போகிறார்கள். யானைகளும் இறக்கின்றன. ரயில்வே லைன்களை, நெடுஞ்சாலைகளைக் கடக்கையில் விபத்துக்குள்ளாகி இறக்கின்றன. கிணற்றில் விழுந்து இறந்து போகின்றன. காட்டுப் பன்றிகளைத் தடுக்க அமைக்கப்பட்டுள்ள மின்சார வேலிகளில் மின் தாக்குதலுக்குள்ளாகி இறக்கின்றன.
யானைகள் 100 க்கும் அதிகமான பயிர்களை உண்கின்றன. சில பயிர்களை முழுவதுமாக உண்கின்றன. காய்கள் கனிகள் என பலவிதமான பாகங்களையும் உண்கின்றன. `கிட்டத்தட்ட 200 கிலோ உணவும், 200 லிட்டர் நீரும் யானைகளுக்கு ஒரு நாளைய தேவை என்பதை, நாம் பழக்கப்படுத்தி வைத்திருக்கும் யானைகளைக் கவனித்ததில் அறிந்து கொண்டது`. ஆனால், காடுகளில், உணவு எப்போதும் சீராகக் கிடைப்பதில்லை. யானைகளின் உடல்நிலையும் தேவைகளும் அதற்கேற்ப மாறுகின்றன.
`Lantana Camara’, லாண்டனா என்னும் ஒருவகை அடர்ந்து படரும் பூக்கும் தாவரம், ஓசூர் பகுதிக் காடுகளில் 85-90% அடைத்துக் கொண்டு விட்டது. இது வறட்சியைத் தாங்கி வளரக் கூடிய தாவரம்.. ஆடுமாடுகள் உண்பதில்லை.. விரைவில் படரும் தன்மை கொண்டவை. பந்திப்பூர், நகர்ஹோலே வனப்பகுதிகளிலும் இது பெரும் பிரச்சினையாக மாறிவருகிறது. வனச் சுற்றுலா வரும் பகுதிகளில் இவை களையப்பட்டு வைக்கப்படுகின்றன. அப்போதுதான் மேய வரும் யானைகளை சுற்றுலாப் பயணிகள் காண முடியும் என்பதால்`.
யானைகள் காட்டை விட்டு வெளியே வர, இந்தத் தாவரம்தான் முக்கியக் காரணம் என வாதிடுகிறார் சஞ்ஜீவ். ராகியின் சுவை ஒரு கூடுதல் காரணம். நான் யானையாக இருந்தாலும் அதையே செய்வேன் என்கிறார் சஞ்ஜீவ். வேகமாக வளரும் (25 முதல் 35 வயது வரை) ஆண் யானைகள் ஒருவித கட்டாயம் போல, பயிர்களை நாசம் செய்ய வருகின்றன. அதைச் செய்ய எந்த ஆபத்தையும் சந்திக்க அவை தயங்குவதில்லை.
`ஆனால் மொட்ட வால் அப்படியில்லை. மொட்ட வாலுக்கு வயதாகி விட்டது. 45 ஐத் தாண்டிவிட்டது. யானைகளிலேயே அவன் மிக நல்லவன்`, என்கிறார் சஞ்ஜீவ். `அவனுக்கு மதம் பிடித்த ஒரு விடியோவைப் பார்த்திருக்கிறேன். மதம் பிடித்த காலத்தில் (2 முதல் 3 மாதம் வரை), யானைகள் பெரும்பாலும் ஆக்ரோஷமாக இருக்கும். ஆனால், மொட்ட வால் அமைதியாக இருந்தான். அவன் இருக்கும் கூட்டத்தில், பல்வேறு வயதில் யானைகள் இருந்தன. ஆனால், இவன் அமைதியாக, தனியாக நின்று கொண்டிருந்தான். உலகத்தை அறிந்து கொண்டவன்`.
`மொட்ட வால் 9.5 அடி உயரம் இருப்பான். 5 டன் எடை இருக்கும்`, என யூகிக்கிறார் சஞ்ஜீவ். `அவனுக்கு ஒரு நண்பன் இருக்கிறான் – அவன் பேர் மக்கனா.. சில சமயம், அவர்களை விட இளம் ஆண் யானைகளுடன் கூட்டமாகச் சேர்ந்து சுற்றுவார்கள்`. `அவனுக்குப் பிள்ளைகள் இருக்குமா?`, எனக் கேட்கிறேன். `நிறைய இருக்கும்`, எனச் சிரிக்கிறார் சஞ்ஜீவ்.
வயது முதிர்ந்த மொட்ட வால் ஏன் ரிஸ்க் எடுத்து காட்டை விட்டு வந்து, பயிர்களை உண்ன வருகிறது? தனது உடல்நிலையைப் பேணுவதற்கு மொட்ட வாலுக்கு சத்தான உணவு தேவைப்படுகிறது போல எனச் சொல்கிறார். இங்கே ராகி, பலாப்பழம், மாம்பழம் என மிகவும் நல்ல உணவு கிடைக்கிறது. சில ஆண் யானைகள் முட்டைக் கோஸ், பீன்ஸ், காலிஃப்ளவர் என மற்ற பயிர்களையும் உண்கின்றன. ஆனால், அவை யானைகளின் இயல்பான உணவல்ல.. மேலும் அவை பூச்சி மருந்துகள் உதவி கொண்டு பயிர் செய்யப்படுகின்றன என்கிறார் சஞ்ஜீவ்.
`மூணு வருஷம் முன்பு, நிலைமை மிக மோசமாக இருந்தது. அதிக முதலீட்டில் தக்காளி, பீன்ஸ் போன்ற பயிர்களைப் பயிரிட்ட உழவர்கள் பெரும் நஷ்டம் அடைந்தார்கள்.. யானை தின்பது ஒரு பங்கு. அழிப்பது ஐந்து பங்கு`. இதனால், உழவர்கள் யானைகள் உண்ணாத பயிர்களைப் பயிரிடத் தொடங்கிவிட்டார்கள். மொட்ட வாலும் நண்பர்களும், இப்பகுதி விவசாய முறைகளையே மாற்றிவிட்டன.
