1962ம் ஆண்டின் அந்த நாளைத் தெளிவாக நினைவில் வைத்திருக்கிறார் 82 வயது பாபு சுதார். அவரின் இன்னொரு மரக் கைத்தறியை விற்றிருந்தார். சொந்தப் பட்டறையில் தயாரித்த ஏழடி உயரத் தறி, கொல்காப்பூரின் சங்காவோன் கசாபா கிராமத்தைச் சேர்ந்த ஒரு நெசவாளரிடமிருந்து 415 ரூபாய் பெற்றுத் தந்தது.
அவர் உருவாக்கிய கடைசி மரத் தறியாக அது இல்லாதிருந்திருந்தால், சந்தோஷமான நினைவாக அது இருந்திருக்கும். ஆர்டர்கள் வருவது அதற்குப் பிறகு நின்றுவிட்டது. கையால் தயாரிக்கப்பட்ட மரத்தறியை வாங்குவதற்கு அதற்குப் பிறகு ஆளில்லை. ”எல்லாமே முடிவுக்கு வந்துவிட்டது,” என அவர் நினைவுகூர்கிறார்.
அறுபது வருடங்கள் கழித்து இன்று, காலால் மிதித்து இயக்கும் தறியை உருவாக்கும் கடைசி மனிதர் கிராமத்தில் பாபுதான் என்பது கொல்காப்பூர் மாவட்டத்தின் ரெண்டாலைச் சேர்ந்த சிலருக்கு மட்டுமே தெரியும். ஒரு காலத்தில் பிரபலமான கைவினைஞராக இருந்தவர் அவர் என்பதும் சிலருக்கு மட்டுமே தெரியும். “ரெண்டால் மற்றும் அருகாமை கிராமங்களின் பிற கைத்தறி த்யாரிப்பாளர்கள் அனைவரும் இறந்து விட்டனர்,” என்கிறார் 85 வயது வசந்த் தாம்பே. கிராமத்தின் முதிய நெசவாளர் அவர்தான்.
மரத்தில் கைத்தறி தயாரிக்கும் பாரம்பரியமே ரெண்டாலில் தொலைந்து விட்டது. “கடைசி கைத்தறி கூட இல்லை,” என்கிறார் பாபு, அவரது சிறிய வீட்டைச் சுற்றி இருக்கும் மின் தறிகளின் சத்தத்தினூடாக.
வீட்டுக்குள்ளே அமைந்திருக்கும் ஓரறைக்குள் அமைந்திருக்கும் பாபுவின் பாரம்பரியப் பட்டறை கடந்து போன ஒரு காலத்தின் சாட்சியாக இருக்கிறது. அடர்பழுப்பு, வெளிர்பழுப்பு, செம்பழுப்பு, அடர் செம்பழுப்பு எனப் பட்டறையிலிருந்த பழுப்பு நிறங்களின் கலவை மெல்ல மங்கலாகி கால ஓட்டத்தில் மினுமினுப்பு குறைந்து கொண்டிருக்கிறது.
*****
மகாராஷ்டிராவின் கொல்காப்பூர் மாவட்டத்தின் ஜவுளி டவுனான இச்சல்கரஞ்சியிலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் ரெண்டால் அமைந்திருக்கிறது. 20ம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்தில், பல கைத்தறிகள் இச்சல்கரஞ்சி டவுனுக்கு வந்தன. மாநிலத்தின் பிரபலமான ஜவுளி மையமாகத் திகழத் தொடங்கி இந்தியாவின் பிரபல ஜவுளி மையமாகவும் அது மாறியது. இச்சல்கரஞ்சிக்கு அருகே இருந்த ரெண்டாலும் சிறிய ஜவுளி உற்பத்தி மையமாக மாறியது.
1928ம் ஆண்டில்தான் பாபுவின் தந்தையான காலம் சென்ற கிருஷ்ண சுதார் முதன்முதலாக 200 கிலோவுக்கு அதிக எடை கொண்ட பெரிய தறிகளை உருவாக்கக் கற்றுக் கொண்டார். இச்சால்கரஞ்சியின் கைவினை நிபுணரான காலம் சென்ற தடே துலப்பா சுதார்தான் கிருஷ்ணாவுக்கு தறிகளை உருவாக்கக் கற்றுக் கொடுத்ததாகக் கூறுகிறார் பாபு.
