ஒரு காவல் நிலையத்திற்கு முன்பாக வைத்து, தன் மனைவியை அடித்து நொறுக்குகிறோமே என்றெல்லாம் அந்த மனிதர் யோசிக்கவேயில்லை.  ஹௌசாபாய் பாடீலின் குடிகாரக் கணவர், அவரை கண்மூடித்தனமாக அடித்து நொறுக்கிக்கொண்டிருந்தார்.  “அவர் அடித்த அடியில் என் முதுகு பயங்கரமாக வலித்தது,” என்று நினைவுகூர்கிறார் ஹௌசாபாய். “பவானி நகரில் [சங்லி] உள்ள ஒரு சிறிய காவல் நிலையத்தின் முன்பாக இதெல்லாம் நடந்தது”.  அந்த காவல் நிலையத்தில் இருக்க வேண்டிய நான்கு காவலர்களில் இரண்டு பேர் மட்டுமே அப்போது அங்கு இருந்தனர்.   “இரண்டு பேர் மதிய உணவு சாப்பிடுவதற்காகப் போயிருந்தனர்.” பிறகு, அவருடைய குடிகாரக் கணவர், “ஒரு பெரிய கல்லை எடுத்தார். இந்தக் கல்லால் அடித்து உன்னை இங்கேயே கொன்றுவிடுவேன் என்று உறுமினார். ”.

இதைக் கேட்டு காவல் நிலையத்திற்குள் இருந்த காவலர்கள் இரண்டு பேரும் வெளியே ஓடிவந்தனர்.  “அவர்கள் எங்கள் சண்டையைத் தீர்க்க முயன்றனர். ” உடனிருந்த தன் சகோதரனிடம், தன்னை மோசமாக நடத்தும் கணவனின் வீட்டிற்குச் செல்லப்போவதில்லை என்று சொன்னார் ஹௌசாபாய்.  “நான் போக மாட்டேன், நான் போகவே மாட்டேன் என்று சொன்னேன்.  நான் உன்னோடேயே இருந்துகொள்கிறேன். உன் வீட்டிற்குப் பக்கத்தில் சிறிய இடம் கொடு. என் புருஷனோடு போய், செத்துப் போவதைவிட, இங்கேயே இருந்து கிடைப்பதை வைத்துப் பிழைத்துக்கொள்கிறேன். இந்த அடியை இனிமேலும் என்னால் தாங்க முடியாது” என்று சொன்னேன். ஆனால், அவரது சகோதரர் இந்த வேண்டுகோளை ஏற்கவில்லை.

காவல்துறையினர் இந்தத் தம்பதியை ரொம்ப நேரத்திற்கு சமாதானம் செய்ய முயற்சித்தனர். முடிவில் ஒரு வழியாக சமாதானம் செய்து, அவர்களுடைய சொந்த ஊருக்கு ரயிலில் ஏற்றிவிட்டனர். “அவர்களே டிக்கட்டையும் வாங்கி எங்கள் கையில் கொடுத்தனர்.  பிறகு என் புருஷனிடம், 'உன் பொண்டாட்டி உன்னுடன் இருக்க வேண்டும் என்று நினைத்தால், அவளை ஒழுங்காக நடத்து. அவளைப் பார்த்துக்கொள். சண்டை போடாதே'  என்று சொன்னார்கள்.

அதே நேரம் ஹௌசாபாயின் தோழர்கள் அந்தக் காவல் நிலையத்தை சூறையாடி, அங்கிருந்த நான்கு ரைஃபிள்களையும் எடுத்துக்கொண்டனர். இதற்காகத்தான் ஹௌசாபாயும் அவருடைய போலி 'கணவரும்' 'சகோதரரும்' அந்த வலிமிகுந்த நாடகத்தை நடத்தி, காவல்துறையினரின் கவனத்தைத் திருப்பினர்.  இது நடந்தது 1943ல். அப்போது அவருக்கு வயது 17. கல்யாணம் ஆகி 3 ஆண்டுகள் கழிந்திருந்தன. சுபாஷ் என்று ஒரு குழந்தை இருந்தது. அந்தக் குழந்தையை தன் உறவினர் ஒருவரிடம் விட்டுவிட்டு ஆங்கிலேயருக்கு எதிரான போரில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார் ஹௌசாபாய்.  இந்த சம்பவம் நடந்து 74  வருடங்களாகிவிட்டன.  கணவன் - மனைவி சண்டை உண்மையைப் போல தென்பட வேண்டும் என்பதற்காக அந்த போலி கணவர், சற்று ஓங்கியே அடித்துவிட்டதை எரிச்சலுடன் குறிப்பிடுகிறார் ஹௌசாபாய். இப்போது அவருக்கு 91 வயதாகிறது. மகாராஷ்டிராவின் சங்கலியில்  உள்ள விடாவில் இருந்தபடி அவரது கதையை எங்களுக்குச் சொன்னார். “என் கண்களும் காதுகளும் இந்த வயதில் எனக்கு சவாலாக இருக்கின்றன. ஆனால், நான் எல்லாவற்றையும் சொல்கிறேன்” என்றார் அவர்.


