மீனாவுக்கு சீக்கிரமே திருமணம் நடக்கவிருந்தது. அதற்குக் காரணமாக சில மாதங்களுக்கு “நான் ஒரு பிரச்சினையாக மாறிவிட்டேன்” என்கிறார். மீனாவைப் போலவே அப்பிரச்சினைக்கு ஆட்பட்ட அவரின் உறவினரான சோனுவும் விரைவிலேயே திருமணம் செய்து கொள்ளவிருக்கிறார். அவர்களைப் போன்ற சிறுமிகள் மாதவிடாய்க்கு பிறகு என்னவாக மாறுகிறார்கள் என்பதே அப்பிரச்சினைகளின் அடித்தளங்களாக இருக்கின்றன.
14 வயது மீனாவும் 13 வயது சோனுவும் ஒரு படுக்கையின் பக்கம் பக்கமாக அமர்ந்திருக்கின்றனர். பேசும்போது ஒருவரையொருவர் பார்த்துக் கொள்கின்றனர். தெரியாத ஒருவரிடம் தங்களுக்கு நேர்ந்திருக்கும் மாதவிடாய் மாற்றத்தைப் பற்றிப் பேச தயங்கிக் கொண்டு பெரும்பாலும் மீனா வீட்டின் மண் தரையை இருவரும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்குப் பின் இருந்த அறையில் ஒரு ஆட்டுக்குட்டி சிறு கயிறைக் கொண்டு கட்டிப் போடப்பட்டிருந்தது. உத்தரப்பிரதேசத்தின் பைதாக்வா என்கிற அந்த கிராமத்தை சுற்றி காட்டு விலங்குகளின் நடமாட்டம் அதிகம் என்பதால் அதை வெளியே விட முடியாது. எனவே அது உள்ளே இருப்பதாக அவர்கள் சொல்கின்றனர்.
மாதவிடாய் என்பது என்னவென்பதை இப்போதுதான் அச்சிறுமிகள் புரிந்திருக்கிறார்கள். அது வெட்கப்பட வேண்டிய விஷயமாக அவர்கள் புரிந்து கொண்டுள்ளனர். அச்சப்பட வேண்டிய விஷயமாகவும் அதை நினைக்கின்றனர். சிறுமிகளின் பாதுகாப்புப் பற்றிய அச்சம் மற்றும் பூப்பெய்திய பிறகு திருமணத்துக்கு முன்பே நேரக்கூடிய கர்ப்பம் குறித்த பதற்றம் ஆகியவற்றால் இந்த கிராமத்தின் குடும்பங்கள் மகள்களுக்கு வெகுசீக்கிரமே திருமணம் முடித்து விடுகின்றன. பல நேரங்களில் 12 வயதிலேயே திருமணங்கள் முடித்து வைக்கப்படுகின்றன.
“கருத்தரிக்கும் தன்மை பெற்ற பிறகு எங்கள் குழந்தைகளை எப்படி நாங்கள் பாதுகாக்க முடியும்??” எனக் கேட்கிறார் மீனாவின் 27 வயது தாய் ராணி. அவரும் குழந்தைத் திருமணம் செய்து கொண்டவர்தான். 15 வயதிலேயே தாயானவர். சோனுவின் தாயான சம்பாவுக்கு தற்போது 27 வயது. மகளுக்கு திருமணம் நடந்த அதே 13 வயதில்தான் தனக்கும் திருமணமானதாக நினைவுகூர்கிறார். எங்களைச் சுற்றிக் கூடியிருந்த ஆறு பெண்களும் 13, 14 வயதுகளில் சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைப்பதே ஊரின் வழக்கம் என்கிறார்கள். “எங்கள் கிராமம் வேறொரு யுகத்தில் வாழ்கிறது. எங்களுக்கு வேறு வழியில்லை. நாங்களும் ஏதும் செய்ய முடியாது,” என்கிறார் ராணி.
குழந்தைத் திருமணம் என்பது உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், பிகார், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களின் வடக்கு மத்திய மாவட்டங்களில் சாதாரண வழக்கமாக இருக்கிறது. 2015ம் ஆண்டில் பெண்களைப் பற்றிய சர்வதேச ஆய்வு மையமும் யுனிசெஃப்ஃபும் நடத்திய மாவட்ட அளவிலான ஆய்வின்படி, “இந்த மாநிலங்களின் மூன்றில் இரண்டு பகுதி மாவட்டங்களில் 50 சதவிகிதத்துக்கும் அதிகமான பெண்கள் சட்டப்பூர்வ வயதுக்கு முன்னமே திருமணம் செய்து கொடுக்கப்பட்டிருக்கிறார்கள்.”
குழந்தைத் திருமண ஒழிப்புச் சட்டம் 18 வயதுக்கு குறைவான பெண்ணும் 21 வயதுக்கு குறைவான ஆணும் திருமணம் செய்வதைத் தடை செய்கிறது. இத்தகைய திருமணங்களை நடத்துவோருக்கும் அனுமதிப்போருக்கும் இரண்டு வருட கடுங்காவல் தண்டனையும் 1 லட்ச ரூபாய் வரை அபராதமும் உண்டு.