யானைகள், காட்டை விட்டு வெளியே வந்து வயல்களைச் சூறையாடுதல் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. யானைகள் கூட்டமாக வயல்வெளிகளில் இறங்கி, ராகிப் பயிரை உண்டு
*****
'மொதல்ல கொஞ்சம் நஷ்ட
ஈடாவது கெடச்சிட்டு இருந்துச்சு.. இப்போ அதிகாரிகள் வந்து போட்டோ எடுத்துட்டுப்
போறாங்களே ஒழிய நஷ்ட ஈடு எதும் கிடைக்கறதில்ல`
வினோதம்மா, கங்கனஹள்ளி,
கும்லாபுரம் கிராமம்
மொட்ட வாலை மிக அருகில் நேரில் சந்தித்த சிலரில், கோபி சங்கர சுப்பிரமணியும் ஒருவர். அவர் வீடு, நாங்கள் தங்கியிருந்த கோபகுமார் மேனன் வீட்டில் இருந்து அரை மணி நேரப் பயணத் தொலைவில் உள்ளது. அவர் நவதர்ஷனம் என்னும் ஒரு தன்னார்வ நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
ஒருநாள் காலை, தன் குடிலின் கதவைத் திறந்த அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அவர் எதிர்பார்த்த நண்பருக்குப் பதிலாக, குடிலின் முன் மொட்ட வால் நின்று கொண்டிருந்தது. ஆஜானுபாகுவாக நின்றிருந்த மொட்ட வால், தயக்கத்துடன் உடனே திரும்பிப் போய்விட்டது. மலைக்குன்றுகளை ஒட்டியிருந்த அந்த வீட்டின் வராண்டாவில் அமர்ந்து கொண்டு கோபி நமக்குப் பல கதைகளைச் சொல்கிறார். ராகிப் பயிரைப் பற்றிய கதைகள் சிலவே. யானைகளைப் பற்றிய கதைகளே பெரும்பாலும் அவர் பேச்சில் வருகின்றன.
வான்வெளிப் பொறியியல் படித்த கோபி, தொழில்நுட்பத்தை விட்டுவிட்டு, உணவு உற்பத்தியில் நுழைந்துவிட்டார். நவதர்ஷணம் ட்ரஸ்ட்டின் கீழுள்ள 100 ஏக்கர் நிலத்தில் பயிர் செய்து வாழ்ந்து வருகிறார். கும்லாபுரம் கிராமத்தில் உள்ள கங்கனஹள்ளியை அவரது ட்ரஸ்ட் பாதுகாத்து வருகிறது. உள்ளூர் மக்கள், வருகைதரும் பயணிகள், பயிற்சி பட்டறைகள் எனப் பலவழிகளில் பொருளியல் தன்னிறைவை அடையும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளது. `நாங்கள் பெரும் நிதியாதாரம் கொண்டு பெரும் திட்டங்களை உருவாக்குவதில்லை. எங்களது திட்டங்கள் எளிமையானவை. சிறியவை`. அவர்களுடைய முக்கியமான திட்டங்களில் ஒன்று, உள்ளூர் மக்களுடன் இணைந்து நடத்தும் உணவு உற்பத்திக் கூட்டுறவு. பெரும்பாலும் குறு விவசாயிகளாக இருப்பதால், வருடத்தில் சில மாதங்கள் மட்டுமே விவசாயம் நடக்கிறது. மற்ற காலங்களில், அவர்கள் தங்கள் உணவுக்காக வனப்பகுதியை நம்பியே வாழும் கட்டாயத்தில் இருக்கிறார்கள்.
`கங்கனஹல்லியில் இருக்கும் 30 குடும்பங்களுக்கு, இடம் அளித்து, மதிப்புக் கூட்டும் உணவுப் பொருள் உற்பத்தியில் ஈடுபடப் பயிற்சி அளிக்கிறோம். இதன் மூலம், வாழ்வாதாரம் தேடி அவர்கள் வனத்துக்குள் செல்லும் வாழ்வியல் முறையை மாற்றியிருக்கிறோம்`, என்கிறார் கோபி. ராகி அவர்கள் சொந்தத் தேவைக்காக மட்டுமே முக்கியமாக உற்பத்தி செய்யப்படுகிறது. அதைத் தாண்டிய உபரி மிஞ்சினால் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.
நவதர்ஷன் நிறுவனத்தின் மூலம் கடந்த 12 ஆண்டுகளாக இயங்கிவரும் கோபி, ஒரு முக்கியமான மாற்றத்தைப் பார்க்கிறார். 4-5 மாதங்கள் வயது கொண்ட உள்ளூர் ரகங்களை ஒதுக்கிவிட்டு, உழவர்கள் 3 மாதங்களில் வளரும் வீரிய ராகி ரகங்களுக்கு மாறிவிட்டார்கள்.. நீண்டகாலம் மண்ணில் இருக்கும் பயிர், அதிக சத்துக்களைச் சேர்த்துக் கொள்கிறது. குறுகிய காலப்பயிரில் அது நிகழ்வதில்லை. விளைவாக, முதலில் ஒரு ராகி உருண்டை சாப்பிட்டவர்கள், இப்போது இரண்டு சாப்பிடுகிறார்கள். இது பெரும் மாற்றம்`, என்பது அவர் கருத்து.
ஆனால், குறுகிய காலப் பயிரை, குறுகிய நாட்கள் காவல் காத்தாலே போதும் என்பதால், உழவர்கள் மிக விரைவாக குறுகிய காலப்பயிருக்கு மாறிவிட்டார்கள். சந்தை விலையில் உள்ளூர் ரகத்துக்கும், குறுகிய காலப் பயிருக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. உழவர்கள் ஒன்றிணைந்து ஒரே சமயத்தில் பயிர் செய்கிறார்கள். இதனால், பயிர் ஒரே சமயத்தில்அறுவடைக்கு வருகிறது. அக்காலத்தில் அனைவரும் இணைந்து காவல் செய்வது சுலபமாகிறது. யானைகளை ஒன்று சேர்ந்து விரட்டிவிட முடிகிறது.
