கணேஷ் வதந்த்ரேவின் வயலில், வாடி இருக்கும் பருத்திச் செடியில் உள்ள பசுமையான பருத்திக் காய்களில் தென்படும் கருப்பு நிற வடுக்கள், ‘வெள்ளைத் தங்கமான’ பருத்தி குறித்து அறிவியலாளர்கள், மேலும் ஆய்வில் ஈடுபடவேண்டுமென்ற செய்தியை உணர்த்துகிறது: போய் புதிய எதிர்ப்பு மருந்தைக் கண்டுபிடியுங்கள்.
இந்நிலையில், “அவைகள் தான் பூச்சித்தாக்குதல் துவங்கியதின் அறிகுறிகள்” என்று கூறினார் வதந்த்ரே. மேலும், இந்த அறிகுறி தென்பட்டதற்கு பின்னரே, புழுக்கள் பருத்திக் காய்களை துளையிடுகின்றன என்றும் அவர் தெரிவித்தார். வதந்த்ரே, வார்தா மாவட்டம் அம்கான் கிராமத்தைச் சேர்ந்தவர். ஐந்து ஏக்கரில் விவசாயம் செய்து வருகிறார்.
மேலும், “ஒருவேளை அதனை உடைத்து திறந்தால், இளஞ்சிவப்பு நிறமுடைய புழு காய்களை விழுங்கிக்கொண்டிருப்பதை நீங்கள் பார்க்கலாம்,” என பதட்டத்தோடும், கோபத்தோடும் கூறினார். அந்த காய்களை உடைத்து திறந்த போது, ஒரு சென்டிமீட்டருக்கும் குறைவான நீளமுடைய இளஞ்சிவப்பு காய்ப்புழு, உறக்கத்தில் இருந்து சுருண்டபடி எழுந்தது. அப்போது அது எங்களுக்கு வணக்கம் சொல்வது போல் இருந்தது. இது பசுமையான பருத்திக்காய்கள் வெள்ளை நிற பருத்திப்பஞ்சு உருவாவதற்கு முன்னதாக அதனை உட்செரித்து, பயனற்றதாக ஆக்கி விடுகிறது.
கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பரில், பருத்திக் காயொன்றில் முதல் முறையாக “ஒரு புழுவை” பார்த்ததாக 42 வயதுடைய வதந்த்ரே கூறினார். “அடுத்த ஒரு சில நாட்களிலேயே, அது ஆயிரக்கணக்கான முட்டைகளையிட்டு, லட்சக்கணக்கான புழுக்களாக பெருகியது,” என்றும் தெரிவித்தார்.
பருத்தி வெடிப்பதற்கு முன்புவரை, பருத்திக் காய்களுக்குள் இருக்கும் புழுக்களால், காய்களுக்குள் மறைமுகமாக ஏற்படும் சேதம் குறித்து விவசாயிகளுக்கு எதுவுமே தெரியாது. இது அறுவடையின் போது விவசாயிகளுக்கு திடீர் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. மேலும், புழுவால் பாதிப்படைந்த பருத்திக்காய்கள் சந்தையில் மிகவும் குறைந்த விலைக்கே விற்பனையாகிறது.
வதந்த்ரேயின் குரல் மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் பருத்தி பயிரிட்டுள்ள விவசாயிகளின் குரல். குறிப்பாக, கடந்த 2017-18 ஆம் ஆண்டு குளிர்காலத்தின் போது, அறுவடை உச்சத்தில் இருந்த மேற்கு விதர்பாவைச் சார்ந்த பருத்தி விவசாயிகளின் குரல். இந்தப் பகுதியில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடைப்பட்டக் காலத்தில் பருத்தி விதைக்கப்பட்டு, அக்டோபர் முதல் மார்ச் மாதத்திற்கு இடைப்பட்டக் காலத்தில் அறுவடை செய்யப்படுகிறது.
இந்நிலையில், இளஞ்சிவப்பு புழுக்களின் படைகளால், பல ஹெக்டேர் பருத்தி விவசாய நிலங்களைப் பாழாகியுள்ளன. அது கடந்த 30 வருடத்தில் பார்க்காத அளவிற்கு சேதத்தை விளைவித்துள்ளது. வதந்த்ரேயின் வயலைச் சுற்றியுள்ள பகுதிகளில் தென்படும் இளஞ்சிவப்பு புழுவின் பாதிப்பு, கருகிய காய்கள், வாடிய செடிகள் மற்றும் வடுக்கள் என தாக்கத்தை ஏற்படுத்தி, பஞ்சை கருக்கிக் கருப்பு நிறம் கொண்டதாக, குறைந்த அளவே வருமானம் தரக்கூடியதாக மாற்றுகிறது.
தங்களது பருத்தி பயிரை பாதுகாப்பதற்காக மகராஷ்டிரா மாநிலம் முழுவதும் உள்ள விவசாயிகள், கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை முதல் நவம்பர் மாதம் வரை, அதிக அளவிலான அபாயகரமான ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்த வேண்டிய சூழல் எழுந்தது. எனினும், இது இளஞ்சிவப்பு புழுக்களைக் கட்டுப்படுத்த உதவாது என்பதும் அவர்களுக்குத் தெரியும். (வாசிக்க அபாயகரமான பூச்சிகளும், உயிருக்கு ஊறுவிளைவிக்கும் மருந்துகளும் ).
இதுகுறித்து கூறிய வதந்த்ரே, ”இதுதான் பூச்சிகளைக் அழிக்கக் கூடியதா. அப்படியென்றால், பி.டி-பருத்திப் பயிரின் பயன்தான் என்ன? எந்த பூச்சிக்கொல்லியும் பலனளிக்கவில்லை” என்றார்.
ஒரு ஏக்கர் பருத்தி வயலில், கிணற்று நீர் வழியாக பாசனம் நடைபெறுகிறது. வதந்த்ரே சராசரியாக 15 குவிண்டால் பருத்தி அறுவடை செய்கிறார். தற்போது, இவரது அறுவடை 5 குவிண்டாலாக குறைந்துள்ளது. இதனால் ஒரு ஏக்கருக்கு குறைந்தபட்சம் 50,000 ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருக்குமென வதந்த்ரே கணித்தார். அவரைப் பொறுத்தவரை இது அதிர்ச்சியூட்டும் தொகையாகும்.
