ராஜூ சௌதுரி ஒரு பல்லுருவக் கலைஞர்- 'பஹுரூபி' என்று வடமொழியில் சொல்லப்படும் பலவுருவத்தோற்றம் தரிக்கும்  அபிநயக் கூத்தாடி (bahu-பல, rupi-உருவங்கள்). 40 வயதான இவர், தன் பதினான்காவது வயதிலிருந்து இதைச் செய்து வருகிறார். "நான் நெடுங்காலமாக இதைச் செய்து வருகிறேன். என் மூதாதையர்களில் பலர் பஹுரூபிகள், என் குழந்தைகளும் கூட" என்கிறார்.

இவர் பேடியா என்னும் (பட்டியல்) பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். 2011ம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கின்படி, மேற்கு வங்காளத்தின் மொத்தப் பட்டியல் பழங்குடி இனத்தவர் தொகையில் 5.8 சதவிகிதம் வகிப்பவர் பேடியா இனத்தவர். பீர்பம் மாவட்ட லாப்பூர் வட்டத்தைச் சேர்ந்த இந்த விஷய்பூர் கிராமத்தில் சுமார் 40 பேடியா குடும்பங்கள் வசிக்கின்றன.

இங்கே இணைக்கப்பட்டுள்ள காணொலியில், ராஜூ 'தாரா சுந்தரி' என்னும் கற்பனைக் கதாபாத்திரத்தின் வேடத்தில் இருக்கிறார். உள்ளூரில் வழங்கி வரும் கதைகளின்படி தாரா சுந்தரி, ஆதிபராசக்தியான காளியின் அம்சம். இதன் மூலம் பர்த்வான் அரசரின் கதையை விவரிக்கிறார் ராஜு. நேர்விற்கேற்ப மாற்றியமைக்கப்பட்ட கதை; சொந்த வார்த்தைகள், வரிகள், பாடல்களைக் கொண்டு பெரும்பாலும் வங்காள மொழியில் கோர்க்கப்பட்ட விவரிப்பு, படைப்பு. காலில் சதங்கைகள் அணிந்து, அதன் மணிகள் கலகலக்க, ஓங்கிய குரலில், மே மாதத்தின் 40 டிகிரி உச்சி வெயிலில், ஒரு மரக்குச்சியால் தாளம் போட்டுக்கொண்டே  பாடி ஆடுகிறார் ராஜு.

காணொளி : கலைவசத்தில் தன்னையே இழக்கும் பல்லுருவக் கலைஞன்

தினந்தோறும் காலையில் ராஜு தனக்குத் தானே ஒப்பனை செய்து கொள்கிறார். சுமார் 30 நிமிடங்களில் முடித்து, தான் சித்தரிக்கப்போகும் கதாபாத்திரத்திற்கு ஏற்ற உடைகளை அணிந்து கொள்கிறார். வியாழன் ஒரு நாள் விடுத்து, வாரத்தின் மீதி ஆறு நாட்களும் பல கிராமங்களுக்கும், ஊர்களுக்கும் சென்று, அங்கு நடைபெறும் பண்டிகைகள், விழாக்கள், கூட்டங்கள் பலவற்றிலும், மற்றும் ஹோலி, தீபாவளி, துர்கா பூஜா, புதுவருடப்பிறப்பு போன்ற சிறப்பு நாட்களிலும் ஆடல், பாடல், கூத்து, குறுநாடகங்கள் நிகழ்த்துகிறார். இதன் மூலம் இவருக்கும் இவர் குடும்பத்தாருக்கும் நாளுக்கு 200-400 ரூபாய் வருமானம் கிட்டுகிறது. பெருவிழாக்களிலும், சிறப்புப் பண்டிகை நாட்களிலும் சுமார் 1000 ரூபாய் வருமானம் கிடைக்கிறது.