“1930களின் தொடக்கத்தில் கைத்தறிகள் உருவாக்கும் குடும்பங்கள் இச்சால்கரஞ்சியில் இருந்தன,” என நினைவுகூருகிறார் பாபு. அவரின் ஞாபகம் நேர்த்தியாக பின்னப்பட்ட நூலுக்கான உறுதியுடன் இருக்கிறது. “கைத்தறிகள் அச்சமயத்தில் பெருகிக் கொண்டிருந்தன. எனவே என் தந்தை அவற்றை உருவாக்கக் கற்றுக் கொள்ள முடிவெடுத்தார்.” அவரின் தாத்தாவான காலம் சென்ற கல்லப்ப சுதார் பாசனத்துக்கான நீரிறைக்கும் பாரம்பரியக் கருவி உருவாக்குவதைத் தாண்டி, அரிவாள், மண்வெட்டி, கலப்பை போன்ற விவசாயக் கருவிகளை உருவாக்கியவர்.
குழந்தையாக இருந்தபோது அப்பாவின் பட்டறையில் நேரம் கழிப்பது பாபுவிக்கு பிடித்தமான விஷயம். முதல் தறியை அவர் 1954ம் ஆண்டில், 15 வயதாக இருக்கும்போது உருவாக்கினார். “ஆறு நாட்களுக்கு மேலாக 72 மணி நேரங்களுக்கு நாங்கள் மூன்று பேர் உழைத்து உருவாக்கினோம்,” எனப் புன்னகைக்கிறார். “ரெண்டாலில் உள்ள ஒரு நெசவாளருக்கு 115 ரூபாய்க்கு அதை விற்றோம்.” அது மிக நல்ல விலை எனச் சொல்லும் அவர், அந்த காலக்கட்டத்தில் ஒரு கிலோ அரிசியின் விலை 50 பைசா என்கிறார்.
60களின் தொடக்கத்தில் கையால் உருவாக்கப்பட்ட தறியின் விலை 415 ரூபாயாக உயர்ந்தது. “ஒரு மாதத்தில் குறைந்தது நான்கு கைத்தறிகளை நாங்கள் உருவாக்கினோம்.” எப்போதும் ஒரு தறி மட்டும் விற்க முடியாது. “அதன் பல பகுதிகளை நாங்கள் மாட்டு வண்டியில் சுமந்து சென்று நெசவாளரின் பட்டறையில் அவற்றை ஒன்றிணைத்தோம்,” என விளக்குகிறார் அவர்.
விரைவிலேயே பாபு, தறியின் மேல் வைக்கப்படும் டாபியை உருவாக்கக் கற்றுக் கொண்டார். துணி நெய்யப்படுகையில் நுணுக்கமான வடிவங்களையும் வேலைப்பாடுகளையும் உருவாக்க அது உதவுகிறது. தேக்கில் முதல் டாபியை உருவாக்க மூன்று நாட்களில் 30 மணி நேரம் ஆனது அவருக்கு. “அதன் தரம் நன்றாக இருக்கிறதா எனப் பரிசோதிக்க ரெண்டாலின் நெசவாளர் லிங்கப்பா மகாஜனுக்கு இலவசமாக அதைக் கொடுத்தேன்,” என நினைவுகூருகிறார்.
இரண்டு கைவினைஞர்கள் ஓரடி உயரத்துக்கான 10 கிலோ டாபி ஒன்றை உருவாக்க இரண்டு நாட்கள் உழைக்க வேண்டியிருந்தது. இத்தகைய 800 டாபிகளை பாபு பத்தாண்டுகளில் உருவாக்கியிருக்கிறார். “1950களில் ஒரு டாபி 18 ரூபாய்க்கு விற்றது. 1960களில் 35 ரூபாயானது,” என்கிறார் அவர்.
1950களின் பிற்பகுதியில் ரெண்டாலில் கிட்டத்தட்ட 5000 கைத்தறிகள் இருந்தன என்கிறார் நெசவாளர் வசந்த். “ஒன்பது முழப் புடவைகள் இத்தறிகளில் நெய்யப்பட்டன,” என்னும் அவர், 60களின்போது ஒரு வாரத்தில் 15 புடவைகள் தைத்த காலக்கட்டத்தை நினைவுகூர்ந்தபடி .