போதிய கிணற்றுப் பாசன வசதி இல்லாத, மழையினால் மட்டுமே சாகுபடி நடைபெறக்கூடிய வயல்களில், மூன்று குவிண்டால் பருத்தியைக் கூட அறுவடை செய்ய முடியவில்லை. இந்நிலையில், மாநில அரசும் சில நிவாரணங்களை அறிவித்துள்ளது. ஒரு ஹெக்டேருக்கு கிட்டத்தட்ட 10,000 ரூபாய் வீதம் அதிகபட்சமாக இரண்டு ஏக்கருக்கு வழங்கியுள்ளது. ஒருவேளை வதந்த்ரே இதற்கு தகுதியுடையவராக இருந்தால், அவருக்கும் கூட சிறிதளவு நிவாரணம் கிடைக்கக்கூடும்
கிராம தலத்திஸ் மற்றும் கிரிஷி சேவக்ஸ் (மாநில வருவாய் மற்றும் வேளாண்மை துறையைச் சேர்ந்த அதிகாரிகள்) மேற்கொண்ட பயிர்களை குறித்த களஆய்வின் படி, மாநிலம் முழுவதும் பருத்தி பயிரிப்பட்ட 42 லட்சம் ஹெக்டேர் நிலங்களில், சுமார் 80 சதவீத நிலங்கள் நவம்பர், பின்னர் பிப்ரவரி மற்றூம் மார்ச் மாதங்களில், இந்த இளஞ்சிவப்பு புழுவால் பாதிக்கப்பட்டதாகக் கண்டறிந்தனர். ஒவ்வொரு விவசாயியும் 33 சதவீதம் முதல் 50 சதவீதத்திற்கும் அதிகமான பயிர்களை இழந்ததாகக் கூறப்பட்டிருக்கிறது.
மேலும், 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், மகாராஷ்டிரா மாநில வேளாண்மைத் துறை பருத்தி உற்பத்தி குறைந்ததால், பருத்தி மூட்டைகளின் விலை 40 சதவீதம் குறைந்தது என்றும் கணித்தது. இதன் வழியாக பூச்சிகளால் ஏற்பட்ட அழிவே இதற்கு காரணம் என்பதையும் மறைமுகமாக ஒப்புகொண்டது. மாநிலம் முழுவதும், ஆண்டுக்கு சராசரியாக 90 லட்சம் பருத்தி மூட்டைகள் (ஒரு பேலுக்கு 172 கிலோ பஞ்சு) உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு குவிண்டால் பருத்தியிலிருந்து 34 கிலோ பருத்திப் பஞ்சும், 65 கிலோ விதைப் பருத்தியும் (எண்ணெய் தயாரிக்க பயன்படுகிறது. எண்ணெய் எடுத்தது போக எஞ்சிய புண்ணாக்கு கால்நடைகளுக்கும் பயன்படுகிறது) மற்றும் ஒரு சதவீதம் கழிவுகளும் அல்லது தூசுகளும் கிடைக்கிறது. மேலும், 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம், விதர்பா சந்தையில் ஒரு குவிண்டால் பருத்தி 4,800-5,000 ரூபாய்க்கு விலை கொண்டிருந்தது.
2017-18 ஆம் ஆண்டில், இந்தியாவில் சுமார் 130 ஹெக்டேர் பரப்பளவில் பருத்தி விளைவிக்கப்பட்டிருந்தது. தெலுங்கானா, மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநில அரசுகளின் அறிக்கைகள், அந்த மூன்று மாநிலங்களில் பரந்துபட்ட அளவில் இளஞ்சிவப்பு புழுவின் அச்சுறுத்தல் உள்ளது குறித்து தெரிவித்தன. இரண்டு வருடங்களுக்கு முன்னர் குஜராத்தும் இந்த புழுவால் பிரச்சனைகளைச் சந்தித்தது. ஆனால், அப்போது இதற்கு முந்தைய பருத்தி வகைகள் பயிரிடப்பட்டு பிரச்சினையை ஓரளவு தணித்தது. அதாவது, புழுக்கள் பல்கி பெருகும் குளிர்காலத்திற்கு முன்னதாகவே பெருமளவிலான பருத்தி அறுவடை செய்யப்பட்டுவிட்டது.
இந்திய அரசின் வேளாண் அமைச்சகம் இந்த பிரச்சனையை ஏற்றுக்கொண்டது. ஆனால், பி.டி பருத்தியின் செயல்திறன் குறைந்துவிட்டதால், அதனை சாதாரண பருத்தி பயிராக மாற்றவேண்டும் – பி.டி பருத்தியை மறுவரையறை செய்யவேண்டுமென்ற, மகாராஷ்டிரா மற்றும் இதர மாநிலங்களின் கோரிக்கையினை நிராகரித்து விட்டது. (இது விதையின் விலை மற்றும் விதை நிறுவங்களின் காப்புரிமைத்தொகை மற்றும் லாபம் ஆகிவற்றில் எதிரொலிக்கும். இது குறித்த இன்னொருக் கட்டுரை வாயிலாக கிராமப்புற இந்தியாவின் மக்கள் காப்பகத்தில் [PARI ]காண்போம்). பூச்சிகளால் ஏற்படும் இந்த பிரச்னையை பருத்தி உற்பத்தி செய்யும் மாநிலங்களே “பல்வேறு பங்குதாரர்களை ஈடுபடுத்தி” சொந்தமாக எதிர்கொள்ள வேண்டுமென கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை ஒன்றிய அரசு கேட்டுக்கொண்டது.
