பேரணிக்கு நடுவே அமைதியாக இருந்தவர் எம்.எஸ். சாந்தகுமார். பொருத்தமான பெயர். சத்திஸ்கரின் பிலாய் ஸ்டீல் ஆலையின் முன்னாள் பணியாளர். பார்ப்பதற்கு அமைதியான தோற்றத்தில் இருந்தாலும், நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார் சிஐடியுவின் அனுபவமிக்க செயற்பாட்டாளர். “நரேந்திர மோடிக்கு எதிராக எனக்கு தனிப்பட்ட பகை எதுவும் கிடையாது. ராகுல் காந்திக்கும் எதிராகவும் கிடையாது,” என்கிறார் அவர். “மக்களை துன்புறுத்தும் கொள்கைகளைத்தான் நான் எதிர்க்கிறேன்.”
சத்திஸ்கர் மற்றும் அண்டை மாநிலங்களான ஜார்க்கண்ட், மத்திய பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சி ஏழைகளுக்கு எதிரான வளர்ச்சியைத் தொடர்ந்தால், “வரும் தேர்தலில் அவர்களுக்கு பாடம் கற்பிக்கப்படும்.”
பொதுத்துறைகளை தனியார் மயமாக்குவது, போதிய ஊதியமின்மை, சத்தீஸ்கரில் நில உரிமைகளை பாதுகாப்பவர்கள் குறித்தும் அவர் கவலை தெரிவித்தார். கலகலப்புடன் அவர் பேசும்போது, மனித உரிமை ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டிக்கும் சுவரொட்டியை தடுக்கவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறார்.
டெல்லியில் செப்டம்பர் 5ஆம் தேதி நடைபெறும் பேரணியின் இரண்டு முக்கிய அம்சங்களை அவர் எடுத்துரைத்தார். தொழிலாளர்கள், விவசாயிகளின் கூட்டணி வளர்வது, சிவில் உரிமைகள் மற்றும் பொருளாதார உரிமைகளை கூட்டாக பாதுகாத்தல். அனைத்திந்திய கிசான் சபா (AIKS), பொதுச் செயலாளரும் செப்டம்பர் 5ஆம் தேதி நடைபெறும் மஸ்தூர் கிசான் சங்கர்ஷ் பேரணியின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவருமான ஹன்னன் மொல்லாவின் கருத்துபடி, “காலப்போக்கில் இப்பேரணி திருப்புமுனையாக அமையும். விவசாயிகளின் போராட்டம் மெல்ல மக்களின் இயக்கமாக மாறும்.”
ஏஐகேஎஸ், சிஐடியு, அனைத்திந்திய விவசாய தொழிலாளர் சங்கம் ஆகிய மூன்று முதன்மை சங்கங்கள் இப்பேரணிக்கு அழைப்பு விடுத்தன. பல்வேறு கூட்டமைப்புகளும், பிற அமைப்புகளும் ஆதரவு அளித்துள்ளன. இதன் 15 அம்ச கோரிக்கைகள் விரிவான அம்சங்களைக் கொண்டுள்ளது. கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கான தேசிய ஆணையம், உலக சமூக, உணவு, ஊட்டச்சத்து பாதுகாப்பு குறிப்பிட்ட ஆதரவு விலை, அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்த அளவான மாதந்தோறும் ரூ.18,000 குறையாமல் கூலி வழங்குதல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை நகர்ப்புறங்களுக்கும் விரிவுப்படுத்துவது போன்ற நீண்ட கால கோரிக்கைகளும் அடங்கும்.
நாட்டின் 26 மாநிலங்களைச் சேர்ந்த 300,000 தொழிலாளர்கள் டெல்லியின் ராம்லீலா மைதானத்திலிருந்து அன்றைய மழை நாளில் நாடாளுமன்ற தெருவை நோக்கி பேரணியாகச் செல்லும் காட்சி, “பணக்கார வர்க்கங்களின்” அலட்சியத்தை உடைக்கும் என்று நம்பிக்கைத் தெரிவித்தார். நாட்டில் அதிகரித்து வரும் வாழ்வாதார நெருக்கடிகள், விவசாயிகளின் நெருக்கடி குறித்த சிறப்பு 21 நாள் நாடாளுமன்ற கூட்டத்திற்கு ஆதரவளிக்கவும் அவர்கள் வலியுறுத்தினர்.
நாட்டின் 26 மாநிலங்களைச் சேர்ந்த 300,000 தொழிலாளர்கள் டெல்லியின் ராம்லீலா மைதானத்திலிருந்து நாடாளுமன்ற தெருவை நோக்கி பேரணியாகச் செல்வது, “பணக்கார வர்க்கங்களின்” அலட்சியத்தை உடைத்து எரியும் என்று நம்பிக்கைத் தெரிவிக்கிறார் மொல்லா
பேரணி பங்கேற்பாளர்களின் பன்முகத்தன்மை, ஏற்கனவே நடந்து கொண்டிருக்கும் கூட்டணி-கட்டமைப்பின் வலைப்பின்னலை காட்டுகிறது, தொழிற்சங்கம், கூட்டமைப்புகளுக்கு இடையேயான ஆதரவு மற்றும் ஒற்றுமை விரிவடைகிறது.
