இரண்டு மாதங்களுக்கு முன்னர் பிறந்த எருமைக் குட்டி, ஜனவரி மாதத்தில் இறந்தபோது சரிகா சாவந்த் கவலைப்பட்டிருக்கிறார். “சோளத்தில் பெரிய புழு இருந்துள்ளது என்று நினைக்கிறேன். அதனால் நேத்திலிருந்து எருமைக் குட்டி பால் குடிக்கவில்லை” என்றார் அவர். 24 வயதான அவரை நான் மஸவாத் நகரில் உள்ள கால்நடைகளுக்கான காப்பகத்தில் பார்த்தேன்.
போன வருட தீபாவளிக்கு இரண்டு பசுக்களை விற்பனை செய்யவேண்டிய நெருக்கடிக்கு ஆளானார்கள் சரிகாவும் அவரது கணவர் அனில் சாவந்த்தும். அதற்குப் பிறகுதான் எருமைக் குட்டி இறந்துபோன நட்டத்தை அவர்கள் சந்தித்தார்கள். இந்த குடும்பத்துக்கு தற்போது நான்கு ஜெர்சி பசுக்கள் உள்ளன. மூன்று எருமைகளும் இரண்டு கன்றுக்குட்டிகளும் உள்ளன. பால் விற்பனைதான் அவர்களின் முக்கியமான வருமானம். “இரண்டு வருசமா மழை பெய்யவில்லை.போன வருடம் தீபாவளிக்குப் பிறகு தண்ணீர் பற்றாக்குறை இருக்கு. (அக்டோபர்-நவம்பர் 2018) கிராமத்தில் உள்ள கிணறுகள் எல்லாம் வறண்டுபோய்விட்டன. தீவனம் இல்லை. பச்சைப்புல் எங்கேயும் இல்ல. எங்க மாடுங்களுக்கு நாங்க எப்படி தீனி வைப்போம்? வாங்கின கடனும் ஏறிக்கிட்டே போகுது.” என்கிறார் சரிகா.
அவர்கள் மராத்தா சமூகத்தைச் சேர்ந்தவர்கள். கணவனும் மனைவியும் வறட்சியைத் தாங்க முடியாமல் மஸ்வாத் நகரில் உள்ள கால்நடைகள் காப்பகத்துக்கு இடம் மாற்றிப்போனார்கள். அவர்களின் கிராமத்தில் உள்ள 994 பேர் மகாராஷ்ட்டிராவின் சடாரா மாவட்டத்தில் உள்ள மான் வட்டாரத்துக்குப் போயிருக்கின்றனர்.
2018ஆம் வருடம் அக்டோபர் 31 அன்று மகாராஷ்டிரத்தின் 26 மாவட்டங்களில் உள்ள 151 வட்டாரங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டிருப்பதாக அரசால் அறிவிக்கப்பட்டன. அவற்றில் 112 வட்டாரங்கள் மிகமோசமாக பாதிக்கப்பட்டிருந்தன. சடாரா மாவட்டத்தின் மான் மற்றும் கத்தாவ் தாலுகாக்கள், சங்லி மாவட்டத்தின் ஜாட், அட்பாடி, கவாதேமகான்கள் தாலுகாக்கள், சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள மால்சிராஸ், சங்கோல், மான்தேஷ் பகுதியில் உள்ள அனைத்து வட்டாரங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டன. மான்தேசி பவுண்டேசன் மூலமாக அமைக்கப்பட்ட கால்நடை காப்பகத்தில் எட்டாயிரம் கால்நடைகள் உள்ளன. 64 கிராமங்களிலிருந்து வந்துள்ள 2500 பேர்கள் வரை இங்கு தங்கியுள்ளனர். (பார்க்க: Families separated by the search for fodder மற்றும் Chimnabai gets to eat finally, with 8000 others )
சிவப்பா சரிகாவின் சகோதரரோடு திகான்சி கிராமத்தில் உள்ள செங்கல்சூளையில் வேலை செய்கிறார். அவர்களுக்கு உதவுவதற்காக வந்திருக்கிறார். அவர்களின் கூடாரம் அந்த கால்நடை காப்பகத்தின் 19வது வார்ட்டில் உள்ளது, அது மற்ற கூடாரங்கள் மாதிரியானதல்ல.. அது வசதியாக மற்ற கூடாரங்களை விட அதிகமான பொருள்களைக் கொண்டு கட்டப்பட்டிருக்கிறது. காஸ் ஸ்டவ், உரலும் உலக்கையும், பாய் மற்றும் சில விரிப்புகள் அங்கே இருந்தன, சின்ன நாய்க்குட்டி ஒன்றும் ராத்திரி எல்லாம் இதனை காத்துக்கிடக்கிறது,
சாவந்த்துகள் ஏழை விவசாயிகள் அல்ல என்பது தெளிவான விஷயம். ஆனால், பெரிய அளவில் தாக்குகிற வறட்சி யாரையையும் விட்டுவைக்கவில்லை. ஏழையோ, பணக்காரரோ நிலம் இருப்பவரோ இல்லாதவரோ தலித்தோ அல்லது சாதிய படிநிலையில் உயர்ந்த இடத்தில் இருப்பவரோ யாராக இருந்தாலும் அவரை வறட்சி பாதித்திருக்கிறது. மகாராஷ்டிரத்தில் பல கிராமங்களில் இதுதான் நிலை.