திரும்ப வந்த இளஞ்சிவப்பு புழு
முதற்கட்டமாக கடந்த 2015 ஆம் ஆண்டு, இளஞ்சிவப்பு புழு திரும்பி வந்தது குறித்து மீண்டும் தெரிய வந்தது. குஜராத் மற்றும் மகாராஷ்டிரா உட்பட, பெரும்பான்மையாக பருத்தி விளைவிக்கக்கூடிய எல்லா மாநிலங்களிலும்,இளஞ்சிவப்பு காய்ப் புழுக்கள் திரும்பவும் வந்து, பருத்தி பயிர்களைத் தாக்கியது குறித்த செய்திகள் வெளிவந்தன. அந்த ஆண்டு, இந்திய பருத்தி ஆய்வு நிறுவனத்தினர் மரபணு மாற்றப்பட்ட(GM) பி.டி பருத்தி தொழில்நுட்பம் ‘தோல்வியடைந்தது’ குறித்து மிகவும் கவலையடைந்தனர்.
கடந்த 2010 ஆம் ஆண்டே, இளஞ்சிவப்புக் காய்ப்புழுவின் தாக்கம், அவ்வப்போது பி.டி பருத்தி பயிர்களில் தென்பட்டுள்ளது. அதன்பிறகு, இளஞ்சிவப்புக் காய்ப்புழு பெருமளவில் பருத்தியைப் பாதித்தது குறித்து, 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், குஜராத் விவசாயிகள் தெரிவித்தனர். ஒரு அங்குல நீளமுள்ள புழு, காய்களுக்கு உள்ளே இருந்து அவற்றை மென்று விழுங்கி, பயிரின் ஆரோக்கியத்தைப் பாதித்தது. இது புழுக்களினால் ஏற்படும் பாதிப்பை எதிர்த்து நிற்கும் எனக்கூறப்பட்ட ஆற்றல்மிக்க, விலையுயர்ந்த மரபணு மாற்றப்பட்ட பருத்தியின் தோல்விக்கான அறிகுறிகளாகும்.
மேலும், கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தின் இறுதி வாரத்தில் குஜராத்தின் பாவ்நகர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளச் சென்றிருந்த வல்லுநர் குழு முன்பு, அப்பகுதியைச் சேர்ந்த பெண் விவசாயி தன் வயலில் பயிரிடப்பட்டிருந்த, சில பருத்திக் காய்களை உடைத்து அதனுள் என்ன உள்ளதென்று பார்வையிடுமாறு அவர்களுக்கு காண்பித்தார். இந்நிலையில், இந்த குழுவை வழிநடத்தியவரும், மூத்த அறிவியலாளருமான முனைவர் கேசவ் கிராந்தி, இந்த சம்பவம் குறித்து நினைவுகூறுகையில், “அவர் மிகுந்த கோபத்தில் இருந்தார்” என்றார். கடந்த பிப்ரவரி 2016 ஆம் ஆண்டு அவரை நான் நேர்காணல் செய்த போது இவ்வாறு தெரிவித்தார். இவர் இந்தியாவின் முதன்மையான ஆராய்ச்சி நிறுவனமான, நாக்பூரில் உள்ள மத்திய பருத்தி ஆராய்ச்சி நிறுவனத்தின்(CICR) இயக்குனர். தற்போது வாஷிங்டனை மையமாகக் கொண்டு இயங்கும் பன்னாட்டு பருத்தி ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆலோசனைக் குழுவின் (தொழில்நுட்பப் பிரிவின்) இயக்குனராக உள்ளார்.
அந்த பெண் விவசாயியின் கோபம் திடீரென்று ஏற்பட்ட இழப்புகளால் ஏற்பட்டது: சிறிய ஆனால் அச்சுறுத்தக்கூடிய அந்த புழு அவரது பருத்தி அறுவடையையும், அதேபோல அதன் தரத்தையும் அழித்தது. எனினும்,பசுமையான பருத்திக் காய்களுக்கு உள்ளிருந்து அதனை விழுங்கிய இளஞ்சிவப்பு காய்ப்புழுக்களுக்களைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அறிவியலாளர்கள், அதற்கு பின்னுள்ள காரணங்களைக் கண்டே மிகவும் கவலை அடைந்தனர்.
பெக்டினோபோரா கோசிபில்லா(சவுண்டர்ஸ்) , இளஞ்சிவப்பு காய்ப்புழு என பொதுவாக அழைக்கப்படுகிறது. இது முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு மிகுந்த தீவிரத்தோடு திரும்பி வந்துள்ளது. இவை, இவற்றுக்கு எதிராக எதிர்ப்புச் சக்தியைக் கொண்டிருந்த, இரண்டாம் தலைமுறை மரபணு மாற்றப்பட்ட பருத்தி ரகங்களான பால்கார்ட்-II பி.டி-பருத்தியை மிகவும் இலகுவாக அழித்தது. இது ஒரு அறிகுறி தான் என்றும், அமெரிக்கன் (அதன் முன்னோடி காரணமாக இவ்வாறு பெயரிடப்பட்டது) காய்ப்புழுவும் திரும்பி வரக்கூடும்(தற்போது இல்லை என்றாலும்) என கிராந்தி அச்சம் கொண்டார்.
மிகவும் அபாயகரமான பூச்சிகளான இளஞ்சிவப்பு காய்ப்புழுவும் (சி.ஐ.சி.ஆர் நிறுவனத்தாலும்,இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த பருத்தி ஆய்வாளர்களாலும் கண்டறியப்பட்டது) மற்றும் அமெரிக்கன் காய்ப்புழுவும் 1970 மற்றும் 1980 களில் இந்திய பருத்தி விவசாயிகளுக்கு மிகப்பெரும் பிரச்சனையாக இருந்தது. இந்தப் பூச்சிகளின் காரணமாக, 1990 களில் அதிக விளைச்சலைத் தரும் கலப்பினப் பயிர்களுக்கு, புதிய பூச்சிக்கொல்லி மருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனையடுத்து, 1990 களின் இறுதியில், இந்த இரண்டு புழுக்களையும் எதிர்கொள்ளும் வகையில், பி.டி மரபணு மாற்றப்பட்ட கலப்பின விதையான, பி.டி பருத்தி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆனால், 2015-16 ஆம் ஆண்டு பருத்தி பயிர்க்காலத்தின் போது, ஏக்கர் கணக்கான பருத்திப் பயிர்கள் மீண்டும் இளஞ்சிவப்பு காய்ப்புழுவால் தாக்குதலுக்கு உள்ளானது. அந்த சமயத்தில் பருத்தி உற்பத்தியின் சரிவு 7-8 சதவீதமாக இருந்ததாக, சி.ஐ.சி.ஆரின் கள ஆய்வு குறிப்பிடுகிறது.