பறவைகளின் சத்தம், எங்கள் உரையாடல்களின் பின்ணணியில் கேட்டுக் கொண்டேயிருக்கிறது. விசில், சிரிப்பு, பாட்டு என அப்பறவைகள், வனத்தின் கதைகளை கங்கனஹள்ளி உழவர்கள் போல எங்களுடன் பகிர்ந்து கொள்ள முயல்வது போலத் தோன்றுகிறது.
ராகி உருண்டையுடன் கீரை மசியல் என்னும் எங்கள் மதிய உணவுக்குப் பின்னர், கடலை மிட்டாயும், ராகி லட்டும் கொடுக்கப்பட்டன. இதைச் செய்த வினோதம்மாவும், பி.மஞ்சுளாவும் கன்னடம் பேசுபவர்கள். (கோபியும் நண்பர்களும், அதை எங்களுக்குத் தமிழில் மொழிபெயர்த்தார்கள்). மழைக்கும், யானைக்கும் நடுவுல மாட்டி, எங்க ராகில பெரும்பகுதி போயிருச்சு என்றார்கள்.
ராகிதான் தினமும் சாப்பிடுவோம் என்கிறார்கள். குழந்தைகளுக்கும் அதுவே. குழந்தைகள் பெரியவர்களாகும் வரை, அவர்களுக்கு ராகி, கஞ்சியாகக் கொடுக்கப்படுகிறது வருடாந்திரத் தேவைக்கான தானியத்தை சாக்குப்பையில் அடைத்து வீடுகளில் வைத்திருக்கிறார்கள். தேவைப்படும் போது, அதிலிருந்து ராகியை எடுத்து மாவாகத் திரித்துக் கொள்கிறார்கள். இந்த ஆண்டு, மோசமான விளைச்சலின் காரணமாக, இருக்கும் தானியத்தை வைத்துக் கொண்டு ஒரு ஆண்டு வரை சமாளிப்பது கடினம் போல இருக்கிறது.
கங்கனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த வினோதம்மாவும், மஞ்சுளாவும் நவதர்ஷணத்தின் அருகில் குடியிருப்பவர்கள். மதிய உணவை முடித்து விட்டு வந்திருந்தார்கள். வினோதம்மாவுக்கு 4 ஏக்கர் நிலமும், மஞ்சுளாவுக்கு 1.5 ஏக்கர் நிலமும் உள்ளன. அதில் அவர்கள் ராகி, பயறுகள் மற்றும் கடுகு பயிரிடுகிறார்கள். `ராகிக் கருது புடிச்சிருக்கும் போது திடீர்னு மழை வந்துருச்சுன்னா, பயிர்லியே ராகி மொளச்சிரும்`, என்கிறார் மஞ்சுளா. அதன் பிறகு, அது வீணாகி விடுகிறது.
இதைத் தவிர்க்க வினோதம்மா குடும்பம், இயந்திரத்தை உபயோகப்படுத்தி அறுவடை பண்ண முடிவெடுத்து விட்டார்கள். கைகளைக் காற்றில் அசைத்து, மொழிப்போதாமையைத் தாண்டி அவர் தன் தரப்பை உணர்த்த முயல்கிறார்.
யானைகளால் ஏற்படும் அழிவு பற்றிய அவர்களது ஆற்றாமை மொழிபெயர்க்காமலேயே எனக்குப் புரிகிறது. `மொதல்ல கொஞ்சம் நஷ்ட ஈடு கெடச்சிட்டு இருந்துச்சு.. இப்போ அவங்க (அதிகாரிகள்) போட்டோ புடிச்சிட்டு போறாங்களே தவிர, பணமெல்லாம் வர்றதே இல்லை`.
ஒரு யானை எவ்வளோ சாப்பிடும்? `நிறைய`, என்கிறார் கோபி. ஒருமுறை இரண்டு யானைகள், தொடர்ந்து இரண்டு நாட்கள் வந்து, கிட்டத்தட்ட 20 மூட்டை ராகி அளவுக்கு சாப்பிட்டுப் போச்சு என நினைவு கூர்கிறார். அதன் மதிப்பு 20 ஆயிரம். `இன்னொரு முறை, ஒரு யானை, ஒரே ராத்திரியில் 21 பலாப்பழத்தை தின்னுட்டுப் போச்சு.. அது போக முட்டைகோஸ்..`.
உழவர்கள் இரவில் கண்விழித்து பயிர்க்காவல் புரிகிறார்கள். தொடர்ந்து இரண்டு ஆண்டுகள், ராகி சீசனில், மரத்தில் மேலுள்ள மச்சு வீட்டில் உட்கார்ந்து யானைக் காவல் செய்ததை நினைவு கூர்கிறார் கோபி. ரொம்பக் கஷ்டம்.. விடியறப்போ ரொம்ப களைப்பா இருக்கும் என்கிறார் கோபி.
இதில் சோகம் என்னவெனில், யானைகள் காவல்களைக் கண்டுகொள்ளாமல், வயல்களில் நுழைந்து நாசம் செய்வதுதான். `நாங்க வெடி வெடிப்போம்.. சத்தம் போடுவோம்.. ஆனா யானைகள் அதைக் கண்டு கொள்ளாமல் தின்று விட்டுப் போகும். ஒருமுறை யானை உள்ள வந்திச்சின்னா எங்களால் அதை விரட்டவே முடியாது`
கங்கன ஹள்ளிக்கு இப்போது ஒரு புதுப் பிரச்சினை முளைத்துள்ளது. வனத்துறையின் வேலி, நவதர்ஷனத்துக்கு அருகில் முடிகிறது. அதனால் யானைகள் எளிதாக கங்கனஹள்ளி வயல்களை நோக்கிச் செலுத்தப்படுகின்றன. வருடம் 20 முறை வரை இருந்த யானைகள் தாக்குதல், இப்போது ராகி அறுவடை சீசனில் தினமும் நடக்கத்தொடங்கி உள்ளன.
