மே மாத தொடக்கத்தில் அஜய்குமார் சா காய்ச்சலாக உணர்ந்தார். ஜார்கண்ட் மாநிலம் சத்ரா மாவட்டத்தில் உள்ள தனது அசார்ஹியா கிராமத்திலிருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள இட்கோரி நகரில் தனியார் மருத்துவமனை மருத்துவரை அவர் அணுகினார்.
கோவிட் பரிசோதனை எதுவும் செய்யாத அந்த மருத்துவர் 25 வயது துணி வியாபாரியான அஜய்க்கு (முகப்புப் படத்தில் மகனுடன் இருப்பவர்) டைபாய்ட், மலேரியா இருப்பதாக கூறிவிட்டார். அஜயின் இரத்த ஆக்சிஜன் அளவு 75 முதல் 80 சதவீதம் வரை ஏறி இறங்குவதை அவர் பரிசோதித்தார். (95 முதல் 100 என்பது இயல்பான நிலை). அஜய் பிறகு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
2-3 மணி நேரத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்ட அவர் கவலை அடைந்தார். இச்சமயம் அவர் ஹசாரிபாகில் (அசார்ஹியாவிலிருந்து தோராயமாக 45 கிலோமீட்டர்) உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்குச் சென்று வேறு ஒரு மருத்துவரைப் பார்த்தார். இங்கும் அவருக்கு கோவிட்-19 பரிசோதனைக்கு பதிலாக டைபாய்ட், மலேரியா பரிசோதனையே செய்யப்பட்டன.
அதே கிராமத்தில் வசிக்கும் ஒளிப்படத் தொகுப்பாளரான ஹையுல் ரஹ்மான் அன்சாரியிடம் அஜய் கூறுகையில், தனக்கு கோவிட் பரிசோதனை செய்யப்படவில்லை “மருத்துவர் என்னைப் பார்த்துவிட்டு கரோனா இருப்பதாக கூறினார். சதார் மருத்துவமனைக்குச் [ஹசாரிபாகில் உள்ள அரசு மருத்துவமனை] செல்லுமாறு என்னிடம் அவர் கூறினார். இங்கு சிகிச்சை என்றால் செலவு கூடுதலாகும். பயம் ஏதுமின்றி, ஆகும் செலவை ஏற்பதாக நாங்கள் கூறினோம். எங்களால் அரசு மருத்துவமனைகளை நம்ப முடியாது. அங்கு [கோவிட்] சிகிச்சைக்கு சென்ற யாரும் திரும்பவில்லை.”