கைத்தறிகள் பெரும்பாலும் தேக்கில் செய்யப்பட்டன. தரகர்கள் மரத்தை கர்நாடகாவின் தந்தேலி டவுனில் இருந்து கொண்டு வந்து இச்சால்கரஞ்சியில் விற்பார்கள். “மாதத்தில் இருமுறை நாங்கள் மாட்டு வண்டியில் சென்று அதை இச்சால்கரஞ்சியிலிருந்து ரெண்டாலுக்குக் கொண்டுவருவோம்,” என்னும் பாபு, போக வர ஆறு மணி நேரம் ஆகி விடும் என்கிறார்.
தேக்கை ஒரு கன அடி 7 ரூபாய் என்கிற விலையில் பாபு வாங்கினார். 1960களில் அது 18 ரூபாயாக அதிகரித்தது. இப்போது 3000 ரூபாயைத் தாண்டி விட்டது. இவற்றை தாண்டி இந்த இரும்புத் தடி, மரத் தட்டுகள், நட்டுகள், போல்ட்டுகள் மற்றும் ஆணிகளும் பயன்படுத்தப்பட்டன. “ஒவ்வொரு கைத்தறிக்கும் ஆறு கிலோ இரும்பும் 7 கன அடி தேக்கும் தேவைப்படும்,” என்கிறார் அவர். 1940களில் இரும்பின் விலை கிலோவுக்கு 75 பைசாவாக இருந்தது.
பாபுவின் குடும்பம் அவர்களின் கைத்தறிகளை கொல்காப்பூரின் ஹத்கானங்களே தாலுகாவிலும் சிகோடி தாலுகாவின் கரடகா, கோகனோலி மற்றும் போரகவோன் கிராமங்களிலும் விற்றனர். 1940களின் தொடக்கத்தில் கிருஷ்ண சுதார், பாபு பலிசோ சுதார் மற்றும் ராமு சுதார் (அனைவரும் உறவினர்கள்) ஆகிய மூன்று கலைஞர்கள் மட்டுமே இருந்தனர். அந்தளவுக்கு நுட்பம் நிறைந்த கலை அது.
கைத்தறி கலை சாதி சார்ந்த தொழில் ஆகும். பெரும்பாலும் அதை சுதார் சாதியை சேர்ந்தவர்களே செய்கின்றனர். மகாராஷ்டிராவின் பிற பிற்படுத்தப்பட்ட சமூகங்களில் பட்டியலிடப்பட்டிருக்கும் சாதி அது. “பஞ்சல் சுதார் (உட்சாதி) மட்டுமே அதைச் செய்ய முடியும்,” என்கிறார் பாபு.
ஆண்களின் ஆதிக்கம் நிறைந்த தொழிலாகவும் அது இருந்தது. பாபுவின் தாயான காலம் சென்ற சோனா பாய் ஒரு விவசாயியாகவும் இல்லத்தரசியாகவும் இருந்தார். 60 வயதுகளில் இருக்கும் பாபுவின் மனைவியான லலிதா சுதாரும் இல்லத்தரசிதான். “ரெண்டாலின் பெண்கள் நூலை ராட்டையில் கோர்த்துத் தடியில் சுற்றி வைப்பார்கள். ஆண்கள் பிறகு நெய்வார்கள்,” என்கிறார் வசந்தின் மனைவியான 77 வயது விமல். நான்காம் அனைத்திந்திய கைத்தறி கணக்கெடுப்பு (2019-20)-ன்படி, இந்தியக் கைத்தறித் தொழிலாளர்களில் 72.3 சதவிகிதம், அதாவது, 2,546,285 பேர் பெண்கள்.
இந்த நாள் வரை 50களின் திறமையான கலைஞர்கள் மீதான பிரமிப்போடு இருக்கிறார் பாபு. “கப்னூர் கிராமத்தின் கல்லப்பா சுதார் தறி ஆர்டர்களை ஹைதராபாத்திலிருந்தும் சோலாப்பூரிலிருந்து பெறுவார். அவரிடம் ஒன்பது தொழிலாளர்கள் கூட இருந்தனர்,” என்கிறார் அவர். யாரையும் வேலைக்கு வைத்துக் கொள்ள முடியாமல் குடும்ப உறுப்பினர்களின் உதவியைக் கொண்ட்ஃபு மட்டுமே தறி தயாரிக்கப்பட்டச் சூழலில், ஒன்பது ஊழியர்களை ஊதியத்துக்கு அமர்த்தி தொழில் செய்தது சாதாரண விஷயம் அல்ல.
