சஞ்சா கிராமத்தின் தொடக்கப்பள்ளியில், போன வருடம் அக்டோபர் கடைசியில் இரண்டு தட்டையான தொலைக்காட்சிப் பெட்டிகள் இரண்டு வகுப்பறைகளில் பொருத்தப்பட்டன. ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பயன்படக்கூடிய கருவிகளாக அவை பஞ்சாயத்தால் தரப்பட்டன.
ஆனால், கடந்த மார்ச் 2017ஆம் வருடம் முதல் சுவர்களில் அந்த தொலைக்காட்சி பெட்டிகள் இரண்டு வருடங்களாக தொங்கிக்கொண்டேயிருக்கின்றன, தொலைக்காட்சி திரை வெற்றாக உள்ளது. அவற்றை இயக்கக்கூட முடியவில்லை. ஏனென்றால் பள்ளியில் மின்சாரம் கிடையாது.
ஓஸ்மனாபாத் மாவட்டத்தின் பள்ளி முதல்வர் ஷீலா குல்கர்னிக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. “அரசாங்கம் தரும் நிதிகள் போதவில்லை. இரண்டு வகுப்புகளில் 40 மாணவர்கள் படிக்கும் எங்களில் பள்ளிக்கு பத்தாயிரம் ரூபாய் ஒரு வருடத்துக்கு பள்ளி பராமரிப்புக்கு என்று தரப்படுகிறது. அதில்தான் பள்ளிக்குத் தேவையான பொருள்கள் வாங்க வேண்டும். மின்சாரத்தை நாங்கள் மீண்டும் கிடைக்கச் செய்வதற்கு 18 ஆயிரம் ரூபாய் வேண்டும். ”
பள்ளிக்கு மின்சாரம் இல்லாமல் போனது என்பது 2012 க்குப் பிறகுதான். இனிமேல் வீடுகளுக்கான மின்சாரக்கட்டணம் மாவட்டப்பள்ளிகளுக்கு கிடையாது. கடைகளுக்கான வணிகக் கட்டணமே வசூலிக்கப்படும் என்று மின்சாரக்கட்டணத்தை மாநில அரசாங்கம் மாற்றியது. அதற்குப் பிறகுதான் யூனிட்டுக்கு 3.36 ரூபாய் என்பது 5.86 என்று உயர்ந்தது. அதோடு பள்ளியில் மின்சாரம் இல்லாமல் போனது.
2015ஆம் வருடத்துக்குள் ஓஸ்மான் மாவட்டத்தில் உள்ள 1094 பள்ளிகளில் 822க்கு மின்சாரத் தொடர்பு துண்டிக்கப்பட்டது என்கிறார் ஓஸ்மான்பாத் மாவட்ட பஞ்சாயத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சஞ்சய் கோல்தே. 2018 அக்டோபர் இறுதிக்குள் 70 சதவீத பள்ளிகள் மின்சாரம் இல்லாமல் இயங்கின. மின்சாரக் கட்டணப் பாக்கிகள் ஒரு கோடி ரூபாய்க்கும் மேலே போனது.










