சாலையோர தாபாவில் இருந்த விவசாயி குழுக்களை புல்லாங்குழலின் இசை கவனத்தை ஈர்த்தது. நாஷிக் நகரிலிருந்து 65 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சந்த்வாட் நகரத்தில் டிசம்பர் 22ஆம் தேதி குளிர் நிலவியது. அவர்களும் தேநீருக்காக காத்திருந்தனர். சிலர் அரை தூக்கத்தில் இருந்தனர். சிலர் காலை உணவிற்கு மிசல் பாவ் தயாரித்துக் கொண்டிருந்தனர். ஆனால், கொலாப்பூர் மாவட்டம் ஜம்பாலி கிராமத்தைச் சேர்ந்த 73 வயது நாராயண் கெய்க்வாட் புல்லாங்குழல் இசைத்துக் கொண்டிருந்தார். வீட்டிலிருந்து 500 கிலோமீட்டர் தொலைவில் இருந்தாலும் அவர் தனது காலை சடங்கை கைவிடவில்லை. “டெல்லி போராட்டம் என்பது பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகளுடன் முடிந்துவிட்டது என மக்கள் சொல்கின்றனர்,” என்றார் அவர். “இது ஒரு தேசிய பிரச்னை என குறிப்பிட நினைக்கிறோம்.”
வேளாண் தொழிலாளர்கள், செயற்பாட்டாளர்கள் என 2000 பேர் கொண்ட விவசாயிகள் குழுவின் கெய்க்வாடும் ஒருவர். அவர்கள் டிசம்பர் 21ஆம் தேதி நாஷிக்கிலிருந்து டெல்லிக்கு வாகனப் பேரணி மூலம் டெல்லி வந்தார். ஆனால் அதற்கு ஒருநாள் முன்பே கெய்க்வாடின் பயணம் தொடங்கிவிட்டது. “நாங்கள் ஏழு பேர் டெம்போவில் 20ஆம் தேதி இரவு வந்தோம். அங்கு வருவதற்கு 13 மணி நேரம் ஆகியது,” என்றார் அவர். “வயோதிகத்தால் சாலைகளில் பயணிப்பது கடினமாகவே உள்ளது. பகத்சிங்கின் இந்தியாவைப் பற்றிய சிந்தனையை நம்புவதால் நான் வருவதற்கு முடிவு செய்தேன். புரட்சியின்றி விவசாயிகளின் பிரச்னை தீராது.”
டெல்லி எல்லைகளில் போராட்டம் நடத்துவதற்காக கண்ணீர் புகை குண்டுகள், தடியடி, கடும் குளிர், மழையையும் துணிந்து பஞ்சாப், ஹரியானா மாநிலங்களின் லட்சக்கணக்கான விவசாயிகள் வந்துள்ளனர். அவர்கள் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடி வருகின்றனர். 2020 ஜூன் 5ஆம் தேதி மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை நாடாளுமன்றத்தில் செப்டம்பர் 14ஆம் தேதி சட்ட மசோதாவாக தாக்கல் செய்தது. அதேமாதம் 20ஆம் தேதி அவற்றை துரிதமாக சட்டங்களாக்கியது.
விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020, விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020 மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020 ஆகியவையே விவசாயிகள் எதிர்க்கும் மூன்று சட்டங்கள். 2020 ஜூன் 5 அன்று அவை ஆணைகளாக்கப்பட்டு செப்டம்பர் 14 அன்று பாராளுமன்றத்தில் மசோதாக்களாக தாக்கல் செய்யப்பட்டு எதிர்ப்பையும் மீறி வேகவேகமாகாக அதே மாத 20ம் தேதி சட்டமாக்கப்பட்டிருக்கின்றன. மேலும் அரசியல் சாசனத்தின் 32ம் பிரிவு வழங்கும் குடிமக்களுக்கான சட்டரீதியான பாதுகாப்பு உரிமையையும் இச்சட்டங்கள் பாதிப்பதாக விமர்சனம் எழுப்பப்படுகிறது.








