பாகெளலி சாஹு தினமும் ஷங்கர்தா கிராமத்திலிருந்து தம்தாரி நகரத்திற்கு அந்தந்த பருவத்தை பொறுத்து இரண்டு மூட்டை வைக்கோல் அல்லது புல்லை சுமந்து செல்கிறார்,. அவர் கன்வார் என்று அழைக்கப்படும் ஒரு குச்சியுடன் வைக்கோலையோ அல்லது புல்லையோ கட்டுகிறார். அதை அவர் தோள்களில் வைக்கிறார். சத்தீஸ்கரின் தலைநகரான ராய்ப்பூரிலிருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தம்தாரியில், பாகெளலி, கால்நடைகளை வீட்டு விலங்குகளை வளர்ப்பவகளுக்கோ அல்லது சொந்த கால்நடைகளை வளர்ப்பவர்களுக்கோ  மூட்டைகளை தீவனமாக விற்கிறார்.

அவர் பல ஆண்டுகளாக தம்தாரிக்கு செல்வதும் திரும்புவதுமாக இருக்கிறார். எல்லா பருவங்களிலும் வாரத்தில் நான்கு நாட்கள், சில நேரங்களில் ஆறு நாட்கள், காலையில் பள்ளிக்கு சைக்கிள் ஓட்டும் குழந்தைகளுடன் நடந்து செல்கிறார். தொழிலாளர்கள், கைவினை கலைஞர்கள் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள் வேலை தேடுவதற்காக நகரத்திற்குச் செல்கின்றனர்.

பாகெளலி தனது 70க்களில் இருக்கிறார். சுமார் 4.5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தம்தாரியை அடைய அவருக்கு ஒரு மணி நேரமாகிறது. சில நாட்களில், அவர் அதே பயணத்தை இரண்டு முறை செய்கிறார் - அது மொத்தம் 18 கிலோமீட்டராக உள்ளது. விவசாயிகளிடமிருந்து வைக்கோல் வாங்குவதற்கோ அல்லது கால்வாய், நெல் பண்ணைகள் அல்லது சாலையின் ஓரத்தில் வளரும் காட்டு புற்களை வெட்டுவதற்கோ செலவழித்த நேரம் இதில் சேர்க்கப்படவில்லை.

PHOTO • Purusottam Thakur
 Dhaniram cycles
PHOTO • Purusottam Thakur

பாகெளலி கூறுகிறார்: நாங்கள் மிகவும் ஏழ்மையானவர்கள், நாங்கள் வாழ்வதற்கு கொஞ்சம் சம்பாதிக்கிறோம் '. வலது: அவரது மகன் தனிராம் தினசரி கூலி வேலைக்காக தம்தாரியில் ஒரு தொழிலாளர் நக்காவுக்கு சைக்கிளில் செல்கிறார்

இந்த சாலையில் பல ஆண்டுகளாக நான் அவரைப் பார்த்திருக்கிறேன், ஆச்சரியப்பட்டேன்: அவர் ஏன் இந்த வயதில் இத்தகைய கடுமையான வேலைகளை செய்கிறார்? "நாங்கள் மிகவும் ஏழ்மையானவர்கள்; நாங்கள் வாழ்வதற்கு கொஞ்சம் சம்பாதிக்கிறோம். தம்தாரியில் இருந்து திரும்பும் போது, நான் வீட்டிற்கு சந்தையில் இருந்து சில காய்கறிகளை வாங்குவேன், ”என்று அவர் என்னிடம் கூறுகிறார். நாங்கள் சிறிது நேரம் ஒன்றாக நடந்தோம், நான் அவருடைய வீட்டிற்கு பின்தொடர்ந்தேன். அங்கு செல்லும் வழியில், அவர் கூறுகிறார், “நான் விவசாயிகளிடமிருந்து வைக்கோலை 40-60 ரூபாய்க்கு வாங்குகிறேன்; அதை தம்தாரியில் விற்கிறேன். “நாள் முடிவில், பாகெளலி ரூ .80 முதல் ரூ .120 வரை சம்பாதிக்கிறார்.

நான் கேட்டேன் - உங்களுக்கு முதியோர் ஓய்வூதியம் கிடைக்குமா? . “ஆம், என் மனைவிக்கும் எனக்கும் மாதந்தோறும் தலா ரூ. 350 கிடைக்கிறது. ஆனால் நாங்கள் அதை வழக்கமாகப் பெறவில்லை, சில நேரங்களில் ஓய்வூதியப் பணத்தை இரண்டு முதல் நான்கு மாதங்கள் தாமதமாகப் பெறுகிறோம். ” கடந்த நான்கு ஆண்டுகளாக மட்டுமே அவர்கள் அதைப் பெறுகின்றனர்.