பருத்தி, ஓக்ரா, செம்பருத்தி மற்றும் சணல் ஆகிய பயிர்களை மட்டுமே இளஞ்சிவப்பு புழுவின் லார்வாக்கள் உண்கின்றன. இளஞ்சிவப்பு புழுக்கள் பூக்கள், இளம் காய்கள், அச்சுகள், இலைக்காம்புகள் மற்றும் இளம் இலைகளின் அடிப்புறத்திலும் முட்டை இடுகின்றன. இளம் லார்வாக்கள் பொறித்த இரண்டே நாளில் பூக்களின் சூலகத்தை அல்லது இளம் காய்களையும் துளைக்கின்றன. லார்வாக்கள் 3-4 நாட்களில் இளஞ்சிவப்பு நிறத்தை அடைகின்றன. அதன் அடர் தன்மை அவை உண்ணும் உணவினைப் பொறுத்தது. பருவம் அடைந்த விதைகளை உண்பவை, அடர் இளஞ்சிவப்பு நிறத்தை அடைகின்றன. பாதிக்கப்பட்ட காய்கள் முதிர்ச்சி அடைவதற்கு முன்னதாகவே திறந்து கொள்கின்றன அல்லது அழுகி விடுகின்றன. மேலும், நூலிலைகளின் தன்மையும் நீளம் குறைவானதாக, வலிமையற்றதாக உள்ளது. புழுவால் பாதிக்கப்பட்ட காய்களில் இருந்து எடுக்கப்பட்ட பருத்தி பஞ்சு, அதற்கடுத்து பூஞ்சை பாதிப்புக்கும் உள்ளாகின்றன.
சந்தைகளுக்கு எடுத்து வரப்படுகிற பருத்தி விதைகளின் வழியாகவும் புழு மேற்கொண்டு பரவுகிறது. இளஞ்சிவப்பு புழுக்கள் பொதுவாக குளிர்காலத்தில் பயிர்களில் வரத்தொடங்கி, பூக்கள் மற்றும் காய்கள் உள்ளவரை பயிர்களில் உயிர் வாழ்கிறது. நீண்ட நாட்கள் உயிர்வாழும் பயிரின் வழியாக சுழற்சி முறையில் எண்ணற்ற வகையில் புழுக்கள் நீண்டநாட்கள் பரவுகிறது. பரவுவதற்கான பயிர் இல்லாதபோது, அதனை எதிர்கொள்ளும் வகையில் மரபணு ரீதியாக பெற்றுள்ள உறக்கநிலை அல்லது வளர்ச்சியற்ற (DIAPAUSE) நிலையை அடைகிறது. இதன் மூலமாக 6-8 மாதங்கள், அடுத்த பருவம் தொடங்கும் வரை செயலற்ற நிலையிலேயே இருக்கிறது.
மாற்றுகள் இன்மையும், பதட்டமும்
2016 ஆம் ஆண்டு மே மாத வாக்கில், காய்ப்புழுக்கள் மீண்டும் திரும்பி வந்தது குறித்த சி.ஐ.சி.ஆர் அறிக்கைகள் வெளிவந்தன. இதனால் ஏற்பட்ட பதட்டத்திற்கு டெல்லியில் நடந்த இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் (ICAR) மற்றும் இந்திய அறிவியல் ஆராய்ச்சி கழகம் (ICSR) ஆகிய அமைப்புகளின் உயர்மட்டக் குழு கூட்டங்களே சாட்சிகளாக அமைந்தது. இவ்விரு அமைப்புகளும் இந்தியாவின் முதன்மையான அறிவியல் மற்றும் வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனங்களாகும். மேலும், அந்த கூட்டங்களில் மரபணு மாற்றப்பயிர்கள் குறித்த ஏதாவது பொதுத்துறை திட்டங்கள் விரைவில் இதற்கான மாற்று வழிகளை வழங்குமா எனவும் அறிவியலாளர்கள் விவாதித்தனர்.
“சந்தேகத்திற்கிடமின்றி காய்ப்புழுக்கள் திரும்ப வந்துவிட்டன” என கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய பருத்தி குழுமத்தின் இதழான காட்டன் ஸ்டாடிஸ்டிக்ஸ் அண்ட் நியூஸ் இதழின் கட்டுரையில் தெரிவித்திருந்தார். மேலும், ”2020 ஆம் ஆண்டு வரை காய்ப்புழுக்களை கட்டுபடுத்தக்கூடிய அளவுக்கு பி.டி பருத்தியின் திறனை எந்தளவுக்கு நாம் தக்கவைக்க முடியும் என்பதே மிகுந்த கவலைக்குரியது” என அவர் எழுதி இருந்தார்.
இந்திய பொதுத்துறை அல்லது தனியார் துறையின் மூலமாக, 2020 ஆம் ஆண்டு வரை எந்தப் புதிய கலப்பினத் தொழில்நுட்பமும் சோதனை செய்யப்படவில்லை. மேலும், மரபணு மாற்றப்பட்ட விதைச் சந்தையில் பொதுத்துறை நிறுவனங்களும் இல்லை, எனினும், சில வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனங்கள் சோளம், சோயாபீன், கத்திரி மற்றும் நெல் உட்பட பல பயிர்களில் மரபணு மாற்றப்பட்ட ரகத்திற்கான ஆராய்ச்சியை மேற்கொள்கின்றன.
இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் (ICAR) மற்றும் இந்திய அறிவியல் ஆராய்ச்சி கழகத்தின் (ICSR) கூட்டத்தில், காய்ப்புழுக்களை கட்டுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து அறிவியலாளர்கள் ஆலோசித்தனர். கடந்த 2016 ஆம் ஆண்டு பத்திரிக்கையாளர்களிடம் பேசிய கிராந்தி “ஜனவரி மாதத்திற்கு முன்பாகவே அறுவடை செய்யக்கூடியளவிலான, குறைவான காலத்திற்கு வளரக்கூடிய ரகங்கள் அல்லது பி.டி பருத்தி கலப்பின வகைகளை விதைப்பதே இந்தியாவிற்கான சிறந்த நீண்டகால யுத்தியாக அமையும்” என தெரிவித்தார். இது காய்ப்புழுக்களை அழிக்கும். ஏனென்றால் அவை பெரும்பாலும் குளிர்காலத்தில் தான் பருத்தி பயிர்களைத் தாக்குகின்றன. ஆனால், பெரும்பான்மையான இந்திய விதை உற்பத்தி நிறுவனங்கள் நீண்ட காலத்திற்கு வளரும் போது சிறந்த விளைச்சலைத் தரக்கூடிய பி.டி பருத்தியையே உற்பத்தி செய்கின்றன.
அந்த ஆண்டு, அவ்வாறு குறைந்த காலத்திற்கு வளரும் பயிர் விதைக்கப்பட்டதன் காரணமாக, பயிர் மீதான தாக்குதலின் தீவிரம் கடந்த 2017-18 ஆம் ஆண்டு இருந்ததை விட குறைவாக இருந்தது.
பி.டி பருத்தியின் தோல்வி
கடந்த 2016 ஆம் ஆண்டு என்னிடம் பேசிய கிராந்தி,” பெருமளவிற்கு பிரபலப்படுத்தப்பட்ட தொழில்நுட்பம்[பி.டி பருத்தி மற்றும் பி.ஜி-1 மற்றும் அதன் இரண்டாம் தலைமுறை பி.ஜி-2] தோல்வி அடைந்தது,” என்றார். மேலும், ”இதன் பொருள் என்னவென்றால் விவசாயிகள் தற்போது குறைந்த ஆற்றல்மிக்க பி.ஜி- I மற்றும் பி.ஜி -II (மரபணு மாற்றப்பட்ட பயிர்களில்) பருத்தித் தொழில்நுட்பங்கள் மற்றும் காய்ப்புழுக்களைக் கட்டுபடுத்துவதற்கான பூச்சிக் கொல்லிகளுக்கும், பிற பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் பிற பூச்சிக்கொல்லிகளையும் திரும்பவும் பயன்படுத்த வேண்டிய சூழல் எழுந்துள்ளது.” என்றார்.
பி.டி பருத்தி என்ற பெயர் மண்ணை சார்ந்த வாழும் நுண்ணுயிரியான பேசிலாஸ் துரிஞ்யான்சிஸ் என்ற நுண்ணுயிரியிலிருந்து வந்தது. பி.டி பருத்தி காய்ப்புழுவை எதிர்கொள்ளும் வகையில், பேசிலாஸ் துரிஞ்யான்சிஸ் நுண்ணுயிரியிலிருந்து எடுக்கப்பட்ட படிகம் மரபணு, பருத்தி பயிரின் ஜீனோமுக்குள்(செல்லின் மரபணுக் கூறு) உட்புகுத்தப்பட்டுள்ளது.
பி.டி பருத்தி என்றால் காய்ப்புழுவைக் கட்டுப்படுத்தக்கூடியது என்று பொருள். ஆனால் ,பிடி-பருத்தி விதைக்கப்பட்டுள்ள வயல்களிலேயே காய்ப்புழுக்கள் இருப்பதை விவசாயிகள் காண்பார்கள் என பருத்தி தொழிற்துறை சார் இதழ்களிலும், தனது சொந்த CICR வலைப்பதிவிலும் முனைவர் கிராந்தி இதுகுறித்து தொடர்ச்சியாகக் கட்டுரைகள் எழுதினார். அந்த சமயத்தில் இந்திய வேளாண் கழகமோ அல்லது ஒன்றிய விவசாய அமைச்சகமோ, ஏற்படும் பாதிப்புகளைக் குறித்து எச்சரிக்கை விடுக்கவில்லை. மேலும், இளஞ்சிவப்பு காய்ப்புழுவினால் ஏற்படும் பாதிப்பின் அளவைப் பற்றி மாநில மற்றும் ஒன்றிய அரசு அறிந்திருந்தாலும், அதற்கான தீர்வை முன்வைக்கவில்லை.
அமெரிக்க விதைகள் சார்ந்த உயிர்தொழில்நுட்ப பன்னாட்டு நிறுவனமான மான்சாண்டோ, இந்தியாவின் பிடி-பருத்தி விதை சந்தையில் உச்சபட்ச உரிமையைக் கொண்டுள்ளது. இந்திய அரசு 2002-03ஆம் ஆண்டு பி.டி-பருத்தியின் விநியோகம் மற்றும் விற்பனைக்கு ஒப்புதல் அளித்தது. மேலும், இந்திய விதை நிறுவனங்களுக்கு, ‘தொழில்நுட்பத்தை’ வழங்கும் மான்சாண்டோ நிறுவனம், விற்கப்படும் ஒவ்வொரு விதைப்பையின் விலையிலும், சுமார் 20 சதவீத காப்புரிமைத் தொகையைப் பெற்றது. பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டைக் குறைப்பது மற்றும் பருத்தியின் உற்பத்தித்திறனை அதிகரிப்பது போன்ற இரண்டு வெளிப்படையான நோக்கங்களை முன்வைத்து மரபணு மாற்றத் தொழில்நுட்பம் முன்வைக்கப்பட்டது.
பி.டி பருத்தி அறிமுகப்படுத்தப்பட்ட முதல் வருடம், 400கிராம் கலப்பின பி.டி பருத்தி விதைப்பை 1,800 ரூபாய்க்கு விலைக்கு விற்கப்பட்டது. இந்த சமயத்தில் தான், ஒன்றிய, மாநில அரசுகள் பி.டி பருத்தி விதையின் காப்புரிமைத் தொகையை அல்லது சந்தை விலையை கட்டுபடுத்த முன்வந்தது. ஆயினும், ஆரம்பக் காலங்களில், பிடி-பருத்தி 400 கிராம் விதைப்பையின் விலை தோராயமாக ரூ.1000 க்கு விற்கப்பட்டது என்றும், மான்சாண்டோவின் காப்புரிமைத் தொகை 20 சதவீதமாக இருந்தது என்றும் விதைச் சந்தை மதிப்பீட்டாளர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும், இந்திய பி.டி-பருத்தியின் விதைச்சந்தை மதிப்பு ரூ.4,800 கோடி என டாக்டர் கிராந்தி கடந்த 2016 ஆம் ஆண்டு கூறியிருந்தார்.