பட்டறையில் பூட்டி வைத்து பாபு காக்கும் அவருக்குப் பிடித்த 2 x 2.5 அடி தேக்குப் பெட்டியை சுட்டிக் காட்டுகிறார். “அதில் 30 வித திருப்புளிகளும் உபகரணங்களும் இருக்கின்றன. அவை பிறருக்கு சாதாரண உபகரணங்களாகத் தோன்றலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரை என் கலைக்கான நினைவுச் சின்னங்கள் அவை,” என்கிறார் அவர் உணர்ச்சிப் பெருக்கோடு. பாபுவும் அவரது அண்ணனான காலம் சென்ற வசந்த் சுதாரும் தந்தையிடமிருந்து தலா 90 திருப்புளிகளை பெற்று வைத்திருந்தனர்.
பாபுவின் வயதையோத்த இர மர அலமாரிகளில் உளிகளும் அறுவைக் கத்திகளும் துளைக்கும் கருவிகளும் சதுரங்களும் பிரிப்பான்களும் காம்பஸும் கத்திகளும் இன்னும் பல உபகரணங்களும் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கின்றன. “என்னுடைய தாத்தா மற்றும் அப்பாவிடமிருந்து எனக்கு வந்த உபகரணங்கள் இவை,” என்கிறார் அவர் பெருமையுடன்.
1950களில் புகைப்படக் கலைஞர்கள் ரெண்டாலில் இல்லை. எனவே கலையின் நினைவுகளை பாதுகாக்கவென கொல்காப்பூரிலிருந்து புகைப்படக் கலைஞர்களை வரவழைத்ததை நினைவுகூருகிறார் பாபு. பயணத்துக்கும் ஆறு புகைப்படங்களுக்கும் சேர்த்து ஷ்யாம் பாடில் 10 ரூபாய் கட்டணம் வாங்கினார். “இன்று ரெண்டாலில் பல புகைப்படக் கலைஞர்கள் இருக்கின்றனர். ஆனால் புகைப்படம் எடுக்கப்பட பாரம்பரியக் கலைஞர்கள் உயிருடன் இல்லை,” என்கிறார் அவர்.
*****
கடைசி கைத்தறியை பாபு 1962-ல் விற்றார். அதற்குப் பின் தொடர்ந்த வருடங்கள் அவருக்கு மட்டுமின்றி பலருக்கும் சவால் மிகுந்தவையாக இருந்தன.
அந்த பத்தாண்டுகளில் ரெண்டாலிலேயே பெரும் மாற்றங்கள் பல நேர்ந்தன. பருத்தி புடவைகளுக்கான தேவை கடும் சரிவை சந்தித்தது. இதனால் நெசவாளர்கள் ஃபேப்ரிக் துணியை நெய்யும் நிலைக்கு ஆளாகினர். “நாங்கள் தயாரித்தப் புடவைகள் எளிமையானவை. காலம் ஓடிய பின்னும் இப்புடவைகளில் மாற்றம் ஏதும் நேரவில்லை. இறுதியில் அவற்றுக்கான தேவை சரிந்துவிட்டது,” என்கிறார் வசந்த் டாம்பே.
அது மட்டுமல்ல. வேகமான உற்பத்தி, அதிக லாபங்கள் மற்றும் எளிய உழைப்பு ஆகிய உறுதிகளுடன் வந்த மின்சாரத் தறிகள் கைத்தறிகளின் இடத்தைப் பற்றின. ரெண்டாலின் கைத்தறிகள் எல்லாமுமே செயல்படுவது நின்றுபோனது . தற்போது 75 வயது சிராஜ் மாமின் மற்றும் 73 வயது பாபுலால் மாமின் ஆகிய இருவர்தான் கைத்தறி பயன்படுத்தும் நெசவாளர்கள். அவர்களும் அதைக் கைவிட ஆலோசிக்கின்றனர்.
“கைத்தறிகள் தயாரிப்பு எனக்குப் பிடித்த விஷயம்,” என சந்தோஷமாக சொல்கிறார் பாபு. பத்தாண்களுக்குள் 400 சட்டகத் தறிகள் தயாரித்ததாகவும் சொல்கிறார். எல்லாமுமே எந்தவித எழுத்துப்பூர்வ வழிகாட்டுதலும் இன்றி வெறும் கைகளிலேயே தயாரிக்கப்பட்டன. அவரின் தந்தையும் தறிகளுக்கான வடிவத்தையோ அளவுகளையோ எழுதி வைக்கவில்லை. “எல்லா வடிவங்களும் என் தலைக்குள் இருக்கின்றன. எல்லா அளவுகளும் மனப்பாடமாக எனக்குத் தெரியும்,” என்கிறார் அவர்.