PHOTO • Purusottam Thakur
 Bhagauli walks to sell the fodder in town
PHOTO • Purusottam Thakur

இடது: சங்கர்தாவில் உள்ள தனது தந்தை வீட்டை களிமண் மற்றும் செங்கற்களால் பாகெளலி  முன்னேற்றினார். வலது: பல ஆண்டுகளாக அவர் தீவனத்தை விற்க தம்தாரி செல்லும் பாதையில் நடந்திருக்கிறார்

நாங்கள் பாகெளலியின் வீட்டை அடைந்தப்போது, அவரது மகன் தனிராம் சாஹு தினசரி கூலி வேலையைத் தேடி ஒரு சைக்கிளில் புறப்பட இருந்தார். அவர் தம்தாரி மையத்தில் உள்ள ‘கடிகார வட்டத்திற்கு’ செல்வார்.  அங்கு ஒரு நாளைக்கு கூலியாக சுமார்  250 ரூபாய்க்கு ஒப்பந்தக்காரர்கள் தொழிலாளிகளை வேலை எடுப்பார்கள். அவருக்கு என்ன வயதுஎன்று நான் அவரிடம் கேட்கும்போது, அவருடைய பதில் அவரது தந்தையின் பதிலை ஒத்த இருந்தது. “நான் கல்வியறிவற்றவன், எனது வயது எனக்குத் தெரியாது. நீங்களே யூகித்துக்கொள்ளவும், ”என்கிறார் தனிராம், அநேகமாக அவருக்கு 30 வயது இருக்கலாம். அவர் எத்தனை நாட்கள் வேலை செய்கிறார்? "வாரத்தில் எனக்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் வேலை கிடைத்தால், அதுவே பெரிய விஷயம்!" ஒருவேளை தந்தை மகனை விட அதிகமாக - கடினமாக உழைக்கிறார்.

பாகெளலியின் மனைவி கெடின் சாஹு வீட்டு வேலைகளில் மும்முரமாக இருக்கிறார். தனிராமின் இரண்டு மகன்களையும் பள்ளிக்குத் தயார்படுத்துகிறார் - அவர்கள் 1 மற்றும் 2 ஆம் வகுப்பில் இருக்கின்றனர். நான் பாகெளலியிடம் அவரின் தற்போதைய வீட்டை அவர் கட்டினாரா அல்லது அவரின் பெற்றோர்கள் கட்டினாரா என்று. "நான்தான். எங்கள் பழைய வீடு என் தந்தை மண்ணால் கட்டினார். பின்னர், நான் இந்த வீட்டை மண், களிமண் மற்றும் செங்கற்களால் கட்டினேன். ” என்றார். பாகெளலி நினைவு கூர்ந்தார் - அவரின் தந்தை ஒரு விவசாயிக்கு மாடு மேய்ப்பவராக பணிபுரிந்தார்.  அவரின் மகள், திருமணமாகி மாமியார்-மாமனாருடன் வாழ்வதாக அவர் கூறுகிறார்.

School girls riding their cycles in town
PHOTO • Purusottam Thakur
hawkers and labourers going to town
PHOTO • Purusottam Thakur
Labourers travelling to town for work
PHOTO • Purusottam Thakur

அதிகாலையில், தங்கள் அன்றாட வருமானத்திற்காக நகரத்திற்குச் செல்லும் வணிகர்கள் மற்றும் தொழிலாளர்களுடன் ஷங்கர்தா-தம்தாரி சாலை பரபரப்பாக உள்ளது

பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா மூலம் அவர்களுக்கு வீடு கிடைக்குமா? “நாங்கள் விண்ணப்பித்தோம். நாங்கள் பல முறை பஞ்சாயத்துக்குச் சென்று சர்பஞ்ச் மற்றும் பிற உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்டோம், ஆனால் அது நடக்கவில்லை. எனவே நான் இப்போதைக்கு அந்த யோசனையை விட்டுவிட்டேன். ”

ஆனால், அவர் மேலும் கூறுகையில், கிராமவாசிகளுக்கு “பாடா அகால்” (1965-66ல் ஏற்பட்ட பெரிய வறட்சி) காலத்தில், அரசாங்கம் உதவிக்கு வந்தது. அப்போது மாநிலத்திலிருந்து அவர்களுக்கு கோதுமை மற்றும் ஜோவர் கிடைத்தது. சாவான் (ஒரு தினை) மற்றும் மாக்ரியா பாஜி (ஒரு காய்கறி) போன்ற காடுகளில் வளரும் களைகளைப் போலவே இதுவும் தங்கள் உயிரைக் காப்பாற்றியது என்று பாகெளலி கூறுகிறார்.

அவரின் குடும்பம் ஒருபோதும் சொந்தமாக நிலம் கொண்டிருக்கவில்லை - பாகெளலியின் தந்தையின் தலைமுறையிலோ, அவரின் காலத்திலோ, அல்லது அவரின் மகனின் காலத்திலோ அவர்களுக்கு சொந்தமாக இல்லை. "இந்த கைகள் மற்றும் கால்களைத் தவிர வேறு எதுவும் எங்களிடம் இல்லை, அவைதான் என் தந்தையிடமும் எங்களிடமும் உள்ள ஒரே சொத்து".

தமிழில்: ஷோபனா ரூபகுமார்

Purusottam Thakur

புருஷோத்தம் தாகூர், 2015ல் பாரியின் நல்கையைப் பெற்றவர். அவர் ஒரு ஊடகவியலாளர் மற்றும் ஆவணப்பட இயக்குநர். தற்போது அஸிஸ் பிரேம்ஜி அமைப்பில் வேலைப் பார்க்கிறார். சமூக மாற்றத்துக்கான கட்டுரைகளை எழுதுகிறார்.

Other stories by Purusottam Thakur
Translator : Shobana Rupakumar

சென்னைச் சேர்ந்த பத்திரிகையாளரான ஷோபனா ரூபகுமார், பெண்கள் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான ஊடகப்பணியில் ஈடுபட்டுள்ளார்.

Other stories by Shobana Rupakumar