`வேலிக்கு ரெண்டு பக்கமும் இருக்கும் மக்கள் பாதிக்கப்படறாங்க.. வேலி போட்டெல்லாம் நிறுத்த முடியாது`, என கோபி தலையை ஆட்டிச் சொல்கிறார்
*****
`என் வீட்டுக்காரம்மா
என்னை அடிக்கடி பாக்கனும்னு சொல்றாங்க`
யானைகளிடம் இருந்தது பயிர்களைக் காவல் செய்யும் வேலையில் மாட்டிக் கொண்ட
60 வயது உழவர், தேசியப் பசுமை ஆயத்தின் நீதிபதியிடம் புகார் செய்கிறார்
இந்த யானை-மனித மோதலுக்கான தீர்வு, பாதிக்கப்படுபவர்கள் நலனை உள்ளடக்கிய, நீடித்து நிலைக்கக் கூடிய ஒன்றாக இருக்க வேண்டும். முதலில் இது ஒரு பெரும் பிரச்சினை என்பது அங்கீகரிக்கப்படுதல் மிக முக்கியம். சூழல் மற்றும் பரிணாமத்தின் எல்லைகள் (Frontiers in Ecology and Evolution) என்னும் இதழில் வெளிவந்த ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை இதை விவாதிக்கிறது. `உலகில் தின வருமானம் 1.2 அமெரிக்க டாலருக்குக் குறைவாக உள்ள 120 கோடி மக்களில் பெரும்பாலானோர் ஆசிய /ஆப்பிரிக்க யானைகள் வாழ்விடங்களை ஒட்டி வாழ்கிறார்கள். குறைந்த வருமானமுள்ள இவர்கள், அருகி வரும் நிலம் மற்றும் பொருளாதார வளங்களுக்காக யானைகள் மற்றும் இதர விலங்குகளுடன் போராட வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகிறார்கள்`.
இந்தியாவில் 22 மாநிலங்களில், மனிதர்கள் காட்டு யானைகள் பிரச்சினையை எதிர்கொள்கிறார்கள் என்கிறார் கௌரவ வனவிலங்குச் சரணாலய வார்டனான சஞ்ஜீவ். இவற்றுள், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஒரிசா, மேற்கு வங்காளம், சட்டீஸ்கர் மற்றும் அசாம் மாநிலங்களில், மிக அதிகமான மோதல்கள் நிகழ்கின்றன.
யானைகள் மற்றும் மனிதர்களுக்கிடையேயான மோதல்களில், 2018 ஏப்ரல் மாதம் முதல் 2020 டிசம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில், 1401 மனிதர்களும் 301 யானைகளும் பலியாகியுள்ளனர். இத்தகவல் , இந்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை ராஜ்யசபையில் கொடுத்ததாகும்.
யானைகள் விளைவிக்கும் சேதங்களுக்கான நஷ்ட ஈடு கொடுக்கும் திட்டம் ஏட்டளவில் தான் இருக்கிறது. இந்திய சுற்றுச் சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறையின் யானைகள் திட்டப் பிரிவு, யானைகள் ஏற்படுத்தும் நஷ்டத்தில் 60% நஷ்ட ஈடு தரப்பட வேண்டும் எனச் சொல்கிறது. 100% நஷ்ட ஈடு கொடுத்தால், பயிர் உற்பத்தியாளர்கள் தங்கள் பயிர்களைப் பாதுகாக்க மாட்டார்கள் என்பது அந்தத் துறை முன்வைக்கும் வாதம்.
இது தொடர்பாக, ஓசூர் வனத்துறை வார்டன் அலுவலகத்தில் பணிபுரியும் இந்திய வனத்துறை அலுவலரும் உதவி வனத்துறைக் காவலருமான கே.கார்த்திகேயனி அவர்களைச் சந்தித்தோம். `ஆண்டு தோறும் 200 ஹெக்டருக்கும் அதிகமான அளவில் பயிர்நிலங்கள் பாதிக்கப்படுகின்றன. நஷ்ட ஈடு கேட்டு 800-1000 விண்ணப்பங்கள் வனத்துறைக்கு வருகின்றன. 80 லட்சம் முதல் 1 கோடி வரை வருடம் நஷ்ட ஈடு வழங்கப்படுகிறது`, என அவர் தெரிவிக்கிறார். இதில் யானைத் தாக்குதல்களில் இறந்து போகும் மனிதர்களுக்கு வழங்கப்படும் ரூபாய் 5 லட்சம் நஷ்ட ஈடும் அடங்கும். சராசரியாக வருடம் 13 பேர் யானை தாக்குதல்களில் இறக்கிறார்கள்.
`ஒரு ஏக்கருக்கு அதிக பட்சமாக ரூபாய் 25 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்கப்படுகிறது`, என்கிறார் கார்த்திகேயனி. `துரதிருஷ்டவசமாக தோட்டத்துறைப் பயிர்கள் சேதப்படுத்தப்பட்டால், இது போதாது. ஏனெனில், தோட்டப்பயிர் உற்பத்திச் செலவு ஒரு ஏக்கருக்கு 70 ஆயிரம் வரை ஆகிறது`.
நஷ்ட ஈடு பெறுவதற்கான நடைமுறை மிகவும் சிக்கலானது. முதலில், உழவர் நஷ்ட ஈடு கோரி விண்ணப்பம் அளிக்க வேண்டும். பின்னர், வேளாண்/தோட்டத்துறை அதிகாரி, அவரது வயலுக்கு வந்து ஆய்வு செய்து அறிக்கை அளிப்பார். அதன் பின்னர், உள்ளூர் கிராம நிர்வாக அதிகாரி உழவரின் நிலப் பத்திரங்களைச் சரி பார்த்து அனுமதி வழங்குவார். அதன் பின்னர் வனச் சரக அலுவலர் நேரில் வயலுக்கு வந்து புகைப்படம் எடுத்துச் செல்வார். அதன் பின்னர், மாவட்ட வனத்துறை அதிகாரி நஷ்ட ஈடு வழங்குவதற்கு அனுமதி தருவார்.
