மதுரை மாவட்டத்தின் திருநங்கை நாட்டுப்புற கலைஞர்களுக்கு வருடத்தின் முதல் ஆறு வருடங்கள் மிகவும் முக்கியம். இந்த காலக்கட்டத்தில்தான், கிராமங்கள் விழாக்களையும் கோவில்கள் கலாசார நிகழ்வுகளையும் நடத்துகின்றன. ஊரடங்கு காலத்தில் பொது நிகழ்வுகளுக்கு போடப்பட்ட தடை, கிட்டத்தட்ட 500 திருநங்கை கலைஞர்களை கடுமையாக பாதித்திருக்கிறது.
அவர்களில் ஒருவரான மேகி, மதுரையிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் விளாங்குடியில் இரண்டு அறைகள் கொண்ட வீட்டில் வசிக்கிறார். அவரது வீடுதான் பிற திருநங்கைகளுக்கான அடைக்கலமும் சந்திக்கும் இடமும். விதைகள் முளை விடுவதை கொண்டாட பாடப்படும் பாரம்பரியமிக்க கும்மிப்பாட்டு பாடல்களை மதுரையில் பாடும் சில திருநங்கை கலைஞர்களுள் மேகியும் ஒருவர். ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதத்தில் பத்து நாட்களுக்கு கொண்டாடப்படும் முளைப்பாரி விழாவில் பாடப்படும் இப்பாட்டு, கிராமத்து தெய்வங்களிடம் மழை, மண்வளம் மற்றும் நல்ல விளைச்சல் ஆகியவற்றை வேண்டி பாடப்படுகிறது.
அவருடைய நண்பர்களும் சக ஊழியர்களும் இப்பாடல்களுக்கு ஆடுவார்கள். அதுதான் அவர்களுக்கு வருமானமாக ரொம்ப காலத்துக்கு இருந்திருக்கிறது. ஆனால் தொற்றுநோய் ஊரடங்குகளால் அந்த விழா ஜூலை 2020ல் நடக்கவில்லை. இந்த மாதமும் நடக்கவில்லை (பார்க்க : மதுரையின் திருநங்கை கலைஞர்கள் அனுபவிக்கும் துயரம்). மேலும் கடைகளில் பணம் சேகரிக்கும் பிற வழி வருமானங்களும் மதுரையிலும் பெங்களூரிலும் கூட அவர்களுக்கு நின்றுவிட்டது. அவர்கள் மாதந்தோறும் ஈட்டிக் கொண்டிருந்த 8000-லிருந்து 10000 ரூபாய் வரையிலான வருமானம் ஊரடங்குகளால் முற்றிலும் இல்லாமல் போய்விட்டது.







