பிலி பர்தி, 50 வயதுகளின் துவக்கத்தில் உள்ளார். கஸ்தூர்பா சாலையில் உள்ள ஒரு ஓட்டலின் வாயிலின் வெளியே வாடிக்கையாளருக்காக காத்திருக்கிறார். தற்போது காலை 9 மணி. சுற்றுலாப் பயணிகள் வெளியே கிளம்பிச்செல்வது துவங்குகிறது. அவரின் மருமகள் அருணாவும் அங்கு இருக்கிறார். இரு பெண்களும், பிலியின் மகனும் மத்தேரனில் சுமை தூக்கும் தொழிலாளர்களாக உள்ளனர்.
ஜெயா பேத்கரும் அதே வேலையை செய்கிறார். மற்றவர்களைப்போல் ஜெயாவும் 30 வயதுகளின் மத்தியில் உள்ளார். 10 முதல் 40 கிலோ எடையை ஒரு நாளில் தனது தலையில் 3 முதல் 4 முறை ஓட்டல்களுக்கும், மத்தேரனின் முக்கியச் சந்தை பகுதியிலிருந்து மூணரை கிலோ மீட்டர் தூரமுள்ள வாகன நிறுத்தத்திற்கும் இன்னும் மலையிலிருக்கும் சில ஓட்டல்களுக்கும் சுமந்து வரவேண்டும்.
லட்சுமி பர்தி, மத்தேரனில் உள்ள மற்றுமொரு சுமை தூக்கும் தொழிலாளர். 40 வயதுகளின் இறுதியில் உள்ளார். அவர் கூறுகையில், ‘ஒருமுறை சுமை தூக்கி செல்வதற்கு ரூ.250 முதல் ரூ300 வரை பெறுகிறார். வார இறுதி நாட்களில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் காலங்களில், சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு 3 முதல் 4 வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். வார நாட்களில் அவ்வளவு சுற்றுலாப் பயணிகள் வரமாட்டார்கள். அதேபோல் சுமை தூக்கும் கூலியும் ஒரு முறைக்கு ரூ.200 மட்டுமே கிடைக்கும்‘ என்றார்.
மத்தேரனில், மஹாராஷ்ட்ராவின் புகழ்பெற்றத் சுற்றுலா தலமான ராய்காட்டில் தஸ்தூரியில் உள்ள வாகன நிறுத்தைக்கடந்து வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இதனால், சுற்றுலா வருபவர்கள் தங்கள் சுமையை ஓட்டல்களுக்கு தாங்களே தூக்கிக்கொள்ள வேண்டும் அல்லது பிலி, ஜெயா, லட்சுமி போன்ற சுமைதூக்கும் தொழிலாளர்களின் உதவியை நாட வேண்டும்.
மத்தேரனுக்கு அருகில் உள்ள ரயில் நிலையம் நேரலாகும். தொடர்ந்து இரண்டு ரயில்கள் தடம்புரண்டதையடுத்து, 2016ம் ஆண்டு மே மாதம் முதல் இரண்டு இடங்களில் இருந்து இயக்கப்படும் குறுகிய ரயில் சேவை நிறுத்தப்பட்டுவிட்டது. மத்தேரனுக்குள் கார்கள் செல்வதற்கு அனுமதிக்கப்படாததால், தாஸ்துரியில் குதிரைகள், குதிரை வைத்திருப்பவர்கள் , கையால் இழுக்கும் ரிக்ஷாக்கள், தலையில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் எப்போதும் காத்திருக்கும் காட்சியைப் பார்க்கலாம்..
அனைத்து சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு மத்தேரன் காவல்துறையினரால் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அட்டைக்கும் வரிசை எண் உள்ளது. மத்தேரனில் மட்டும் 300 சுமைதூக்கும் தொழிலாளர்கள் இருப்பார்கள் என்று லட்சுமியின் மகன் கூறுகிறார். அதில் 100 பேர் பெண்கள். லட்சுமியின் அடையாள எண் 90. அவரது தனது எண் வரும்வரை தாஸ்துரியில் உள்ள கவுன்டரில் காத்திருப்பார். அந்த கவுன்டரில்தான் மத்ரேன் செல்வதற்கு சுற்றுலா பயணிகள் நுழைவுச்சீட்டு பெறுவார்கள். அந்த கவுன்டரில் உள்ள நபர் லட்சுமியின் வரிசை எண் வரும்போது அழைப்பார் அல்லது வாடிக்கையாளர்கள் நேரடியாகவே அவரை அழைப்பார்கள்.
இங்குள்ள பெரும்பாலான சுமைதூக்கும் தொழிலாளர்கள் அருகில் உள்ள கிராமங்களில் வசிப்பவர்கள். லட்சுமி, தாஸ்துரியில் இருந்து நான்கரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜும்மாபட்டி குடியிருப்பில் இருந்து மத்தேரனுக்கு வருகிறார். பிலி, 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிராமத்தில் இருந்து வருகிறார்.
ஜெயா, மத்தேரனில் உள்ள ஓட்டல் பணியாளர்கள் குடியிருப்பில் தங்கியிருக்கிறார். அவர் அந்த ஒட்டலில் தனது அண்ணியுடன் சேர்ந்து பணிபுரிகிறார். அவர்கள் அங்கு பாத்திரம் கழுவுகிறார்கள். இருவரும் சேர்ந்து மாதத்திற்கு ரூ.4 ஆயிரம் சம்பாதிக்கிறார்கள். ஜெயாவின் குடும்பத்தினர், கர்ஜாத்துக்கு அருகில் உள்ள தெப்பாச்சிவாடி என்ற குடியிருப்பில் வசிக்கிறார்கள். இவரது குடும்பத்தில் ஜெயா மட்டுமே சம்பாதிக்கும் நபர். காலையில் பாத்திரம் கழுவி முடித்தவுடன், அவர் சுமைகளை தூக்கும் தொழிலாளியாக மதியவேளையில் ஒன்று அல்லது இரண்டு முறை சென்றுவருவார்.
தமிழில்: பிரியதர்சினி. R.