இதில் பிரச்சினை என்னவெனில், நஷ்ட ஈடாக 3 ஆயிரமோ 5 ஆயிரமோ பெறுவதற்குள் 3 போக வேளாண்மை முடிந்து விடும். `வனத்துறையிடம் ஒரு சுழல் நிதி இருந்தால், நஷ்ட ஈடு கொடுப்பதை விரைவில் செய்து விட முடியும்`, என்கிறார் கார்த்திகேயனி
`இந்த மோதலுக்கான நீண்ட காலத்தீர்வுகளைக் காண்பது மனித உயிர்களைக் காத்து, உழவர்கள் நலம் மேம்படச் செய்வதுடன், மாநில வனத்துறை மீதான மக்களின் நல்லெண்ணத்தையும் மீட்டெடுக்கவும் உதவும்`, என்கிறார் சஞ்ஜீவ் குமார். `இப்போதைக்கு, யானைகளைக் காக்கும் அரசின் கொள்கைகளினால் ஏற்படும் நஷ்டங்கள் உழவர்கள் தலையில்தான் விடிகிறது`, என மேலும் குறிப்பிடுகிறார்.
மாதக்கணக்கில், ஒவ்வொரு இரவும் கண்விழித்து, படையெடுத்து வரும் யானைகளிடமிருந்து பயிரைக் காப்பது விளையாட்டான விஷயமல்ல என சஞ்ஜீவ் ஒத்துக் கொள்கிறார். இது உழவர்களை பலநாட்கள் வேறெந்த வேலைகளையும் செய்ய விடாமல் தடுக்கிறது. தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தின் நீதிபதியின் முன்பு, `என் மனைவி என்னை அடிக்கடி பார்க்க வேண்டும் என்கிறார்`, என வயதான (60 வயதுக்கும் மேலானவர்) உழவர் ஒருவர் புகார் சொன்னார். அவர் மனைவி, அவருக்கு இன்னொரு பெண்ணுடன் தொடர்பு இருக்குமோ எனச் சந்தேகித்தார் என்கிறார் சஞ்ஜீவ்.
இந்த மோதலால் உழவர்களுக்கு உருவாகும் மன அழுத்தம், வனத்துறைக்கு கூடுதல் பிரச்சினைகளை உருவாக்குகிறது. `உழவர்கள் அவர்கள் கோபத்தை வனத்துறையின் மீது காட்டுகிறார்கள். அலுவலகத்துள் நுழைந்து பொருட்களை உடைத்துப் போடுகிறார்கள். சாலை மறியல் செய்கிறார்கள். திட்டுகிறார்கள். சில சமயங்களை வனத்துறை அலுவலர்களை அடிக்கவும் செய்கிறார்கள். இதனால், வனத்துறையின் மற்ற பணிகள் பாதிக்கப்படுகின்றன`, என்கிறார் சஞ்ஜீவ்.
யானைகளால் ஏற்படும் பொருளாதார, சுற்றுச் சூழல் விளைவுகளைத் தாண்டி பெரும் உளவியல் எதிர்மறை விளைவுகளும் உருவாகின்றன. எந்தக் கணத்திலும் அழிக்கப்படலாம் என்னும் ஒரு நிச்சயமற்ற சூழலில், பயிர்த் தொழிலைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உழவர்கள் இருப்பதை ஒரு கணம் யோசித்தால் இது புரியும்
இவை தவிர, யானைகளின் உயிருக்கு ஏற்படும் ஆபத்துகள் இன்னுமொரு பிரச்சினையாக உள்ளன. அது உடனடியாகத் தீர்வு காணப்பட வேண்டிய ஒன்றாகும். 2017 ஆண்டு கணக்கெடுப்பின் படி, தமிழ்நாட்டில் 2761 யானைகளே உள்ளன. இது இந்திய அளவிலான யானை எண்ணிக்கையான 29964 ல், 10% க்கும் குறைவானதாகும்.
ஏற்கனவே குறைவான எண்ணிக்கையில் இருக்கும் யானைகள், மனிதத் தாக்குதல், மின்சார வேலிகளுக்குப் பலியாதல், சாலை மற்றும் ரயில் தண்டவாளங்களில் ஏற்படும் விபத்துக்களால் மரணமடைதல் போன்றவைகளால் மேலும் குறைவது கவலைக்குரிய ஒன்றாகும். இந்தப் பிரச்சினைக்குத் தீர்வே இல்லையோ என ஒரு கணம் தோன்றுகிறது.
ஆனால், சஞ்ஜீவ் குமாரும் மற்றவர்களும் மூர்த்தியின் உதவியோடு ஒரு தீர்வைக் கண்டடைந்தனர்.
*****
`
மின்சார வேலியை
முழுமையாக நம்பியிருக்க விரும்பவில்லை. சூரிய ஒளி வழி வேலி நம்பகத்தன்மை
குறைவானது.. மேலும் யானைகள், மின்சார வேலிகளை எதிர்கொள்ளும் அறிவைப்
பெற்றுவிட்டன'
எஸ்.ஆர்.சஞ்ஜீவ் குமார், கௌரவ வனத்துறை வார்டன், கிருஷ்ணகிரி மற்றும்
தர்மபுரி மாவட்டங்கள்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மேலகிரி யானை வேலியை அமைக்கும் எண்ணம் தென் ஆப்பிரிக்காவில் உள்ள அட்டோ யானைகள் தேசியப்பூங்காவின் தாக்கத்தினால் உருவானது. `இந்தியாவின் யானை மனிதன் என அழைக்கப்படும் ராமன் சுகுமார் எனக்கு அதைப்பற்றிச் சொன்னார். அட்டோ தேசியப்பூங்காவில், பழைய ரயில் தண்டவாளங்கள், மின் தூக்கிகளில் உபயோகித்த பழைய இரும்புக்கயிறுகள் முதலியவை உபயோகிக்கப்பட்டு ஒரு வலுவான வேலி அமைக்கப்பட்டது. அந்த வேலி அமைக்கப்பட்ட பின்னர், யானைகளுடனான மோதல் முடிவுக்கு வந்தது`. அட்டோ தேசியப் பூங்கா பின்பற்றிய அந்த வழியைப் பின்பற்ற சஞ்ஜீவ் முடிவெடுத்தார்.
