“நாங்கள் எங்கள் டிராக்டர்களை மூன்று வர்ணங்கள் கொண்டு அலங்கரித்துள்ளோம். ஏனெனில் நாங்கள் எங்கள் தேசத்தை நேசிக்கிறோம்“ என்று ஷம்ஷீர் சிங் கூறுகிறார். அவரது டிராக்டர் பலூன்கள், ரிப்பன்கள் மற்றும் இந்திய தேசியக்கொடியின் மூன்று வர்ணங்களைக்கொண்டு அலங்கரிப்பட்ட மலர்களுடன் புறப்படுவதற்கு தயாராக உள்ளது. “எங்கள் தாய்நாட்டைப்போலவே நாங்கள் விவசாயத்தையும் நேசிக்கிறோம்“ என்று அவர் மேலும் தெரிவித்தார். “நாங்கள் மாதக்கணக்கில் சாகுபடி செய்கிறோம். எங்கள் பயிர்களை ஒரு குழந்தையை தாய் கவனித்து வளர்ப்பதுபோல் வளர்க்கிறோம். இந்த எண்ணத்துடன்தான் நாங்கள் பூமித்தாயையை அலங்கரிப்பதுபோல், எங்கள் டிராக்டர்களையும் அலங்காரம் செய்துள்ளோம்“ என்று ஷம்ஷீர் கூறினார்.
பேரணிக்காக, டெல்லி மற்றும் அதனைச்சுற்றியுள்ள போராட்டக்களத்தில் உள்ள விவசாயிகள் தங்கள் டிராக்டர்களை வெவ்வேறு கருப்பொருள்(தீம்)களில் அலங்கரித்திருந்தனர். அவர்கள் டெல்லியில் நடைபெறும் குடியரசு தினவிழா அணிவகுப்பில் வெவ்வேறு மாநிலங்களில் இருந்து வெவ்வேறு கருப்பொருள்களில் மும் டிராக்டர்களுக்கு புதிய தோற்றத்தை கொடுத்திருந்தது. விவசாயிகள் மற்றும் விவசாய்குழுவினர் அனைவரும் கடந்த சில நாட்களாக, ஜனவரி 26ம் தேதி பேரணிக்கான வேலைகளில் ஈடுபட்டிருந்தனர்.
“எனது கிராமமான கவுரே நங்கலில் இருந்து டிராக்டரை ஓட்டி வருவதற்கு இரண்டு நாட்கள் தேவைப்பட்டது“ என்று கூறுகிறார் 53 வயதான ஷம்ஷீர் சிங். பஞ்சாப் மாநிலம் அம்ரிஸ்டர் மாவட்டத்தில் உள்ள அவரது கிராமத்தில் இருந்து 20 விவசாயிகளுடன், விவசாயிகளின் கோரிக்கைகளான மூன்று சட்டங்களையும் திரும்பப்பெறுவது குறித்து மீண்டும் வலியுறுத்தும் டிராக்டர் பேரணியில் கலந்துகொள்ள டெல்லி-ஹரியானா எல்லையில் உள்ள டிக்ரிக்கு வந்திருந்தார்.