வீடியோ இணைப்பு: ஒரு தீரமிக்க சுதந்திர போராளியாக ஹௌசாடாய் தனது கதையைச் சொல்கிறார்

அந்தப் பெட்டியில் தூங்க முடியாது. பெட்டி மூழ்கிவிடும். என்னால் கிணற்றில் நீந்த முடியும். ஆனால், அந்த ஆறு வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. மாண்டோவி ஆறு சிறியதல்ல

ஹௌசாபாய் பாடீல் நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடியவர். அவரும் இந்த நாடகத்தில் பங்கேற்ற பிற நடிகர்களும் தூஃபான் சேனா வைச் (சூறாவளி படை) சேர்ந்தவர்கள். இந்த தூஃபான் சேனா என்பது சதாராவில் ப்ரதி சர்க்கார் என்று அழைக்கப்பட்ட தற்காலிக தலைமறைவு அரசின் ராணுவப் பிரிவாகும். இந்த அமைப்பு 1943ல் பிரிட்டிஷ் அரசிடமிருந்து விடுதலை கிடைத்துவிட்டதாக அறிவித்தது.  குண்டல் பகுதியிலிருந்து செயல்பட்ட ப்ரதி சர்க்கார், சுமார் 600 கிராமங்களை தனது கட்டுப்பாட்டில் வைத்து ஒரு அரசைப்போல செயல்பட்டது.  ஹௌசாபாயின் தந்தை நானா பாடீல்தான் ப்ரதி சர்காரின் நிறுவனர்.

1943க்கும் 1946க்கும் இடையில் ஹௌசாபாய் இடம்பெற்ற பல புரட்சி அணிகள், பிரிட்டிஷ் ரயில்களை தாக்கின. காவலர்களின் ஆயுதங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. டாக் பங்களாக்கள் என்று அழைக்கப்பட்ட கட்டடங்களை தீ வைத்துக் கொளுத்தினர் (இந்த டாக் பங்களாக்கள் தபால் நிலையங்களாகவும் அதிகாரிகளின் ஓய்வில்லங்களாகவும் சில சமயங்களில் நீதிமன்ற அறைகளாகவும் செயல்பட்டுவந்தன). ஹௌசாபாய் பொதுவாக ஹௌசாடாய் என்றுதான் அழைக்கப்பட்டார். 'டாய்' என்பது மராத்தியில் மூத்த சகோதரியை மரியாதையுடன் அழைக்கும் விகுதி.

1944ல் போர்ச்சுக்கீசியர் ஆதிக்கத்தின் கீழ் இருந்த கோவாவில் மேற்கொள்ளப்பட்ட தலைமறைவு நடவடிகையிலும் ஹௌசாபாய் பங்குகொண்டார். இதற்காக மாண்டோவி நதியை ஒரு சிறிய மரப்பெட்டி மூலம் கடந்தார். அவருடைய தோழர்கள் உடன் நீந்தி வந்தனர்.  இருந்தபோதும், "நான் என் சகோதரன் பாபு லாட் உடன் சேர்ந்து சுதந்திரப் போராட்டத்தில் ஒரு சிறிய பங்கையே வகித்தேன். எதுவும் மகத்தானதாக செய்யவில்லை" என்கிறார் ஹௌசாபாய்.

