ஷாஜஹான்பூர் போராட்டக் களத்தில் மூன்று நாட்கள் கழித்த பிறகு சொந்த கிராமத்திற்கு திரும்பும் ஹனுமந்த் குஞ்ஜாலுக்கு மனம் நிறைய மறக்க முடியாத நினைவுகளும் இருந்திருக்கும்.
“அங்குள்ள விவசாயிகள் மிகவும் விருந்தோம்பலுடன், சிறப்பாக நடந்துகொண்டனர்,” என்கிறார் டிசம்பர் 25ஆம் தேதி ஷாஜஹான்பூர் வந்த மகாராஷ்டிராவின் நாஷிக் மாவட்டம் சந்த்வாட் கிராமத்தின் 41 வயது பில் பழங்குடியினத்தைச் சேர்ந்த இவர். “தேவைப்பட்டால் சமைப்பதற்கு என அரிசி, பருப்பு எடுத்து வந்திருந்தேன். ஆனால் அவற்றிற்கு தேவை ஏற்படவில்லை. நிறைய நெய் கலந்த உணவை அவர்கள் அளித்தனர். தாராள மனதுடன் எங்களை வரவேற்றனர்.”
வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் டிசம்பர் 21ஆம் தேதி நாஷிக்கிலிருந்து டெல்லிக்கு வாகன பேரணி தொடங்கியது. சுமார் 1,400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தலைநகரின் புறநகருக்கு சுமார் 1000 விவசாயிகள் ஐந்து நாள் பேரணியாக வந்தடைந்தனர். ராஜஸ்தான் - ஹரியானா எல்லையில், தெற்கு டெல்லியில் 120 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஷாஜஹான்பூரில் பேரணி முடிந்தது. தேசிய தலைநகரை சுற்றியுள்ள போராட்டக் களங்களில் ஒன்றான இங்கு மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக நவம்பர் 26ஆம் தேதியிலிருந்து பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தானிலிருந்து வந்துள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020, விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020 மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020 ஆகியவையே விவசாயிகள் எதிர்க்கும் மூன்று சட்டங்கள். 2020 ஜூன் 5 அன்று அவை ஆணைகளாக்கப்பட்டு செப்டம்பர் 14 அன்று பாராளுமன்றத்தில் மசோதாக்களாக தாக்கல் செய்யப்பட்டு எதிர்ப்பையும் மீறி வேகவேகமாகாக அதே மாத 20ம் தேதி சட்டமாக்கப்பட்டிருக்கின்றன. மேலும் அரசியல் சாசனத்தின் 32ம் பிரிவு வழங்கும் குடிமக்களுக்கான சட்டரீதியான பாதுகாப்பு உரிமையையும் இச்சட்டங்கள் பாதிப்பதாக விமர்சனம் எழுப்பப்படுகிறது.





