அக்டோபர் மாதத் தொடக்கத்தில் விளக்குகள் அணைந்ததும் ஏதோப் பிரச்சினை என்பதை ஷோபா சவானின் குடும்பம் உணர்ந்தது. சுதாரிப்பதற்குள் ஒரு கும்பல் வீட்டுக்குள் புகுந்து குச்சிகள் மற்றும் இரும்புத்தடிகள் கொண்டு குடும்பத்தில் இருந்த எட்டு பேரையும் ஈவிரக்கமின்றி அடித்தனர். ஒரு மணி நேரம் கழித்து அவர்கள் ஏழு பேராகினர். ஷோபாவின் இரண்டு வயது பேரன் தாக்குதலில் கொல்லப்பட்டார். அடுத்த நாள் அவர்கள் ஆறு பேராகினர். ஷோபாவின் கணவர் சிகிச்சைப் பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்திருந்தார்.
நள்ளிரவுக்கு சற்று முன்னால் வீட்டுக்குள் அவர்கள் நுழைந்துத் தாக்கினர். உதைத்தனர். 65 வயது ஷோபா, 70 வயது மாருதி, அவர்களின் மகள், மருமகள், பேரன், பேத்தி, சகோதரரின் மனைவி, அவரின் மகள் எனக் குடும்பத்தின் எல்லா உறுப்பினர்களையும் அடித்தனர். மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்திலுள்ள கிராமத்தின் விளிம்பில் அமைந்திருக்கும் அவர்களின் குடிசையும் ஆட்டுக்கிடையும் எரிக்கப்பட்டன. அந்த இரவில் நடந்த அனைத்தையும் காவல்துறையில் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் ஷோபா குறிப்பிட்டிருந்தார்.
”அந்த இரவில் நாங்கள் மூன்று பேர் வன்புணரப்பட்டோம்,” என்கிறார் ஷோபாவின் 30 வயது மகளான அனிதா. அவர் திருமணம் முடித்தவர். சகோதரரின் 23 வயது மனைவியையும் உடன்பிறந்தவரின் 23 வயது மகளையும் அவர்கள் வன்புணர்ந்ததாக அவர் சொல்கிறார்.
வெறி கொண்ட அந்த கும்பல் அடுத்ததாக அனிதாவின் குடிசைக்குச் சென்றது. தாயின் வீட்டிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவு. இரவுநேரத்தில் அவர்களையும் பீதிக்குள்ளாழ்த்தினர். “இரவு 2 மணிக்கு அவர்கள் எங்களின் வீட்டுக்கு வந்தனர்,” என்கிறார் அனிதா. “ஊரை விட்டு எங்களை விரட்ட அவர்கள் விரும்பினர். எங்களின் மோட்டார் சைக்கிள் எரிக்கப்பட்டது. கால்நடைகளை அபகரித்தனர்.” அவரின் குடிசையையும் அவர்கள் எரித்தனர்.
அவர்கள் தாக்கிக்கொண்டிருக்கும்போது, “நீங்கள் எல்லாம் திருடர்கள். உங்களைப் போன்ற பார்த்திக்கள் எங்கள் கிராமத்தில் இருக்கக் கூடாது,” என சொல்லிக் கொண்டிருந்ததாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார் ஷோபா.
மகாராஷ்டிராவின் பட்டியல் பழங்குடி சமூகமான பார்த்தி சமூகத்தை சேர்ந்தவர்கள் சாவன்கள். ஒருகாலத்தில் பார்த்திகள் வேட்டைக்காரர்களாக இருந்தவர்கள். காலனிய ஆட்சிக்காலத்தில் குற்றப்பழங்குடிச் சட்டத்தின்படி ‘குற்றப்பழங்குடி’யாக அவர்கள் வரையறுக்கப்பட்டனர். ‘பிறப்பால் குற்றவாளிகள்’ என அவர்கள் கண்காணிக்கப்பட்டனர். அவர்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டது. இந்திய அரசு குற்றப்பழங்குடி சட்டத்தை ரத்து செய்தது. எனினும் அதற்குப் பதிலாக உருவான, 1952ம் ஆண்டின் திருட்டு வழக்கம் கொண்டவர்களுக்கான சட்டம் (Habitual Offenders Act), அவர்கள் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றவாளி அடையாளத்தை தக்க வைத்தது.