“எனக்கு மூன்று வயதாக இருக்கும்போது அம்மா இறந்துவிட்டார். என்னுடைய தந்தை அந்த நேரத்திலேயே சுதந்திரப்போராட்டத்தால் ஈர்க்கப்பட்டிருந்தார். அதற்கு முன்பும்கூட அவர் ஜோதிபாய் பூலேவின் சித்தாந்தங்களால் கவரப்பட்டிருந்தார். தொடர்ந்து மகாத்மா காந்தியின் லட்சியங்கள் அவரைக் கவர்ந்தன. தலதி எனப்படும் கிராம கணக்குப் பிள்ளையாக இருந்தவர், வேலையை விட்டுவிட்டு, போராட்டத்தில் முழு நேரமாக ஈடுபட்டார்.  நம்முடைய அரசைக் கொண்டுவருவதுதான் இலக்காக இருந்தது. பிரிட்டிஷ் அரசுக்குக் கடுமையான சேதத்தை ஏற்படுத்துவதன் மூலம் அவர்களை ஓடச்செய்ய முடியும் என்று நினைத்தார்கள்” என்கிறார் ஹௌசாபாய்.

நானா பாடீலுக்கும் அவரது கூட்டாளிக்கும் எதிராக பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டிருந்தன. “அவர்கள் தலைமறைவாகத்தான் தங்கள் பணிகளைச் செய்ய வேண்டியிருந்தது.” நானா பாடீல் ஒவ்வொரு கிராமமாகச் சென்று, தன் சக்தி வாய்ந்த பேச்சுக்களால் மக்களை புரட்சிக்குத் தூண்டுவார்.  “[பிறகு] மீண்டும் தலைமறைவாகிவிடுவார்.  அவருடன் சுமார் 500 பேர் இருப்பார்கள். அவர்கள் எல்லோர் பெயரிலும் பிடியாணைகள் இருந்தன.”

A photograph of Colonel Jagannathrao Bhosle (left) & Krantisingh Veer Nana Patil
Hausabai and her father Nana Patil

இடது: 1940களில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் ஆசாத் இந்த் சேனாவிலிருந்த (நேதாஜி சுபாஷ் சந்திர போஸால் உந்தப்பட்டு உருவான படை) கர்னல் ஜகன்னாத்ராவ் போஸ்லேவுடன் (அலுவல் உடையில் இருப்பவர்) ஹௌசாபாயின் அப்பா நானா பாடீல். வலது: சுதந்திரத்துக்கு சில காலம் பிறகு மைத்துனர்களின் மனைவிகள் யசோதாபாயுடனும் (வலது) ராதாபாயுடனும் (நடுவில்) ஹௌசாபாய்

ஆனால், இம்மாதிரி துணிகர செயல்பாடுகளுக்கு பெரும் விலை கொடுக்க வேண்டியிருந்தது. பிரிட்டிஷ் அரசு நானா பாடீலின் வயல் மற்றும் சொத்துக்களை பறிமுதல் செய்தது.  அவர் ஒரு பக்கம் தலைமறைவாக இருக்க, அவருடைய குடும்பத்தினர் பெரும் துன்பத்தை அனுபவித்தனர்.

“அரசு எங்கள் வீட்டிற்கு 'சீல்' வைத்தது.  நாங்கள் சமைத்துக்கொண்டிருந்தோம். பக்ரியும் (மகாராஷ்டிராவில் புழக்கத்தில் உள்ள ஒருவகை ரொட்டி) கத்திரிக்காயும் அடுப்பில் இருந்தன. அப்போதுதான் அவர்கள் வந்தார்கள்.  ஒரு அறைதான் எங்களுக்கென இருந்தது. அதில்தான் நாங்கள் எல்லோரும் இருந்தோம். என் பாட்டி, நான், என் சின்னம்மா என பலரும் அதில்தான் வசித்துவந்தோம்".

