கிழக்கு டெல்லியில், டெல்லி – நொய்டா பறக்கும் சாலைக்கு அருகே, யமுனா நதிக்கு பக்கத்தில், மண் சாலை பசும் வயல்வெளிகளில் விரிந்து செல்கிறது. அந்த இடத்தின் பெயர் சில்லா காதர் (கணக்கெடுப்பில் சில்லா சரோடா காதர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது).

இங்குள்ள பெரும்பாலான சாலைகள் ஒழுங்கற்றதாகவும், தூசு படிந்ததாகவும் உள்ளன. மின் கோபுரங்கள் உள்ளன. ஆனால், இங்கு வசிப்பவர்கள் மின் வினியோகம் இல்லை என்று கூறுகிறார்கள். 70 வயதான சுபேதார் சிங் யாதவ், இங்கு 50 ஆண்டுகளாக வசித்து வருகிறார். அவரது தந்தை வழி மாமாவுடன் இங்கு முலாம்பழம் பயிரிடுவதற்காக குடிபெயர்ந்தார். இவர் உத்திரப்பிரதேச மாநிலம் காசியபாத் மாவட்டம் கரந்தா தாலுகாவில் உள்ள தராம்மார்பூர் உப்பார்வார் கிராமத்தில் இருந்து வந்துள்ளார். முலாம் பழங்களை விடுத்து, காய்கறிகள், கோதுமை மற்றும் நெற்பயிர்கள் ஆகியவற்றை பயிரிடுவதற்கு மாறிவிட்டார். மேலும் கால்நடைகள் வளர்க்கிறார். இவர் ஒரு குத்தகை விவசாயி. 3 ஏக்கர் நிலத்தில் அவரது குடும்பத்தினர் மற்றும் இரண்டு விவசாய கூலித்தொழிலாளர்களுடன் விவசாயம் செய்து வருகிறார்.

யமுனாவின் நீர் மாசடைந்ததையடுத்து, இங்குள்ள விவசாயிகள் ஆழ்துளைக் கிணறு அமைத்து தங்கள் நிலங்களுக்கு பாசன வசதி பெறுகின்றனர். யாதவ் கூறுகையில், சில்லா காதர் வெள்ளம் மற்றும் காட்டு விலங்குகளால் எளிதில் பாதிக்கப்படக்கூடிய பகுதி என்கிறார். ஆனால், நிலத்திற்கு சொந்தக்காரர்களே வெள்ளத்தினால் ஏற்படும் பயிர் சேதங்களுக்கு, மாநில அரசிடம் இருந்து இழப்பீடு பெறுகிறார்கள். நிலத்தின் குத்தகைதாரர்கள் அல்ல. சந்தையிலும் இடைத்தரகரே விவசாயிகளின் பயிர்களுக்கு விலையை நிர்ணயிப்பர். இதனால் விவசாயிகளுக்கே இழப்பீடுகள் ஏற்படும்.

எனினும் இங்குள்ள விவசாயிகள் பல ஆண்டுகளாக இங்கு விவசாயம் செய்து வருவதாக கூறுகிறார்கள். அதிகாரிகள் அவர்களை ஆக்கிரமிப்பாளர்களாக பார்க்கிறார்கள். இதனால், அவர்களின் வீடுகளை அடிக்கடி இடித்தும், பயிர்களை அழித்தும் வருகிறார்கள். “இப்போது 10 நாட்களுக்கு முன்னர், டெல்லி வளர்ச்சி அதிகாரிகள், சிலரின் வயல்களில் புல்டோசரரை விட்டனர்“ என்று யாதவ் கூறினார். “அது எங்கள் வயல்களில் வளர்ந்து நின்ற பயிரையும், குடிசைகளையும் அழித்தது. அரசுக்கு நிலம் வேண்டுமென்றால், நாங்கள்  உங்கள் வழியில் வரமாட்டோம் என்று அவர்களிடம் கூறினோம். ஆனால், எங்கள் வீடுகளை அழிப்பது அவர்கள் செய்யும் தவறு“ என்று அவர் மேலும் கூறுகிறார்.

இந்தக் காணொளியில் யாதவ் மற்றும் சில்லா காதரின் பிற முன்வைக்கும் பிரச்சினைகளைக் கேளுங்கள்.

இந்தக் கட்டுரையை எழுதியவர் அப்துல் ஷக்கீல் பாஷாவுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறார். பாஷா, குடிசைவாழ் மக்கள் பாதுகாப்பு அமைப்பின் உறுப்பினர். இந்த அமைப்பு சில்லா காதரில் பள்ளி நடத்துகிறது. வசிப்பவர்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்படும்போது தலையீடு செய்கிறது.

தமிழில்: பிரியதர்சினி. R.

Subuhi Jiwani

சுபுஹி ஜிவானி, ஊரக இந்திய மக்கள் ஆவணவகம் - பேரியின் முதுநிலை ஆசிரியர்.

Other stories by Subuhi Jiwani
Translator : Priyadarshini R.

பிரியதர்சினி R., மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஆராய்ச்சி மாணவி. தினமலர், தினகரன் போன்ற நாளிதழ்களிலும், சன் டிவி உள்ளிட்ட செய்தி ஊடகங்களிலும் செய்தியாளராக பணியாற்றியவர்.

Other stories by Priyadarshini R.