மீன்பிடித் தொழிலுக்கு, அதுவும் கடலூர் போன்ற வெப்ப மண்டலப் பகுதியில் அமைந்துள்ள துறைமுகத்தில் நடக்கும் மீன் தொழிலுக்கு ஐஸ் வணிகர்கள் இன்றியமையாதவர்கள். நகரத்தின் ஓல்ட் டவுன் துறைமுகத்தில் பெரிய மீன் வணிகர்களுக்கும் இயந்திர படகுகளுக்கும் பெருமளவில் ஐஸை பெரிய நிறுவனங்கள் விநியோகிக்கின்றன.
மீனவர்களுக்கும், பெண் மீன் வியாபாரிகளுக்கும் ஐஸ் விற்பவராக தனது அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் கவிதா. 800 ரூபாய்க்கு பெரிய ஐஸ் பாளங்களை வாங்கும் அவர், அவற்றை எட்டாக உடைத்து ஒவ்வொரு சிறிய கட்டியையும் தலா 100 ரூபாய்க்கு விற்கிறார். கொஞ்சம் உடலுழைப்பு தேவைப்படுகிற தொழில் இது. இதற்காக ஓர் ஆண் தொழிலாளரை வேலைக்கு வைத்துள்ள கவிதா அவருக்கு தினம் இரண்டு வேளை உணவுடன் 600 ரூபாய் கூலி கொடுக்கிறார்.
“சிறு ஐஸ் பாளங்கள் தேவைப்படும் பெண்களுக்கு அவற்றை கொண்டு செல்வதற்கு உதவுகிறேன்,” என்று கூறும் 41 வயது ஐஸ் வியாபாரியான கவிதா, “இதற்கு கடின உழைப்பு தேவைப்படுகிறது. பிழைப்பை ஓட்டுவதற்குப் போதுமான அளவுதான் சம்பாதிக்க முடிகிறது. பணம் சேர்க்கவேண்டும் என்றுதான் நினைக்கிறேன். ஆனால், பெரிய கம்பெனிகளோடு போட்டி போடும் அளவுக்கு வளர முடியவில்லை,” என்கிறார்.
2017-ல் வியாபாரத்தில் இறங்கினார் கவிதா. “என் மாமனார் அமிர்தலிங்கத்துக்கு உடல் நலிவுற்ற பிறகு, அவரது ஐஸ் வியாபாரத்தில் சேர்ந்துகொண்டேன். என் கணவருக்கு இதில் ஆர்வம் இல்லை. என்னுடைய மைத்துனர் வெளிநாடு சென்றுவிட்டார்,” என்கிறார் கவிதா. கூடுதலாக, பள்ளிக் கல்வி பெற்றுள்ள கவிதாவுக்கு இந்த வணிகத்தில் பங்களிக்கத் தேவையான திறமை இருந்தது.
தன் பெற்றோரின் ஐந்து குழந்தைகளில் எல்லோருக்கும் இளையவர் கவிதா. தானே சொந்தமாக கற்றுக்கொண்டு மெக்கானிக் ஆன அவரது தந்தைக்கு உடல் நிலை சரியில்லாமல் போனபோது கவிதாவுக்கு வயது 14. ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த கவிதா பள்ளி செல்வதை நிறுத்திவிட்டு தமது தாயோடு நாற்று நடுவது, களை பறிப்பது போன்ற விவசாய வேலைகளுக்கு சென்றார்.