பறிமுதல் செய்யப்பட்ட ஹௌசாபாயின் சொத்துகளை ஏலம்விட பிரிட்டிஷார் முயற்சித்தனர். ஆனால், அதனை ஏலம்கேட்க யாரும்முன்வரவில்லை.  “ஒவ்வொரு நாள் காலையிலும் மாலையிலும் கிராமத்தின் தண்டோராபோடுபவன், ‘நானா பாடீலின் வயல் ஏலத்திற்கு வருகிறது’ என்று கூவுவான். [ஆனால்] நாங்கள் ஏன் நானாவின் வயலை எடுத்துக்கொள்ள வேண்டும்? அவர் யாரையும் கொள்ளையடிக்கவில்லை, கொலைசெய்யவில்லை என்பார்கள் மக்கள்” என்று நினைவுகூர்கிறார் ஹௌசாபாய்.

இருந்தாலும், “அந்த வயலை நாங்கள் உழ முடியாது. [அதனால்] சாப்பாட்டிற்காக நாங்கள் 'ரோஜ்கார்'க்கு செல்ல வேண்டியிருந்தது. ரோஜ்கார் என்றால் என்னவென்று புரிகிறதா? அடுத்தவர்களுக்காக வேலை செய்வது என்று இதற்கு அர்த்தம்” என்கிறார் ஹௌசாபாய். ஆனால், ஊர்க்காரர்கள் பிரிட்டிஷ் அரசை நினைத்துப் பயந்தார்கள். "அதனால் கிராமத்தில் எங்களுக்கு வேலை ஏதும் கிடைக்கிவில்லை”. பிறகு, தாய்மாமன் ஒருவர் ஒரு ஜோடி மாடுகளையும் வண்டி ஒன்றையும் கொடுத்தார். "அதனை வாடகைக்கு விட்டு நாங்கள் கொஞ்சம் பணம் சம்பாதிக்க முடியும்."

“நாங்கள் வெல்லம், நிலக்கடலை, சோளம் ஆகியவற்றை ஏற்றிச்செல்வோம். (நானாவின் கிராமமான) யெடே மச்சிந்திராவிலிருந்து 12 கி.மீ தூரத்தில் உள்ள டகரி கிராமத்திற்குச் சென்றால் 3 ரூபாய் கிடைக்கும். (20 கி.மீ. தூரத்தில் உள்ள கரட்-இற்குச் சென்றால் 5 ரூபாய் கிடைக்கும். (வாடகைக்கு விடுவதன் மூலம்) அவ்வளவு தான் கிடைக்கும்” என்கிறார் ஹௌசாபாய்.

“என் பாட்டி வயல்களிலிருந்து எதையாவது தோண்டிக் கொண்டுவருவார். நானும் என் சின்னமாவும் எருதுளுக்கு தீனி போடுவோம்.  எங்கள் வண்டியும் [வாழ்க்கையும்]  அவற்றைச் சார்ந்துதான் இருந்தன என்பதால் அந்த மிருகங்களுக்கு சரியாக உணவளிக்க வேண்டும். கிராமத்தினர் எங்களோடு பேச மாட்டார்கள். பலசரக்கடைக்காரர் எங்களுக்கு உப்பைக்கூட தரமாட்டார்.  ‘வேறு எங்காவது இருந்து வாங்கிக்கொள்ளுங்கள்’ என்பார்.  சில நேரங்களில் யாரும் அழைக்காவிட்டாலும்கூட, அவர்களுக்கு தானியங்களை இடித்துத் தருவோம். அப்போதுதான் இரவு சாப்பிட ஏதாவது கிடைக்கும்.  அத்திப் பழங்கள் கிடைக்கும். அதைச் சமைத்துச் சாப்பிடுவோம்”.

Yashodabai (left), Radhabai (mid) and Hausatai. They are her sisters in law
PHOTO • Shreya Katyayini

சுதந்திர போராட்டத்தில் ஏதோவொரு சிறிய வேலை செய்திருப்பதாக ஹௌசாடாய் நினைக்கிறார்

தலைமறைவாக இருந்தபோது ஹௌசாபாயின் முக்கியமான வேலை, துப்பு சேகரிப்பதுதான்.  தற்போதைய சதாரா மாவட்டத்தில் உள்ள வங்கி என்ற இடத்தில் நடந்ததுபோன்ற தாக்குதலுக்கு முக்கிய தகவல்களை அவரும் அவருடைய தோழர்களும் சேகரித்தார்கள். வங்கியில் நடந்த தாக்குதலில் 'டாக்' பங்களா தீ வைத்துக் கொளுத்தப்பட்டது.  “எத்தனை போலீஸ்காரர்கள் இருக்கிறார்கள் - போகிறார்கள், வருகிறார்கள் - என்பது போன்ற தகவல்களைச் சேகரிப்பதுதான் வேலை" என்கிறார் ஹௌசாவின் மகனான சுபாஷ் பாடீல்,  “பங்களாவைக் கொளுத்தும் பணியை பிறர் செய்தனர்." அந்தப் பகுதியில் நிறையப் பேர் இருந்தனர்.  “எல்லாவற்றையும் அவர்கள் எரித்துவிட்டார்கள்,” என்கிறார் சுபாஷ்.