சாவந்துகளின் கூடாரத்துக்கு வெளியில் தனி ஷெட் பச்சை வலையாலும் சேலைகளாலும் கட்டப்பட்டிருக்கிறது. அதற்குள்ளே அவர்களது ஜெர்சி பசுக்களும் எருமைகளும் வரிசையாக நிற்கின்றன. “இவை எல்லாமே பால் கறக்கின்றன. அவற்றுக்கு அதிகமான தீவனம் தேவை.மக்காச் சோள தீவனமும் அவற்றுக்குக் கொடுக்கவேண்டும். 1200 ரூபாய்க்கு கொடுத்து வாங்கிய தீவன மூட்டை ஒரு வாரம் வர மாட்டேங்குது. ஒரு மூட்டை புண்ணாக்கு 1260 ரூபாய். சோளத் தீவன ஒரு 900 ரூபாய். புண்ணாக்கு வாங்கிய கடன் 7000 ரூபாய் வரை இருக்கு. அவங்களுக்கு பணம் கொடுக்கணும். தண்ணிக்காக எவ்வளவு செலவு ஆச்சுன்னு நான் எழுதிக்கூட வைக்கல” என்கிறார் சரிகா.
இரண்டு பசுக்களை விற்றபிறகும் சரிகாவும் அனிலும் இன்னமும் மாட்டுத்தீவனத்துக்காகவும் தண்ணீருக்காகவும் செலவு செய்தவகையில் 70 ஆயிரம் ரூபாய் கடனோடு இருக்கின்றனர். “புல்தானா நகர்புற வங்கியில் 42 ஆயிரம் கடன் வாங்கினோம். மாசம் 2222 ரூபாய் என்ற தவணையில் இரண்டு வருடத்தில் திருப்பிக் கட்டணும் அதை” என்கிறார் சரிகா.“ 15 ஆயிரம் ரூபாயை மாதம் ரூ. 3 வட்டிக்கு வட்டிக்கடைக்காரர்கிட்ட வாங்கியிருக்கோம். சுய உதவிக்குழுவில் பத்தாயிரம ரூபாய் 2 வட்டிக்கு வாங்கியிருக்கிறோம். இவை எல்லாம் வட்டியோடு திருப்பிக் கட்டணும். இவ்வளவு சுமை எங்க தலையில இருக்கு” என்கிறார் சரிகா.
குடும்பத்தின் வருமானத்தை அதிகப்படுத்துவதற்காக அனில் பலவிதமான வேலைகளை முயற்சித்தார். தனது பிஏ பட்டப்படிப்பை பாதியில் அவர் விட்டார். ஒரு மோட்டார் கம்பெனியில் உதவியாளர் பணிக்குப்போனார். 4,5 வருடங்கள் அதனைச் செய்தார். மும்பையில் சில மாதங்கள் சின்ன சின்ன வேலைகள் செய்தார். 2012இல்தான் அவர் ஊருக்குத் திரும்பினார். அகோலா எனும் கம்பெனியின் மூலதனத்தோடு கோழி வளர்க்க ஆரம்பித்தார். தண்ணீர் தட்டுப்பாடு வந்ததும் எந்த வியாபாரத்தையும் தொடர்ந்து நடத்தமுடியவில்லை. ஐயாயிரம் கோழிகளாக வளர்ந்திருந்தது 3500 ஆக குறைந்தது. கடந்த ஏப்ரலில் அனில் எல்லாவற்றையும் விற்றுவிட்டார். பண்ணையை சுத்தம் செய்துவிட்டார். இந்த வியாபாரத்தில் ஏழு லட்சம் கடன் ஏற்பட்டது. அதில் இன்னும் ஒரு லட்சத்தை திருப்பிக்கட்டவேண்டும் அவர்.
“தீபாவளிக்கு முன்னாடியே எல்லா கிணற்றிலும் தண்ணீர் வற்றிவிட்டது” என்கிறார் அவர். “தனியார் லாரிகளிடம் போக வேண்டியதாகியது. 5000 லிட்டர் தண்ணீர் 1200 ரூபாய். நாங்கள் இந்த கால்நடை காப்பகத்துக்கு வருவதற்கு முன்னால் வாரம் இரண்டு லாரித் தண்ணீர் வாங்கிக்கொண்டு இருந்தோம். கால்நடைகளுக்கும் சரி பறவைகளுக்கும் சரி அவற்றுக்கு நிறைய தண்ணீர் தேவையாக இருக்கிறது”
சரிகாவும் குடும்ப வருமானத்தை அதிகப்படுத்த முயற்சிகள் செய்தார்.“எனக்கு சின்ன வயசிலேயே கல்யாணம் ஆகிவிட்டது. படிப்பை முடிக்கக்கூட முடியல. ஆனால், எனது கணவர் எனது படிப்பை முடிக்க உதவி செய்தார். அதனால் நான் உயர்நிலைப் பள்ளி முடித்தேன். திறன் மேம்பாட்டு பயிற்சியில் ஏதாவது சேரலாமா என்று முயற்சித்தேன். ஏதாவது வேலை கிடைக்குமா என்றும் தேடினேன். ஆனால் எனது குழந்தைகள் ரொம்பவும் சின்னவங்களா இருந்தாங்க. அவுங்கள விட்டுட்டு என்னால வேலைக்கு போக முடியல. மஸ்வாத் நகருக்கு நேரடியான பஸ் போக்குவரத்தும் கிடையாது. ரோடும் படுமோசம். தினமும் அதில் வேலைக்குப்போய் வரணும்னா சிரமம். ” என்றார் சரிகா.
