மதுரை மாவட்டத்தின் திருநங்கை நாட்டுப்புற கலைஞர்களுக்கு வருடத்தின் முதல் ஆறு வருடங்கள் மிகவும் முக்கியம். இந்த காலக்கட்டத்தில்தான், கிராமங்கள் விழாக்களையும் கோவில்கள் கலாசார நிகழ்வுகளையும் நடத்துகின்றன. ஊரடங்கு காலத்தில் பொது நிகழ்வுகளுக்கு போடப்பட்ட தடை, கிட்டத்தட்ட 500 திருநங்கை கலைஞர்களை கடுமையாக பாதித்திருக்கிறது.

அவர்களில் ஒருவரான மேகி, மதுரையிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் விளாங்குடியில் இரண்டு அறைகள் கொண்ட வீட்டில் வசிக்கிறார். அவரது வீடுதான் பிற திருநங்கைகளுக்கான அடைக்கலமும் சந்திக்கும் இடமும். விதைகள் முளை விடுவதை கொண்டாட பாடப்படும் பாரம்பரியமிக்க கும்மிப்பாட்டு பாடல்களை மதுரையில் பாடும் சில திருநங்கை கலைஞர்களுள் மேகியும் ஒருவர். ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதத்தில் பத்து நாட்களுக்கு கொண்டாடப்படும் முளைப்பாரி விழாவில் பாடப்படும் இப்பாட்டு, கிராமத்து தெய்வங்களிடம் மழை, மண்வளம் மற்றும் நல்ல விளைச்சல் ஆகியவற்றை வேண்டி பாடப்படுகிறது.

அவருடைய நண்பர்களும் சக ஊழியர்களும் இப்பாடல்களுக்கு ஆடுவார்கள். அதுதான் அவர்களுக்கு வருமானமாக ரொம்ப காலத்துக்கு இருந்திருக்கிறது. ஆனால் தொற்றுநோய் ஊரடங்குகளால் அந்த விழா ஜூலை 2020ல் நடக்கவில்லை. இந்த மாதமும் நடக்கவில்லை (பார்க்க : மதுரையின் திருநங்கை கலைஞர்கள் அனுபவிக்கும் துயரம் ). மேலும் கடைகளில் பணம் சேகரிக்கும் பிற வழி வருமானங்களும் மதுரையிலும் பெங்களூரிலும் கூட அவர்களுக்கு நின்றுவிட்டது. அவர்கள் மாதந்தோறும் ஈட்டிக் கொண்டிருந்த 8000-லிருந்து 10000 ரூபாய் வரையிலான வருமானம் ஊரடங்குகளால் முற்றிலும் இல்லாமல் போய்விட்டது.

PHOTO • M. Palani Kumar
PHOTO • M. Palani Kumar

24 வயது கே.ஸ்வெஸ்திகா (இடது) கும்மிப்பாட்டு பாடுபவர். ஆடுபவர். திருநங்கை என்பதால் அவமானப்படுத்தப்பட்டு இளங்கலை படிப்பை அவர் தொடர முடியாமல் போனது. ஆனால் இன்னும் கல்வி மீதான அவரது ஆர்வம் குறையவில்லை. கல்வி கற்று ஏதேனும் வேலையில் சேர விரும்புகிறார். அவரும் வருமானத்துக்காக கடைகளில் பணம் கேட்டு பெறுவார். இப்போது அந்த வருமானமும் ஊரடங்கால் பாதிப்படைந்து விட்டது.

25 வயது பவ்யஸ்ரீ (வலது) வணிகவியலில் இளங்கலை முடித்தும் அவருக்கு வேலை கிடைக்கவில்லை. அவரும் கும்மிப்பாடல் பாடி ஆடுபவர். பிற திருநங்கைகளுடன் இருக்கும்போது மட்டும்தான் சந்தோஷமாக இருப்பதாக சொல்கிறார். மதுரையிலுள்ள அவரின் குடும்பத்துக்கு செல்ல விருப்பமிருந்தாலும் அங்கு போவதை தவிர்க்கிறார். “ஊருக்கு சென்றால், வீட்டிலேயே இருக்கும்படி சொல்வார்கள். வெளியே யாரிடமும் பேசக் கூடாது என்பார்கள்,” எனக் காரணம் சொல்கிறார்.

