அக்டோபர் நடுப்பகுதியின் நண்பகலில், மிசோரத்தின் ஹுமுஃபாங்கில் உள்ள மேகமூட்டமான மலை உச்சியில் உள்ள காட்டின் வழியாக சூரியக் கதிர்கள் ஊடுறுவினாலும், பசுமையான, அடர்த்தியான மரங்களின் கீழ், காடு குளிர்ச்சியாகவும் இருட்டாகவும் இருக்கிறது. ஒரு அமைதியான மவுனம் காட்டில் பரவியுள்ளது. பறவைகளின் பாடல்களும் விறகு சேகரிப்பவர் தாளம் போல எழுப்புகிற த்வாக் த்வாக் எனும் ஒலிகளும் மட்டும்தான் இருக்கின்றன .
அவர் குனிந்திருக்கிறார். தனது வேலையில் ஆழ்ந்திருக்கிறார். ஏற்கனவே ஒரு கட்டு விறகுகள் அவரைச் சுற்றி பரவிக் கிடக்கின்றன. லால்ஸுலியானி என்றும் ஜுலியானி என்றும் அவரை கூப்பிடுவார்கள். அவர் 65 வயதான பெண்மணி. அருகிலுள்ள ஹ்முய்பாங் கிராமத்தில் உள்ள தனது வீட்டுக்கான விறகுகளைச் சேகரிப்பதில் மும்முரமாக இருக்கிறார். அவரது காலடியில் அரிவாள் கிடக்கிறது. ஆப்பு வடிவத்தில் உள்ள அந்த கனமான அரிவாள் ஒரு நீண்ட மர கைப்பிடியின் முடிவில் பொருத்தமாக அமைந்திருக்கும். அதனை கச்சிதமாக பயன்படுத்தலாம், அதைக் கொண்டு அவர் வெட்டிக்கொண்டிருப்பது, பேட்லாங்கன் எனும் மரம். அதன் தாவரவியல் பெயர் க்ரோடன் லிசோபிலஸ். அதன் பெரிய கட்டைகளை அவர் 3 முதல் 4 ஆக பிளந்தார். ஒன்றரை அடி நீளமுள்ளவையாக வேகமாகப் பிரித்தார். அவர் சேகரித்திருக்கிற அந்த மரம், இன்னும் கொஞ்சம் ஈரமாகத்தான் இருக்கிறது. அந்த விறகுகளின் எடை சுமார் 30 கிலோ இருக்கலாம்.
விறகுகளை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு திரும்பிச் செல்வதற்காக அவர் தயாராகையில் அவரது திறன் மிக்க செயல்களாலும் அவரது கையின் வியர்வையாலும் அவரது கையில் உள்ள டாவோ தால்தான் (மச்செட்) மங்கலாகிறது. பெரிய அளவுக்கு கஷ்டப்படாமல் எளிதாக இந்த வேலையை அவர் செய்து விட்டதுபோல மேலோட்டமாக தோன்றுகிறது. ஆனால், பல ஆண்டுகளாக, அன்றாடம் செய்துவருகிற வேலை என்பதால்தான் இந்த வேலையை அவர் சிரமம் இல்லாமல் செய்திருக்கிறார்.
தமிழில்: த நீதிராஜன்