உலகம் முழுவதும் பி.டி பருத்தி விதைக்கும் அளவானது 226 லட்சம் ஹெக்டர் அளவுக்கு விரிவுபடுத்தப்பட்டது. இதில், 160 லட்சம் ஹெக்டேர் பரப்பளவு மட்டுமே தனியார் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 2014-15 ஆம் ஆண்டு, இந்தியாவில் 115 ஹெக்டேர் பரப்பளவிற்கு பி.டி பருத்தி ஆக்கிரமித்திருந்தது. கடந்த 2006-7 ஆம் ஆண்டு, மான்சாண்டோ பிஜி- II கலப்பின ரகங்களை அறிமுகப்படுத்தியது. இந்த புதிய தொழில்நுட்பம் மிகுந்த ஆற்றல் மிக்கதாகவும் மிகுந்த நிலைப்புத்தன்மை உடையதாகவும் இருக்குமென கூறப்பட்டது. இது பிஜி-I பயிர்களுக்கு மாற்றாக மெல்ல நடைமுறைப்படுத்தப்பட்டது. தற்போது, பிஜி-II கலப்பின பருத்தி, இந்தியாவின் பருத்தி உற்பத்தி பரப்பான சுமார் 130 ஏக்கரில், கிட்டத்தட்ட 90 சதவீத பரப்பளவை ஆக்கிரமித்துள்ளதாக அரசின் புள்ளிவிவரங்கள் கணிக்கின்றன.
காய்ப்புழுக்களுக்கு எதிரான எதிர்ப்புத்திறன் கொண்ட பிஜி-II தொழில்நுட்பம், பேசிலாஸ் துரிஞ்யான்சிஸ் நுண்ணுயிரியின் Cry1Ac மற்றும் Cry2Ab மரபணுக்கள் பருத்தி விதையில் உட்புகுத்தப்பட்டு உருவாக்கப்பட்டது. இது அமெரிக்கக் காய்ப்புழு (ஹெலிகோவர்பா ஆர்மிகெரா), இளஞ்சிவப்பு காய்ப்புழு மற்றும் புள்ளிகள் கொண்ட காய்ப்புழு (ஈரியாஸ் விட்டெல்லா) ஆகிய மூன்று புழுக்களுக்கு எதிராக எதிர்ப்புத் திறன் கொண்டிருக்கும் என்றும் கூறப்பட்டது. முதல் தலைமுறை கலப்பின அல்லது பி.டி பருத்தி வகைகள் ஒரே ஒரு Cry1Ac மரபணுவை மட்டுமே அதன் விதைகளில் கொண்டிருந்தன.
இதற்கு மத்தியில், டாக்டர் கிராந்தி எழுதிய மற்றொரு கட்டுரையில், இந்தியாவில் சூழியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்தவாறு, பி.டி தொழில்நுட்பத்தை நீடித்து நிலைப்பதுபோல் பயன்படுத்த எவ்வித வழிகாட்டுதல்களும் இல்லை என்றும், குறைந்தபட்சம் ஆறு வெவ்வேறான பி.டி நிகழ்வுகள்(event), அவற்றின் நீடித்த நிலைத்தன்மை குறித்த எவ்வித திட்டங்களும் இல்லாமல் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் மரபணு பொறியியல் ஒப்புதல் குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டார்.
பேசிலாஸ் துரிஞ்யான்சிஸ் நுண்ணுயிரியின் ஜீன் உருவாக்கும் புரதம் காய்ப்புழுவுக்கு எதிர்ப்பு நச்சு பொருளாக செயல்படுகின்றது. பருத்தி விதைகளுக்கு மாற்றும் வகையிலான மரபணுக் கட்டமைப்பை விஞ்ஞானிகள் உருவாக்குகின்றனர், இதனால் பருத்தி பயிர்கள் காய்ப்புழுக்களை எதிர்க்கும் திறனைப் பெறுகின்றன. இதுவே மரபணு மாற்றப்பட்ட பருத்தி. அத்தகைய மரபணு அமைப்பு, தாவர மரபணுவின் குரோமோசோமில் அதன் நிலையை எடுத்துக்கொள்ளும் போது, அது 'நிகழ்வு' (EVENT) என்று அழைக்கப்படுகிறது.
பி.டி பயிர்களின் எதிர்ப்புத்திறன் சார்ந்த பிரச்சனைகளைக் குறிப்பிட்டு கிராந்தி எழுதிய போதும் கூட, அது குறித்த எச்சரிக்கைகள் மிகவும் முக்கியமாக எடுத்துக் கொள்ளப்படவில்லை. எதிர்ப்புத் திறன் என்பது பரிணாம ரீதியிலான செயல்முறை. வேளாண்மையை பொறுத்தவரை, சிறப்பான பூச்சித்தடுப்பு முறைகள் முன்பு பூச்சிகளைக் கட்டுப்படுத்தாத போது தான் பயிர்களில் பூச்சி எதிர்ப்புத்திறன் உருவானதாக கூறப்படுகிறது. பி.டி மரபணுக்களை(நிகழ்வு) தங்கள் சொந்த விதைகளுடன் சேர்த்து, இந்திய தனியார் நிறுவனங்களால் அறிமுகப்படுத்தப்பட்ட ஆயிரக்கணக்கான கலப்பின பி.டி பருத்தி வகைகளுக்கு-நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்குள்ளாக அனுமதி வழங்கப்பட்டது. இது வேளாண்மை மற்றும் பூச்சி மேலாண்மையில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது என்று எழுதியிருந்தார். மேலும், இதன் விளைவாக பூச்சிகளை நிர்வகிக்க இயலாத நிலையில் இருந்த, இந்திய பருத்தி விவசாயிகளின் இயலாமை மேலும் மேலும் அதிகரிக்கிறது என்றும் எழுதியிருந்தார்.
