பசி தான் ஜலால் அலியை மூங்கில் மீன்பிடிப் பொறிகளை உருவாக்கக் கற்றுக் கொள்ளத் தூண்டியது.
தினசரி கூலி வேலை செய்து பிழைக்க முயன்ற இளைஞன் ஜலால் அலி. அந்த வேலையும் மழைக்காலங்களில் குறைந்து விடும்: “மழைக்காலம் வந்துவிட்டால், ஒரு சில நாட்களுக்கு நெல் நாற்றுகளை நடுவதைத் தவிர வேறு எந்த வேலையும் இருக்காது,” என்று அவர் கூறுகிறார்.
ஆனால் பருவமழை, அவர் வசிக்கும் தர்ராங் மாவட்டத்தில் உள்ள மௌசிதா-பலபாரியின் கால்வாய்கள் மற்றும் சதுப்பு நிலங்களில், மீன்களை அதிகப்படுத்தி விடும். அதனால் மூங்கில் மீன்பிடி பொறிகளுக்கு தேவை அதிகரித்தது. "எனது குடும்பத்திற்கு உணவளிப்பதற்காக, நான் மூங்கில் மீன்பிடி பொறிகளை எப்படி தயாரிப்பது என்பதை கற்றுக்கொண்டேன். பசிக்கும்போதுதான் வயிற்றுக்கு உணவளிக்க எளிதான வழி என்னவென்று யோசிப்போம்” என்று சிரிக்கிறார், இந்த 60 வயது முதியவர்.
இன்று ஜலால், செப்பா, போஸ்னா மற்றும் பைர் ஆகிய மூங்கில் பழங்கால மீன்பிடி பொறிகளை செய்யும் தலைசிறந்த கைவினைஞராக உள்ளார். இதன் மூலம் நீர்நிலைகளில் இருந்து பலவகை மீன்களைப் பிடிக்க முடியும். அஸ்ஸாமில் உள்ள மௌசிதா-பலபாரி சதுப்பு நிலங்களை ஒட்டிய பப்-படோகாட் கிராமத்தில் உள்ள இந்த வீட்டில் இவர் இதனை உருவாக்குகிறார்.
“இருபது வருடங்களூக்கு முன்பு வரை, எனது கிராமத்திலும், அருகிலுள்ள கிராமங்களிலும், கிட்டத்தட்ட ஒவ்வொரு வீட்டிலும் மீன் பிடிக்க [மூங்கில்] பொறியைப் பயன்படுத்தினர்,” என்கிறார் ஜலால். அப்போது மூங்கில் பொறிகள் அல்லது கையால் செய்யப்பட்ட ஷிவ் ஜால் பயன்படுத்தப்படும். அவர் உள்நாட்டில் டோங்கி ஜால் அல்லது ஜெட்கா ஜால் என்றும் அழைக்கப்படும் வலைகளை குறிப்பிடுகிறார் - அது, மூங்கில் கம்பிகள் அல்லது சரங்களுடன், நான்கு மூலைகளில் இணைக்கப்பட்ட ஒரு சதுர வடிவ வலை.
உள்ளூர் மூங்கில் மீன்பிடி பொறிகள் அவற்றின் வடிவத்திற்கேற்ப பெயரிடப்படுகின்றன: "செப்பா என்பது நீள்வட்ட வடிவத்துடன் ஒரு டிரம் போன்றது. பைரியும் நீள்வட்ட வடிவம் தான், ஆனால் அது உயரமாகவும் அகலமாகவும் இருக்கும். டார்கி ஒரு செவ்வகப் பெட்டி போன்றது,” என்று விளக்குகிறார் ஜலால். டுயர், டையார் மற்றும் போயிஷ்னோ பொறிகள், ஓடும் நீரில் அமைக்கப்படுபவை, பெரும்பாலும் நீர் தேங்கிய நெல், மற்றும் சணல் வயல்களில், சிறு கால்வாய்கள், சதுப்பு நிலங்கள் அல்லது நதிகள் சங்கமிக்கும் இடங்களில் அமைக்கப்படுபவை.














