பனஸ்கந்தா மாவட்டத்திலுள்ள தன் 2.5 ஏக்கர் நிலத்துக்கு பானுபென் பர்வாட் சென்று ஒரு வருடம் ஆகிவிட்டது. ஒரு காலத்தில் அவரும் அவரது கணவரும் அங்கு ஒவ்வொரு நாளும் சென்றிருக்கின்றனர். கம்பு, சோளம் போல அவர்களின் குடும்பத்துக்கு தேவையான பயிரை அங்கு அவர்கள் விளைவித்துக் கொண்டிருந்தனர். 2017ம் ஆண்டில் குஜராத்தில் நேர்ந்த பெருவெள்ளம் வரை அந்த நிலம்தான் அவரகளுக்கான பிரதான வாழ்வாதாரமாக இருந்தது. வெள்ளம் அவர்களின் நிலத்தை அழித்துவிட்டது. “எங்களின் உணவு அதற்குப் பிறகு மாறிவிட்டது,” என்கிறார் 35 வயது பானுபென். “எங்களின் நிலத்தில் நாங்கள் விளைவித்த பயிரை பிறகு விலை கொடுத்து வாங்க வேண்டியதானது.”
அவரது நிலத்தில் அரை ஏக்கரில் கம்பு விளைவித்தால் நான்கு குவிண்டால் அறுவடை கிடைக்கும். அதே அளவை இப்போது அவர் வாங்க மண்டிக்கு ரூ.10,000 கொடுக்க வேண்டியிருக்கும். “பணவீக்கத்தை கணக்கில் எடுத்துக் கொண்டாலும் அரை ஏக்கரில் கம்பு விளைவிக்க எங்களுக்கு ஆகும் செலவு சந்தை விலையில் பாதியாகத்தான் இருக்கும்,” என்கிறார் அவர். “பிற பயிர்களுக்கும் அதே நிலைதான். நாங்கள் விளைவித்த பயிர் ஒவ்வொன்றும் இரட்டிப்பு விலை இப்போது.”
பானுபென், அவரது 38 வயது கணவர் போஜாபாய் மற்றும் மூன்று குழந்தைகளுடன் பனஸ்கந்தாவின் கங்க்ரெஜ் தாலுகாவிலுள்ள டொடானா கிராமத்தில் வசிக்கின்றனர். நிலத்தை உழும் வேலை ஒரு பக்கம் நடக்கையில், போஜாபாய் வருமானமீட்ட விவசாயத் தொழிலாளராக பணிபுரிவார். ஆனால் 2017ம் ஆண்டிலிருந்து விவசாய நிலங்களிலும் 30 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பதானிலுள்ள கட்டுமானத் தளங்களிலும் என அவர் முழு நேர விவசாயத் தொழிலாளராக பணிபுரிய வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. “இப்போது கூட அவர் வேலை தேடிதான் சென்றிருக்கிறார். வேலை கிடைத்தால் நாளொன்றுக்கு 200 ரூபாய் அவருக்கு வருமானம் கிடைக்கும்,” என்கிறார் பானுபென்.
அவர்களின் இளைய மகளான சுகானா, வெள்ளம் நேர்ந்த அதே வருடத்தில்தான் பிறந்தார். அவரின் நெற்றியைத் தடவியபடி, ஐந்து வருட காலம் ஓடிவிட்டதென்பதை நம்ப முடியவில்லை என்கிறார் பானுபென்.
பனஸ்கந்தா, பதான், சுரேந்திரநகர், ஆரவல்லி, மோர்பி போன்ற குஜராத்தின் பல மாவட்டங்களில் 2017ம் ஆண்டு தீவிர கனமழை பெய்தது. அரபிக் கடலிலும் வங்காள விரிகுடாவிலும் ஒரே நேரத்தில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் இணைந்து அப்பேரழிவை உருவாக்கின. அது மிகவும் அரிதான நிகழ்வு. தேசியப் பேரிடர் ஆணையத்தின் அறிக்கையின்படி, 112 வருடங்களில் அப்பகுதி பெற்ற மழைகளிலேயே அதிக மழை அதுதான்.