ஃபார்வாட் சீமென் இந்திய சங்கத்தின் இணைச் செயலாளரான மும்பையின் அக்ஷய் பிர்வாட்கர் பேசுகையில், கொள்கைகளால் நாடு முழுவதும் கடலோடிகள் பாதிக்கப்படுவது குறித்து விவரித்தார். இந்திய கடல்களை வெளிநாட்டு பதிவுப்பெற்ற கப்பல்களுக்கு திறந்துவிடுவதால் பொருளாதார பாதுகாப்பு நீர்த்து போவதையும், இந்திய கடலோடிகளிடையே பெருமளவு வேலை பாதுகாப்பற்ற சூழலையும் உருவாக்குகிறது. மீனவர்கள் குறித்து அவர் கவலையும் தெரிவித்தார். “பயிற்சிபெற்ற கடலோடிகளுக்குப் பதிலாக கட்டணத்தைக் குறைப்பதற்காக ஆவணமற்ற முறையில் மீனவர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். இதனால் அபாயகரமான சூழ்நிலைகளில் உடல்நலம் அல்லது அச்சுறுத்தல் சார்ந்த பாதுகாப்போ கிடைப்பதில்லை. ”
பேரணியில் சங்கங்கள் மற்றும் கூட்டமைப்புகளுக்கு இடையே ஆதரவும், ஒற்றுமையும் நிலவியது. முன்னாள் இராணுவ வீரரான முருகநிதி தனது மனைவியான புகைப்படக்காரர் மற்றும் மொழிபெயர்ப்பாளரான தமிழரசியுடன் வந்திருந்தார். ‘தமிழுக்கு அரசி (தமிழ்)‘ இவர் என்று அவர் அறிமுகம் செய்து வைத்தார். புதுச்சேரி அங்கன்வாடி பணியாளர் கூட்டமைப்பின் தலைவரான தமிழரசி புதுச்சேரி, மாஹே, ஏனம், காரைக்கால் ஆகிய நான்கு மாவட்டங்களைக் கொண்ட யூனியன் பிரதேசத்தின் அங்கன்வாடி பணியாளர்களின் பிரதிநிதியாக இங்கு வந்துள்ளார். தங்களின் பிரச்சனைகளை அவர் அடுக்கினார்: “கடந்த 30 ஆண்டுகளாக நான் அங்கன்வாடி ஆசிரியையாக உள்ளேன். நாங்கள் ஓய்வுபெற்ற பிறகு எங்களுக்கு தொழிலாளர் வைப்பு நிதியின் வடிவில் ரூ.3 லட்சம் மொத்தமாக கிடைக்கும். ஓய்வூதியம் எதுவும் கிடையாது என்பதை உங்களால் நம்ப முடிகிறதா?” என அவர் கேட்கிறார்.
அவருடன் பேரணியில் வந்த அங்கன்வாடி ஆசிரியர்கள் பலரும் முருகநிதியின் மொழிபெயர்ப்பு வழியாக தங்களின் கோரிக்கைகளை முன்வைத்தனர், “வாழ்நாள் முழுவதும் முறையற்ற, போதாத ஊதியத்தில் வேலை செய்த பிறகு வயோதிகத்திலும் ஆதரவற்ற அச்ச உணர்வில் இருக்கிறோம்.” புதுச்சேரி முதலமைச்சர் (செய்தி அறிக்கையில்) அவர்களை ‘நலச் செயல்களை முன்னெடுத்துச் செல்பவர்கள்‘ என அங்கீகரித்துள்ளார், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்களாக அரசு ஒழுங்குமுறைப்படுத்தவில்லை என தமிழரசி குறிப்பிடுகிறார். ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகளின் ஒப்பந்தத் திட்டப் பணியாளர்களாகப் பட்டியலிடப்பட்ட அவர்கள் இன்னும் கௌரவ ஊதியமாக மாதம் ரூ. 3,000 பெறுகிறார்கள். உதவியாளர்களுக்கு மாதம் ரூ. 1,500 மட்டுமே கொடுக்கப்படுகிறது.