PHOTO • M. Palani Kumar
PHOTO • M. Palani Kumar
PHOTO • M. Palani Kumar

23 வயது ஆர்.ஷிஃபானா (இடது) கும்மிப்பாட்டு பாடகர். திருநங்கை என்பதற்காக கொடுமைப்படுத்தப்பட்டதால் இரண்டாம் வருடத்திலேயே கல்லூரி படிப்பை நிறுத்தினார். அவருடைய தாயின் வற்புறுத்தலுக்காக படிப்பை தொடர்ந்து வணிகவியல் இளங்கலை முடித்தார். மார்ச் 2020ல் வந்த ஊரடங்கு வரை மதுரையின் கடைகளில் பணம் சேகரித்து வாழ்க்கை ஓட்டிக் கொண்டிருந்தார்.

34 வயது வி.அரசி (நடுவில்) கும்மிப்பாட்டு கலைஞர். தமிழிலக்கியத்தில் முதுகலை படிப்பும் ஆய்வுப்படிப்பும் கல்வியியல் இளங்கலை படிப்பும் முடித்திருக்கிறார். பள்ளி மாணவர்களால் துன்புறுத்தப்பட்டபோதும் படிப்பில் கவனம் செலுத்தினார். பிறகு பல இடங்களில் வேலைக்கு விண்ணப்பித்தார். இன்னும் வேலை கிடைக்கவில்லை. ஊரடங்குகளுக்கு முன் அவரும் கடைகளில் பணம் பெற்றுதான் செலவுகளை சமாளித்தார்.

30 வயது ஐ.ஷாலினி (வலது) கும்மிப்பாட்டு கலைஞர். கொடுமைகளை சகிக்க முடியாமல் 11ம் வகுப்பிலேயே படிப்பை நிறுத்தினார். கடைகளில் பணம் பெற்று வாழ்ந்தார். கிட்டத்தட்ட 15 வருடங்களாக கலைஞராக இயங்குகிறார். ஊரடங்குகளுக்கு பிறகு வருமானமின்றி திணறுகிறார். தாயை நினைத்து ஏங்குகிறார் ஷாலினி. தாயோடு இருக்க விரும்பும் அவர், “நான் இறப்பதற்கு முன்னால், என் தந்தை ஒருமுறையேனும் என்னிடம் பேசிட வேண்டுமென விரும்புகிறேன்,” என்கிறார்.

தமிழில் : ராஜசங்கீதன்

Reporting : S. Senthalir

எஸ்.செந்தளிர் பாரியில் செய்தியாளராகவும் உதவி ஆசிரியராகவும் இருக்கிறார். பாரியின் மானியப்பண்யில் 2020ம் ஆண்டு இணைந்தார். பாலினம், சாதி மற்றும் உழைப்பு ஆகியவற்றின் குறுக்குவெட்டு தளங்களை அவர் செய்தியாக்குகிறார். 2023ம் ஆண்டின் வெஸ்ட்மின்ஸ்டர் பல்கலைக்கழகத்தின் செவெனிங் தெற்காசியா இதழியல் திட்ட மானியப்பணியில் இருந்தவர்.

Other stories by S. Senthalir
Photographs : M. Palani Kumar

எம். பழனி குமார், பாரியில் புகைப்படக் கலைஞராக பணிபுரிகிறார். உழைக்கும் பெண்கள் மற்றும் விளிம்புநிலை மக்களின் வாழ்க்கைகளை ஆவணப்படுத்துவதில் விருப்பம் கொண்டவர். பழனி 2021-ல் Amplify மானியமும் 2020-ல் Samyak Drishti and Photo South Asia மானியமும் பெற்றார். தயாநிதா சிங் - பாரியின் முதல் ஆவணப் புகைப்பட விருதை 2022-ல் பெற்றார். தமிழ்நாட்டில் மலக்குழி மரணங்கள் குறித்து எடுக்கப்பட்ட 'கக்கூஸ்' ஆவணப்படத்தின் ஒளிப்பதிவாளராக இருந்தவர்.

Other stories by M. Palani Kumar
Translator : Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.

Other stories by Rajasangeethan