ஹௌசாபாயைப் போல வேறு சில பெண்களும் தலைமறைவாகச் செயல்பட்டார்களா? ஆம் என்கிறார் அவர்.  “ஷலுடாய் [ஆசிரியரின் மனைவி], லிலாடாய் பாடீல், லக்ஷ்மி பாய் நைக்வாடி, ராஜ்மடி பாடீல் - போன்ற பெண்கள் இருந்தனர்.”

ஹௌசாபாயின் சாகசங்களில் பல அவர் 'ஷெலர் மாமா'வுடனும் புகழ்பெற்ற புரட்சியாளரான ஜி.டி. பாபுவுடனும் சேர்ந்து செய்தவை. ‘ஷெலர் மாமா’ என்பது கிருஷ்ண சலுங்கி என்ற தோழரின் பட்டப்பெயர். (உண்மையான ஷெலர் மாமா 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மராத்தா வீரர்).

பாபு லாட் என்பவர் ப்ரதி சர்கார் மற்றும் தூஃபான் சேனாவின் முக்கியத் தலைவர்களில் ஒருவர். “என் அம்மாவின் சகோதரியின் மகன் அவர்” என்கிறார் ஹௌசா.  “வீட்டில் உட்கார்ந்திருக்காதே - என்று பாபு எப்போதும் செய்தி அனுப்புவார்.  நானும் அவரும் அண்ணன் தங்கையைப் போல வேலை பார்ப்போம்.  ஆனால், மக்கள் எங்களைப் பற்றிச் சந்தேகப்படுவார்கள்.  ஆனால், நானும் பாபுவும் உண்மையிலேயே சகோதர-சகோதரி மாதிரிதான் என்பது என் கணவருக்குத் தெரியும்.  என் கணவர் பெயரிலும் பிடியாணை இருந்தது.  கோவாவுக்குப் போகும்போது நானும் பாபுவும்தான் சென்றோம்.”

சதாராவில் உள்ள சேனைக்காக கோவாவிலிருந்து ஆயுதங்களைக் கடத்தும்போது போர்ச்சுகீஸ் காவல்துறையால் கைதுசெய்யப்பட்ட தோழர் ஒருவரை விடுவிக்கத்தான் இந்த கோவா சாகசம் திட்டமிடப்பட்டது.  “பால் ஜோஷி என்பவர் ஆயுதங்களை எடுத்துவரும்போது கைதுசெய்யப்பட்டார். அவர் தூக்கிலிடப்படக்கூடும். அவரை சிறையிலிருந்து விடுவிக்கும்வரை நாம் திரும்பக்கூடாது என்றார் பாபு.”

Hausatai and her family
PHOTO • Namita Waikar
Hausatai (left) and Gopal Gandhi
PHOTO • Shreya Katyayini

ஹௌசாடாய் கடந்த வருடம் குடும்பத்தோடு (வலது) மேற்கு வங்க முன்னாள் ஆளுனரும் மகாத்மாவின் பேரனுமான கோபால் காந்தியுடன். ஜூன் 2017ல் அவருக்கும் இன்னும் பல சுதந்திர போராளிகளுக்குமான பாராட்டு விழாவில் அவர் கலந்து கொண்டார்

ஜோஷியின் சகோதரி என்று சொல்லி ஹௌசாபாய் சிறையில் அவரைச் சந்தித்தார். தப்பிக்கும் திட்டம் ஒன்றை “ஒரு சிறிய காகிதத்தில் எழுதி என் கொண்டையில் மறைத்துவைத்திருந்தேன்"  என்று நினைவுகூர்கிறார் ஹௌசாபாய். காவல்துறையின் கையில் சிக்காத, மீதமுள்ள ஆயுதங்களை எடுத்துக்கொண்டுதான் அவர்கள் திரும்ப வேண்டும். அதனால் திரும்பும் பயணமும் அபாயகரமானதுதான்.

