97 வயது ஆனாலும் லோக்கிகாந்தோ மஹாதோவுக்கு கணீரென்ற, அதிர்வுகளுடன் கூடிய குரல். அழகான தோற்றம் கொண்ட அவரின் முகம் பார்ப்பதற்கு ரபீந்திரநாத் தாகூரை நினைவுபடுத்தும்.
மார்ச் 2022-ல் நாம் லோக்கியை சந்தித்தபோது, மேற்கு வங்கத்தின் பிர்ரா கிராமத்திலுள்ள ஓரறை வீடு ஒன்றில், படுக்கையிலிருந்த அன்பு நண்பர் தெலு மஹாதோவுக்கு அருகே அவர் அமர்ந்திருந்தார்.
தெலுவுக்கு அப்போது 103 வயது. 2023ம் ஆண்டில் அவர் மறைந்தார். வாசிக்க: தெலு மஹாதோ உருவாக்கிய கிணறு
அப்பகுதியின் கடைசி சுதந்திரப் போராட்ட வீரர்களில் தெலு தாதுவும் (தாத்தா) ஒருவர். எண்பது வருடங்களுக்கு முன் புருலியா மாவட்ட காவல் நிலையத்தை நோக்கி பேரணி சென்றார். அது 1942ம் ஆண்டில் நடந்தது. அவரின் எதிர்ப்பு, வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் பகுதியாக உள்ளூரில் நடத்தப்படது.
இளைய லோக்கி காவல்நிலைய சம்பவங்களில் பங்குபெறவில்லை. ஏனெனில் அப்போராட்டத்தில் பங்கேற்க தலைவர்களால் நிர்ணயிக்கப்பட்ட 17 வயதுக்கும் குறைவான வயதில் அவர் அப்போது இருந்தார்.
தெலுவோ லோக்கியோ வழக்கமான சுதந்திரப் போராட்ட வீரர் ரகமில்லை. நிச்சயமாக அரசோ மேட்டுக்குடியினரோ நிர்ணயித்த ரகத்தில் அவர்கள் இல்லை. போலவே எண்ணிக்கைக்காக போராட்டங்களில் சென்று பங்கேற்கும் ஒற்றைத்தன்மை ஆட்களும் அவர்கள் இல்லை. இருவரும் அவர்களின் களத்தில் அறிவார்ந்து பேசுகின்றனர். விவசாயம் மற்றும் அப்பகுதியின் வரலாறு குறித்து தெலுவும் இசை மற்றும் பண்பாடு பற்றி லோக்கியும் பேசுகின்றனர்.


