"இப்போது எங்களுக்கு கிடைக்கும் சிறிய வேலைகள் கூட இந்த வேளாண் சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டால் எங்களுக்கு கிடைக்காமல் போகும்", என்று வருத்தப்படுகிறார் தாராவந்தி கவூர்.
அவர் பஞ்சாபில் உள்ள கிலியன்வாலி கிராமத்தில் இருந்து மேற்கு தில்லியில் உள்ள திக்ரி போராட்ட களத்திற்கு வந்துள்ளார். பத்தின்டா, ஃபரிக்கோட், ஜலந்தர், மோகா, முக்த்சர், பாட்டியாலா மற்றும் சங்கூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து ஜனவரி 7ஆம் தேதி இரவு இங்கு வந்த 1500 விவசாயத் தொழிலாளர்களில் தாராவந்தி மற்றும் சுமார் 300 பெண்கள் ஆகியோரும் உள்ளனர். இவர்கள் அனைவரும் பஞ்சாப் கேத் மஸ்தூர் யூனியனில் உறுப்பினர்கள், இந்த அமைப்பு தலித் மக்களின் வாழ்வாதாரம், நில உரிமை மற்றும் சாதிப்பாகுபாடு தொடர்பான பிரச்சனைகளுக்காக செயல்பட்டு வருகிறது.
இந்தியா முழுவதும் வாழ்வாதாரத்திற்காக விவசாய நிலங்களை நம்பியிருக்கும் லட்சக்கணக்கான பெண்களில் அவரும் ஒருவர் - நாட்டிலுள்ள 1443 லட்சம் விவசாயத் தொழிலாளர்களில் குறைந்தது 42 சதவிகிதம் பேர் பெண்கள்.
70 வயதாகும் தாராவந்தி முக்த்சர் மாவட்டத்தில் உள்ள மாலாவுட் தாலுகாவில் இருக்கும் தனது கிராமத்தில் கோதுமை, நெல் மற்றும் பருத்தி வயல்களில் உழைப்பதன் மூலம் நாளொன்றுக்கு 250 முதல் 300 ரூபாய் வரை சம்பாதித்து வருகிறார். ஆனால் முன்பு இருந்ததைப் போல இப்போது வேலைகள் கிடைப்பதில்லை என்று பசுமைப்புரட்சி வந்தது முதலாகவே தொழிலாளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர் என்று 1960கள் மற்றும் அதன் பின்னர் பஞ்சாபில் ஏற்பட்ட பிற விவசாய மாற்றங்களுக்கு இடையில் விவசாய இயந்திரமயமாக்கல் பஞ்சாபில் பரவலாகிவிட்டது குறித்து அவர் கூறுகிறார்.