ராஜூ குடும்பத்தார் பெரும்பாலும் மேற்கு வங்காளப் பகுதிகளிலேதான் தங்கள் கதைகளை நிகழ்த்துகின்றனர். சில சமயங்களில் அஸாம், தில்லி, பீகார் மாநிலங்களுக்குச் செல்லும் வாய்ப்புகள் கிட்டுகின்றன. பேருந்துகளிலும், ரயில்களிலும் செல்லும்போது, அவையே கூத்து நடத்தும் இடங்களாக மாறிவிடுகின்றன. ஒரு நாளில் 10-12 கிலோமீட்டர் நடந்து செல்வது இவருக்கு  இயல்பான விஷயம். சில சமயங்களில் பெருவிழாக்களுக்குச் செல்லும்போது, ராஜு தன் ஒன்பது வயது மகள் பஞ்சமியையும் உடன் அழைத்துச் செல்கிறார். ஒரு கூத்து நிகழ்ச்சி சுமார் 1-2 மணி நேரம் நீடிக்கும். களிப்படைந்த பார்வையாளர்கள் தங்கள் அன்பளிப்புத் தொகைகளை வழங்கிய பின், சூரியன் சாயும் பொழுதில் வீடு திரும்புகின்றனர் ராஜு குடும்பத்தார்.

Raju posing with his family
PHOTO • Sinchita Maaji
Raju With make-up
PHOTO • Sinchita Maaji

படம் : மகள் பஞ்சமி , மனைவி ஷா வுடன் விஷய்பூர் கிராமத்தில் ராஜூ சௌதுரி

முன்பு, பஹுரூபிகள் கிராமங்களுக்குச் சென்று பெரும்பாலும் ராமாயண, மகாபாரதக் கதைகளையே கூத்தாக நடத்தினர். பதிலுக்கு விவசாயிகளிடமிருந்து தானியங்கள் பெற்றனர். இப்போதெல்லாம் கிராமங்களில் அவ்வளவாக வாய்ப்புகள் கிட்டுவதில்லை. விவசாயிகளின் வருமானம் சரிந்ததாலும், உழவர் குடும்பங்கள் வேலை தேடி ஊர் விட்டு ஊர் செல்வதாலும், தொலைக்காட்சிகள் மூலம் மக்கள் பொழுதுபோக்குவதாலும் இவர்கள் பிழைப்பு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பஹுரூபிகள் கொல்கத்தா, சாந்தி நிகேதன், துர்காபூர் போன்ற இடங்களுக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

முற்காலத்தில் பஹுரூபிகள் ராமாயண மகாபாரதக் கதைகளை நிகழ்த்தியபோது சிறார் திருமணம் ஒழித்தல், பெண்கள் முன்னேற்றம் போன்ற முற்போக்கான செய்திகளை இணைத்து வழங்கினர். இன்றைய காலக்கட்டத்தில் வங்காளத் திரைப்படங்களிலிருந்து நகைச்சுவை பாகங்களையும், பாடல்களையும் இணைத்து மக்களைக் களிப்பூட்டுகின்றனர். சுமார் 20 வருடங்களுக்கு முன்பு ராஜு, மக்கள் ஆதரவிற்காகவும் சம்மதத்திற்காகவும் புராணக்கதைகளையும், வரலாறு செறிந்த ராஜா ராணிக் கதைகளையும், திரைப்படப் பாடல்களையும் சேர்த்துத் தன் குறு நாடகங்களைத் தொகுக்க ஆரம்பித்தார். அவர் கலையின் பாரம்பரிய வடிவமும், ஆழமும் மெதுவாக மறையத் தொடங்கிவிட்டன.

தமிழில்: சந்தியா கணேசன்

Sinchita Maji

சிஞ்சிதா மாஜி பாரியின் மூத்த காணொளி தொகுப்பாளர் மற்றும் சுயாதீன புகைப்படக் கலைஞரும் ஆவணப்பட இயக்குநரும் ஆவார்.

Other stories by Sinchita Maji
Translator : Sandhya Ganesan

சந்தியா கணேசன் காண்டெண்ட் ரைட்டர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் மாண்டிசரி ஆசிரியை. கார்பரேட் செக்டரிலும் பல வருட அனுபவம் கொண்டவர். தற்போது Enabled Content என்ற பெயரில், குழந்தைகளுக்கான காண்டெண்ட் உருவாக்கவதில் ஈடுபட்டுள்ளார்.

Other stories by Sandhya Ganesan