அவர் செய்தது ஒரு வியப்பூட்டும் மேஜிக் நிகழ்ச்சி போல இருந்தது. தன்னுடைய பழைய பெட்டியில் இருந்து டி.ஃபாத்திமா பெரும் செல்வக் குவியல்களை ஒவ்வொன்றாக எடுத்து வெளியே வைக்கிறார். ஒவ்வொன்றும் ஒரு அற்புதமான கலைப்படைப்பு.. தூத்துக்குடிக் கடற்கரையில் இருந்து வெகு தொலைவில் வாழ்ந்த ஒரு வலுவான பெரிய மீன், இன்று சூரிய ஒளி, உப்பு முதலியவற்றின் உதவியோடு, திறன் வாய்ந்த கரங்களால், கருவாடாக, ஒரு கலைப்படைப்பு போல உருவாக்கப்பட்டிருக்கிறது.
ஃபாத்திமா ஒரு கட்டப்பாறை மீனை உயர்த்திப் பிடிக்கிறார். அவர் உயரத்தில் பாதி இருக்கிறது. அதன் வாயில் இருந்து வால் வரை அதன் உடல் வெட்டப்பட்ட தடம் தெரிகிறது. அப்படி அதன் உடல் வெட்டப்பட்டு, அதன் உள்ளே இருக்கும் குடல் முதலானவை அகற்றப்பட்டு, உப்பு திணிக்கப்பட்டு, உக்கிரமான வெயிலில் கருவாடாக மாறியிருந்தது அந்தக் கட்டப்பாறை மீன். தெரெசாபுரத்தின் உக்கிரமான வெயிலில், மீன், மண், மக்கள் என அனைவருமே காய்ந்து போய்க் கிடக்கிறார்கள்.
ஃபாத்திமாவின் முகத்திலும் கைகளிளும் உள்ள சுருக்கங்கள், மீனைக் கருவாடாக்கும் சிரமமான தொழிலின் கதையைச் சொல்கின்றன. ஆனால், ஃபாத்திமா நமக்கு வேறொரு கதையைச் சொல்லத் தொடங்குகிறார். அது அவரும், அவரது ஆச்சியும் கருவாடுகளை உற்பத்தி செய்து விற்ற பழங்கதை. இன்னொரு ஊரில், இன்னொரு தெருவில் நடந்த கதை. 2004 ஆம் ஆண்டு வந்த சுனாமி, எல்லாவற்றையும் புரட்டிப் போட்டது. அது சகதியையும், சாக்கடையையும் வீட்டுக்குள் கொண்டு வந்து கொட்டியது. அதன் விளைவாக, அவருக்கு ஒரு புதிய வீடு கிடைத்தது. ஆனால், அதில் புதிய பிரச்சினை ஒன்று இருந்தது. அந்தப் புதிய வீடு பழைய வீட்டில் இருந்து வெகு தொலைவில் இருந்தது. கடற்கரைக்குச் சென்று மீன் வாங்கி வர பஸ் பிடித்து, அரை மணி நேரம் பயணம் செல்ல வேண்டியிருந்தது.
ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு அவரும் அவர் சகோதரியும் மீண்டும் பழைய வீடு இருந்த இடமான தெரெசாபுரத்துக்கே வந்து சேர்ந்தார்கள். தெரெசாபுரம் தூத்துக்குடி நகரின் விளிம்பில் உள்ளது. வீட்டையும் கடையையும் ஒட்டி அகலப்படுத்தப்பட்ட கால்வாய் ஓடிக் கொண்டிருக்கிறது.
64 வயதாகும் ஃபாத்திமா, அவரது ஆச்சி செய்த மீன் வியாபாரத்தை, தனக்குத் திருமணமாகும் வரை செய்து வந்தார். இருபதாண்டுகளுக்கு முன்பு அவர் கணவர் இறந்த பின்பு, மீண்டும் அந்த வியாபாரத்தைத் தொடங்கினார். ‘அந்தக் காலத்துல, அப்போ எனக்கு 8 வயசா இருக்கும். அப்ப கரைல மீன் துள்ளத் துள்ள உயிரோடு ஃப்ரெஷ்ஷா கிடைக்கும். ஆனா, இன்னிக்கு எல்லாம் ஐஸ் மீன் தான்’, என்கிறார் ஃபாத்திமா. மீன் பிடிப் படகுகள் தங்களுடன் ஐஸ் கொண்டு செல்கிறார்கள். பல நாட்கள் கடலில் தங்கி மீன் பிடிக்கிறார்கள். பிடிக்கப்படும் மீன்கள் ஐஸ் பெட்டியில் பத்திரமாக வருகின்றன. மீன் வணிகம் லட்சங்களில் நடக்கிறது. ‘அன்னிக்கு மீன் வியாபாரம் அணா பைசாவுல நடந்துச்சு.. நூறு ரூபாய்ங்கறது பெரிய விஷயம்.. இன்னிக்கு வியாபாரம் ஆயிரங்கள்ல, லட்சங்கள்ல நடக்குது’.



