3000 ரூபாய் ஊதியம் பெறும் ஆர்ஜித் கவுரும் பஞ்சாபின் ஃபதேகார் சாஹிப் மாவட்டத்திலிருந்து வந்துள்ளார். நியாயமான ஓய்வூதியம் கோரி இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவன முகவர்கள் அமைப்பின் சார்பில் கொல்கத்தாவிலிருந்து வந்திருந்த குழுவினரிடயே அவர் பேசினார். அவர்கள் ‘பிஜேபி பகாவோ, தேஷ் பச்சாவோ ‘ (‘பாஜகவை வெளியேற்று, நாட்டை காப்பாற்று‘) என்ற முழக்கங்களை எழுப்புகின்றனர். அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களின் அனைத்து இந்திய கூட்டமைப்பின் பஞ்சாப் பிரிவு தலைவராக உள்ள அவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு சவால் விடுக்கிறார்: “2014ஆம் ஆண்டு தேர்தலில் வெல்வதற்கு முன் நீங்கள் அங்கன்வாடி பணியாளர்களுக்கு பல வாக்குறுதிகளை அளித்தீர்கள். ஆனால் எதுவும் மாறவில்லை, அதனால் தான் நாங்கள் இன்று டெல்லி வந்துள்ளோம். திட்டப்பணியாளர்களுக்கு கொடுக்கப்படும் குறைவான ஊக்கத்தொகையில் நாங்கள் குடும்பம் நடத்த வேண்டும் என எதிர்பார்க்கின்றீர்... மாதம் ரூ.6000 கொண்டு நீங்கள் வாழ்வதை நாங்கள் காண விரும்புகிறோம். ” கோபத்துடன் அவர் தாங்கள் வாங்கும் ‘ தேசிய எழுத்தறிவின் காலாட்படை வீரர்கள் ’ ஊதியத்தை இரட்டிப்பாக்க பிரதமரிடம் கேட்டுக் கொண்டார்.
‘2014 தேர்தலுக்கு முன் அங்கன்வாடி பணியாளர்களுக்கு நீங்கள் பல வாக்குறுதிகளை அளித்தீர்கள். எதுவும் மாறவில்லை. அதனால் தான் நாங்கள் இன்று டெல்லியில் இங்கு இருக்கிறோம்’
பேரணியின் முடிவில், ஜார்கண்டின் ஹசாரிபாக் மாவட்டம், தாதி வட்டாரம் டோங்கி கிராமத்தைச் சேர்ந்த அங்கன்வாடி பணியாளர் சோமா மாஜி சோர்வாக காணப்பட்டாலும், நம்பிக்கையுடன் இருந்தார்.
அவர் தனது கணவர் மற்றும் இரு பிள்ளைகளுடன் வந்திருந்தார். டெல்லிக்கு முதன்முறையாக அவர்கள் வந்துள்ளனர். அவர்களின் நான்கரை வயது மகள் ஆயுஸ்ரீ ‘விடுமுறை’ கால பயணத் திட்டத்துடன் குதூகலமாக வந்திருந்தார். மாஜியின் வேலை அட்டவணையில் குடும்பத்துடன் விடுமுறை சுற்றுலா என்பது இவ்வகையில் மட்டுமே சாத்தியம். “நான் அங்கன்வாடி பணியாளராக பல ஆண்டுகளாக வேலை செய்கிறேன். ஒருபோதும் ஊதிய உயர்வு பெற்றதில்லை. எங்களுக்கு பேறுகால விடுப்போ, நோய்க்கான விடுப்போ கிடையாது. நான் அதிக நேரம் மற்றவர்களின் குழந்தைகளை கவனிப்பதிலேயே செலவழிக்கிறேன். நீண்ட காலத்திற்குப் பிறகு என் சொந்த குழந்தைகளுடன் இப்படி செலவிடுவதற்கு சிறிதளவு நேரம் கிடைத்துள்து.”
நாடாளுமன்ற தெருவில் அடுத்த நிகழ்விற்கான ஏற்பாடுகள் நடந்துக் கொண்டிருந்தன. மனித உரிமை ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டுள்ளதற்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம். சோமா தானும் அதில் பங்கேற்பதாக தெரிவித்தார். சிஐடியு உறுப்பினரான அவரது கணவர் ஜகதிஷ் சந்திரா பேசுகையில், “அவள் நாள் முழுவதும் வேலை செய்கிறாள், இருந்தும் அரசு அவளை முறையான பணியாளராக எடுத்துக் கொள்ளவில்லை. அரசின் கொள்கைகள் தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் குடும்பங்களை அழிக்கின்றன.”
இப்பேரணிக்குப் பிறகு அவர்களின் கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் அவர்கள் மீண்டும் போராடுவார்களா? “மீண்டும் டெல்லி வருவது கடினம், ஆனால் சங்கம் அழைத்தால் நாங்கள் வருவோம்,” என்றார் அவர். “நாங்கள் மோசமான குடிமக்கள் கிடையாது, ஆனால் எங்கள் உரிமைகளுக்காக போராடுவதை தவிர வேறு வழியில்லை.”
முகப்புப் புகைப்படம்: சங்கேத் ஜெயின்
தமிழில்: சவிதா