அதுவரை ஓசூர் வனத்துறைப் பகுதிகளில், யானைகள் வயல்களுக்குள் வந்துவிடாமல், காட்டுக்குள்ளேயே இருக்க வைக்கப் பல முயற்சிகள் செய்யப்பட்டன. யானைகள் தாண்டிவிடாமல் இருக்க பெரும் அகழிகளை வெட்டினார்கள். சூரிய ஒளி மின்வேலிகள், முள் கம்பி வேலிகள், ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டுவரப்பட்ட முள்மரங்கள் கொண்டு அமைக்கப்பட்ட உயிர்வேலிகள் எனப் பல முயற்சிகள் செய்யப்பட்டன. ஆனால், அவை எதுவுமே வெற்றிபெறவில்லை.
தீபக் பில்கி என்னும் வனத்துறை அதிகாரி, ஓசூர் வனத்துறையின் துணைக் காவல் உயரதிகாரியாக வந்த பின்னர்தான் ஒரு புதிய தீர்வுக்கான வழிபிறந்தது. அவர், சஞ்ஜீவ் சொன்ன தீர்வின் மீது ஆர்வம் காட்டினார். அதற்கான நிதியைப் பெற்று, மாவட்ட ஆட்சியரிடமும் ஆலோசித்து, `சோதனை முயற்சியாக அட்டோ தேசியப் பூங்கா அமைத்ததைப் போல ஒரு வேலியை அமைக்க முடிவெடுத்தோம்`, என விளக்குகிறார் சஞ்ஜீவ்
வேலியை அமைக்க முடிவெடுத்த போது, ஒரு யானையின் வலிமை எவ்வளவு, அது எந்த அளவு வலுவான வேலியை உடைத்துத் தள்ள முடியும் என்னும் தகவல்கள் அவர்களிடமில்லை. எனவே, முதுமலை யானைகள் சரணாலயத்தில், அட்டோ வன வேலி போன்ற ஒன்றை அமைத்துச் சோதிக்க முடிவெடுத்தார்கள். அங்கே, மூர்த்தி என்னும் தந்தமில்லா யானை ஒன்று இருந்தது. 5 டன் எடையுள்ள பல மனிதர்களைக் கொன்ற மூர்க்கமான மூர்த்தியை, வன இலாகா பிடித்து, மறுவாழ்வு கொடுத்து வைத்திருந்தது. யானை வேலிகளை அமைக்கையில், அவற்றைச் சோதிக்கும் பரிசோதனை யானையாக மூர்த்தி பயன்படுத்தபட்டது
`மூர்த்தியைப் பார்த்தால், அவன் ஒரு காலத்தில் மூர்க்கமாக இருந்த யானை என எவருமே நம்ப மட்டார்கள். வனத்துறையின் பயிற்சிகளின் விளைவாக அவன் மென்மையானவனாக மாறிவிட்டான்`, என்கிறார் சஞ்ஜீவ். இன்று மூர்த்தி வயதாகி ஓய்வு பெற்று விட்டார். யானைகள் ஓய்வு பெறும் வயது 55. தங்க இடம், நல்ல உணவு, அவ்வப்போது சரணாலயத்தில் உள்ள பெண் யானைகளுடன் உறவு என நிம்மதியான வாழ்க்கை மூர்த்திக்கு. காட்டில், அவருக்கு இந்த நிம்மதி கிடைக்காது. வயதாகி, இளம் ஆண் யானைகளுடன் போட்டியிட முடியாமல் அவதிப்பட வேண்டியிருக்கும்
மூர்த்தியை வைத்துச் சோதனகள் நடத்தியதில், யானைகள் மிக அதிகமாக 1.8 டன் எடையுள்ள வேலியைத் தகர்க்க முடியும் எனக் கண்டு கொண்டார்கள். அந்த சோதனைகளின் முடிவில், இரண்டு கிலோமீட்டர் சோதனை வேலி அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அந்த வேலி, உழவர் ஆனந்தாவின் வீட்டிற்கு அருகிலேயே அமைந்தது.
`ஆனால், மொட்ட வாலுடன் இருக்கும் மக்கனா அதை ஒரே வாரத்தில் உடைத்துப் போட்டது. அதிலிருந்து கற்றுக் கொண்டு, வேலியை மீண்டும் வலுவாக வடிவமைத்தோம். முதலில் போட்ட வேலியை விட 3.5 மடங்கு வலுவாக அமைத்தோம். அதில் பயன்படுத்தப்பட்ட இரும்புக் கயிறு மிகவும் வலுவானது. 12 டன் எடையைத் தாங்கக் கூடியது. அதை வைத்து இரண்டு யானைகளைத் தூக்கி விட முடியும்`.
அதுவரை அமைக்கப்பட்ட எந்த வேலியையும் விட தகர்க்க முடியாத ஒன்றாக இந்தப் புதிய வேலி அமைந்தது என்கிறார் சஞ்ஜீவ். இரும்பினால் உறுதியாக்கப்பட்ட, முன் – தயாரிப்பு காங்க்ரீட் தூண்கள் நடப்பட்டு, இந்த இரும்புக் கயிறுகள் பிணைக்கப்பட்டு, வேலி அமைக்கப்பட்டது. தூண்களும், இரும்புக்கயிறுகளும் யானைகளால் தகர்க்க முடியாதவை. ஆனால், அதன் மீது ஏறி இறங்க முடியும். `இதில் ஏதும் பலவீனங்கள் உள்ளனவா என ஆய்வுகள் செய்ய இந்த சோதனை முயற்சி உதவியது. வயல்களில் பயிரை மேய வரும் யானைகளை, கேமிராக்கள் படம் பிடித்தன`. அந்தத் தரவுகளை உபயோகித்து, வேலியமைப்பை மேம்படுத்தினார்கள்.. `நாம் உருவாக்கும் வேலிகளை உடைத்து, அதை எப்படி மேம்படுத்துவது என்பதை நமக்கு யானைகளே நமக்குச் சொல்லித் தருகின்றன`, எனச் சொல்லிச் சிரிக்கிறார் சஞ்ஜீவ்.
