“மது மீதான தடை எங்கே போனது?’ எனக் கேட்கும் கவுரி பர்மாரின் குரலில் கசப்பும் எள்ளலும் தொனிக்கிறது.
“அது மோசடியாக இருக்கும். அல்லது என் கிராமம் குஜராத்தில் இல்லை,” என்கிறார் கவுரி. என் கிராமத்திலுள்ள ஆண்கள் பல ஆண்டுகளாக குடித்துக் கொண்டிருக்கின்றனர்.” அவரின் கிராமமான ரோஜித், குஜராத்தின் பொதாத் மாவட்டத்தில் இருக்கிறது.
இந்தியாவின் ‘வறண்ட’ மாநிலங்களில் குஜராத்தும் ஒன்று. அங்குள்ள மக்கள் மதுவை வாங்கவோ குடிக்கவோ முடியாது. மது தயாரிப்பதும் விற்பதும் குஜராத் மதுவிலக்கு சட்டத்திருத்தம் 2017-ன்படி ஒருவருக்கு 10 வருட சிறைத்தண்டனை பெற்றுத் தரும்.
ஆனால் 50 வயது கவுரி, 30 வருடங்களுக்கு முன் மணமாகி ரோஜித்துக்கு வந்ததிலிருந்து, அந்த விதி புறக்கணிக்கப்படுவதை பார்த்து வருகிறார். உள்ளூரிலேயே சாராயம் காய்ச்சப்பட்டு விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு பாலிதீன் பைகளில் விற்கபடுவதை அவர் பார்த்திருக்கிறார்.
இத்தகைய மது தயாரிக்கப்படுவது மரணத்தை கூட விளைவிக்கும். கள்ளச்சாராயம் தயாரிப்பவர்கள் போதைக்காக விஷத்தன்மை கொண்ட வஸ்துகளை பயன்படுத்துகின்றனர். “அவர்கள் சானிடைசர், யூரியா, மெத்தனால் போன்றவற்றை கலப்பார்கள்,” என்கிறார் கவுரி.
இத்தகைய கள்ளச்சாராயம் ஜுலை 2022-ல் 42 பேரை குஜராத்தில் கொன்றது. கிட்டத்தட்ட 100 பேர் அகமதாபாத்திலும் பவ்நகரிலும் பொதாதிலும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இறந்தவர்களில் 11 பேர், ரோஜித் கிராமத்தை சேர்ந்தவர்கள்.