மின் தறிகள் வந்த பிறகும் கூட, அவற்றை வாங்க முடியாத சில நெசவாளர்கள் விலை குறைவான இரண்டாம் பயன்பாட்டு கைத்தறிகளை வாங்கத் தொடங்கினர். 70களில் இரண்டாம் பயன்பாட்டு கைத்தறியின் விலை 800 ரூபாய் வரை உயர்ந்தது.
“அப்போது கைத்தறி தயாரிக்க யாருமில்லை. மூலப்பொருட்களின் விலைகள் அதிகரித்து கைத்தறியின் விலையும் உயர்ந்தது,” என விளக்குகிறார் பாபு. “பல நெசவாளர்கள் அவர்களது கைத்தறிகளை சோலாப்பூர் மாவட்ட நெசவாளர்களிடம் விற்றனர்.” உள்ளீடு மற்றும் போக்குவரத்து செலவுகள் உயர்ந்ததால், கைத்தறி தயாரிப்பு கைக்கடக்கமாக இருக்கவில்லை.
இன்று கைத்தறி செய்ய எவ்வளவு ஆகுமெனக் கேட்டதும் பாபு சிரிக்கிறார். “இன்று கைத்தறி யாருக்கு தேவைப்படப் போகிறது?” என எதிர்கேள்வி கேட்டுவிட்டு, சில கணக்குகளைப் போடுகிறார். “குறைந்தது 50,000 ரூபாய் ஆகும்.”
1960களின் தொடக்கத்தில், கைத்தறிகளின் பழுது நீக்கும் வேலை பார்த்து கைத்தறி தயாரிப்புக்கான வருமானத்தை ஈட்டினார் பாபு. பழுதுபார்க்க ஒருமுறை 5 ரூபாய். “குறையை வைத்து நாங்கள் விலையைக் கூட்டுவோம்,” என நினைவுகூருகிறார். புது கைத்தறிகளுக்கான ஆர்டர்கள் வருவது 1960களுக்கு நடுவே நின்று போனதும் பாபுவும் அவரின் சகோதரர் வசந்தும் வருமானமீட்ட பிற வழிகளை முயலத் தொடங்கினர்.
“நாங்கள் கொல்ஹாபூருக்கு சென்றோம்.அங்கு ஒரு மோட்டாரை பழுது நீக்கும் முறையை ஒரு மெக்கானிக் நான்கு நாட்களில் எங்களுக்குக் கற்றுக் கொடுத்தார்,” என்கிறார் அவர். மின் தறிகளின் பழுது நீக்கவும் அவர்கள் கற்றுக் கொண்டனர். மோட்டார் எரிந்துவிட்டால் செய்யப்படும் மறுசுற்றலே ரீவைண்டிங் ஆகும். 1970களில் கர்நாடகாவின் பெலகவி மாவட்டத்தின் மங்கூர், ஜங்கம்வாடி மற்றும் போரகோன் ஆகிய இடங்கள் தொடங்கி ரங்கோலி, இச்சல்கரஞ்சி மற்றும் ஹுபாரி ஆகிய கொல்காப்பூர் மாவட்டப் பகுதிகள் வரை மோட்டார் பழுது நீக்க பாபு செல்வார்.
கிட்டத்தட்ட 60 வருடங்கள் ஓடிவிட்டது. வேலை கிடைப்பது கடினமாகிக் கொண்டே வருகிறது. பலவீனமான பாபுவோ இச்சல்கரஞ்சிக்கும் ரங்கோலி (ரெண்டாலிலிருந்து 5.2 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும்) கிராமத்துக்கும் மோட்டார் ரிப்பேர் பார்க்க சைக்கிளில் செல்கிறார். ஒரு மோட்டாரை ரீவைண்ட் செய்ய இரண்டு நாட்கள் எடுத்துக் கொள்கிறார். மாதத்துக்கு 5000 ரூபாய் வருமானம் ஈட்டுகிறார். “நான் ஐடிஐ படிக்கவில்லை,” எனச் சிரிக்கும் அவர், “ஆனால் மோட்டார்களை ரீவைண்ட் செய்கிறேன்,” என்கிறார் அவர்.