மின்வசதி தேவைப்படாத இந்த வேலியை அமைக்க, ஒரு கிலோமீட்டருக்கு 40-45 லட்சம் செலவாகிறது. தமிழ்நாடு அரசின் நவீன முன்னெடுப்புத் திட்டத்துடன், தனியார் துறை உதவியும் சேர்ந்து கொள்ள, முதலில் 2 கிலோமீட்டர் தொலைவுக்கு வேலி அமைக்கப்பட்டது. பின்னர் அடுத்து 10 கிலோமீட்டர் என அது விரிவுபடுத்தப்பட்டது.
இதுவரை 25 கிலோ மீட்டர் நீளத்துக்கு வேலி அமைக்கப்பட்டுள்ளது. இதில் 10 கிலோ மீட்டர் நீளம் சூரிய மின் ஒளி மின்சார வேலியாகவும் அமைக்கப்பட்டுள்ளது. `வினாடிக்கு 10 ஆயிரம் வோல்ட் நேர் மின்சாரம் பாயும் இந்த வேலியைத் தொட்டால், அதிர்ச்சி ஏற்படுமே தவிர, யானைகள் உயிருக்கு ஆபத்து எதுவும் நேராது`, என்கிறார் சஞ்ஜீவ். இந்த வேலியை யானைகள் தகர்க்கவே முடியாது.
சில சமயங்களில், வேலிகளின் மீது மரங்கள் விழுந்தால், நேர் மின்சார அளவு 6 ஆயிரம் வோல்ட்டாகக் குறைந்து விடும். அப்போது யானைகள் எளிதாகக் கடந்து விடும். ஆனால், பசி வேட்கை அதிகமாக இருக்கும் சில ஆண் யானைகள், கண் மண் தெரியாமல் வேலியை உடைத்துக் கொண்டு சென்று விடும். `அவற்றின் மனத்தில் என்ன ஓடுகிறது எனப் புரிந்து கொள்வது சிரமம்`, என்கிறார் சஞ்ஜீவ்.
`மின்சாரத்தை நம்புவதை முடிந்த வரை நாங்கள் தவிர்க்கிறோம். சூரிய ஒளிவழி மின்சாரம் நம்பத் தகுந்ததல்ல`, எனச் சுட்டுகிறார் சஞ்ஜீவ். யானைகள் மின்சார வேலியை எதிர்கொள்வதைக் கற்றுக் கொண்டு விட்டன. `மின் கடத்துதல், மின் பாதுகாப்பு போன்ற விஷயங்களை யானைகள் புரிந்து கொண்டுவிட்டன. மரம் என்பது மோசமான மின் கடத்தி என்பதைக் கற்றுக் கொண்டு, ஒரு கிளையை உடைத்து, மின்சார வேலியை ஷார்ட் சர்க்யூட் செய்து விடுகின்றன. `ஒரு கிளையை உடைத்து, வேலியில் மின்சார இணைப்பு இருக்கிறதா என ஒரு யானை சோதிக்கும் புகைப்படம் என்னிடத்தில் இருக்கிறது`, எனச் சிரிக்கிறார் சஞ்ஜீவ்.
*****
'மேலகிரியில் அமைக்கப்பட்ட வலுவான வேலியினால், யானைகள் தெற்கே புலம் பெயர்ந்து
விட்டன. அது நல்ல விஷயம்தான். ஏனெனில் அங்கிருந்து நீலகிரி வரை அடர்ந்த
தொடர்காடுகள் உள்ளன'
கே.கார்த்திகேயனி, இந்திய வனத்துறை அதிகாரி.
யானைகளால் ஏற்படும் பொருளாதார, சுற்றுச் சூழல் விளைவுகளைத் தாண்டி பெரும் உளவியல் எதிர்மறை விளைவுகளும் உருவாகின்றன. எந்தக் கணத்திலும் அழிக்கப்படலாம் என்னும் ஒரு நிச்சயமற்ற சூழலில், பயிர்த் தொழிலைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உழவர்கள் இருப்பதை ஒரு கணம் யோசித்தால் இது புரியும். கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல தலைமுறை உழவர்கள், இந்த அபாயத்தை, அதனால் உருவாகும் மன அழுத்தத்தை எதிர்கொண்டு வாழ்ந்து வருகிறார்கள்
ஊருக்குள் புகுந்து வயலில் பயிரிடப்படும் பயிர்களை தின்றழிப்பதைத் தாண்டி, யானைகள் காட்டை விட்டு வெகுதூரம் பயணம் செய்யப் பழகிக் கொண்டுவிட்டன. இது கடந்த 15 ஆண்டுகளில் நிகழ்ந்த மாறுதல் என்கிறார் சஞ்ஜீவ். `காட்டை விட்டு 1-2 கிலோமீட்டர்கள் வரை வந்த யானைகள், தற்போது 70-80 கிலோமீட்டர்கள் வரை பயணம் செய்து ஆந்திர /கர்நாடக மாநிலங்களுக்குள் சென்று, சில மாதங்கள் வரை தங்கியிருந்து திரும்ப வருகின்றன`. ஓசூர்ப் பகுதியில் பயிர்களைத் தின்ன வரும் யானைகள், பல குட்டிகளை ஈன்று ஆரோக்கியமாக உள்ளவை
இளம் யானைகள் பெரும் ரிஸ்க் எடுத்து காட்டை விட்டு வெளியே வருகின்றன. `பாதுகாக்கப்பட்ட வனத்தை விட்டு வெளியே வந்து இறக்கும் யானைகளின் வயதைக் கணித்த போது, மரணமடைந்த யானைகளில் 60-70% இளம் ஆண் யானைகள் என்பது தெரிய வருகிறது.
