“காலைல அஞ்சு மணிக்கு வெறுங் கால்ல நாங்க நடக்க வேண்டியிருந்தது. பிலோஷிக்கு  போகணும். எந்த வண்டியும் கிடையாது. எங்க முதலாளி ஆளுக்கு ஆயிரம் ரூபா கொடுத்தாரு.அதிலதான் நாங்க உப்பு, புளி, மிளகா எல்லா வாங்க வேண்டியிருந்தது. எங்களால வீட்டுக்குப் போக முடியலன்னா நாங்க எதை சாப்பிடுவோம்?.எங்க கிராமத்தில இருந்து  ஒருத்தரு போன் செஞ்சு ‘ நீங்க இப்போ ஊருக்கு வந்து சேரலைன்னா  அப்புறம் இரண்டு வருஷத்துக்கு வர முடியாது. நீங்க எங்க இருக்கிறீங்களோ அங்கயேதான் இருக்கணும்’னு சொன்னாரு.”

அப்படித்தான் எல்லா மக்களும் பேசிக்கொண்டார்கள். அவர்கள் தங்களது பைகளை தலைகள் மீது சுமந்திருந்தார்கள். அவர்களின் தோள்களில் குழந்தைகளை தூக்கிக்கொண்டு சுடும் வெயிலில் நடந்துபோய்க்கொண்டிருந்தார்கள். எனது கிராமத்தின் வழியாக அவர்கள் போய்க்கொண்டிருந்ததை பார்த்தேன். அவர்கள் எங்கே போகிறார்கள் என்று விசாரித்தேன்.  மொத்தம் அவர்கள் 18 பேர். மகாராஷ்ட்ர மாநிலத்தின் பால்கார் மாவட்டத்தில் உள்ள வாதா கோட்டத்தில் உள்ள பிலோஷி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அவர்கள். அவர்கள் வாசை கோட்டத்தைச்  சேர்ந்த பாட்டனே கிராமத்தில் உள்ள செங்கல்சூளைகளுக்கு வேலை தேடிப் போய் சேர்ந்தவர்கள். மகாராஷ்ட்ரத்தின் பழங்குடி இனங்களில் ஒன்றான கட்காரி எனும் சமூகத்தைச் சேர்ந்த அவர்களில் பெண்கள், ஆண்கள், மட்டுமல்ல, குழந்தைகளும் இருந்தனர்.

அவர்களுக்கு கொரோனா வைரஸ் பற்றிய கவலை இருந்தது. பொதுப் போக்குவரத்தை  நிறுத்திவிட்டார்கள் என்பதால் அவர்கள் வீடு திரும்புவதற்கு எந்தவிதமான வாகனமும் கிடைக்கவில்லை. என்ன பாடுபட்டாவது ஊருக்கு வந்து சேர்ந்து விடுங்கள் என்று அவர்களது கிராமத்திலிருந்து கண்டிப்பான செய்தியை அனுப்பியிருக்கிறார்கள். அதனால்தான் அவர்கள் நடைபயணமாகவே போய்விடலாம் என்று கிளம்பிவிட்டார்கள். மார்ச் 29ஆம் தேதி காலை 11 மணிக்கு அவர்கள் எனது நிம்பாவளி கிராமத்துக்கு வந்தார்கள்.

“சூரியன் கொதித்துக்கொண்டிருந்துச்சு. தலை மேல சுமையை வச்சுகிட்டு நான் நடந்துட்டிருந்தேன். அப்படியே கீழே விழுந்துட்டேன். அதனால எனக்கு அடிபட்டிருச்சு” என்று கால் முட்டிகளை காட்டுகிறார் 45 வயதான பெண்மணி கவிதா திவா. அவருக்குப் பக்கத்தில் 20 வயதான சப்னா வாக்  உட்கார்ந்திருந்தார். அவர் தனது வயிற்றில் ஆறு மாத கருவைச் சுமந்துகொண்டிருக்கிறார். 23 வயதான கிரண் வாக்கும் கவிதாவுக்கும் கல்யாணம் ஆனதிலிருந்தே அவர்கள் இருவரும் செங்கல் சூளையில்தான் வேலை செய்கிறார்கள்.  எல்லாவற்றையும் நிறுத்திவிட்டதால் கவிதாவும் வீடு திரும்புகிறாள். அவளது தலையிலும் சுமந்து செல்கிறாள். வயிற்றிலும் சுமந்து செல்கிறாள்.