கரும்பு, சோளம், கடலை போன்றவற்றை அவரது 0.5 ஏக்கர் நிலத்தில் விளைவித்து கொஞ்சம் வருமானம் ஈட்டுகிறார். முதுமை அடைவதால் நிலத்தில் அதிகம் அவரால் உழைக்க முடியவில்லை. தொடர் வெள்ளம் விளைச்சலும் நிலத்திலிருந்து கிடைக்கும் வருமானமும் குறைவாக இருப்பதை உறுதிபடுத்துவதாக இருக்கிறது.
கடந்த இரண்டு வருடங்கள் பாபுவுக்கு சிரமமாக இருந்தது. கோவிட் தொற்றும் ஊரடங்கும் அவரின் வேலையையும் பணியையும் பாதித்தது. “பல மாதங்களாக எனக்கு எந்த ஆர்டரும் கிடைக்கவில்லை,” என்கிறார் அவர். அதிகரிக்கும் ஐடிஐ பட்டதாரிகள் மற்றும் மெக்கானிக்குகளாலும் அவர் போட்டியைச் சந்திக்கிறார். மேலும், “இப்போது தயாரிக்கப்படும் மோட்டார்கள் நல்ல தரத்தில் இருக்கின்றன. ரீவைண்டிங் தேவைப்படுவதில்லை.”
கைத்தறி துறையும் நன்றாக இல்லை. கைத்தறி கணக்கெடுப்பு 2019-20ன்படி மகாராஷ்டிராவின் கைத்தறிப் பணியாளர் எண்ணிக்கை 3,509 ஆகக் குறைந்திருக்கிறது. 1987-88ல் முதல் கைத்தறிக் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டபோது இந்தியாவில் 67.39 லட்சம் கைத்தறிப் பணியாளர்கள் இருந்தனர். 2019-2020-ல் அது 35.22 லட்ச ஊழியர்களாகக் குறைந்தது. ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் 1 லட்சம் கைத்தறிப் பணியாளர்கள் குறைந்து வருகின்றனர்.
நெசவாளர்களுக்கு குறைவான வருமானமே கிட்டுகிறது. கணக்கெடுப்பின்படி இந்தியாவின் 31.45 லட்சம் கைத்தறி குடும்பங்களில், 94,201 கடனில் இருக்கின்றன. கைத்தறிப் பணியாளர்கள் வருடத்தில் சராசரியாக 207 நாட்கள் பணிபுரிகின்றனர்.
மின் தறிகளின் பெருக்கமும் கைத்தறித் துறை புறக்கணிப்பும் கையால் நெய்வதையும் தறி தயாரிப்பையும் கடுமையாக பாதித்திருக்கிறது. நிலவரம் இருக்கும் நிலையால் பாபு சோகமாகி இருக்கிறார்.
“கையால் நெய்வதை யாரும் கற்க விரும்பவில்லை. தொழில் எப்படி பிழைக்கும்?” எனக் கேட்கிறார் அவர். அரசு கைத்தறிப் பயிற்சிப் பள்ளிகளை இளைஞர்களுக்காக திறக்க வேண்டும்.” துரதிர்ஷ்டவசமாக பாபுவிடமிருந்து ரெண்டாலின் யாரும் மரத் தறி தயாரிக்கும் முறையை கற்றுக் கொள்ளவில்லை. 82 வயதில் அறுபது வருடங்களுக்கு முன் நின்றுபோன அக்கலையின் எல்லா அறிவையும் கொண்டிருக்கும் ஒரே நபராக பாபுதான் இருக்கிறார்.
இன்னொரு கைத்தறி செய்ய அவருக்கு விருப்பம் இருக்கிறதா எனக் கேட்டேன். “இப்போது கைத்தறிகள் அமைதியாகி விட்டன. ஆனால் பாரம்பரிய மரக் கருவியும் என் கைகளும் இன்னும் உயிரோடுதான் இருக்கின்றன,” என்கிறார் அவர். பழுப்பு நிறப் பெட்டியைப் பார்த்து புன்னகைக்கிறார். அவரின் பார்வையும் நினைவுகளும் பழுப்புக்குள் மங்கிக் கொண்டிருக்கின்றன.
மிருணாளினி முகர்ஜி அறக்கட்டளை ஆதரவில் வெளியாகும் கிராமப்புறக் கலை நிபுணர்கள் பற்றிய சங்கேத் ஜெயினின் கட்டுரைத் தொடரின் ஒரு பகுதி இக்கட்டுரை.
தமிழில் : ராஜசங்கீதன்