அண்மைக்காலங்களில், யானைகள் கூட்டமாக வருவது அரிதாகி விட்டது என்கிறார் உழவர் ஆனந்தா. மொட்ட வால், ஆனந்தா, கிரிங்கற இந்த மூணு ஆண் யானைகள்தான் வெளியே வருகின்றன எனச் சொல்லும் ஆனந்தா அவ்வப்போது யானைகள் வந்து அழித்த நிகழ்வுகளைப் புகைப்படம் எடுத்து இன்னும் எனக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார். உடைந்து விழுந்த மாமரக் கிளைகள், சிதைக்கப்பட்ட வாழை மரங்கள், குலைகள், ஆங்காங்கே கிடக்கும் யானை லத்திகள் என என் வாட்சப்பில் புகைப்படங்கள் வந்து குவிகின்றன. பேசுகையில், அவர் சொற்களில் கோபம் இருப்பதில்லை.. `என்ன செய்ய முடியும்`, என்னும் ஒரு கையறு நிலைதான் இருக்கிறது.
`அவர்கள் கோபம் அரசாங்கம் மற்றும் வனத்துறையின் மீதுதான்`, என்கிறார் சஞ்ஜீவ். `நஷ்ட ஈடு என்பது மிகத் தாமதமாகவும், மிகக் குறைவாகவும் கொடுக்கப்படுவதால், பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுப்பதையே நிறுத்தி விட்டார்கள். அதனால், எவ்வளவு நஷ்ட ஈடு கொடுக்கப்பட்டது என்னும் புள்ளி விவரத்தை மட்டும் பார்த்தால், பிரச்சினையின் உண்மையான வீரியம் புரியாது`.
வனத்தை இன்று ஆக்கிரமித்திருக்கும் லாண்டானா என்னும் மேலாதிக்கத் தாவரம் முற்றிலுமாக அழிக்கப்பட்டு, இயற்கையான சூழல் மீட்டெடுக்கப்பட வேண்டும். இதுவே பிரச்சினைக்கான முக்கியத் தீர்வு. இயற்கையான சூழல் உருவாகி, தேவையான அளவு உணவு வனத்துக்குள் கிடைக்கும் சூழலில், யானைகள் காட்டை விட்டு வெளியே வருவது பெரும்பாலும் நின்று விடும் (இந்தப் பாரா முழுவதுமாக மாற்றி எழுதப்பட்டுள்ளது)
தற்போது யானை-மனித மோதல் நடக்கும் பகுதிகளில், 25 கிலோமீட்டர் வேலி அமைக்கப்பட்டுள்ளது. இது மனிதர்களும்-யானைகளும் சந்திக்கும் எல்லையில் 25 சதமாகும். இதனால், மோதல்கள் 95% குறைந்துள்ளன. `மேலகிரிப் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வேலிகளின் காரணமாக, யானைகள் தெற்கே புலம்பெயர்ந்து விட்டன. அது நல்ல விஷயம்தான். ஏனெனில் அங்கிருந்து சத்தியமங்கலம், நீலகிரி வரை அடர்ந்த தொடர்காடுகள் உள்ளன`.
மேலகிரி வேலி பெரும்பாலும் வலுவான இரும்புக்கயிறுகளால் அமைக்கப்பட்ட தடுப்பரண். `சில இடங்களில், சூரிய ஒளி மின்வேலிகள் உள்ளன. அது ஒருவித உளவியல் தடுப்பரண். மின்வேலியைத் தொடுகையில் கிடைக்கும் அதிர்ச்சி, யானைகளுக்கு அச்சத்தைத் தருகிறது. மற்றபடி, தேனீக்கள் கொண்ட தடுப்பரண், புலியுறுமலை ஒலிபரப்புதல், அலாரம் ஒலிகள் போன்றவற்றால் பெரும் பயனில்லை. யானைகள் அவற்றை எப்படி எதிர்கொள்வது என்பதைக் கற்றுக் கொண்டு விட்டன. ` ஆனால், யானைகளை நீண்ட காலம் ஏமாற்ற முடியாது`, என்கிறார் சஞ்ஜீவ்.
சஞ்ஜீவ் சொல்வது உண்மைதான். இந்த மோதலை எதிர்கொள்வதில் யானைகள் ஒரு அடி முன்னேதான் உள்ளன எனத் தோன்றுகிறது. தங்கள் நடமாட்டத்தை கண்காணிக்கும் புகைப்படக் கருவிகளை அவை உடைக்கத் தொடங்கி விட்டன.. சஞ்ஜீவ் பேசப் பேச, இரண்டு யானைகள் ஒன்று கூடி, வேலியைத் தாண்டி, ராகிப்பயிரைத் தின்னத் திட்டமிடும் ஒரு புகைப்படத்தைப் பார்க்கத் தொடங்கி அதனுள் ஆழ்ந்து போகிறேன்.
இந்தக் கட்டுரையை எழுத கோபகுமார் மேனனின் உதவி மிகவும் முக்கியமானது. அவரது தரவுகளுக்கும், உபசரணைக்கும் கட்டுரையாளர் நன்றி தெரிவித்துக் கொள்கிறார்
இந்த ஆய்வு, 2020 ஆம் ஆண்டுக்கான அஸீம் ப்ரேம்ஜி பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி நிதி நல்கையின் உதவியால் மேற்கொள்ளப்பட்டது
அட்டை புகைப்படம்: மொட்ட வால் (உதவி: நிஷாந்த் ஸ்ரீனிவாசைய்யா)
தமிழில்: பாலசுப்ரமணியம் முத்துசாமி