“அந்த போலீஸ்காரர்கள் எல்லோரும் என்னைப் பார்த்துவிட்டனர். அவர்களால் என்னை அடையாளம் சொல்ல முடியும்.” அதனால், ரயிலில் செல்வதற்குப் பதிலாக சாலை மூலம் பயணம் செய்யலாம் என முடிவெடுத்தார்கள்.  “ஆனால், மாண்டோவி ஆற்றை எப்படிக் கடப்பது  – படகு ஒன்றும் இல்லை. சிறிய மீன் பிடிப் படகுகூட இல்லை.  நாங்கள் நீந்தித்தான் கடக்க வேண்டுமென்பது தெரிந்தது. இல்லாவிட்டால் கைதுசெய்யப்படுவோம்.  ஆனால், எப்படிக் கடப்பது? ஒரு மீன்பிடி வலைக்கு உள்ளே பெரிய பெட்டி இருப்பதைப் பார்த்தோம்.” அந்தப் பெட்டியின் மீது அவர் குப்புறப்படுத்துக்கொண்டு, மிதந்தபடியே நள்ளிரவில் நதியைக் கடந்தார். பிற தோழர்கள் நீந்தியபடியே உடன் வந்தனர்.

“அந்தப் பெட்டியில் தூங்க முடியாது. பெட்டி மூழ்கிவிடும். என்னால் கிணற்றில் நீந்த முடியும். ஆனால், அந்த ஆறு வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. மாண்டோவி ஆறு சிறியதல்ல. எங்கள் குழுவைச் சேர்ந்த பிறரும் நீந்திக்கொண்டிருந்தார்கள். அவர்கள் காய்ந்த துணியை தலைமேல் கட்டிக்கொண்டிருந்தார்கள். கரைசேர்ந்த பிறகு அணிந்துகொள்வதற்காக”. இப்படியாக அவர்கள் மாண்டோவி நதியைக் கடந்தார்கள்.

“[பிறகு] நாங்கள் காட்டு வழியில் இரண்டு நாட்கள் நடந்தோம். பிறகு எப்படியோ காட்டிலிருந்து வெளியில்வரும் வழி தெரிந்தது. வீடு திரும்ப 15 நாட்கள் பிடித்தன.”

பாபுவும் ஹௌசாபாயும் ஆயுதங்களைக் கடத்தவில்லை. ஆனால், அவற்றுக்கான ஏற்பாடுகளைச் செய்தனர். இதற்கு சில நாட்களுக்குப் பிறகு ஜோஷி சிறையை உடைத்துத் தப்பினார்.

நாங்கள் எல்லாவற்றையும் முடித்துக்கொண்டு புறப்பட்டபோது, PARI குழுவைப் பார்த்து கண்கள் மினுக்க ஹௌசாபாய் கேட்டார்,  “என்னையும் உங்களோடு கூட்டிச்செல்கிறீர்களா?”

“எங்கே ஹௌசாபாய்?”

“உங்களோடு சேர்ந்து வேலைபார்க்கத்தான்,” என்று சொல்லிச் சிரிக்கிறார் அவர்.

மொழிபெயர்ப்பு: கவிதா முரளிதரன்

பி. சாய்நாத், பாரியின் நிறுவனர் ஆவார். பல்லாண்டுகளாக கிராமப்புற செய்தியாளராக இருக்கும் அவர், ’Everybody Loves a Good Drought' மற்றும் 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom' ஆகிய புத்தகங்களை எழுதியிருக்கிறார்.

Other stories by P. Sainath
Translator : Kavitha Muralidharan

கவிதா முரளிதரன் சென்னையில் வாழும் சுதந்திர ஊடகவியலாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். இந்தியா டுடே (தமிழ்) இதழின் ஆசிரியராகவும் அதற்கு முன்பு இந்து தமிழ் நாளிதழின் செய்திபிரிவு தலைவராகவும் இருந்திருக்கிறார். அவர் பாரியின் தன்னார்வலர்.

Other stories by Kavitha Muralidharan