2017 ஆம் ஆண்டு, இந்தியாவில் களைக்கொல்லியைத்(HT) தாங்கி வளரும் பருத்தி விதைகள் பெருமளவில் விதைக்கப்பட்டன. களைக்கொல்லியைத்(HT) தாங்கி வளரும் பருத்தி விதைகள் மான்சாண்டோ நிறுவனத்தின் புதிய பருத்தி விதையாகும். இந்த விதைகளுக்கான வணிக அனுமதிக்கு அரசு தற்போது வரை அனுமதி வழங்கவில்லை, ஆனால், விதை நிறுவனங்களும், பதிவு செய்யப்படாத நிறுவனங்களும் இந்த விதைகளை ஏற்கனவே விவசாயிகளிடம் விற்றுவிட்டன. எவ்வாறாயினும், களைக்கொல்லியைத்(HT) தாங்கி வளரும் பருத்தி விதைகள் காய்ப்புழுக்கள் அல்லது பிற பூச்சிகளுக்கு எதிரான எதிர்ப்புத்திறனைக் கொண்டிருக்கவில்லை. இந்த விதைகள் புற்கள் மற்றும் காட்டுச் செடிகளை அழிக்கப் பயன்படுத்தப்படும் ரசாயனங்களைத் தாங்கி, பயிர்களை எவ்விதத்திலும் பாதிக்காமல் வளரக்கூடியது.
2018 ஆம் ஆண்டு, டாக்டர் கிராந்தியின் விடுத்த எச்சரிக்கைகள் மெய்யாகி விட்டது. கடந்த 2010 ஆம் ஆண்டு குஜராத்தில் காய்ப்புழுக்களின் தாக்கம் குறித்து முதன்முதலில் செய்திகள் வெளி வந்தபோது, மிகக்குறைவான பரப்பளவுக்கே பரவல் இருந்தது அப்போது பி.ஜி- I பருத்தி விதைக்கப்பட்டிருந்து. ஆனால், 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் பி.ஜி- II பருத்தி விதைக்கப்பட்டிருந்த போது அதிகப் பரப்புக்கு பூச்சிகளின் தாக்கம் ஏற்பட்டிருந்தது.
2015-16 ஆம் ஆண்டு பருவகாலத்தின் போது, சி.ஐ.சி.ஆர் அமைப்பு மேற்கொண்ட ஆய்வின்படி, இளஞ்சிவப்பு காய்ப்புழுவின் லார்வாக்கள் பி.ஜி-II பருத்தியை எதிர்கொண்டு உயிர்பிழைத்த சம்பவங்கள், குஜராத் மாநிலம் முழுதும், குறிப்பாக அம்ரேலி மற்றும் பாவ்நகர் மாவட்டங்களில் கணிசமான அளவுக்கு இருந்ததாகவும், மேலும், இந்த புழுக்கள் Cry1Ac, Cry2Ab, மற்றும் Cry1Ac+Cry2Ab (மூன்று வெவ்வேறு வகைகள்)ஆகிய ஜீன்களுக்கு எதிராக தாங்கும் திறனைப் பெற்றிருந்தன என்றும் தெரிய வந்தது.
ஏற்கனவே விவசாயிகள் இளஞ்சிவப்பு காய்ப்புழுக்களைக் கொல்லும் பூச்சிக்கொல்லிகளையும், கூடுதலாக இன்னபிற பூச்சிகளையும், குறிப்பாக உறிஞ்சும் பூச்சிகளைக் கொள்ளும் பூச்சிக் கொல்லிகளையும் பயன்படுத்துகின்றனர். கடந்த டிசம்பர் 2015 ஆம் ஆண்டு, சி.ஐ.சி.ஆர் நிறுவனம் மேற்கொண்ட விரிவான கள ஆய்வில், இரண்டாவது மற்றும் மூன்றாவது அறுவடைகளுக்கான பருத்தி அதிகளவில் சேதமடைந்திருந்தது தெரியவந்தது. அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை நான்கு, சில சமயம் ஐந்து மாதங்கள் வெள்ளை பருத்தி பூக்கும். வெவ்வேறு நிலைகளைப் பொறுத்து, அவற்றை விவசாயிகள் அறுவடை செய்கின்றனர்.
சி.ஐ.சி.ஆர் ஆய்வின் முடிவுகள், இளஞ்சிவப்பு புழு மீண்டும் வந்தது குறித்தும், பி.ஜி-II தோல்விக்கான பல்வேறு காரணிகளுடனும் வெளிவந்தது. அவற்றுள்: நீண்ட நாட்கள் வளரக்கூடிய கலப்பின பருத்தி வகை பூச்சிகள் தொடர்ந்து பரவுவதற்கு ஊடகமாக அமைகின்றன என்பதும் ஒன்றாகும். இது குறித்து கூறிய டாக்டர் கிராந்தி, கலப்பின வகைகள் அல்லாமல், இயற்கையாக மகரந்தச்சேர்க்கை(நேரடி வகை நாட்டுப் பருத்தி) நடைபெறும் வகைகளில் பி.டி பருத்தி வகை அறிமுகப்படுத்த வேண்டும். இந்தியாவில் மட்டும் தான் இயற்கையாக மகரந்தச்சேர்க்கை நடைபெறும் வகைகளுக்குப் பதிலாக செறிவூட்டபட்ட கலப்பின வகைகளில் பி.டி ஜீன்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் ஒருவேளை இயற்கையாக மகரந்தச்சேர்க்கை நடைபெறும் பயிர்வகைகளை நட்டிருந்தால், மீண்டும் விதைகள் வாங்க சந்தையை நாடவேண்டிய எந்த தேவையும் இருந்திருக்காது. ஆனால், கலப்பின பயிர்களின் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் அவர்கள் விதைகளை வாங்க வேண்டிவந்தது என்று குறிப்பிட்டிருந்தார்
“நீண்ட நாட்கள் வளரும் கலப்பினப் பயிர்களில் பிஜி- II வகைக்கு அனுமதி அளித்திருக்கவே கூடாது. ஆனால், நாம் அதற்கு அப்படியே நேர்மாறாக செய்தோம்” என்றார்.
