மூன்றாவது ஆழ்துளைக் கிணறும் காய்ந்த பிறகு, விளைச்சலுக்கான நீருக்கு மழையைத்தான் டி.அமர்நாத் ரெட்டி எதிர்பார்க்க வேண்டியிருந்தது. ஆந்திராவின் வறண்டப் பகுதியான ராயல்சீமாவில் மழையை நம்ப முடியாது. அங்குதான் 51 வயது அமர்நாத் ரெட்டி தக்காளிகளை விளைவிக்கிறார். சித்தூரிலுள்ள முடிவெடு கிராமத்தில் அவருக்கு இருக்கும் மூன்று ஏக்கர் விளைநிலத்தில் ஆழ்துளைக் கிணறுகள் போட 5 லட்சம் ரூபாய் செலவழித்தார். துளையிட வட்டிக்குக் கடன் வாங்கினார். முதல் கிணறு பயனற்றுபோன பிறகு, அவர் மீண்டும் முயன்றார். மூன்றாவது முறை, அவரின் கடன் அதிகரித்திருந்தது. நீர் மட்டும் கிட்டவில்லை.
ஏப்ரல்-மே 2020-ன் அறுவடைக்கு அமர்நாத் கவலையுடன் காத்திருந்தார். கடன்களை திருப்பி அடைக்க வேண்டும். ஆழ்துளைக் கிணறுச் செலவு, மூத்த மகளின் திருமணச் செலவு, பயிர்க்கடன் என அவருக்கு மொத்தம் 10 லட்ச ரூபாய் கடன் இருந்தது. ஆனால் மார்ச் 24ம் தேதி திடீரென பிரதமர் அறிவித்த ஊரடங்கு அவரது திட்டங்களை சின்னாபின்னமாக்கியது. தக்காளிகளை அறுவடை செய்து விற்க முடியாமல், அவை பழுத்து அழுகிப் போவதை அவர் பார்த்திருக்க நேர்ந்தது.
“பெருந்தொற்று சமயத்தில் பிரச்சினைகள் தீரும் வாய்ப்பில்லை என அவர் நினைத்து நம்பிக்கையிழந்திருக்கக் கூடும்,” என்கிறார் அமர்நாத்தின் மனைவியான டி.விமலா, செப்டம்பர் 17, 2020 அன்று அமர்நாத் விஷம் குடித்த தகவலை விளக்க முற்பட்டு. “அதற்கு 10 நாட்கள் முன்பு கூட அவர் தற்கொலைக்கு முயன்றார். பெங்களூருவில் உள்ள பெரிய மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம். ஒரு லட்ச ரூபாய் செலவு செய்தோம்,” என்கிறார் விமலா. மீண்டும் தற்கொலை முயற்சிக்குப் போக வேண்டாமென அமர்நாத்தை அவர் கெஞ்சியிருக்கார்.
சித்தூரின் விவசாயத் தற்கொலைகளுக்கு ஆழ்துளைக் கிணறு பயனற்றுப் போனதே முக்கியக் காரணமாக காவல்துறை அறிக்கைகளில் குறிக்கப்பட்டிருக்கிறது. தக்காளிப் பயிரின் வீழ்ச்சி, விவசாயக் கடன் முதலியவைப் பிறக் காரணங்கள். குடும்பங்களுக்கான இழப்பீடை வழங்கும் மாநில அரசின் உத்தரவில் இன்னும் பல தகவல்கள் இருக்கின்றன: “தற்கொலைகளுக்கான காரணங்களாக ஆழ்துளைக் கிணறின் பயனின்மை, பணப்பயிர் வளர்ப்பதற்கு ஆகும் அதிகப்படியான செலவு, கிடைக்காத விலைகள், வாய்மொழிக் குத்தகை, வங்கிக் கடன் வாங்கும் தகுதியின்மை, அதிக வட்டியுடனான தனியார்க் கடன், தீவிர பருவநிலைகள், குழந்தைகளின் கல்விக்கு ஆகும் அதிகச் செலவு, ஆரோக்கியக் குறைபாடு மற்றும் திருமணங்கள் ஆகியவற்றைச் சொல்லலாம்.”
இத்தகையச் சூழல் கடந்த வருடம் திட்டமின்றி போடப்பட்ட ஊரடங்கால் மேலும் மோசமடைந்தது. 2020ம் ஆண்டில் மட்டும் சித்தூர் மாவட்டத்தில் 34 விவசாயிகள் தற்கொலை செய்திருக்கின்றனர். 2014ம் ஆண்டுக்கு பிறகான அதிக எண்ணிக்கை. அதில் 27 பேர் ஏப்ரலுக்கும் டிசம்பருக்கும் இடையில் இறந்திருக்கின்றனர்.