Sapna and her husband Kiran Wagh (top left), Devendra Diva and his little daughter (top right), and Kavita Diva (bottom right) were among the group of Katkari Adivasis trying to reach their village in Palghar district from the brick kilns where they work
PHOTO • Mamta Pared

செங்கல் சூளையில் வேலை செய்த காட்கரி பழங்குடி சமூகத்தினர் அங்கிருந்து கிளம்பி, அவர்களின் பால்கர் மாவட்டத்தில் உள்ள கிராமத்துக்குச் செல்ல முயல்கின்றனர். சப்னாவும் அவளது கணவர் கிரண் வாக்கும் (மேலே இடதுபுறத்தில்), தேவேந்திர திவாவும் அவரது சின்ன மகளும் (மேலே வலது புறத்தில் ), கவிதா திவா (கீழே வலதுபுறத்தில்)

நடந்து நடந்து எல்லோரும் களைத்துப் போயிருக்கிறார்கள். “பக்கத்தில எங்காவது கிணறு இருக்கா”ன்னு  என்று அவர்கள் கேட்கிறார்கள். அவர்களின் பாட்டில்களை சின்னப் பசங்க கிட்ட கொடுத்து அனுப்பி குடிக்க தண்ணி கொண்டுவரச் செய்யலாம் என்று நினைக்கிறார்கள். 28 வயதான தேவேந்திர திவாவும் 25 வயதான தேவயானி திவாவும் மெதுவா நடந்து வந்திருக்காங்க. அதனால  நடந்து போறவங்களில் அவங்க பின்தங்கிப் போய்ட்டாங்க. இருந்தாலும் சமாளித்து என் கிராமத்துக்கு வந்திருக்காங்க. அவர்களின் தலையில் சுமைகள் இருக்கின்றன. சின்ன சின்னக் குழந்தைகளை அவர்கள் வைத்திருந்தனர் அதனால்தான் மற்றவர்களை மாதிரி அவர்களால் வேகமாக நடக்க முடியாது.

அவர்களை அவர்களது கிராமத்துக்கு அனுப்புவதற்காக நான் ஏற்பாடுசெய்திருந்த  டெம்போ வாகனம் வந்து சேர்ந்தது. வாடகையாக ரூபாய் 2000 கேட்டார்கள். நடைபயணமாக வந்தவர்களிடம் 600 ரூபாய்தான் இருந்தது. மிச்ச பணத்தை நான் எப்படியோ சமாளித்தேன்.  நேரத்தை வீணடிக்காமல் அவர்களை அவர்களின் சொந்த கிராமத்துக்கு அனுப்பிவைத்தேன்.

எது அவர்களை வீட்டை நோக்கி இழுக்கிறது? அங்கேயும் வேலை இல்லை. டெம்போ வாகனத்துக்கு  கொடுக்கவே அவர்களிடம் பணம் இல்லை. இந்த பொது அடைப்பு காலகட்டத்தில் அவர்கள் பிழைப்பதற்கு என்ன செய்வார்கள்? எத்தனையோ கேள்விகள். அவற்றுக்கு பதில்கள்தான் இல்லை.

அவர்களைப்போலவே, இந்தியா முழுமையும் அனேக மனிதர்கள் அவர்களின் கிராமங்களுக்குச் செல்வதற்காக கடும் முயற்சிகளைச் செய்துகொண்டிருக்கிறார்கள். சிலர் வீடுகளுக்குப் போய்ச் சேர்ந்திருக்கலாம். வீடுகளுக்குப் போக முடியாமல் பலர்  பல இடங்களில் எங்கும் செல்ல முடியாமல் சிக்கியிருக்கலாம். சிலர் ரொம்ப தூரத்தில் இருக்கிற தங்களது வீடுகளை நோக்கி வெறும் கால்களில் தொடர்ந்து நடந்து போய்க்கொண்டேயிருக்கலாம்.

மராத்தியிலிருந்து ஆங்கிலம் மேதா காலே

தமிழில்: த. நீதிராஜன்

Mamta Pared

மம்தா பரெட் (1998 - 2022) ஒரு பத்திரிகையாளராகவும் 2018ம் ஆண்டில் பாரியின் பயிற்சிப் பணியாளராகவும் இருந்தவர். புனேவின் அபாசாகெப் கர்வாரே கல்லூரியின் இதழியல் மற்றும் வெகுஜன தொடர்பில் முதுகலை பட்டம் பெற்றவர். பழங்குடி வாழ்க்கைகளை, குறிப்பாக அவர் சார்ந்த வார்லி சமூக வாழ்க்கையையும் போராட்டங்களையும் பற்றிய செய்திகளை அளித்திருக்கிறார்.

Other stories by Mamta Pared
Translator : T Neethirajan

நீதிராஜன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர், பத்திரிக்கையாளர் மற்றும் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் சமூக நீதி சார்ந்த புத்தகங்களை வெளியிடும் சவுத் விஷன் பதிப்பகத்தின் முதன்மை ஆசிரியர்.

Other stories by T Neethirajan