இளஞ்சிவப்பு காய்ப்புழுக்கள் திரும்பி வந்தது. அதனால் ஏற்பட்ட பாதிப்புகளின் காரணமாக விவசாயிகளுக்கு ஏற்பட்டத் தாக்கம், கடந்த மூன்று ஆண்டுகளில் இந்திய பருத்தி விதை நிறுவனங்களையும் பாதித்தது. இதில் சுமார் 50 நிறுவனங்கள், பி.ஜி-I மற்றும் பி.ஜி-II பருத்தி தொழில்நுட்பத்தைப் பெற்ற மான்சாண்டோ நிறுவனத்திற்கு எதிராக திரும்பின. குறைந்தபட்சம் 46 நிறுவனங்கள் 2016-17 ஆம் ஆண்டு மான்சாண்டோ நிறுவனத்திற்கு காப்புரிமைத் தொகை வழங்க மறுத்தன ஆனால், அது மற்றொரு கதை.
BG-II பருத்திக்கு மாற்றாக நம்பிக்கையளிக்கக்கூடிய வகையிலான, எந்த புதிய மரபணு மாற்ற தொழில்நுட்பமும் தற்போதோ அல்லது எதிர்காலத்திலும் கூட இல்லை. அதேபோல, மிகுந்த பயன்தரும் பூச்சிக்கொல்லிளுக்கான தொழிற்நுட்பமும் இல்லை. எனவே, இந்திய பருத்தி வயல்கள் ஆழ்ந்த நெருக்கடியில் உள்ளது. பருத்தி பயிர்கள் இந்தியாவின் பரந்த நிலப்பரப்பெங்கும் விதைக்கப்பட்டு, இந்திய கிராமப்புறங்களில் லட்சக்கணக்கான வேலை நாட்களை உருவாக்குகின்றது.
‘நானும் எனது வயலை விரைவில் தரைமட்டமாக்கக்கூடும்”
அம்கான் கிராமத்தைச் சார்ந்த பருத்தி விவசாயி வந்தத்தரே 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தனது பயிர்களைக் கைவிட்டார். சேதமடைந்த பருத்தியை விற்று கிடைக்கின்ற பணம் அதனை பறிப்பதற்கு ஆகும் செலவிற்கு கூட மிஞ்சவில்லை என அவர் என்னிடம் தெரிவித்தார். மேலும் நேராக நிற்க மூங்கில் குச்சிகளால் ஆதரவு தரப்படவேண்டிய அளவுக்கு இருந்த, உயரமான மற்றும் வலுவான பருத்திச் செடி பாத்திகளின் வழியாக நடந்து சென்ற அவர், “இந்த பயிர்களைப் பார்த்தால், ஒருவேளை எனக்கு அமோகமான மகசூலைத் தருவது போன்று தோன்றலாம். ஆனால், இந்த ஆண்டு பேரழிவைச் சந்தித்துள்ளது” என்றும் குறிப்பிட்டார்.
மகாராஷ்டிராவைச் சார்ந்த பருத்தி விவசாயிகள் பலர், மறுபடியும் பூச்சிகளால் தங்கள் பருத்திப் பயிர்கள் பாதிக்கப்பட்டதன் காரணமாக, பெரும்பகுதி பருத்தியை அறுவடை செய்யாமலேயே, தங்கள் வயலை உழுது தரைமட்டமாக்கினர். யவத்மால் மாவட்டத்தைச் சில விவசாயிகள் மடியாமல் நின்றுக்கொண்டிருந்த பயிர்களின் மீது புல்டோசரையே ஏற்றி அழித்தனர். மற்றவர்கள் பனிபோன்ற வெண்மையான பருத்தி வயல்களில் புழுக்கள் குவிந்ததால் துன்பத்திலும் வெறுப்பிலும் பருத்தியை அப்படியே கைவிட்டனர்.
அறுவடைக் காலம் நெருங்குவதற்கு சில காலத்திற்கு முன்னர், மேற்கு விதர்பா பகுதியைச் சார்ந்த பலர், தற்செயலாக பூச்சிக்கொல்லிகளை சுவாசிக்க நேர்ந்தது: இதன்விளைவாக சுமார் 50 விவசாயிகள் இறக்க நேர்ந்தது. ஆயிரம் பேர் கடுமையாக நோய்வாய்ப்பட்டனர். அவர்களில் சிலர் 2017 ஆம் ஆண்டு ஜூலை-நவம்பர் மாதங்களுக்கு இடைப்பட்டக் காலத்தில் விழித்திறனை இழந்தனர்.
மேலும், ஜனவரியில் குளிர்காலம் உச்சத்தை எட்டியிருந்த போது இளஞ்சிவப்பு புழுக்களால் பயிர்களுக்கு வரவிருக்கும் இழப்பை எண்ணி பருத்தி விவசாயிகள் உடைந்து போயினர்.
ஜனவரி மாதம் வந்த்தரேவை நான் சந்தித்த போது, சிறிய ஆனால் கொடியப் புழுவால் பாதிக்கப்பட்ட பருத்திக்காய்களை நமக்குக் காட்டியபடி, ”நானும் எனது வயலை விரைவில் தரைமட்டமாக்கக்கூடும்” என்றார். நான் அவரை இதற்கு முன்பு இரண்டு முறை சந்தித்திருக்கிறேன். ஆனால் இந்த முறை, முந்தைய நிகழ்வுகளை விட இளஞ்சிவப்பு புழுவால் பருத்திக்காய்கள் முற்றிலும் பாதிப்படைந்துள்ளது. மேலும், எந்த பூச்சிக்கொல்லியாலும் காய்ப்புழுவைக் கட்டுப்படுத்த முடியாது. ஏனெனில் அவை காய்களில் துளையிட்டு ரசாயன பூச்சிக்கொல்லிகளில் இருந்து தன்னைப் தற்காத்துக் கொள்கிறது. மேலும் மிக வேகமாகப் பெருகவும் செய்கிறது, என்றார் அவர்.
வதந்த்ரேவிற்கு ஏற்பட்டுள்ளக் கவலைகள் இந்தியாவின் பருத்தி வயல்களில் ஏற்பட்ட சீரழிவையே வெளிப்படுத்துகின்றன.
தமிழில்: பிரதீப் இளங்கோவன்