இரண்டு வருட வறட்சி என்பது குடும்பத்தின் 1.5 ஏக்கர் நிலத்தையும் தரிசாகிவிட்டது. “மழை பெய்தால் 5,6 குவிண்டால் சோளம் விளையும். 8,10 குவிண்டால் கம்பும் விளையும். அதனால எங்களுக்கு போதுமான தானியமும் வைக்கோலும் கிடைக்கும். அதை வைச்சு நாங்கள் எங்களோட மாடுங்களுக்கு தீவனம் கொடுத்திருவோம்” என்கிறார் அனில். “ ஆனால் பருவ காலம் முழுமையும் எங்களுக்கு நட்டம்தான். சோளமும் கிடைக்கல. கம்பும் கிடைக்கல. வெறும் வைக்கோல்தான் கிடைச்சது. ரபி பருவகாலத்திலயும் எங்களுக்கு எதுவும் கிடைக்கல.” என்றார் அவர்.
அவர்களது பசு மாடுகளின் பாலை அவர்கள் மான் பிளாக்கில் உள்ள புல்கோடி கிராமத்தில் உள்ள ஒரு பால் கடைக்கு விற்பனை செய்தனர். “ஒரு நாளைக்கு 3,4 லிட்டர்கள் கிடைக்கும். அதில ஓரளவை நாங்க லிட்டர் 23 ரூபாய்க்கு அந்தக் கடைக்கு விற்பனை செய்தோம். மிச்சத்தை நாங்க குடும்பத்தின் தேவைக்கு வைச்சுக்கிட்டோம்.” என்கிறார் சரிகா. “ எனது கணவர் எருமைப்பாலை லிட்டர் 40 ரூபாய்க்கு மஸ்வாத் நகரில் விற்பனை செய்தார். பால் மூலமாக எங்களுக்கு மாதம் நான்காயிரம் வரைக்கும் கிடைச்சது. கால்நடைகளுக்கு தீவனம் உள்ளிட்ட செலவுகள் 2ஆயிரம் வரை ஆகும். கடனை எப்படி திருப்பிக் கட்டுவது என்பதுதான் முக்கியமான கேள்வி. என்னோட குழந்தைகளின் படிப்புச் செலவுகளுக்கு என்னோட அண்ணன்தான் பணம் தர்றார். அதனால அதை மட்டுமாவது எங்களால சரி செய்ய முடியுது” என்றார்.
சரிகா - அனில் தம்பதியினரின் கடைக்குட்டிக் குழந்தை நான்கு வயதான ஸ்வர்ணா அவர்களோடு காப்பகத்தில் இருக்கிறது. மூத்த குழந்தைகளான தனிஷ்காவும், ஸ்ரத்தாவும் பக்கத்து மாவட்டமான சங்கியின் அட்பாடி வட்டாரத்தில் திகான்சியில் உள்ள ஒரு பள்ளியில் படிக்கிறார்கள். அங்கேதான் சரிகாவின் அம்மாவும் அண்ணனும் வசிக்கிறார்கள். “எங்களுக்கு மூன்று பெண் குழந்தைகள். எனவே, எனது கணவர் அரசு வேலைக்கும் போகமுடியாது. ”என்கிறார் சரிகா. இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருப்பவர்கள் அரசு வேலை பெறமுடியாது. அரசு திட்டங்களைப் பெற முடியாது. உள்ளூர் பஞ்சாயத்து தேர்தல்களில் போட்டியிட முடியாது என்று அரசாங்கம் கொண்டு வந்திருக்கிற விதிமுறைகளை மனதில் கொண்டுதான் சரிகா அப்படிச் சொல்கிறார்.
“இதெல்லாம் முக்கியமான பிரச்சனைங்க. ஆனா, பால் வியாபாரம் எனக்குப் பிடிச்சுருக்கு,எனக்கு எங்கேயும் போகத் தேவையில்ல. பத்து நாளுக்கு ஒரு முறை கட்டாயம் வருமானம் வரும். சுற்றிலும் கால்நடைகளோடு இருக்கும்போது எப்படி நேரம் பறக்கும்னு தெரியாது. ஆனா இந்த வறட்சி வந்து எங்களோட வாழ்க்கையை ரொம்ப கஷ்டமாக்கியிருச்சுங்க” என்று விரக்தியோடு பேசுகிறார் சரிகா.
தமிழில் : த. நீதிராஜன்